வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3

This entry is part 26 of 35 in the series 11 மார்ச் 2012

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் படங்கள் கீழே விழுந்தன. அவைகளைக் கையிலெடுக்கவும் முதல் புகைப்படமே என்னை மீண்டும் நினைவுக் குழியில் தள்ளிவிட்டது.
கலைவாணர் அரங்கில் செங்கை மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது. அந்த நிறைவு விழாப் புகைப் படங்களில் ஒன்றுதான் அது. முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். சமூக நலத்துறை அமைச்சர் திரு சி.வி. எம் அண்ணாமலை அவர்களுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர். நானோ முகத்தில் அரிதாரத்துடன் பின்னால் நின்று கொண்டிருந்தேன். எல்லோரையும் விட என்னை உறுத்தியவர் அங்கு உட்கார்ந்திருந்த சாவி அவர்கள்தான். தினமணி கதிர் ஆசிரியர் அன்று சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அவரைப் பார்க்கவும் சிரித்துக் கொண்டேன். அந்த விழா சென்னையில் நடந்ததற்கும், அதில் ஓர் நாடகம் நடந்ததற்கும் அவர்தான் மூலகர்த்தா.
நாடகம் நான் எழுதியது. வசனமும் நானே அந்த நாடகத்தின் நாயகியும் நானே. பெயர் “அம்மா” அரசுத் துறையில் அதிகாரியாக வேலை பார்க்கும் பெண் அத்தகைய பாத்திரத்தில் ஓர் முதல்வருக்கு முன்னால் மட்டுமல்ல சென்னையில் இருந்த பல பத்திரிகை நிருபர்களுக்கு முன் நடிக்க எந்த அளவு துணிவு இருந்திருக்க வேண்டும் ! காரணமான சாவி என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
சாவியைச் சந்திக்க வேண்டுமென்றால் அவர் மதிய உணவு அருந்தும் நேரமே சிறந்தது. முதலில் என் வருகையைத் தெரிவித்துக் கொண்டு எக்ஸ்பிரஸ் அலுவலகம் செல்வேன். சில நிமிடங்களில் சாவி புறப்படுவார். எங்களுடன் எப்பொழுதும் இணைந்து கொள்கின்றவர் திரு. தியாகராஜன் அவர்கள். எக்ஸ்பிரஸ் அலுவலகத்தின் நிர்வாக மேலதிகாரி. எங்களுடன் அவ்வப் பொழுது பல புதியவர்கள் சேர்வார்கள் முக்கியமாக வட நாட்டு அலுவலக அதிகாரிகள். . எல்லோரும் ஹோட்டல் கீதாவிற்குப் போவோம். இது ஹோட்டல் காஞ்சிக்கு அருகில் இருந்தது. இப்பொழுது இருக்கின்றதா என்பது தெரியாது. அங்கே போனால் ஓர் பெரிய அறை முன்னதாகவே ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கே உட்கார்ந்துதான் பேசுவோம். சாப்பாட்டிற்குப் போகும் இடத்தில் செய்திகளை அலசுவார்கள். நான் ரசிப்பேன். உணவைவிட ருசியானது அந்த உரையாடல்.
இந்தியாவின் அரசில்யல் பற்றி விவாதங்கள். எமெர்ஜென்ஸி காலத்தில் மறைந்த திருமதி இந்திராகாந்தி அவர்களுடன், எக்ஸ்பிரஸ் கோயங்கா எந்த அளவு மோதினார் என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த சமயத்தில் கீதா ஹோட்டல் விருந்தில் சுனாமிபோல் செய்திகள் கொட்டும். நான் பிரமித்துப் போய்க் கேட்டுக் கொண்டிருப்பேன்.. என் அரசியல் அறிவு இன்னும் தீட்டப்பட்ட இடம் அங்குதான். கதை, இலக்கியம் என்று எதுவும் பேச மாட்டோம். பேசுவதைவிட நான் உட்கார்ந்து கவனித்ததே அதிகம்.
சாவி காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரை அதிகம் போற்றுகின்றவர். அதே நேரத்தில் கலைஞரை ரசித்தவர். சாவி மரிக்கும் வரை கலைஞரிடம் அதே பற்று கொண்டிருந்தார். சாவியை அறிமுகப் படுத்தியவர் பயணக்கட்டுரை மணியன். ஆனந்த விகடன் அலுவலத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் எங்கள் நட்பு வளர்ந்தது. சாவி விகடனை விட்டுப் போன பின்னும், மணியன் எனக்கு நெருங்கிய நண்பர் என்று தெரிந்தும் என்னுடன் நட்பாக இருந்தவர் சாவி. ஒரு முறை கூட நாங்கள் இருவரும் மணியனைப் பற்றிப் பேசியதே இல்லை.
மாறுபட்ட கொள்கைகள் இருப்பினும் நட்பு கெடுவதில்லை. இது அனுபவப் பாடம்
நாம் நடந்து கொள்வதைப் பொறுத்தது. ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதைத் தவிர்த்தலே நட்பைக் காக்கும். ஒருவர் அந்தரங்கத்தை மற்றவரிடம் கூறுதல் கூடாது. நட்பு வாழ நம்பிக்கை காத்தல் வேண்டும்.
மணியனைப் பற்றி இப்பொழுது தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தொடரில் அதிகமாக வரப் போகின்றவர் இருவர். அவர்களில் மணியனும் ஒருவர். அவரைப் பற்றி இங்கே ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். சாவியுடன் ஹோட்டல் கீதா என்றால் மணியனுடன் ட்ரைவ் இன் வுட்லன்ட் ஹோட்டல். இதயம் பேசுகிறது அலுவலத்தில்;இருந்து ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் அவர் எபிகாசட் அலுவலகம் செல்ல இப்படித்தான் போவோம். இங்கே நுழைந்து காருக்குள் உட்கார்ந்து கொண்டு மசால் தோசைக்கு ஆர்டர் செய்வார். பிறகு அவர் பேசுவது அனைத்தும் அரசியல். அவரும் காங்கிரஸ்காரர். திருமதி இந்திராகாந்தி மேல் மிகுந்த பக்தி கொண்டவர்.. அவர் அந்த அம்மையார் மீது கொண்ட பக்தியை நான் நன்கு உணர்வேன். அவருடைய அன்புக்குப் பாத்திரமான மற்றொருவர் மறைந்த முன்னால் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். நான் ஏன் பிறந்தேன் என்ற தொடர் விகடனில் வந்தது. அப்பொழுது தொடங்கிய பழக்கம் நாளடைவில் ஆழமானது. கலைஞர் அவர்கள் செயலகத்திற்குப் போகும் பொழுது எப்பொழுதும் திரு ஆற்காடு வீராச்சாமி உடன் செல்வார். மக்கள் திலகம் முதல்வரானவுடன் ஆரம்ப காலத்தில் உடன் சென்றவர் மணியன். கட்சியைச் சேராதவர் மட்டுமல்ல, ஒரு காங்கிரஸ்காரர் உடன் செல்வது பற்றி முணுமுணுப்பு எழுந்தது. அதன் பின்னர் உடன் செல்வதை நிறுத்தினார். மணியனின் அந்தரங்க எண்ணங்களை மனம் விட்டு என்னுடன் பேசுவார். நானும் அப்படியே 58ல் தொடங்கிய நட்பு அவர் சாகும் வரை வாழ்ந்தது. எங்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர்
அதே ஹோட்டலில் அவ்வப்பொழுது குமுதம் அரசியல் நிருபர் திரு பால்யூ அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். காஞ்சியிலிருந்து சென்னைக்கு வரும் பொழுது இவர் வீட்டிற்கும் ஜெயகாந்தன் வீட்டிற்கும் செல்வேன். சில சமயங்களில் ஏதாவது அவசரமாகச் சொல்ல நினைப்பவைகளைக் கூற என்னை அங்கு வரச் சொல்வார். பால்யூவும் நானும் பகிர்ந்து கொள்ளாத அரசியல் செய்திகள் கிடையாது. அவரின் நட்பு 72 ல் ஆரம்பம். அவர் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்கூட அவரைப் பார்த்தேன். அந்த ஹோட்டலை இடிக்கும் செய்தி கேட்டவுடன் வருந்தினேன். மலரும் நினைவுகளில் என்னை ஆட்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான்
இழப்பு ஏற்படும் பொழுது ஏற்படும் துக்கம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுவது இயல்பு.
ஹோட்டல் சாப்பாடு பற்றிப் பேச ஆரம்பித்து விட்டேன். இன்னொரு ஹோட்டலைப் பற்றியும் சொல்லிவிட வேண்டும்.
முன்னால் கங்கை இதழ் ஆசிரியர், பின்னால் சக்தி இதழ் ஆசிரியரான திரு பகீரதனும் என் நண்பர். அவருடன் நியூ உட்லாண்ட் சாப்பிடப் போவோம். அங்கே அரசியல் கிடையாது. என் புலம்பல்களைக் கேட்டு கிண்டலடிப்பார். தான் சிரிக்காமல் என்னைச் சிரிக்க வைப்பார். எங்களுடன் சில சமயங்களில் திரு தமிழ்வாணனும் கலந்து கொண்டதுண்டு.அந்த ஹோட்டலைப் பற்றிப் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தொடரில் அவைகள் நிச்சயம் வரும்
மணியனைப் பற்றிச் சொல்லும் பொழுது இன்னொருவரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. . திரு மா.ரா இளங்கோவன்தான் மற்றவர். முதலில் சுதேசமித்திரன் வார இதழுக்கு உதவி ஆசிரியராக இருந்து பின்னால் நியூகாலேஜில் உதவி பேராசிரியராகப் பணியாற்றச் சென்றவர். இவருக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு ராஜமாணிக்கனாரின் முத்த புதல்வர். டாக்டர் கலைக்கோவனின் அண்ணன். இவர் மனைவி புனிதவதி இளங்கோவன். இந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவரை அண்ணா என்றுதான் கூப்பிடுவேன். எனவே அவருடன் மனம்விட்டுப் பேச மாட்டேன். பயம். திட்டுவார். என் அப்பாவைக் கண்டு கூட நான் பயந்ததில்லை. நான் பயந்தது இந்த அண்ணாவிடம்தான். அவரால்தான் நான் மிகவும் மதித்தவர்களில் ஒருவரான உயர்திரு அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடிந்தது. பல இலக்கிய வாதிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். இவர் தமிழரசுக் கட்சியில் இருந்தவர். திரு ம.பொ.சி அவர்களின் அன்புக்குரியவர். எனவே என்னை அங்கும் பல முறை கூட்டிச் சென்றிருக்கின்றார். சிலம்பைப் பற்றி அவருடன் சிலம்புச் சண்டையே போட்டிருக்கின்றேன். விளக்கமாக பின்னால் தொடரில் வரும். என் அண்ணன் மறைந்து விட்டார். ஆனால் புனிதம் இப்பொழுதும் எனக்குத் தோழியாக இருக்கின்றார். வானொலி நிலையத்தில் பல பொறுப்புகளில் பணிசெய்தவர் புனிதவதி இளங்கோவன்.
கி.வ ஜ அவர்களைப்பற்றி சொல்லவில்லை யென்றால் நான் நன்றி கெட்டவளாகி விடுவேன். இராமாயணத்தின் இராமனைப்பற்றிய பல கேள்விகளுடன் அவரை நானாகத்தான் சந்தித்தேன் இலக்கிய ஆய்வுகள் எப்படி செய்ய வேண்டுமென்று எனக்குக் கற்றுக் கொடுத்த குருநாதர்.
எல்லோரையும்விட என் இதயத்தில் இன்னும் வாழ்கின்றவர் இருவர். அவர்களைப்பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. என் நெருக்கடியான காலங்களில் என்னைக் காத்தவர்கள்.
பெரியகருப்பன்.
மேலக்கால் கிராமத்தில் வாழ்ந்த ஒர் குடிசைவாசி. முதலில் நான் சேர்ந்த பணியின் பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். வீடுகளையும் பார்வையிட்டு மக்களுடன் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோழவந்தான் அருகில் இருந்த மேலக்கால் கிராமத்தில் ஓர் மாதர் சங்கம் இருந்தது. அப்பொழுது அதனை மகளிர் மன்றம் என்று சொல்வதில்லை. பெரியகருப்பனின் தாய் முனியம்மாவும் ஓர் உறுப்பினர். அங்கு சென்றால் அவளைப் பார்க்கச் செல்வேன். இரு முறை போயிருந்த பொழுது அவள் மட்டும் இருந்தாள். மகன் வெளியூர் போயிருப்பதாகக் கூறியிருந்தாள். மூன்றாவது முறை போயிருந்த பொழுது ஓர் ஆண்மகன் அங்கே படுத்திருந்தான். நான் செல்லவும் அவனை எழுப்பினாள்
டேய் கருப்பா, அம்மா வந்திருக்காஙக. முகத்தை கழுவிகிட்டு டீக்கடைக்குப் போய் வடை காப்பீ வாங்கிட்டுவா
நான் வேண்டாம் என்றாலும் விடமாட்டாள்
ஏழையாயினும் விருந்தோம்பல் குணத்தை விடவில்லை.
கருப்பன் எழுந்திருக்கும் பொழுதே தள்ளாடினான் பிறகு சமாளித்துக் கொண்டு பின்னால் போனான்.
உன் மகன் குடிச்சிருக்கற மாதிரி இருக்கே
ஆமாம் நேத்துதான் வந்தான். சோர்வா இருக்குன்னு ராவுலே கள்ளு குடிச்சான். அப்படியே அசந்துட்டான்
எங்கே போயிருந்தான்
ஜெயிலுக்கும்மா
அவள் அந்த பதிலைச் சாதாரணமாகச் சொன்னாள்.எனக்குத்தான் தூக்கிவாரிப் போட்டது.
எதுக்கு?
ஒருத்தனை கத்தியாலே குத்திட்டான். சாட்சி இல்லேன்னு இப்போ விட்டுட்டாங்க.
என்னம்மா சொல்றே? எதுக்கு குத்தணும்? அவ்வளவு கோபக்காரப் பயலா?
இல்லேம்மா, எங்க எஜமான்தான் குத்தச் சொன்னாரு. உசிரு போகாது. கொஞ்ச நாளு ஆஸ்பத்திரியிலெ கிடக்கற மாதிரிதான் குத்துவான். எங்களுக்கு இது சகஜம். எஜமான் சொல்றதைச் செய்வான். அய்யாதான் எங்களுக்கு கஞ்சி ஊத்தற தெய்வம்
அன்றைய கிராம சமுதாயமும் வாழ்க்கையும் இப்படித்தான்.
நான் எதுவும் பதில் கூறவில்லை. முதல் முறையாக கொலைத் தொழில் பற்றிய செய்தி கேட்டு அயர்ந்து உட்கார்ந்திருந்தேன். முகம் கழுவிய கருப்பன் வந்தான். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ஓர் கும்பிடு போட்டான். பிறகு வெளியேறிவிட்டான்
டீக்கடை காப்பியும் வடையும் வந்தன. பல கிராமங்களில் டீக்கடை காப்பி சாப்பிட்டு காப்பி ருசி தெரியாமல் போய்விட்டது. பழகிப் போச்சு. கொஞ்சம் பழகினால் அதுவே வழக்கமாகிவிடும்.
கருப்பனிடம் ஜெயில் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. என்னைவிட வயதில் பெரியவனாக இருக்கலாம்.
கருப்பா, உனக்குப் படிக்கத்தெரியுமா
எழுத்து கூட்டி வாசிப்பேனக்கா
ஏன் படிப்பைத் தொடரல்லே
படிப்பு மண்டையிலே ஏறல்லே. படிச்சிட்டு என்ன செய்யப் போறேன்.
வாடிப்பட்டிக்கு என் வீட்டுக்கு ஒரு நாள் வா. ஒரு நாளாவது என் வீட்லே தங்கணும்
அவன் முகத்தில் மலர்ச்சி. யாரும் அவனை இப்படி கூப்பிட்டு இருக்கமாட்டார்கள் போலிருக்கு
நிசம்மாவா
ஆமாம். நீ பஸ்ஸிலே எப்படியாவது வந்துடு. அம்மா கிட்டே சொல்லிட்டு வா. ஒரு நாளாவது தங்கற மாதிரி வா. திரும்பி வர காசு தரேன். வரும் போது குடிச்சிட்டு வராதே. அங்கே ஒரு பாட்டியம்மா இருக்காங்க பயந்துடுவாங்க
குடிச்சா என் பயப்படணும்.
முதல்லே வீட்டுக்கு வா. அடிக்கடி வந்தா உனக்கு நிறைய விஷயம் சொல்லித்தருவேன்.
அவன் முகத்தின் மலர்ச்சி என் மனத்தில் உயிர்ப்பைத் தோற்றுவித்தது.
ஏழையின் முகத்தில் இறைவனைக் காணலாம்
அர்த்தமுள்ள வார்த்தைகள்!
புறப்படும் பொழுது முனியம்மாவிடம் இரண்டு ரூபாய் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். காசை வாங்க முதலில் கூசினாள். என் முகத்தில் தெரிந்த புன்னகையில் அவள் அன்பைக் கண்டிருக்க வேண்டும். காசு கொடுத்த கையைப் பிடித்து கண்களீல் ஒத்திக் கொண்டாள்.
இந்த அன்பின் பிணைப்பு இப்பொழுது எத்தனை பேரிடம் நாம் காண முடிகின்றது
இரண்டு ரூபாய். அக்காலத்தில் அது பெரிய தொகை. கையில் எட்டணாவுடன் சென்றால் ஒரு வாரத்திற்குக் காய்கறிகள். நால்வர் அடங்கிய ஓர் குடும்பத்திற்கு அரிசி உட்பட சாமான்களுக்கு ஒரு மாதத்திற்கு இருபத்தி ஏழு ரூபாய். நான் கட்டியிருந்த புடவையின் விலை எட்டு ரூபாய். இது 1958 வது வருட நிலைமை
என்னை பஸ் ஏற்றிவிட உடன் வந்த பெரிய கருப்பனிடம் அவன் வர வேண்டிய தேதியையும் நேரத்தையும் கூறினேன்.
ஒரு வாரம் கழித்துத்தான் தேதி கொடுத்தேன்.
மனம் அலைபாய ஆரம்பித்தது. எதற்காக வரச் சொன்னேன்? இவனை எப்படி திருத்துவது? முடிகின்ற காரியமா? புனர் வாழ்வுக்கும் என்ன செய்வது? எதையும் யோசிக்காமல் அவனை வீட்டிற்கு வரச் சொன்னது சரியா தப்பா?
ஒரு சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கின்றது. சிலரைப் பார்த்தால் அவர்களைப் பற்றி எதுவும் தெரியாத நேரத்தில் கூட பிடிப்பதில்லை. நம்மைச் சுற்றி ஏதோ ஓர் அலைவரிசை இருக்கின்றதோ ! எது எப்படியாயினும் அவன் மீது ஏதோ பாசம் வந்துவிட்டது. நடக்க வேண்டியதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்று நினைவுகளை நிறுத்தினேன்.எனக்கு அப்பொழுது 23 வயது.
கருப்பனின் எஜமானரையும் அவர் மனைவியையும் எனக்குத் தெரியும். இரண்டு நாட்கள் கழித்து அந்த கிராமத்திற்குச் சென்று அவர் வீட்டிற்குப் போனேன். அந்த அம்மா அன்புடன் என்னை வரவேற்றார். சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்று உட்கார வைத்தார். பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் வரவும் எங்கள் பேச்சு அவ்வூர்ப் பிள்ளைகளின் படிப்பு பற்றி மாறியது. பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த வீட்டு எஜமான் வந்துவிட்டார். அங்கிருந்த பெண்கள் எழுந்துநின்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள்
“வாங்கம்மா” என்று என்னை வரவேற்றார்
இவரா கருப்பனைக் கொலையாளிபோல் நடத்துகின்றார்?!. திட்டமிட்டு நடக்கும் வன்முறைச் சம்பவங்களைவிட உணர்ச்சி வேகத்தில் நடக்கும் கலகம் அதிகம். வயலுக்கு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது போல் ஏவிய எந்த வேலைகளுக்கும் சிலரை வைத்துப் பராமரிப்பது அவர்களுக்குப் பெருமை. சுயமரியாதை, தற்பெருமை இவைகள் செல்வந்தர்களுக்குச் சொந்தமானவை. ஏழைகள் கூட்டம் கொத்தடிமை போல் கூட்டம் கூட்டமாக பெரியதனக் காரர்கள் பின்னால் இருப்பார்கள். அவர்களுக்கு அடிமைத்தனம் என்னவென்று கூடத் தெரியாது. அக்காலத்தில் தேவைகள் குறைவு. கிடைத்தது போதும் என்ற திருப்தியுடன் இருந்து விடுவார்கள். அறியாமையை விமர்சிப்போம். ஆனால் அவர்களின் அமைதி கண்டால் நமக்கு வியப்பு வரும். சென்னையில் பிளாட்பாரத்தில் படுக்கின்றவர்கள் கொசுக்களுடன் வாழ்கின்றார்கள். பல வசதிகளையும் வைத்துக் கொண்டு கொசு கடிக்கின்றது, தூக்கம் வரவில்லை என்று புலம்பிக் கொண்டு தூக்கம் வராமல் நாம் கஷ்டப் படுவோம்.
வாழ்வியல் விசித்திரமானது
அந்த எஜமானுக்கு நானும் பெரிய கருப்பனும் சந்தித்தது அதற்குள் தெரிந்திருக்கின்றது
கருப்பன் நல்ல பையன். வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கீங்களாம். எங்கியாவது போகணும் னாலும் கூட்டிட்டுப் போங்க. ஒரு பயல் வாலாட்ட மாட்டான்.
எங்கிட்டே வாலாட்டினா நானே பாத்துக்குவேன் என்று நான் நினைத்தாலும் வெளியில் சொல்லவில்லை
சரிங்க என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டேன்
என் மீது அவருக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஒன்று அப்படி இருக்க வேண்டும் அல்லது இந்த பொட்டச்சியாலே என்ன செய்ய முடியும்னும் நினைத்திருக்கலாம். மேற்கொண்டு எதுவும் சிந்திக்க வில்லை
பெரிய கருப்பன் என் தம்பியானான். தம்பி உடையான் படைக்கு அஞ்சான். நான் எதிர் பார்க்காவிட்டாலும் அவன் எனக்கு ஓர் பாதுகாப்பு வளையம் போல் ஆகிவிட்டான்
அவன் தலித் வகுப்பைச் சேர்ந்தவன்.
இவனைப்போல் என் நினைவில் வாழும் மற்றொருவன் பெயர் துரைராஜ். நீலமலை தந்த செல்வன். கருப்பன் தம்பியென்றால் துரைராஜ் எனக்குத் தாயானான். அவனைப்பற்றி அடுத்த பகுதியில் கூறூகின்றேன்.
பணிக்களத்தில் முதல் நாள் நுழையப் போகின்றேன். அன்றே அந்த அலுவலகத்தில் குண்டு வெடித்தது.
மனிதன் மகிழ்ச்சியாகவும், மனச் சாந்தியுடனும் இருக்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் அவன் மற்றவர்களுடன் அன்பினால் ஒன்றுகின்ற கணங்களே ஆகும் _ சுவாமி சின்மயானந்தர்

(பயணம் தொடரும்)

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது
author

சீதாலட்சுமி

Similar Posts

10 Comments

 1. Avatar
  jayashree says:

  நிறைந்த கலசம்……..அம்மா…!
  தங்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் தைரியம் தரவில்லை உமது வாழ்வியல் கட்டுரை.
  எத்தனை பெரிய மனிதர்கள்…..இயக்கியவாதிகள்….அந்தக் காலத்து ஜாம்பவான்கள்…அவர்களைப்
  பற்றி செய்திகளில், பத்திரிகைகளில் படைப்புகளில் மட்டுமே பார்த்ததுண்டு. நீங்கள் அவர்களோடு
  கூட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நடமாடி இருப்பதை என்னும்போது மனசே…..அதன் வாய்
  பிளந்து பார்க்கிறது ஆச்சரியமாக.
  உங்கள் உயரம்…..உயர்ந்து கொண்டே போகிறது…சமயத்தில் இமயத்தையும் கடந்து செல்லுமோ…?
  கட்டுரை…..நினைக்க வைக்கிறது…பெருமையாக..!
  ஈர நெஞ்சம்…நேச நெஞ்சம்..பாச நெஞ்சம்..பரிவு நெஞ்சம்….தூய நெஞ்சம்….துணியும் நெஞ்சம்…
  அன்பு நெஞ்சம்….அம்மாவின் நெஞ்சம்….அனைத்தும் ஒருசேர பார்க்கும்படியாக இந்தக் கட்டுரையில்…
  முனியம்மாவாக… ….என்னை வைத்தே பார்க்கும்படியாக இருந்தது.
  ////என் முகத்தில் தெரிந்த புன்னகையில் அவள் அன்பைக் கண்டிருக்க வேண்டும். காசு கொடுத்த கையைப் பிடித்து கண்களீல் ஒத்திக் கொண்டாள்.
  இந்த அன்பின் பிணைப்பு இப்பொழுது எத்தனை பேரிடம் நாம் காண முடிகின்றது/////
  உங்கள் அனுபவங்களை எங்கள் கண்ணிற்கு தந்த கையைப் பிடித்து கண்களில் ஒத்திகொண்டேன்…மானசீகமாக.
  ///மாறுபட்ட கொள்கைகள் இருப்பினும் நட்பு கெடுவதில்லை.
  இழப்பு ஏற்படும் பொழுது ஏற்படும் துக்கம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுவது இயல்பு.
  வாழ்வியல் விசித்திரமானது////
  இதெல்லாம் அமுத வாக்குகள். இந்த வாரத்து புகைப்படம்…..காணக் கிடைக்காதது.
  கட்டுரை முழுதும்…வாழ்வியலும்….தெய்வீகமும்….பாதை காட்டி செல்கிறது.
  வணக்கத்துடனும் அன்புடனும்..
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 2. Avatar
  punai peyaril says:

  அது சரி, அம்மா யாரு, என்ன பண்ணுறாங்க என்று ஒரு முகமன் தரலாமே… படிக்க ஏதுவாயிருக்கும்…

 3. Avatar
  தமிழ்த்தேனீ says:

  சகோதரி சீதாலக்ஷ்மி அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியாற்றியவர்கள் .

  வீராங்கனையான பெண்மணி, இணையத்தில் எனக்குக் கிடைத்த அருமையான சகோதரி என் வீட்டுக்கே வந்து என்னை வாழ்த்தியவர்கள்.

  நேர்மையான, தீரமான பெண்மணி

  அனுபவ பூர்வமான தகவல் பெட்டகச்சுரங்கம் அவர்

  தொடர்க உங்கள் எழுத்துப் பணி

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 4. Avatar
  punai peyaril says:

  அனுபவ பூர்வமான தகவல் பெட்டகச்சுரங்கம் அவர் –> நல்லது ஆனால் உள்ளது உள்ளப்டி எழுதுவாரா…? உதாரணம் கருணாநிதி பற்றி அவரது ஆட்சி பற்றி அப்பட்டமாக எழுதுவாரா…? ஜெயசிரி பின்னூட்டம் கூட ஒரே உணர்ச்சி மயமானதாக தனிப்பட்ட நன்றிப் பெருக்குடன் இருக்கிற்து…நமக்குத் தேவை நேற்றைய தலைமுறையின் மனிதர்களின் மறுபக்கத்தையும் கூறு போட்டுக் காட்டும் பகிர்வுகள். அதுதான் நேற்றைய போலி மனிதர்களை புரிந்து கொள்ள உதவும்… மணியன் பயணக்கட்டுரை மாதிரி புளியோதரை தயிர் சாத பொட்டலைத்தை பிரித்தது மாதிரி இல்லாமல் இருக்க விரும்புகிறேன்… மணியனின் மறுபக்கம்… புதிய ”திசைகள்” என்று சொன்னாலும் சாவி குறிப்பிட்ட ஜாதியினருக்கே அருகாமை தந்தது… பால்யூவுடன் பகிர்ந்த அரசியல் செய்திகளை அப்பட்டமாகச் சொல்லும் திண்ணம் என்று ஒரு தொடர் வேண்டும். தருவாரா…?

 5. Avatar
  punai peyaril says:

  சமயத்தில் இமயத்தையும் கடந்து செல்லுமோ…? — இதெல்லாம் என்ன மாதிரி வகையறா வரிகள்…? உயர்வு நவிர்ச்சி சரி தான்.. அதற்காக இப்படியா…? எழுத்தாளர் ஆர்.சூடாமணி செய்தது படித்தீர்களா…? அப்ப கூட இமயம், பர்ங்கிமலை என்று தோன்றவில்லை… தனிப்பட தொழுதல் பொது மேடையில் தேவையில்லை… மத்தபடி எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.. எழுதுங்கள், ஆனால் சத்திய வாக்காக , பளீரென்று மட்டுமில்லாமல் படீரென்றும் இருக்கட்டும்… பழகியதால் மட்டும் நட்பு என்று நினையாமல் நீங்கள் சந்தித்த மனிதர்களின் உண்மை நிலையை எழுதுங்கள்… இதயம் பேசுவதை விட மனச்சாட்சி பேசும் தொடராக இருக்கட்டும்…

 6. Avatar
  Paandiyan says:

  ஜெயகாந்தனை பற்றி இவர் எழுதியது இங்க வந்தது . இன்று ஜெயகாந்தன் நிலைமை பாவம் . எல்லாரும் ஒரு ஜாதிய வட்டத்தில் அல்லது ஒரு சிறிய சலுகை என்று குறுகிய வட்டத்தில் அடக்கமாகி விடுகின்றார்கள். படிக்கும் நாம்தான் மனநிலை பிரன்று கானபடுகின்ர்றோம் . சமீபத்தில் பெரியார்தாசன் INTERVIEW ஒன்று படிக்க நேர்ந்தது. அவரை கைது பண்ணும்போது MGR யை நீரில் பார்த்து, சாப்பிடும் சொல்லும் போது மறுதாரம் , அவரை சாப்பிட வைது 1L பணமும் கொடுத்தாராம் . அதை வைத்து வீடு கட்டினாராம் . பாவம் அந்த போராட்டத்தில் இவரோடு தோல் கொடுத்தவன் எல்லாம் எங்கு பிச்சை எடுகின்றனோ ? எல்லா பெரிய மனிதர்களுக்கும் ஆட்சியாளர்களுடன் , சினிமா உலகத்துடன் ஒரு உறவு வேண்டி இருகின்றது அதை வைத்து தனிப்பட்ட முறையில் அவர்கள் பயனடிகின்றார்கள். பல நிஜ முகங்கள் வெளியில் வருவது இல்லை — ஆனாலும் அதை மறைக்க பலரும் முயன்றாலும் முடிவதும் இல்லை . காலம் அதன் போக்கில் போயிகொண்டுதான் இருகின்றது……..

 7. Avatar
  punai peyaril says:

  சாப்பிடும் சொல்லும் போது மறுதாரம் , அவரை சாப்பிட வைது 1L பணமும் கொடுத்தாராம் .–> மறுதாரமா…? மறுத்தாராமா..? தோள் என்றிருக்க வேண்டிய இடத்தில் தோல் கொடுத்து என்றிருக்கிறது. அர்த்தமே மாறி விடுமே… மற்றபடி உங்கள் கூற்று உண்மை… மணியனின் மறுபக்கம் எழுதினால் அவர்கள் எப்படி தங்களது பத்திரிக்கை என்னும் தொடர்பால் சுயலாப குறிக்கோளர்களாக இருந்தார்கள் என்பது புரியும். இந்திரா காந்தியை பூஜிப்பவர் என்ன நிலை கொண்டிருந்திருப்பார் என்பது புரிந்ததே… எம் ஜி ஆரின் வீக்னஸை சரியாக பயன்படுத்தியவர்களுள் மணியனும் ஒருவர்.. தட்ஸ் ஆல்…

 8. Avatar
  seethaalakshmi says:

  அன்பு வாசகர்களுக்கு வணக்கம். இது ஓர் வாழ்வியல் வரலாற்றுத் தொடர். நான் ஒரு சமூக நலப் பணியாளர். என் அனுபவங்களைப் எழுதுகின்றேன்.மகளிர், குழந்தைகள் நலன், குடும்ப நலன் பற்றியும் எதிர்படும் பிரச்சனைகளும் , நடந்த போராட்டங்களும் விளக்குகின்றேன். முக்கியமான சில நிகழ்வுகள் பதியப்பட வேண்டியிருக்கின்றது. வாழ்வியலில் ஊடகங்களும் அரசியலும எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. பொது நலப்பணியில் இருப்பவர்கள் யாரையும் விரோதித்துக் கொள்ளக் கூடாது .எல்லோரும் நண்பர்களே. நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாருக்கும் சான்றுகள் கொடுக்கப் போவதில்லை. அது என் நோக்கமுமல்ல. இது ஓர் வெளிப்படையான தொடர். நாங்கள் எதிர்கொண்ட சோதனைகள், வேதனைகளைக் கொட்டப் போகின்றேன். இந்த மண்ணின் பெண்ணின் கதை . அவள் நலன் காக்கப் பாடுபட்டவர்களைப்பற்றிய தொடர். தொழில்சங்கமும் துணைக்கு வரும்.சுதந்திரம் பெறும் முன் காலத்திலேயே வரலாறு தொடங்குகின்றது. . இது அரசியல் தொடரல்ல. சொல்லப் பொனால் வாழும் கலைபற்றிப் பேசும் ஓர் உளவியல் தொடர். வழியில் வ்ருவோர்களைப் பற்றி சில செய்திகள் வரும். அவ்வளவுதான். . தொடர்ந்து படித்து வரவும்.. என்னைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு வேளை உங்கள் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கலாம். உங்கள் ஆதங்கத்தில் உங்கள் ஆன்மாவைக் கண்டு மகிழ்ச்சி தோன்றியது. இன்னும் நாம் முழுவதும் மரத்துப் போய்விடவில்லை. ஒரு நாள் நாம் மீண்டுவிடுவோம் எனறு உங்கள் எழுத்தால் இந்த மூதாட்டிக்கு நம்பிக்கை தோன்றிவிட்டது. இத்தொடர் முடியும் பொழுது நீங்களூம் என் பிள்ளைகளாகிவிடுவீர்கள். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *