வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
சீதாலட்சுமி
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற ஒழுக்கு
சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். .
உன் பொம்மையைப் பிடுங்கினதுக்கு உனக்கு அழுகை வர்ரதே. நம்ம ஊரை ஒருத்தன் பிடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவன் கிட்டே சண்டைப போடப் போறவாளை ஜெயில்லே பிடிச்சு போடறா,
உடனே குழந்தை சீதாவின் பதில் என்ன தெரியுமா ?
அம்மா நாமும் போகலாம். அவன் எப்படி நம்மளோடதைப் பிடுங்கலாம்? நாமும் ஜெயிலுக்குப் போகலாம்மா
காக்கா கதை கேட்டு வளரவில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே நாட்டுக் கதைகள் கேட்டு வளர்ந்தவள். இதனை அவள் தாயார் அவளிடம் பல முறை கூறியிருக்கின்றார்கள்..
அதுமட்டுமா ? வைத்தியநாத அய்யர் தலைமையில் ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம். அப்பொழுது நடந்த ஓர் சம்பவம்.
அந்த வீட்டுக்கார மாமி அங்கே வந்து மிளகாய்ப் பொடி கேட்டார்கள். எதற்குத் தெரியுமா? கோயில் உள்ளே நுழைகின்றவர்கள் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி. அந்த மாமி போகவிட்டு குழந்தை அவள் அம்மாவிடம் கேட்டது “சாதின்னா என்ன?” அத்துடன் முடியவில்லை. தாயும் மகளும் கோயிலுக்குக் கிளம்பினார்கள். மீனாட்சி கோயிலுக்குச் செல்ல வில்லை. ஹரி ஜனங்கள் நுழைந்து விட்டதால் மீனாட்சி கோயிலை விட்டுப் வெளியில் வந்து விட்டதாகக் கூறி அவளுக்காக ஓர் ஓலைப் பந்தல் அமைத்து அம்பாளை அங்கு வழிபட வைத்தவர். நடேச அய்யர்.
கோயிலுக்குள் அழைத்துச் சென்றவன் பிராமணன். சாதி பேசி தனிக் கோயிலை அமைத்தவனும் பிராமணன். வரலாற்றை வாய்மையுடன் பார்க்க வேண்டும்.
குழந்தை சீதா அவள் அம்மாவிடம் கேட்டது
“உம்மாச்சிதானே எல்லாரையும் படைச்சா. அப்புறம் அவளுக்கு ஏன் கோபம். எப்படி கோபம் வரும். “சாதி ரொம்ப கெட்டது”.
அடுத்தும் ஓர் சம்பவம் நடந்தது. ஜெயிலிருந்து அவள் அப்பா வந்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அப்பாவைப் பார்க்கின்றாள். ஆசையுடன் அப்பா மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்கின்றாள். . அப்பொழுது வீட்டுக்கார மாமி வந்து அவள் அப்பாவை வீட்டை விட்டு வெளியில் போகச் சொல்கின்றள். காரணம் மற்ற ஜாதியினர் சமைத்த சாப்பாட்டை அவர் சாப்பிட்டு விட்டாராம். அது ஆசாரமான வீடாம். அவர் அங்கே இருக்கக் கூடாதாம். அப்பொழுது அவள் அம்மாவின் வயது 22 ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வந்த கணவனுடன் ஒரு நாள் கூட ஒன்றாக இருக்க முடியாமல் தடுத்தது சாதியும் ஆச்சாரமும்.
குழந்தை சீதாவின் மனத்தில் முதலில் வேருன்றியது இந்த சாதிக் கொடுமை.
எப்பொழுதாவது அடிபட்ட காயங்களின் வலிகளில் இயக்கங்கள் தோன்றியதும் வரலாற்றின் வரலாறு.
குடும்பம் எட்டயபுரம் பெயர்ந்தது. அரண்மனைக்குப் பக்கம் வீடு. ராஜாஜி, கல்கி, காமராஜ் என்று எத்தனை பெரிய மனிதர்களை அவளால் பார்க்க முடிந்தது. அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை அவள் அப்பாவிற்கு கொடுத்திருந்தார் ராஜா. அவள் அப்பா ஒரு காங்கிரஸ்காரரும் கூட. . அவள் குடியிருந்த வீட்டுக்கருகில் உள்ள கோயிலில் ராஜாஜி, எட்டயபுர மன்னருடன் ஆலயப் பிரவேசம் செய்த பொழுது குழந்தையும் அவர்களுடன் சென்றாள். இன்னும் நாடு விடுதலை அடையவில்லை. பாரதி பாடிய பாடல்களை அவளுக்குப் பாடச் சொல்லிக் கொடுத்தது பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர். பாரதி அப்பொழுது உயிருடன் இல்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி அவள் வீடு இருந்தது. கல்கியைப் பார்த்த முதல் அவள் அப்பா பல வார இதழ்கள் , மாத இதழ்கள், செய்திதாள்கள் வாங்கிப் போட்டார். சிறு வயதிலேயே சீதா பத்திரிகைகள் படிக்க ஆரம்பித்துவிட்டாள். படித்தது மட்டுமல்ல. பிள்ளைப் பிராயத்திலேயே எழுத ஆரம்பித்தாள். அவைகளுக்கு ஓவியம் தீட்டியவளும் அவளே.
அவள் அப்பா அரண்மனை வேலையை விட்டுச் சொந்தமாக ஓர் ஹோட்டல் வைத்தார். குடும்பமும் அதற்கு அடுத்து இருந்த வீட்டிற்குக் குடி பெயர்ந்தது. அங்கும் குறைந்த காலமே இருந்தவர்கள் சினிமா தியேட்டரை ஒட்டி இருந்த இடத்தில் ஹோட்டல் வைத்தார். பக்கத்தில் தியேட்டர். எதிரே ஓர் குளம் அதையொட்டி பள்ளிக்கூடம். அதில்தான் அவள் படித்தாள்.
அங்கும் ஓர் பாரதியார் இருந்தார். அவர் பெயர் கே.பி. எஸ் நாரயணன். அவர் ஓர் ஆசிரியர். அவர்தான் மாணவ மாணவிகள் இரத்தத்தில் பாரதியைக் கலந்தவர். மேடைப் பேச்சுக்குப் பயிற்சி அளித்தவர். மாணவ மாணவிகளை மேடை ஏற்றுவார். பின்னர்தான் தலைப்பு கொடுப்பார். இவர்கள் பேச வேண்டும். மாணவனை பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என பேசச் சொல்வார். மாணவிகளை சம உரிமை வேண்டாம் என்று பேசச் சொல்வார். சிந்தனைக்கு அவ்வளவு வேலை கொடுத்தவர். அவர் பயிற்சியில் தேர்ந்து முதலில் வந்தவர்களில் முத்து கிருஷ்ணனும் சீதாவும். முத்து கிருஷ்ணன் தினமலர் அலுவலகத்திற்கு வேலைக்குப் போனதாகக் கேள்வி. சீதா கிராமப் பணிக்குப் போய்ச் சேர்ந்தாள். பள்ளி மாணவியாக இருக்கும் பொழுதே காந்திஜியின் சத்திய சோதனையும் காரல்மார்க்ஸின் சிந்தனைகளையும் படிக்கச் சொன்னவர் அவள் அப்பா. சங்கீதம் கற்றாள். மகளைச் சுதந்திரமாக வளர்த்தவர் அவள் அப்பா.
அந்த சீதாதான் நான். சஷ்டி விரதம் இருந்து சங்குப் பால் குடித்து முருகனை வேண்டியதற்கு அவன் போட்ட பிச்சை நான். இதனை என் அம்மா சொன்ன நாள் முதல் என் இதய சிம்மாசனத்தில் ஒய்யாரமாக முருகன் உட்கார்ந்துவிட்டார். அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள்,தந்தை பெரியாரின் சிந்தனைகள் படிக்கவும் நாத்திகமும் நுழைந்தது.
அது எப்படி? முருகனைக் கும்பிடுவேன் புராணங்களைக் குறை சொல்வேன். இப்படி ஓர் இரட்டை நிலையும் ஆனேன்.
என்னுடைய இன்னொரு பக்கமும் பார்க்கலாம்.
நினைத்துப் பார்க்கும் பொழுது நெருடும் சில காட்சிகள்
வரலாறு பற்றி இப்படி விரிவாக எழுத வேண்டுமா என்று தோன்றலாம். வரலாற்றுப் புத்தகத்தில் படிப்பதைவிட வாழ்க்கைச் சரித்திரத்தில் வரும் பொழுது செய்திகளின் உயிர்நாடிகளை உணரமுடியும். பல நிகழ்வுகளின் வேர்களின் காலம் புரியும். வாழ்வியலில் பல இயல்புகள் தொடர்கதை
நான் புரண்டு உருண்டு விளையாடிய கரிசல் மண்ணின் கதையைப் பார்க்கலாம்.
அந்த ஊர் ஓர் மன்னருக்காக உண்டாக்கப்பட்ட ஊர். மல்லனை வென்றதற்கும் சிலரைத் தன் பிள்ளைகளா ஏற்றுக் கொண்டதற்கும் கிடைத்த சிறப்புப் பட்டம் எட்டப்பன். அந்த சிறப்புப் பெயரில் அவர் நினைவாக அந்த ஊருக்கு எட்டயபுரம் என்று பெயர் வந்தது. எத்தனை புலவர்கள் ! எத்தனை கலைஞர்கள் ! தமிழ் கொஞ்சி விளையாடியது. இசை தாலாட்டியது. புதுமைப் பெண்ணைப் படைத்து பாடல்களாக்க் குவித்த பாரதியின் ஊர். அங்கே பெண்ணின் நிலை இருந்தவித மென்ன? அந்தக் காலத்தில் அரண்மனை மனிதர்களில் சிலருக்கு விளையாட்டிற்குப் பொம்மைகள் வேண்டாம். அரண்மனையைச் சுற்றி சில தெருக்கள்தான் ஊர். அங்கே வசிக்கும் சில பெண்கள் விளையாட்டு பொம்மைகளாக மாறவேண்டிய நிலை வரும். விளையாட்டிற்கு ஊதியம் உண்டு. வீடும் கொஞ்சம் சொத்தும் கிடைக்கும். அந்த வீட்டார் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரண்மனைக் குழந்தை அவர்கள் வீட்டில் வளர்கின்றது என்ற திருப்தி போதும் . அந்த ஊரில் மட்டுமா இந்த நிலை ?
தமிழ் அமுதினும் சுவையானது.
இலக்கியமோ என்றும் நிலைத்துவாழும் தன்மை கொண்டது.
இந்தப் போர்வைகளுக்குள் நுழைந்து கொண்டு நாம் பெருமை கொள்கின்றோம்.
பிறன்மனை நோக்கார் பற்றி நமக்கு வாழ்வியலில் கூறப் பட்டுள்ளது. ஆனால் வீரம் பேசி பிற நாடுகளுக்குப் போருக்குச் சென்ற பொழுது பொன்னும் பொருளும் மட்டும் கொண்டு வரவில்லையே? அங்கிருந்த பெண்களையும் அள்ளிக் கொணர்ந்து மாட்டைக் கொட்டிலில் அடைப்பது போல் அடைத்து, பிறன் மனையாளாயிருப்பினும் இன்பம் அனுபவித்தது வரலாற்று உண்மை. அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டது? ஒரு தகப்பனுக்குப் பிறந்த இருவரில் ஒருவன் ஆட்சியில் இருப்பான், இன்னொருவன் அவனுக்குக் குற்றேவல் செய்பவனாக இருப்பான். இவன்தான் என் தந்தை என்று சொல்லக் கூட அவனுக்கு உரிமையில்லை. வீரத்தில் விளைந்த வேளங்கள் பெண்ணினத்திற்கு அவமானச் சிறை.
மாமன்னர் இராஜ ராஜனுக்கு 14 மனைவியர்கள் ! அவர் மகன் இராஜேந்திரனுக்கு 17 மனைவியர்கள். மன்னர்கள் தேடிப் பிடித்து மணக்கவில்லை. சிற்றரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள பெண்களை மன்னருக்கு மணமுடித்து வைத்தனர். இத்தனை பெண்களை மணக்கும் ஓர் ஆடவனால் எந்த அளவு பெண்ணுக்குத் திருப்தியான வாழ்க்கை தர முடியும்?
பெண்களை யாரும் கேட்கவில்லை. மனிதர்களுக்கு வேண்டியது கவுரவம். அதிகார வாழ்க்கைக்கு அவர்கள் கொடுத்த விலைபொருட்கள் பெண்கள் ! பெண் உணர்வுக்கு மதிப்பில்லாத மண உறவுகள்.
மன்னர் ஆட்சியிலும் வாழ்ந்தவள் நான். அரண்மனைப் பெண்டிர் அந்தப்புரத்தை விட்டு வெளி வரமாட்டார்கள். கோயில்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் மூடு பல்லக்குகளில் திரைகள் மூடியிருக்க பவனி. எங்கள் ராஜாவுக்கு இரு மனைவிகள் இருந்தனர். அவர்கள் ஒரே அரண்மனையில் இருந்தனர். மூத்த ராணிக்குக் குழந்தை இல்லை. இரண்டாம் தேவிக்குக் குழந்தைகள் உண்டு. எங்கள் ராஜா இன்னொரு பெண்ணை மணந்துகொண்டு அவரைச் சிங்காரத்தோப்பு அரண்மனையில் வைத்தார். அந்த அம்மையாருக்கு உதவிக்கு வந்த ஓர் பெண்ணையும் மணந்தார். அவரைத் திருநெல்வேலி அரண்மனையில் வைத்தார். பெண்கள் எல்லோரும் மிக நல்லவர்கள். இந்தக் காலத்தில் கூட தங்கள் கணவனைக் குறை கூறாதவர்கள்.. அந்த காலத்தில் கண்ணகி எப்படி பேசி இருப்பாள் ? பெற்றோரும் தன்னைப் பெற்றவர்களும் செல்வம் மிக்க வராயினும் அவர்கள் உதவியை நாடவில்லை. எத்தனை வருடங்கள் கண்ணகி தன் கணவரைப் பிரிந்திருந்தாள் ? தெய்வத்திடம் கூடப் புலம்பவில்லை. பத்தினிக்கு இலக்கணம், பெண் வாய் திறக்கக் கூடாது.
சங்க இலக்கியத்தில் பெண் புலவர்கள் இருந்திருப்பதைக் காண்கிறோம். அரசியலில் தூது சென்ற ஒளவைப் பிராட்டியையும் அறிவோம். அக்காலத்தில் பெண் கல்வி இருந்தற்குச் சான்றாக இவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகின்றோம். இதன் விகிதாச்சாரம் என்ன? ஒற்றை இலக்கம். பேசுவதில் கூட தோழிக்கு இருந்த சலுகை தலைவிக்கு இல்லை. நான் எதையும் குறையென்று சொல்ல வேண்டுமென்பதற்காக இவைகளை எழுதவில்லை. இதுதான் நம் சமுதாயம். தாய்வழிச் சமுதாயமும் சில இடங்களில் இருந்திருக்கின்றன. இருப்பினும் உடல் வலிமை கொண்டு ஆண் முன் சென்றுவிட்டான்.
வேட்டையாடிப் பிழைத்த மனிதன் விவசாயத் தொழிலில் இறங்கவும். நிலையான வீட்டை நினைத்தான். தான் ஈட்டும் பொருளைக் கொடுக்க தன் வாரிசை நினைத்தான். பிள்ளை பெறுபவளை வீட்டிற்குள் வைத்தான். அக்காலத்தில் பெண் வெளியில் தனித்து இயங்க முடியாது
காந்திஜி சொன்னதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.
ஓர் பெண் நள்ளிரவில் தனியாக நடந்து சென்று எவ்விதமும் பாதிக்கப் படாமல் வருகின்றாளோ அன்று தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று கூறலாம்.
இதனைப் பார்த்தால் உலகில் எந்த நாடும் சுதந்திரம் அடைய வில்லை யென்றே கூற வேண்டும். இக்காலத்திலேயே இந்த நிலையென்றால் அக்காலத்தில் பெண்ணின் நிலை பற்றிக் கூற என்ன இருக்கின்றது? முதலில் பிள்ளைக்கு என்று பெண்ணை அடிமைப் படுத்தினாலும், குடும்பம் என்ற கூட்டிலே அன்பும் அரவணைப்பும் உணரவும் பெண்ணை வெளியில் விட மனமில்லை. அன்பின் காரணமாக அடக்குமுறை அதிகமாகியது. ஆணாதிக்கம் என்பதைவிட அப்பொழுது குடும்பப் பாதுகாப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட உரிமை. பெண்ணிற்கும் அது பாதுகாப்பாக இருந்ததால் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தாள். ஆனால் அதுவே தொடர்ந்து வரும் பொழுது மாற்றங்கள் தோன்றிய காலத்திலும் இந்நிலை நீடித்ததால் பெண் சீறி எழ ஆரம்பித்தாள். இது வாழ்வியல் வரலாற்றின் சுழற்சியே
அக்காலத்தில் ஆண்மகன் தொழிலுக்காக வெளியே செல்ல வேண்டும். போருக்காகவும் செல்ல வேண்டும். வீடு திரும்ப மாதங்கள், வருடங்கள் ஆகலாம். வயிற்றுப் பசிபோல் உடல் பசியும் இயற்கையே எனவே அவன் தனக்குச் சில சலுகைகளை வைத்துக் கொண்டான். பிற பெண்களிடம் தன் வேட்கையைத் தீர்த்துக் கொண்டான். கால மாற்றத்தில் தன்னை மாற்றிக் கொள்ளாத பல ஆண்களால்தான் பிரச்சனைகள். ஒட்டு மொத்தச் சாடலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடே.
வாழ்வியலைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் எளிது. ஆனால் அனுபவம் என்று வரும் பொழுது மனம் படுத்தும் பாட்டிற்கு யாரும் விதி விலக்கல்ல.
என்னுடைய காலத்திலேயே நான் கண்ட சில காட்சிகள். காதுகளில் வைரக் கடுக்கன், கைகளில் மோதிரம். சரிகை அங்கவஸ்திரம், மல்லுவேட்டி. இவைகளுடன் பணக்கார மைனர் வில்வண்டியில் சின்ன வீட்டிற்குச் செல்வது அவனுக்கு பெருமை. நாடியில் விரல் வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் மக்கள். கொத்தமங்கல சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதை கற்பனை யென்று கூறிவிட முடியாது. அன்று நடந்தவைகளின் நகல்தான் அந்தக் கதை.
இலக்கியமே வாழ்க்கையின் கண்ணாடிதானே.
மன்னர் ஆட்சி முடிந்தது. காலம் மாறியது. வாழ்வு முறையும் மாறியது.
எட்டயபுரத்து அரண்மனை பிள்ளைகளில் மூத்தவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. துறவியாக வாழ்கின்றார். மற்ற பிள்ளைகளும் இல்லற வாழ்வில் கட்டுப்பாடுடன் வாழ்கின்றனர். முன்பு பேரரசுகளும் சிற்றரசுகளும் கவுரவப் போட்டியில் எடுத்துக் கொண்ட சலுகையை சமுதாயமும் மவுனமாக ஏற்றுக் கொண்டி ருந்தது. மன்னர் வாழ்க்கையிலிருந்து உழைக்கும் கூட்டம் வரை வாழ்வியல் சில நடைமுறைகளில் இயங்கி வந்தன. இதுதான் வரலாறு. காலம் மாறவும் அரண்மனை வாழ்க்கை யும் மாறியது. காலத்திற்கேற்ப மக்கள் வாழ்க்கையிலும் மாறுதல்கள் !
இப்பொழுது என்னைப்பற்றி கூற வேண்டும்.
ஒரு மனிதனின் குணம் எப்படி அமைகின்றது? கரு உருவனது முதல் ஆரம்பமாகி விடுகின்றது. பெற்றோரின் அணுக்களின் தாக்கம், குழந்தைப் பருவத்தில் ஆறுவயது வரை அவர்கள் வளர்க்கப்படும் விதம். குழந்தைகள் விளையாட்டுகள் மூலம்கூட பல கற்றுக் கொள்ளும் , பின்னர் சூழல் அதாவது வீட்டுக்கு வெளியே, பள்ளிவாழ்க்கை முதல் வெளியில் பழகும் மனிதர்கள், ஊடகத் தாக்கங்கள் இப்படி பலவற்றால் உருவாக்கப் படுகின்றான்…
இந்த சமுதாயத்தைக் கோபத்துடன் பார்க்க வைத்த கசப்பான சம்பவங்கள் தொடர்ந்தது. வீதிகளில் மனைவியை எட்டி மிதித்து அடித்ததை கண்டிருக்கின்றேன். வெளியில் சுற்று வதும் இல்லாமல் கட்டிய மனைவியை வெளித் தள்ளிப் பிற பெண்ணுடன் அதே வீட்டில் உல்லாசம் புரியும் வீடுகளைப் பார்த்திருக்கின்றேன். வகுப்புத் தோழியைக் காணச் சென்ற பொழுது தாயும் மகளும் அழுது கொண்டு வாசலில் உட்கார்ந்திருப்பார்கள். அதே வீட்டுக்குள் வேறு ஒரு பெண்ணுடன் கொஞ்சிவிளையாடிக் கொண்டிருப்பான் அந்த வீட்டுக்காரன்.
சிந்தனை செய்து சீர்தூக்கிப் பார்க்கும் வயதல்ல. என் மனத்தில் அன்று ஆழப் பதிந்தது. ஆண்கள் கொடூரமான வர்கள் பெண்களை அடிப்பார்கள். பொல்லாதவர்கள் என்பதே. சாதிப் பிரிவினையும் ஆணாதிக்கமும் என் நெஞ்சத்தில் ஆறாத தணலாய்த் தங்கிவிட்டது. பல குணங்களின் மொத்த வடிவாய் ஆனேன். (multiple personility)
இந்த எண்ண்ணங்களுடன்தான் என் பணிக்காலம் தொடங்கி யது. பின்னர் அனுபவங்கள் மூலம் தான் இந்த சமுதாயத்தின் பல கோணங்களை உணர முடிந்தது. இதனை எழுதுவதற்குக் காரணம் என்னிடம் இருந்த முரட்டுக் குணத்திற்கும் கோபத்திற்கும் மூல காரணங்களாகும். அல்லது ஏதோ மிகைப்படுத்தி கதை எழுதுகின்றார்கள் என்று தோன்றிவிடும். எனது பணியில் எனக்குக் கிடைத்த பெயர் கத்தற ஆபீஸர். ஆம் என்னால் அந்தக் குறையை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அடுத்து தவறு செய்யும் ஆண்களைக் கண்டால் அடித்துவிடுவேன். இந்தக் குறையை மாற்ற போராடினேன். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இந்தக் குணங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. பெண்மையின் நளினம் இல்லாத ஒருத்தியாய் வளர்க்கப்பட்டவள்.
ஆமாம், நான் ஓர் போராளி. போராளியாக்கப்பட்டவள்.
போராட்ட களத்திற்கு அடுத்து அழைத்துச் செல்லப் போகின்றேன்.
எந்த மனிதனும் நூறு சதவிகிதம் நல்லவர்களல்ல. குறையும் நிறையும் கலந்த ஓர் கலவை. இதுதான் உண்மை.
மாற்ற முடிந்தவர் அமைதியான வாழ்க்கை பெற்றனர். முடியாதவர்களின் வாழ்க்கை அல்லல்களும் ஏமாற்றங்களும் நிறைந்தைவையே.
உலகத்தின் சோதனைகளுட்படாமலும் அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
— ஷேக்ஸ்பியர்
(பயணம் தொடரும்)
- கம்பனின் சகோதரத்துவம்
- பெண்மனம்
- விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘
- ‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி
- பழமொழிகளில் ‘வழி’
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19
- பதின்பருவம் உறைந்த இடம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4
- விமோசனம்
- தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு
- ஒரு மலர் உதிர்ந்த கதை
- அக்கரை…. இச்சை….!
- பர்த் டே
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
- மனனம்
- முகங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
- அரியாசனங்கள்!
- மெங்பெய்யிலிருந்து வந்த பெண்
- முள்வெளி – அத்தியாயம் -2
- அணையா விளக்கு
- பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)
- ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
- காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)
- பாரதி 2.0 +
- ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘
- ஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்
- சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
- நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)
- பாசாவின் கர்ண பாரம்
- இறக்கும்போதும் சிரி
- நீலம்
- நெய்தல் பாடல்
- முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .
- ”பின் புத்தி”
- ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்
- பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்