அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை

 

 

ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம்.

 

குட்டி ரேவதியின் காதலியரின் அரசி சாப்போவின் கவிதைகளை முன்வைத்து சுயமோகநிலையை வரைந்து காட்டுகிறது. சவுதிப் பெண் திரைப்பட இயக்குநர் ஹைபா எத்தனை இடையூறுகளுக்கிடையில் ஒரு இயக்குநராகப் பரிணமிக்கிறார் என்பதைச் சொல்லிச் செல்கிறார் பீர் முகமது.

 

ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஐம்பது பக்கப் பேட்டி தலித் பற்றிய பிம்பங்களை உடைக்கிறது. மிக அருமையான நேர்காணல் நிகழ்த்தி இருக்கிறார் தி பரமேசுவரி. இதுகாறும் தலித்துகளை சமூகம் எப்படி நடத்தியிருக்கிறது என்பதற்கான நேர்மையான உண்மையான பதிவு இது. தலித்துகளுக்குள்ளான உள் முரண், சமூகத்தில் சாதிக்கான இடம் அம்பேத்காரின் பணி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தலித்திய இலக்கிய வரலாறு , தமிழ்த் தேசிய அரசியல் ஆகியன விரிவாக அலசப்படுகின்றன. கட்சி சார்ந்தவர்களை எல்லாம் இலக்கியவாதிகள் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கிப் பிரகடனப் படுத்துகிறார்கள் என்றும் அவர்கள் கட்சிக்காரர்களே தவிர இயக்கப் படைப்பாளிகள் இல்லை என்பதை வலிமையாக நிறுவுகிறார்.

 

ஜீவகரிகாலனின் வறட்சியில் செழிப்படையும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலைச் சுட்டும் பாலகும்மி சாய்நாத்தின் புத்தகம் பற்றிய விமர்சனம் கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும் வளர்ச்சிப் பணிகள் என்ற பேரில் சுருட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நிதியைப் பற்றிய யதார்த்தத்தைப் போட்டுடைக்கிறது.

 

பெருமாள் முருகனின் வான்குருவியின் கூடு (தனிப்பாடல் திரட்டு ) பற்றிய இசையின் கட்டுரை, நன்மைக்கும் தீமைக்குமான விழுமியங்களைப் பேசும் சித்தார்த்த வெங்கடேசனின் மியாசகி பற்றிய கட்டுரை, புவி வெப்பமாதல் பற்றிய பித்தலாட்டத்தை வெளிப்படுத்தும் ராஜ் சிவாவின் கட்டுரை, ஜோ டி குரூஸ் சந்தித்த சமூகத்தின் எதிர்வினை, சுயபால் உறவு குறித்த அகநாழிகை வாசுதேவனின் கட்டுரை., மாதவிக் குட்டியின் டைரிக்குறிப்பு பற்றி தமிழில் தந்திருக்கும் யாழினியின் பதிவு, கதிர்பாரதியின் கவிதைகள் பற்றிய தாரா கணேசனின் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன.

 

ஆயினும் தி பரமேசுவரியின் ஈ வேரா பெரியாரின் பெண்ணியமும் – பாடபேதமும் இயந்திரத்தனமும் என்ற கட்டுரை என்னுள்ளிருந்த பல மாய பிம்பங்களை அடித்து நொறுக்கி யதார்த்தைப் புரியவைத்தது என்றால் மிகையாகாது.

Series Navigation