Nandu 2 அரண்மனை அழைக்குது

This entry is part 45 of 45 in the series 2 அக்டோபர் 2011

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான பழைய கட்டிடங்களும்.

இப்போது வெள்ளிக்கிழமை ராத்திரி பத்து மணி. இது எடின்பரோ வேவர்லி ஜங்ஷன். கூட்டம் குறைவாக, விஸ்தாரமான ஏழெட்டுப் பிளாட்பாரங்களாக விரிந்து நீண்டிருக்கும் இங்கே லண்டன் போகிற ரயிலை எதிர்பார்த்து மர பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு இடது பக்கமாக நண்பர் நண்டுமரம் என்ற எழுபது சில்லறை வயது டேவ் க்ராப்ட்ரீ அமர்ந்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருக்கிறார்.. வலதுபக்கம் என் சிநேகிதி ஸ்டெல்லா என்ற இருபத்திரெண்டு வயசு வெள்ளைக்காரி என்னுடைய லாப்டாப் கம்ப்யூட்டரைக் கடன் வாங்கி சொந்த மடியில் வைத்துக்கொண்டு தப்புத் தப்பான ஸ்பெல்லிங்கோடு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய பாய் பிரண்ட் ஹண்டர் என்ற வேட்டைக்காரன் பற்றிய சிருங்காரக் கவிதை அது.

என்னாலான ஒத்தாசையாக, ஹண்டருக்கு எதுகைமோனையாக ஜெண்டர், வெண்டர், கிரைண்டர் என்று அடுக்க, அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். ரைம் இல்லாமல் கவிதை எழுதினால், நாளைக்கே இந்த வேட்டைக்காரன் கைவிட்டுப்போய் இன்னொரு தோட்டக்காரன் சிநேகிதனாக வந்து சேர்ந்தாலும் பொருந்தி வரும். “பாய் பிரண்ட்டை சட்டுனு மாத்திடலாம். கவிதையை மாத்தி எழுதறது சுலபமா என்ன?” அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கவிதாயினிகளோடு வம்பு வழக்கு வைத்துக்கொள்ள யாராவது சொன்னால், கண்டிப்பாக நோ ராமா கிருஷ்ணா!

“யார்டிலே இருந்து ரயில் பிளாட்பாரத்துக்கு வந்துக்கிட்டிருக்கு பாரு. லாப் டாப்பையும் பேச்சையும் மூட்டை கட்டு. வண்டியேறிப் படுக்க வேண்டியதுதான். விடிஞ்சா லண்டன்” நண்டுமரம் சாடி எழுந்தார். மோர்சிங்கைப் பத்திரமாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். சட்டை என்கிறதான ஒரு வஸ்து இருப்பதையே அறியாத என் கொள்ளுத்தாத்தா எந்தக் காலத்திலோ மடியில் கட்டி எடுத்துப்போனது அந்த மோர்சிங். மகராஜாக்கள் முன்னிலையில் பலான வித்வான்களின் கச்சேரிகளுக்குப் பந்தாவாகப் பக்க வாத்தியமாக வாசித்து தங்க, வெள்ளிப் பதக்கம் சன்மானம் வாங்க உதவி செய்தது அது. என்னிடமிருந்து பரம்பரைச் சொத்தான அந்த மோர்சிங்கைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டு, நாக்கு அறுத்துவிடாமல் கொணகொணவென்று வாசிக்க மாதக் கணக்காக நண்டுமரம் மேற்கொண்ட முயற்சிகள் சுமாராக வெற்றி பெற்றது சமீபத்தில்தான். காரைக்குடியிலிருந்து எடின்பரோ வழியாக அவரோடு லண்டனுக்கு இப்போது பயணமாகிக் கொண்டிருக்கிறது அந்த மோர்சிங். கூடவே நானும் ஸ்டெல்லாவும்..

நண்டுமரம்தான் இன்றைய நாயகன். நாங்கள் சும்மா அவரோடு துணைக்குப் போகிறவர்கள். நாலு நாள் முன்னால் அவர் பெயருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை முத்திரை குத்தி கடுதாசி வந்தபோது அதைத் தூக்கிக்கொண்டு ஆபீசுக்கே ஓடி வந்துவிட்டார். அங்கே தலையைக் குடைகிற பிரச்சனையில் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருந்தேன். ரிசப்ஷனில்லிருந்து அவர் அவசரமாகக் கூப்பிட, கூட இருந்து குழப்பிக்கொண்டிருந்த துரைகளையும் துரைசானிகளையும் ‘நல்லா அடிச்சுக்குங்க’ என்று கைகாட்டிவிட்டு வாசலுக்குப் போனேன்.

மிரட்டுகிற இங்கிலீஷில் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டானிய சாம்ராஜ்யத்தின் பெருமையை விவரித்துவிட்டு ராஜகுடும்பம், மகராணி, லண்டன் பட்டணம், அதன் இதயம் போன்ற பக்கிங்ஹாம் அரண்மனை இன்னோரன்ன சமாச்சாரங்களை பற்றித் தொடர்ந்தது அந்தக் கடிதம். முழுவதும் படிக்கப் பொறுமையில்லாமல் கடைசிப் பத்திக்கு விரைய, ‘அரண்மனையில் விருந்து. கலந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். வந்து கவுரவிக்கவும். இது அரச கட்டளை’. விருந்துக்கான நாள், நட்சத்திரம் எல்லாம் அட்சர சுத்தமாக அடித்திருந்தது. முகவரியைப் பார்த்தேன். நண்டுமரத்துக்குத்தான் வந்திருக்கிறது.

“எடின்பரோவிலே தானே முன்னொரு காலத்திலே ரிடையர்ட் ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியும் நீங்களும் பால்காரராக இருந்தீங்க? நடுவிலே எப்பவாவது லண்டன் போய் பக்கிங்ஹாம் அரண்மனையிலும் பால் ஊத்தியிருக்கீங்களா?” . அவரைக் கேட்டேன்.

வாக்காளார் பட்டியல் அல்லது முதியோர் பென்ஷன் அட்டவணை இப்படி எதையாவது பிரித்துவைத்து கண்ணை மூடிக்கொண்டு தொட்டு விரல் பட்ட நபர்களை அரண்மனை விருந்துக்கு அழைத்திருக்கலாம் என்று நண்டுமரம் அபிப்பிராயம் தெரிவித்தார்

“மேட், என் கூடத் துணையா ரெண்டு பேர் ராஜாங்க செலவுலே லண்டன் போகலாம்”

“வேட்டைக்காரத் தடியனும் ஸ்டெல்லாப் பொண்ணும் இல்லியா பெரிசு?”

“அவனா? இங்கே ஸ்காட்டிஷ் லீக் •புட்பால் மேட்ச் நேரம். எங்கேயும் வர முடியாதுங்கறான். நீயும் ஸ்டெல்லாவும் வந்தா கம்பெனிக்கு கம்பெனி. மோர்சிங்குக்கு மோர்சிங். என்ன நான் சொல்றது? ”.

சாயந்திரம் மோர்சிங் அவரிடம் கைமாறியது. அரசாங்க மானியம் கணிசமாக இருந்ததால் மலிவான கட்டணத்தில் விமானத்தில் பறக்காமல், செலவு கூடுதல் என்றாலும் ரயிலில் சொகுசாக ஸ்லீப்பர் கோச்சில் லண்டன் போக முடிவு செய்யப்பட்டது. ஆமா, இங்கே ரயில் கட்டணம் அதிகம்.

“நாளைக்கு சனிக்கிழமை விடுமுறை நாள். எங்க ஹேர் டிரஸ்ஸிங் சலூன்லே கூட்டம் அலைமோதும். நான் இல்லாம பாவம் ரொம்பக் கஷ்டப்படப் போறாங்க”

ரயில் ஏறுகிறபோது ஸ்டெல்லா சொன்னாள். “இன்னும் ரெண்டு நாள் லீவு எடுத்துக்கிட்டு சாவகாசமாக வரச் சொல்லியனுப்பலியா?” என்று கேட்க நினைத்தேன். போன வாரம் அவளிடம் தலையைக் கொடுத்து முடி வெட்டிக்கொண்டு ஆபீஸ் போனபோது, வேற்றுக் கிரகத்து ஜந்துவைப் பார்ப்பதுபோல் எல்லோரும் விநோதமாகப் பார்த்ததோடு இல்லாமல் எல்லாக் கோணத்திலும் செல்•போனில் படம் எடுத்து உலகம் முழுக்க பந்துமித்திரர்களோடு பகிர்ந்துகொண்டார்கள். நாளைக்கு எலிசபெத் மகாராணிக்கும் அதேபடி என் தரிசனம் கிடைக்க வாய்ப்பு கூடி வருகிறது..

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பெயர்த்து எடுத்து வந்தது போல் சொகுசான ரயில் பெட்டி. நடுவிலே சின்னதாக அலுமினிய ஏணி இணைக்கப் பட்டிருக்க, யூதிகோலன் வாடை அடிக்கும் இதமான மெத்தை. மாபெரும் படுக்கை. ஓரமாக, கண்ணாடிக் கூண்டுக்குள் ஒரு சுத்தியல். ‘விபத்து ஏற்பட்டால், இந்தக் கருவியால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வரவும்’ என்று பயமுறுத்தும் அறிவிப்பு அருகில். அதற்குக் கீழே காலால் பெடலை அழுத்தினால் தண்ணீர் அருவியாகக் கொட்டுகிற வாஷ்பேசின். அப்புறம் சீட்டிலேயே சின்ன பார்சலாக பற்பசை, பிரஷ், சோப், டவல், ஒரு குவளை தண்ணீர் மற்றும் சோப். குடித்தனமே இருக்கலாம் இங்கே.

மேல் பர்த்தில் ஏறிப் படுத்தபடி கையில் வைத்திருந்த ‘ஈவினிங் டைம்ஸ்’ இலவசச் செய்தித்தாளைப் பிரித்தேன். ‘ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று அழகிகளோடு ஹோட்டலில் ஒரே கட்டிலில் உல்லாசமாக இருந்தபோது பிடிபட்டார்’. எத்தனை யோசித்தாலும் எனக்கு ஆச்சரியம் அடங்கவில்லை. மோட்டாவான அந்த எம்.பி, அதே சைசில் ஒண்ணில்லை, ரெண்டில்லை, மூணு ஸோ கால்ட் அழகிகள். இத்தனை பேரையும் தாங்கிக்கொண்டு கால் முறியாமல் ஈடு கொடுத்த கட்டிலைச் செய்த ஸ்காட்லாந்து தச்சர்களின் திறமை சாமானியமானதா என்ன?

இந்த ஆச்சரியத்தை நண்டுமரத்தோடு பகிர்ந்து கொள்ளத் தலையை எக்கிப் பார்த்தபோது கீழ் பர்த்தில் குறட்டை பதில் சொன்னது. அவர் மோர்சிங் வாசிப்பதைவிட அது சுருதியோடு வந்த அடுத்த ஆச்சரியத்தோடு கண்ணயர்ந்தேன்.

ஆபீஸ். பெரிய படுதா கட்டி தில்லானா மோகனாம்பாள் படம். பார்த்தபடி டபரா டம்ளரில் பில்டர் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறேன். ஸ்டெல்லா திடீரென்று பாய்ந்து வருகிறாள். மிச்சம் இருக்கும் என் தலைமுடியைப் பிரம்மாண்டமான கட்டிங் மிஷினால் அவள் சின்னாபின்னமாக்கும் பயங்கரமான கனவிலிருந்து விழித்துக் கொண்டபோது, என் தலையில் நிஜமாகவே அவள் கை. பக்கத்து கூப்பேயிலிருந்து அதிரடியாக வந்து புகுந்து தலையை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

“லண்டன் யூஸ்டன். இதான் கடைசி ஸ்டேஷன். எழுந்திருக்கிறியா இல்லே ..”

அவள் முடிக்கும் முன்னால் டிக்கட் பரிசோதகர் அவசரமாக ரயில் பெட்டியில் நுழைந்தார். யாரும் இறங்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார். “அப்புறம் இந்த சாண்ட்விச், டீ எல்லாத்தையும் யார் சாப்பிடறது? நல்ல பிள்ளையா லட்சணமா எடுத்துப் பிரிச்சு முடிச்சுட்டுப் போங்க” இலவச சேவையாகப் கையில் திணிக்கப் பட்டதை முழுக்கச் சாப்பிட்டு முடிக்க அடுத்த அரைமணி நேரம் தேவைப்பட்டது.

பாதாள ரயில் பிடித்து ஏர்ல்ஸ் கோர்ட் போய்ச் சேர்ந்தோம். சுறுசுறுப்பாக நான் முன்னால் நடக்க, ஸ்டெல்லா வழிமாறி கே.சி.எப் என்ற வறுத்த கோழிக்கடையில் புகுந்தாள். “இப்பத்தானே சாப்பிட்டே?” என்று கேட்டேன்.. “சாண்ட்விச் எல்லாம் சாப்பாட்டிலே சேர்த்தியா என்ன?” அவள் பர்கரை மென்றபடி பதில் சொன்னாள். வேட்டைக்காரனும் ஸ்காட்லாந்து தச்சர்களும் என்னத்துக்கோ நினைவு வந்தார்கள்.

கிராம்வெல் வீதி லாட்ஜ் ஓனர் சர்தார்ஜி வழக்கப்படி பிரியமாக வரவேற்றார். வழக்கப்படி “ரூம் ஹீட்டரில் கொஞ்சூண்டு ப்ராப்ளம். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. டெலிவிஷனும் அதே படிதான். ஷவர்லே தண்ணி திடீர்னு கம்மி. சாயந்திரத்துக்குள்ளே சரி பண்ணிடறேன்” என்று வாக்குக் கொடுத்தார், அது எப்படி அந்த ஜனதா லாட்ஜில் எப்போது எல்லா அறையிலும் கொஞ்ச நேரம் முன்புதான் சகலமானதும் ரிப்பேர் ஆயிருக்கும் என்பது புரியாவிட்டாலும், வழக்கப்படி அறையைக் காலி செய்யும்வரை அதில் எதுவும் சரிசெய்யப்படாது என்பது தெரிந்தது . ஆனாலும் லண்டன் மத்தியில் தினசரி முப்பது பவுண்டு வாடகைக்கு வேறு எங்கே லாட்ஜ் கிடைக்கும்?

“குர்னாம் சிங்”, சர்தார்ஜி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்டுமரத்தின் கையைப் பிடித்துக் குலுக்க, அவர் சட்டைப்ப¨யில் கைவிட்டபடி “மோர்சிங்” என்றார் குஷியாக. “அ•ப் கோர்ஸ். மெனி மோர் சிங். என் தம்பி ஹர்பசன் சிங், பிள்ளை அம்ரிக் சிங், கசின் சிரஞ்சித் சிங் எல்லோரும் ஷிப்ட் ட்யூட்டி. வரிசையா வருவாங்க” மோர்சிங்கை வெட்டுக்கிளியைப் போல தூக்கிப் பிடித்தபடி. “இது உங்க இந்திய இசைக் கருவி” என்று நண்டுமரம் சொல்லும்போது அவர் நகர்ந்திருந்தார்.

அந்தி சாயும்போது பிக்கடலி வீதி நெரிசலுக்கு இடையே புகுந்து பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஒதுங்கினேன். பூங்கா வழியாக அரண்மனை வளாகத்தை ஒட்டிப் போகிற பால்காரி சந்து முனைக்கு வந்தேன். நண்டுமரம் ஈசியாக நினைவு வைத்துக்கொள்ள வசதியான பெயர் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆனால், அவரையோ ஸ்டெல்லாவையோ அக்கம் பக்கத்தில் எங்கேயும் காணோம்.

கைக்கடியாரத்தைப் பார்த்தேன். அரண்மனை விருந்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. எலிசபெத் மகாராணி நாங்கள் வராமல் சாப்பிட மாட்டேன் என்று பசியோடு காத்திருப்பார் பாவம். நினைக்கவே கஷ்டமாக இருந்தது.

ஸ்டெல்லா அவசர அவசரமாக ஹைட் பார்க் மூலை பாதாள ரயில் நிலையப் படியேறி வந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கால் டிராயரும் அரைக்கால் நிஜாருமாக இருக்கப்பட்டவள் இப்போது கொஞ்சம் கவுரவமாக முழு ஜீன்சும் ஸ்காட்லாந்து கொடி போட்ட டீ ஷர்ட்டுமாக இருந்தாள். “சாரி, லேட் ஆயிடுச்சுப்பா” என்றாள்.

“எங்கே போயிருந்தே?” எரிச்சலை மறைத்தபடி விசாரித்தேன். “நல்ல கடையாத் தேடிப் பிடிச்சு என் தலைமுடியை ஒழுங்கா வெட்டிக்கிட்டு வந்தேன். எடின்பரோவிலே ஒரு கடையும் சகிக்கலே” என்றாள் அவள். எலி பிராண்டிய மாதிரி இருந்த அவள் தலையைப் பார்க்க ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சி.

பத்து நிமிடம் கழித்து நண்டுமரம் வந்து சேர்ந்தார். மில்க்மெய்ட் லேன் என்று சொன்னதை பார்மெய்ட் லேன் என்று ஞாபகம் வைத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்தில் எல்லா மதுக்கடைகளையும் பிரதட்சணம் செய்திருக்கிறார். அலைந்து களைத்து அங்கங்கே தாகசாந்தி செய்து வர நேரமாகி விட்டதாம்.

“என் கில்ட் சரியா இருக்கா பாரு” என்றார் என்னிடம். சட்டென்று மூக்கு மேல் கண்ணாடி இல்லாததை உணர்ந்தேன்.. சாரிங் கிராஸ் வீதியில் பழைய புத்தகக்கடை ஒன்று விடாமல் ஏறி இறங்கும் உற்சாகத்தில் மூக்குக் கண்ணாடியை லாட்ஜிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். அந்தி சாய ஆரம்பித்திருந்ததால் கண்ணும் சர்தார்ஜி லாட்ஜ் சாதனங்கள் போல் வழக்கமாகப் பழுதாகும் நேரம்.

“பெரிசு, உங்க இடுப்பிலே நிச்சயமாத் துணி மாட்டியிருக்கு”. உத்தரவாதம் கொடுத்தபடி என் கழுத்து டையை நேராக்கினேன். மகாராணியைப் பார்க்க குறைந்த பட்ச மரியாதையாக சூட் போட்டுக் கொண்டு போக ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். காந்தி பிறந்த நாட்டுலே இருந்து வந்துட்டு வேட்டி கட்ட மாட்டேங்கிறே என்று நண்டுமரம் எத்தனையாவது முறையாகவோ குறைப்பட்டார்.

அரண்மனைத் தோட்டத்தில் வரிசையாக நுழைந்து கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் இது பெரிய சைஸ் பந்தி போஜனம் என்று புரிந்தது. நண்டுமரம் கில்ட் பையிலிருந்து அழைப்பிதழை பவ்யமாக எடுத்து நீட்டினார். கவனமாகப் பரிசோதித்த அரண்மனை அதிகாரிகள் எங்களை தீவிரமாகத் தடவிச் சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். ஸ்டெல்லாவை கூடுதலாகக் கவனித்ததாகத் தோன்றியது.

விரிப்பு மூடிய பெரிய மேசைகளில் கேக்குகள், பன், உருளைக்கிழங்கு வறுவல், சாண்ட்விச், பழரசம், நீர்க்கப் பானகம் போல் அசட்டுத் திதிப்போடு ஒயின். எல்லாவற்றையும் வாரி எடுத்து வந்து சாப்பிட பூ வேலைப்பாட்டோடு கூடிய பீங்கான் தட்டு, குவளை இத்யாதி. அரண்மனை விருந்து என்று போட்டிருந்ததே, இதுதானா?

“இங்கே சாப்பிடுற மாதிரி எதுவும் கிடைக்காதா?” ஸ்டெல்லா கேட்டாள். “சத்தமாச் சொல்லாதே” என்று நண்டுமரம் அவள் குரலைத் தணித்தார். கார்டன் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட மெயின் பார்ட்டி அவர்தான். தலை இருக்க வால் ஆடக் கூடாது என்ற அவர் நியாயத்துக்கு நாங்கள் கட்டுப்பட்டோம்..

அங்கங்கே கொறித்துக் கொண்டு ஆறி அவலாய்ப்போன டீயை உறிஞ்சிக்கொண்டு யாராரோ கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். “பெரிசு, உமக்கு யாரையாவது தெரியுமா?” என்று நண்டுமரத்தை விசாரித்தேன். “மகாராணி, அவங்க வீட்டுக்காரர், மகன், மருமகள்” அவர் அடுக்கினார். அவர்களில் யாரையும் இந்த ஜன்மத்தில் சந்திப்பேன் என்று தோன்றவில்லை. பார்த்து என்ன ஆகப் போகிறதாம்?

அலுத்துப்போய் கோட் பாக்கெட்டிலிருந்து லண்டன் வரைபடத்தை எடுத்தேன். குறுக்கும் நெடுக்குமான கோடுகளாக விரியும் தெருக்களும் சின்ன எழுத்தில் பெயர்களும் குழம்பித் தெரிய இன்னும் பிடிவாதமாகக் கண்ணைக் கவிந்து கொண்டு அதை உற்றுப் பார்த்தேன். மூக்குக் கண்ணாடி இல்லாமல் கிளம்பியிருக்கக் கூடாது.

பின்னால் மோர்சிங் சத்தம். திரும்பினேன். கொப்பும் குழையுமாகத் தழைத்திருந்த ஏதொ கொடிப் பக்கமாக நின்றபடிக்கு வாசிப்பது நண்டுமரமாகத்தான் இருக்கும்.

“என்ன இனிமையான இசை, வெறும் வாயிலேயே இப்படி சத்தம் வருமா?” யாரோ கேட்கும் குரல். எனக்கு முன்னால் வந்த குரல் என்னைத்தான் விசாரிக்கிறது என்று தெரிந்தது.. பக்கத்தில் தடதடவென்று ஷ¥க்கள் சப்திக்க படை பட்டாளமாக யாராரோ வர, பிளாஷ் லைட்கள் தொடர்ந்து மின்னிக் கொண்டிருந்தன.

ட்யூப் லைட்டாக இருந்துவிட்டேன். இது எலிசபெத் மகாராணி குரல் இல்லையா? அவரா என்னிடம் விசாரிக்கிறார்?

“என்ன வாத்தியம் இது?” மகாராணி திரும்பக் கேட்டார். பதில் சொல்ல வாயைத் திறந்தேன். குரலே எழும்பவில்லை.

“இது மோர்சிங். இந்திய இசைக் கருவி” நண்டுமரம் சொல்ல, “எனக்கு மன்மோகன் சிங்கைத்தான் தெரியும். எப்படி இருக்கார் உங்க பிரதமர்?” எலிசபெத் அரசி என்னிடம் அடுத்த கேள்வி கேட்டார். தொண்டையில் ஏதோ பலமாக அடைத்துக் கொண்டிருக்கிறது. பேந்தப் பேந்த விழித்தேன் இன்னொரு முறையும்.

“அவருக்கு சின்னதா ஒரு ஆப்பரேஷன். முடிஞ்சு போன வாரம்தான் வீட்டுக்குப் போனார்” திரும்பவும் நண்டுமரம் தான் மகாராணியிடம் கம்பீரமாகச் சொன்னார்.

“இந்தியா பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்களே. மகிழ்ச்சி. நீங்கள் தான் எடுத்துக்காட்டான காமன்வெல்த் குடிமகன்”. மகாராணி நண்டுமரம் கையைப் பற்றிக் குலுக்க, திரும்ப ப்ளாஷ்கள் மின்னி மறைந்தன. ராணியம்மா நகர்ந்து போனார்.

“எப்படி உனக்கு இந்தியா சமாச்சாரம் எல்லாம் அத்துப்படியாச்சு?” அரண்மனையை விட்டு வெளியே வந்து க்ரீன்பார்க் பிக்கடலி பாதாள ரயில் பிரிவில் நகரும் மாடிப்படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது ஸ்டெல்லா நண்டுமரத்தை விசாரித்தாள்.

“இவன் வீட்டுக்கு போன வாரம் மெட்ராஸிலே இருந்து விருந்தாளி வந்தானில்லே. உள்ளூர் பேப்பர்லே ஊறுகாய் பாட்டில் சுத்தி எடுத்து வந்திருந்தான். அதைப் பொழுது போகாமல் படிச்சுட்டு இருந்தது இப்போ உபயோகமாயிடுச்சு” நண்டுமரம் மகாராணி பற்றிக் குலுக்கிய கையை இன்னும் தாழ்த்தாமல் உயர்த்திப் பிடித்தபடியே இருந்தார்.

“ராணியோடு பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டுட்டியே” ஸ்டெல்லா அனுதாபப்பட்டாள். “எல்லாம் கொடுத்த கடவுள் என் மூக்குக் கண்ணாடியை ஞாபகப்படுத்தி, சரியான நேரத்துலே சரியான கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்ல வச்சிருந்தா, நான் இருக்கற இடமே வேறே” என்றேன் அவளிடம்.

“அது எங்கே?” அவள் விடாமல் பிடித்தாள்.

கையில் விரித்து வைத்திருந்த லண்டன் வரைபடத்தில் உத்தேசமாக பக்கிங்ஹாம் அரண்மனை உள்பகுதியைக் காட்டினேன்.

வாங்கிப் பார்த்துவிட்டு “ஹர் மெஜஸ்டீஸ் பிளஷர் அது” என்றார் நண்டுமரம். மகாராணியின் மகிழ்ச்சி அப்படீன்னா?

“அதாம்பா, லண்டன் ஜெயில்”

ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம். ரயில் வந்து கொண்டிருந்தது.

(இரா.முருகன்)

Series Navigationஉண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

2 Comments

Leave a Reply to Rajarajeswari Cancel reply

Your email address will not be published. Required fields are marked *