இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு

This entry is part 4 of 42 in the series 25 மார்ச் 2012

சி. இளஞ்சேரன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் பள்ளி
தமிழ்ப்பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் சிறுகதைகள், கவிதைகள், நாவல் போன்ற படைப்புகளை அளித்து வரும் தஞ்சை மண் சார்ந்த படைப்பாளி ஆவார். இவரின் படைப்புகளில் குடும்பம் சார்ந்து அமைகின்ற குடும்பத்தலைவி சித்திரிப்பு முறை கவனிக்கத்தக்கதாக உள்ளது. இவரின் சிறுகதைகளில் இடம் பெறும் குடும்பத்தலைவியர் இயல்பான,குறும்பு இழையோடுகிற பாத்திரங்களாகப் படைக்கப் பெற்றுள்ளனர்.

திருமணமான பெண் ஒரு குடும்பத்தின் தலைவியாக அமைந்து அக்குடும்பத்தை நிர்வாகம் செய்யக் கூடியவளாகிறாள். இவளின் வாழ்க்கை முறை என்பது உறவுகளைப் பேணுதல், கணவன் குழந்தைகளை நலமுடன் வாழ தான் உழைப்பது என்பதாக இச்சமுகத்தில் வரையறுக்கப் பெற்றுள்ளது.

இந்நிலைப் பெண்களை இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் காட்டியுள்ளார். இவர்கள் பெறும் சிக்கல்களும் ஆங்காங்கே இவரால் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

“தாலியில் தங்க வந்த தலைவன்/ ஊறுகாயாய் என்னை உருக்கி/ கடுகு டப்பாவில் போட்டு இறுகமுடி/ சமையலறையில் வைத்து விட்டுப்போனான்/ பூஞ்சை பிடித்துவிடுமென…. ”(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், வீட்டிற்குக் கீழிருக்கும் கங்கு, ப. 9) என்ற கவிதையில் கணவனின் ஆளுமையில் அடிமைப்படடுக் கிடக்கும் குடும்பத்தலைவியின் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. இந்த வாழ்க்கை அடிமை வாழ்க்கை முறையாகக் குடும்பத்தலைவிகளுக்கு அமைந்துவிடுகின்றது.

“எத்தனை பெற்றாலும்/ மலடிதான்/ பெண்களைப் பெற்றவள்”( இலக்குமி குமாரன் ஞானதிரவியம், என்பதாய் இருக்கிறது. ப.112) என்ற சிறுகவிதை குடும்பத்தலைவி ஆண் பிள்ளைகளைப் பெறவேணடும் என்ற ஆணாதிக்க சமுகத்தின் சாயல் பெற்றவர்களாக உணரப்படுகிறார்கள். பெண்களைப் பெற்ற குடும்பத்தலைவி மலடியாகவே எண்ணப்படுகிறாள் என்ற கருத்தினால் இச்சமுகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

இதுபோன்று கணவன் வெளிநாடுகளுக்குப் பல வருடங்கள் சென்றால் அந்நேரத்தில் குடும்பத்தலைவி இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று ஏட்டில் எழுதாத சட்டம் இலக்குமி குமாரன் ஞானதிரவியம் வாழும் சமுகத்தில் கடைபிடிக்கப் பெற்றுள்ளது.

“ஒழுங்காகக்/ குளிக்காமை/ தலைவாராமை/ நல்ல புடவை உடுத்தாமை/ பொட்டு, பூ வைத்துக் கொள்ளாமை/ பளீரெனச் சிரிக்காமை/ உள்ளாடை வெளித்தெரிய ஜாக்கெட் அணியாமையுடன்/

விழாக்களுக்கோ, ஊர்களுக்கோ/ தனியாகப் போகமை/ ஆண்களைத் தனிமையில் சந்திக்காமை/ பிள்ளைகளோடு மாமியாரோடு பகையின்மை/

ஆகிய இழைகளால் ஆன/ அந்த உடையணிந்து கொண்டு/ நத்தையோட்டுக்குள் ஒடுங்கும் ராசகுமாரி கதை நாயகியாக வாழ்ந்தாள்/ பொருள்வயின் பிரிந்து/ மேற்படி ஆடையை/ வீட்டிலேயே விட்டுவிட்டுப்போன கணவன்/ வீடுதிரும்பும் வரை”(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், என்பதாய் இருக்கிறது. ப.112)

இக்கவிதையில் கணவன் வெளிநாட்டிற்குப் பணம் தேடிப் போய்விட்டால் ஆடை, அலங்காரம், தனிமை போன்ற எதுவும் குடும்பத்தலைவிக்கு வாய்க்கக் கூடாது. அவள் தன்னை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்பவள் போல அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற மரபு சார் கட்டளை குடும்பத்தலைவிகள் மீது ஏற்படுத்தப் பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

இதே சூழல் `அகஒட்டு’ நாவலிலும் காட்டப் பெற்றுள்ளது. “புருசன்காரன் வெளிநாடு போவது இங்கு நடைமுறையான ஒன்றுதான். ஆனால் இங்கே இருக்கிற பெண்ணுக்குத்தான் எத்தனை துன்பங்கள், என்னென்ன கட்டுப்பாடுகள்..

பொட்டு வக்கெப்பிடாது…. பூ முடிக்கப்பிடாது.. ஒரு நல்ல நாளுக்கு நல்ல சேல கட்டிக்கப்பிடாது…வெளியூருக்கும் போகப்பிடாது… எங்கேயுந் ராத்தங்கப்பிடாது…. எரைஞ்சுப் பேசப்பிடாது… ஒரு நல்லது கெட்டதுக்குச் சபைல முன்னாடி நிக்கப்பிடாது… என்று எழுதப்படாத சட்டங்கள் இங்கு ஏராளமிருக்கின்றன”(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், அகஒட்டு, ப.28) என்று மிகத் தெளிவாக கணவன் வெளிநாடு சென்றிருக்கையில் ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைவிட இருக்கக்கூடாது என்ற கட்டளைகள்தான் அதிகமாகக் கடைபிடிக்கப்பட வற்புறுத்தப் பெற்றுள்ளது.

இதுதவிர சாதாரண அன்றாட வாழ்க்கையை நடத்தும் குடும்பத்தலைவிகள் பலரையும் தன் படைப்புகளில் அவர் காட்டியுள்ளார்.

“சைக்கிள் வாங்க வேண்டாமென்று அவள் சொல்லவில்லை. புதிய சைக்கிள் வேண்டாமென்றுதான் சொன்னாள்

ஏன் வாங்கப்புடாது?

சம்பாதிச்சு வாங்கணும். இப்படிப் பொன்னாங்குண்டு கரண்டு மரத்தடி வயல வித்துப்புட்டு வாங்கப்பிடாது

அப்படீன்னா நான் சாவறவரைக்கும் புதுசைக்கிள் ஓட்டக் கூடாதுங்கிறே?

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அதுக்கில்லே.. இன்னொன்னும் உண்டு.

என்னாது
பழசாயிடும் சீக்கிரம்

இவன் ஹா ஹா வெனச் சிரித்தான்.

நீ கூடத்தான் பழசாயிட்ட என்ன மாதிரி”(இலக்குமி குமாரன் ஞானதிரவியம், ஒருநாள், ப.39)

என்ற சிறுகதைப் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கேலியும் கிண்டலுமாக வாழும் வறுமையும் கலந்த வாழ்க்கை முறை வெளிக்காட்டப் பெற்றுள்ளது.

Series Navigationசித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதிசங்க கால சோழநாட்டு ஊர்கள்
author

சி. இளஞ்சேரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *