அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

Spread the love
==ருத்ரா
எத்தனை தடவை தான்
இந்த ஜன்னலை திறந்து மூடுவது?
அந்த முகம் நிழலாடியதே
சரேலென்று
எப்படி மறைந்தது?
திறந்தே வைத்திருந்தால்
முகம் காட்ட மாட்டாள்
என்று தான்
இந்த சன்னல் கதவுகள் கூட‌
அவள் இமைகள்
பட படப்பது போல்
பட படக்கும்படி அடையாளங்கள்
செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த சிக்னல் அவளுக்குப்
புரியும்.
அதோ அவள் அங்கு வருவதை
வாசனை பிடித்து விட்டேன்.
இந்த தடவை
அதோ பார்த்து விடுவேன்.
ஒவ்வொரு தடவையும்
இப்படி ஒளித்து மறைத்து
முகம் கவிழ்த்து
முகம் நிமிர்த்தி
ஆகா!அந்த கள்ளப்பார்வை
என்ன சுகம்?
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
எல்லாம்
ஒரே நேனோ செகண்டில்
அரங்கேற்றும்
அவள் அழகே அழகு.
இதோ முகம் காட்டிவிட்டாள்.
மின்னல் வெட்டில்
எல்லாமே மறைந்தது போல்
மாயம்!
ஆனாலும்
அவள் முகம் ஏன் அங்கே
வேறு எங்கோ
நிலைகுத்தி
வெறித்து வெறித்து
பார்க்கிறது?
படீர் என்று
அங்கே கதவுகள்
அறைந்தன.
சில விநாடிகளில்
என் சட்டைப்பாக்கெட்டில்
நேரம் காலம் தெரியாமல்
காலர் ட்யூன் பாடியது..
“அய்யய்யோ ஆனந்தமே”
இன்பத்தேள் கொட்டியதில்
ஆனந்தமா?
செல்லை செவிக்குள்
திணித்தேன்.
“டேய் லூசு.
என்ன மறந்திட்டியா?
இன்னைக்குத்தான்
அந்த புதுப்படம் ரிலீஸ்.
நாம
முதல் நாள் முதல் ஷோ
பாக்கணும்னு சொன்னேனே
நான் இங்கே
ஸ்பெஷல் கிளாஸ்னு
சொல்லியாச்சு..
நீ என்ன‌
சின்னப்பய மாதிரி
ஜ‌ன்னல் கதவை வச்சு
ரயில் விட்டுட்டு இருக்கெ
என்ன ஆச்சு அட்வான்ஸ் புக்கிங்..”
எங்கள் வீட்டுச்சுவரில்
ஒட்டியிருந்த
சினிமா போஸ்டர் பாத்துட்டாளா…
போட்டது போட்ட படி
ஓடினேன்.
“டேய் எங்கடா ஓடுறே?
சாப்டலியா?
தட்டிலே
இட்லி ஆறிபோச்சே..”
அம்மா கத்திக்கொண்டிருக்கிறாள்.

 

Series Navigationபேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி