அதிர்ச்சி

This entry is part 7 of 8 in the series 28 மார்ச் 2021

 

ஜோதிர்லதா கிரிஜா

(5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன்  “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.)) 

முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி விளக்கைச் சுத்திப் பறந்துண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில அதுக்குள்ள விழுந்தேபிடுத்து. விளக்கும் அணைஞ்சுது. விட்டில் பூச்சியும் செத்துப் போயிடுத்து. முட்டாள் பூச்சி. நெருப்பில போய் வலுவில விழுந்து இப்பிடிச் சாகுமோ? நான் படுக்கையில எழுந்து உக்காந்துண்டேன். வெளக்கு அணைஞ்சுட்டதால கூடத்துல இருளோன்னு இருந்தது. அன்னிக்கு அமாவசை. அதனால துளிக்கூட வெளிச்சமே இல்லே. ராத்திரியில அப்பா அடிக்கடி எழுந்து தண்ணி குடிப்பா.  அதனால விடி வெளக்கை ஏத்தித்தான் தொலைக்கணும்.  இல்லேன்னா இருட்டில யாரையாவது மிதிச்சு வெப்பா. சோம்பலையும் அலுப்பையும் ஒதறித் தள்ளிப்பிட்டு நான் மெதுவா எழுந்தேன். எனக்கு அடுத்தாப்ல ஜானகி படுத்திண்டிருந்தா. “ஜானகி! தீப்பெட்டி இருக்கிற எடம் தெரியுமா?” ன்னு அவளை உலுக்கிக் கேட்டேன். பதிலே இல்லே. நல்ல தூக்கம். எப்படித்தான் இவளால நிஷ்கவலையாத் தூங்க முடியறதோ! அவளுக்கும் அடுத்தாப்ல படுத்திண்டிருந்த சித்தியை எழுப்ப வேண்டாம்னுதான் பாத்தேன். எழுப்பித்தான் ஆகணும் போல இருக்கு.

 “சித்தி! சித்தி!” – ‘உம்ம்’னு மொனகினா சித்தி.                                          “தீப்பெட்டி எங்க இருக்கு?”

      சித்தி தலை மாட்டிலேர்ந்து தீப்பெட்டியை எடுத்துக் குடுத்தா. நான் அடிமேலடி வெச்சு மெதுவா நடந்து போயி விடி வெளக்கை ஏத்தினேன். தீக்குச்சி கிழிச்ச ஓசையில அப்பா கண்ணை முழிச்சிண்டு நிமிர்ந்து பாத்தா: “ஏம்மா? வெளக்கு அணைஞ்சு போச்சா? எண்ணெய் இல்லியா?”                                            “விட்டில் பூச்சி விழுந்துடுத்து. …” – ஆமா. இந்த அப்பா கூட கிட்டத்தட்ட ஒரு விட்டில் பூச்சி மாதிரிதான். வெளிச்சத்தைப் பாத்து மயங்கி அதுல விழுந்து உசிரை விட்ட அந்த பூச்சிக்கும், நாப்பது வயசுக்கு மேல ஊர் சிரிக்க ரெண்டாங் கல்யாணம் பண்ணிண்டு, வேண்டாத குடும்பச் சுமையைச் சம்பாதிச்சு, அணுஅணுவாச் செத்துண்டிருக்கிற இந்த அப்பாவுக்கும் எந்த விதமான வித்தியாசமும் இருக்கிறதா எனக்குத் தெரியல்லே. அப்பா முக்கிண்டே திரும்பிப் படுத்துண்டா. அப்பாவுக்கு முக்காம தூங்கத் தெரியாது. சித்திக்கு – தூங்கறச்சே மட்டுமில்லாம – சதாசர்வதா முனகல்தான். ரெண்டு பேரும் முக்கி முனகிண்டு  எப்ப பாரு ஏதாவது வியாதி கொண்டாடிண்டுதான் இருக்கா.  ஆனா, வருஷந்தப்பினாலும் ஒரு கொழந்தை மட்டும் பொறக்கத் தப்பறதில்லே. வெளக்கை ஏத்தி வெச்சுட்டு நான் படுத்துண்டேன்.            சித்திக்குப் பக்கத்துல படுத்திண்டிருந்த அவளோட அஞ்சு கொழந்தைகளையும், அவ வயித்துல ஆறாவதா வளர்ந்துண்டு இருக்கிற உசிரையும் நினைச்சப்போ எனக்கு அருவருப்பா இருந்தது. ஆமா. என் தம்பி-தங்கைகள்ங்கிற நினைப்பை விட, “சித்தி கொழந்தைகள்”ங்கிற நினைப்புத்தான் அதிகமா வருது. அம்மா செத்துப் போனப்போ எனக்குப்  பதினஞ்சு வயசு. ஜானகிக்குப் பத்து வயசு. இந்த வயசுகள்லே ரெண்டு பொண்ணுகளை வெச்சுண்டு, அம்மா போன மறு வருஷமே இன்னொருத்தியை வீட்டுக்குள்ளே கூட்டிண்டு வரதுக்கு இந்த அப்பாவுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ? அப்பா செஞ்ச காரியம் பிடிக்காததனாலே நானும், ஜானகியும் சித்திகிட்ட சரியா முகங்குடுத்துப் பேசாம  உம்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சுண்டு கொஞ்ச நாள் இருந்தோம். யோசிச்சுப் பார்த்தப்போ, சித்தியை வெறுக்கிறது நியாயமில்லேன்னுதான் அப்பப்போ தோணும். ஆனாலும், எங்கம்மாவுடைய எடத்தைப் பிடிச்சிண்டவங்கிற நினைப்பிலேருந்து எங்களால மீளவே முடியல்லே. சித்தி வந்து பத்து வருஷமாயிடுத்து. இன்னும் அது முடியல்லே. கல்யாணத்துக்குப் பெண்கள் நிக்கறச்சே அப்பா கல்யாணம் பண்ணிண்டு வந்தப்போ ஊரே சிரிச்சுது. அப்பா அதையெல்லாம் லட்சியமே பண்னல்லே. எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி் நாங்க புக்காத்துக்குப் போயிட்டா, அதுக்கப்புறம் காலைத் தலையை வலிச்சா ஒரு வெந்நீர் போட்டுக் குடுக்கிறதுக்குக் கூட ஆள் இல்லாம போயிடுமேன்னுதான் ரெண்டாங்கல்யாணம் பண்ணிண்டதா ஊரெல்லாம் சொல்லிண்டிருந்தா அப்பா.                 அப்பாவுக்குப் “பண்ணி வைக்கிற” உத்தியோகம். இந்த உத்தியோகத்துல இருக்கிறவா வேற எந்தத் தொழிலும் செய்யப்படாதுன்னு சாஸ்திரத்துல சொல்லியிருக்காம். ஆனா, சாஸ்திரத்துல சொல்லியிருக்கிற தெல்லாம் இந்தக் காலத்துல நடந்துண்டா இருக்கு? நாங்க நாலு பேர் இருந்தப்பவே அவரால குடும்பத்தை நிர்வகிக்க முடியல்லே.  அதனாலே ஆத்துல பஜ்ஜியும் போண்டாவும் போடுவோம். அதிலே கொஞ்சம் வருபடி வரும். பட்ற பாடுதான் பெரிசே ஒழிய லாபம் ரொம்பக் கொறைச்சல்தான். அம்மா இருந்தப்போ அரைக்கிறதும் கரைக்கிறதும் உற்சாகமா இருந்தது. சித்தி வந்தப்புறம் எரிச்சல்தான் வந்தது. அவ வந்ததுக்கு அப்புறம் குடும்பம் பெருகிண்டிருக்கிறதால வேலையும் அதிகமாயிடுத்து.

வீட்டுக்கு வந்து வாங்கிண்டு போறவாளை மட்டும் நம்பி வியாபாரம் பண்றதாலே சொற்ப லாபம்தான் கிடைக்கும்கிற நிலைமையிலே, நானும் ஜானகியும் வெளியிலெ எடுத்துண்டு போயி வித்துட்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுது. ஜானகி சில தெருக்களுக்கும் நான் சில தெருக்களுக்கும் போவோம். சில வீடுகள்லே வாடிக்கையா வாங்கிக்கிறதுண்டு. அதிலே காசி செட்டியார் வீடும் ஒண்ணு. அந்த ஆச்சி ரொம்பத் தங்கமானவ.

ஆனா, சில பொறுக்கிகளால எனக்குத் தொல்லை ஏற்பட்டுது. அந்த ஆச்சியோட பிள்ளையும் அந்த மாதிரி ஆசாமிதான். தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பெண்டாட்டி இருக்கச்சே, குறுகுறுன்னு என்னை என்ன பார்வை வேண்டிக்கிடக்கு? எண்சாண் ஒடம்பும் ஒரு சாணாக் குறுகிப் போயிடும் எனக்கு.  அன்னிக்கு ஒரு நாள் எனக்குத் துட்டு கொண்டு வர்றதுக்காக ஆச்சி உள்ளே போனப்’போ, அந்தக் கட்டேல போறவன்,  ‘இன்னும் ரெண்டு போண்டா குடு’ன்னு இளிச்சிண்டு வந்து நின்னான். இதைச் சொன்னப்போ அவன் என்னைப் பார்த்த தினுசு சொல்லிக்க முடியாதபடி அசிங்கமா இருந்தது. கூடைக்குள்ளே நன் கையை விட்டப்போ அவனும் கூடைக்குள்ளே கையை விட்டு என் கையைப் பிடிச்சுட்டான். கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ளே இப்படிப் பண்ணிப்பிடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லே. ஒரே  நிமிஷத்துலே குப்னு வேர்த்துடுத்து. ‘சீ’ ங்கிற ஒரு வார்த்தைதான் சொல்ல முடிஞ்சுது. ‘ஸாரி’ ன்னு இளிச்சுண்டு அவன் கையை எடுத்துண்டப்போ, ‘அவன் வேணும்னு பண்ணல்லே; இல்லேன்னா ஸாரி சொல்லுவானா’ன்னு நினைக்கிறதுக்கு நானென்ன அசடா? ஒரு ஆம்பிளையை வெறுமனே பார்த்த மாத்திரத்துலேயே அவன் பொறுக்கின்னு தெரிஞ்சுக்கக் கூடிய சாமர்த்தியத்தைப் பொண்ணுகளுக்கு ஆண்டவன் குடுத்திருக்கானோ, நாங்க பொழைச்சோமோ!

ஜானகிக்கும் இந்த மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டுதா இல்லியான்னு நான் கேட்டுத் தெரிஞ்சுக்கல்லே. அதைப் பத்திப் பேசறதுக்கே எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. இருந்தாலும் ஜானகிக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாம இருக்கணும்னு அடிக்கடி கடவுளை வேண்டிப்பேன். அவளைவிட நான் அஞ்சே வயசுதான் மூத்தவன்னாலும், அவ என்னவோ  சின்சக் கொழந்தைன்னு எனக்கு ஒரு பிரமை.

எனக்கு இருபத்தஞ்சு வயசாறது. ஜானகிக்கு இருபதாறது. எங்க ரெண்டு பேர்ல யாரோட கல்யாணத்தைப் பத்தியும் அப்பா இது வரைக்கும் மூச்சு விட்டது கிடையாது. எதிராத்து ராவுஜி மாமா விசிறிக்காம்பால முதுகைச் சொறிஞ்சுண்டு அதைப் பத்திப் பேச்செடுத்தா, ‘பாத்துண்டிருக்கேன்’னு அப்பா வாய் கூசாம புளுகுவா. என்னை விட ஜானகிக்குத்தான் ரொம்ப எரிச்சலா வரும். ‘பாத்தியோல்லியோ டூப் அடிக்கிறதை – சம்ஸ்கிருத மந்திரம் சொல்ற வாயாலே! சம்ஸ்கிருதம் செத்துப் போனதே இந்த மாதிரி ஆசாமிகளாலதாண்டி!’ அப்படிம்பா.

எங்க கல்யாண விஷயமா அப்பா எந்த விதமான முயற்சியும் எடுக்கல்லேங்கிறதையும், ஒப்புக்காகக் கூட அதைப் பத்திப் பேசினதில்லேங்கிறதையும் நினைக்கிறச்சே யெல்லாம் அப்பா மேலே எனக்குக் கோவம் கோவமா வரும். அம்மா இன்னைத் தேதியிலே உசிரோட இருந்தா, இப்படி இருப்போமா – இருக்க விட்டிருப்பாளா – ன்னு நினைக்கிறப்போ மனசே பொங்கற மாதிரி இருக்கும். மனசு நிதானமா இருக்கிற நேரங்கள்லே, அப்பா வரதட்சிணைக்கும் இன்னொண்ணுக்கும் எங்கே போவா? அவரைச் சொல்லி என்ன குத்தம்னு தோணும். முயற்சியே பண்ணாம மாப்பிள்ளை வந்து குதிப்பானான்னும், அரைக்கிறதுக்கும் கரைக்கிறதுக்கும், போண்டா, பஜ்ஜியைத் தெருத் தெருவா வித்துட்டு வரதுக்கும் ஆளில்லாம போயிடுமேன்னுதான் அதைப் பத்தித் தப்பித் தவறிக்கூட மூச்சு விடாம இருக்காளோ இந்த அப்பான்னும் சில சமயங்கள்லே தோணும். இந்தப் பத்து வருஷத்துலே குடும்பத்தையும் வியாதியையும் பெருக்கிண்டு, செலவையும் கவலைகளையும் இழுத்துவிட்டுக்காம இருந்திருந்தா, எங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையும் என்னிக்கோ முடிச்சுட்டு இன்னிக்கு அக்கடான்னு இருக்கலாமோல்லியோன்னும் எரிச்சல் எரிச்சலா வரும். அப்பா, துணை ரொம்ப அவசியமா யிருக்கிற ஒரு பருவத்திலே பொண்ணுகளுக்குக் கல்யாணம் பண்ணிப்பிடணும்கிற பொறுப்பே இல்லாம இருக்கிறதையும், குறிப்பிட்ட வயசுக்குள்ளே பொண்ணுகளுக்குத் துணையைத் தேடி வைக்கல்லேன்னா, அந்த வயசைத் தாண்டினப்புறம் அவாளை நாய் கூடச் சீந்தாதுங்கிறதையும், ஆயுசு பூரா அவா கல்யாணமே ஆகாம “நிக்கணும்” கிறதையும் துளிக்கூட நினைச்சுப் பார்க்காதது எவ்வளவு பெரிய ஆச்சரியம்! ஆமா. ஆச்சரியம்தான். இதையெல்லாம் நினைக்கிறச்சே, ‘சீ! இப்படியும் ஒரு தகப்பனார் இருக்காரே!’ ங்கிற நினைப்பாலே வர்ற கோபத்தை விட ஆச்சரியந்தான் அதிகமா வரும். …

ராவுஜி மாமா வீட்டுக் கெடியாரத்துலே பன்னண்டு மணி அடிச்சதும் கண்ணை இறுக்கி மூடிண்டு தூங்க முயற்சி பண்ணினேன். ரொம்ப நேரம் ஏதேதோ குருட்டு யோசனைகள் பண்ணிண்டிருந்தப்புறம் ஒரு வழியாக் கண்ணசந்தேன். மறு நாள் பொழுது விடிஞ்சதும் என்னைத் தலைகால் புரியாத உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அமிழ்த்தக்கூடிய ஒரு சமாசாரம் நடக்கப் போறதுங்கிறதைப் பத்தி எதுவுமே தெரியாமெ நான் அசந்து தூங்கினேன்…                                           மறு நாள் சாய்ந்தரம் நான் சினிமாக் கொட்டாய் வாசல்லே நின்னுண்டிருந்தப்போ, அங்கே இருந்த பொட்டிக்கடை முதலாளி – வழக்கமா எங்கிட்ட வியாபாரம் பண்றவன் – அன்னிக்கும் வாங்கிண்டான். அப்போ அவன் கடையிலே யாருமில்லே. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாருமே இல்லே. அட, இருந்தாத்தான் என்ன? என்னோட அவன் பேசறதை யாரு விகல்பமா எடுத்துக்க முடியும்? நான் பஜ்ஜி, போண்டா விக்கிறவ. அவன் வாங்கித் திங்கறவன்.                “உங்க பேரு என்னம்மா?” ன்னு அவன் கேக்கவும் ஒரு ஷணத்துக்கு எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. நான் திகைச்சு நின்னதைப் பார்த்ததும், “உங்களுக்கு இஷ்டமில்லேன்னா சொல்ல வேண்டாம்,” னு அவசரமாச் சொல்லிட்டு, தப்பா எதையோ பேசிப்பிட்டவன் மாதிரி அவன் தலையைக் குனிஞ்சுண்டுட்டான்.  அவன் முகத்தை ஒரு புது ஆர்வத்தோட – அன்னிக்குத்தான் புதுசாப் பார்க்கிற மாதிரி – நான் கவனிச்சுப் பார்த்தேன்.

ரொம்ப நல்லவன்னு அவன் நெத்தியிலெ எழுதி ஒட்டியிருந்த மாதிரி இருந்தது… களையான முகந்தான். நானும் ரெண்டு வருஷமா வந்து போயிண்டிருக்கேன். வாயைத் திறந்து ஒரு பேச்சுப் பேசினதில்லே. ஒரு சின்னச் சிரிப்புக் கூடச் சிரிச்சதில்லே. அவன் உண்டு, அவன் வேலை உண்டு. அதனாலே அவன் மேலே எனக்கு ஒரு மரியாதை கூட உண்டு. யாராவது அசட்டுப் பிசட்டுனு பேசினாலோ கொண்டாலோ, உடனே இந்தப் பொட்டிக்கடைக்காரன் நினைவுதான் வரும்.  ‘அந்தக் கட்டேல போறவன்கள் இவன் கால்தூசி பெறுவாளா’ ன்னு தோணும். அப்படிப்பட்டவன் இன்னிக்கு மொதல் மொதலா வாயைத் தொறந்து, ‘உங்க பேரென்ன’ ன்னு கேட்டுட்டது ரொம்ப ஆச்சரியமான விஷயந்தான். ஒரு ஷணம் நான் திகைச்சுப் போய் நின்னுட்டதை, தான் என் பேரைக் கேட்டது எனக்குப் பிடிக்கல்லேங்கிறதா அர்த்தம் பண்ணிண்டு அவன் குத்தம் பண்ணிட்ட மாதிரி குனிஞ்சுண்டதைப் பார்த்ததும் எனக்குப் பாவமா இருந்தது.

 “பரிமளான்னு பேரு,” ன்னு சொல்லிட்டு நானும் தலையெக் குனிஞ்சுண்டேன். அவன் தலை நிமிந்ர்து என்னைப் பார்த்தான். எவ்வளவு கண்ணியமான பார்வை! அவன் ஒண்ணும் அதிகம் படிச்சவனா யிருக்க முடியாது. என்னைப் போல அஞ்சாறு கிளாஸ் வாசிச்சிருப்பான். அவ்வளவுதான்.  படிப்புக்கும் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லைன்னுதான் தோணித்து.

 “ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு. … நீங்க ஒண்ணும் தப்பா நினைக்கலேன்னா ….”

 புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் குழப்பமா யிருந்தது. படபடன்னு வந்தது. நானும் அவனோட அழகான பெரிய கண்னைப் பார்த்துண்டு மௌனமா நின்னேன். அப்ப யாரோ ரெண்டு பேர் அவன் கடைக்கு வியாபாரம் பண்ண வந்துட்டா. “நாளைக்கு வாங்க,” ன்னு அவசரமாச் சொல்லி அனுப்பிச்சுட்டான்.

 ‘படபட’ன்னு மனசு அடிச்சுக்க, நான் அவன் கடையை விட்டுப் பொறப்பட்டேன். அன்னிக்குப் பூரா எனக்கு மனசே சரியாயில்லை. ஒரே சந்தோஷமாவும் ஒரே வருத்தமாவும் இருந்தது. இந்த மாதிரி ஒரு விசித்திரமான உணர்ச்சியை அனுபவிச்சுண்டு அன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் தூங்காமெ படுத்துண்டிருந்தேன். அப்பா என் கல்யாண விஷயமா எந்த விதமான முயற்சியும் எடுக்கல்லேங்கிறதுனாலே அவர் மேலே எனக்கு மனத்தாங்கலே ஒழிய, நான் இது வரைக்கும் யாரையும் பார்த்து, ‘இவனைக் கல்யாணம் பண்ணிண்டா எவ்வளவு நன்னாருக்கும்’னு நினைச்சது கூட இல்லே. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதது காரணமாயிருக்கலாம். பொட்டிக்கடை ஆளு (அவன்  பேரு கூட எனக்குத் தெரியாது) என் பேரைக் கேட்டதுக்கும், ‘ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு’ அப்படின்னு சொன்னதுக்கும் அப்புறம், அவன் மனசு பாதிக்கு மேலே புரிஞ்சு போயிட்டதாலே, என் மனசு தெறி கெட்டுத் திரிய ஆரம்பிச்சுடுத்து. எனக்கே தெரியாமெ எனக்குள்ளே குறட்டை விட்டுண்டு இருந்த மனசை யாரோ தட்டி எழுப்பி விட்டுட்ட மாதிரி இருந்தது. இது தகாத உறவு. கூடாக் கனவு. யாருடைய அங்கீகாரத்தையும் பெற முடியாத தொந்தம்கிறது நன்னாப் புரிஞ்சதுக்கு அப்புறமும் பாழும் மனசு ஏன் இப்படி அவனையே சுத்திச் சுத்தி வரணும்னு புரியவே இல்லே.

மறு நாள் கல்லுரல்லே உளுந்தை நான் அரைச்சிண்டு இருந்தப்போ யார் கண்ணுக்கும் தெரியாததை ஜானகி கண்டுபிடிச்சுட்டா. “என்ன, ஒரு மாதிரி இருக்கே?” ன்னு அவ கேட்டப்போ, “ஒரு மாதிரியும் இல்லே. எப்பவும் போலத்தான் இருக்கேன்”னு நான் மூஞ்சியெ சாதாரணமா வெச்சுண்டு சொன்னதைத் துளிக்கூட நம்பாமெ, “நீ எதையோ மறைக்கிறேடி, அக்கா. நீ மறைச்சாலும் உன் மூஞ்சி சொல்றதே!”ன்னு அவ ஒரு போடு போட்டதும், எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது.

சமாளிச்சுண்டு, “மூஞ்சி சொல்றதோல்லியோ? அப்போ அதையே கேட்டுக்கோ,”ன்னுட்டு நான் அவ மொகத்தைப் பார்க்காமெ, கிடுகிடுன்னு குழவியை ஆட்டினேன். ஜானகி ஒண்ணும் சொல்லாமெ, என்னையே பார்த்துண்டு நின்னா.           “நீ ரொம்பப் பாவம் பண்ணிப்பிட்டு நீ இந்த வீட்டிலெ வந்து பொறந்திருக்கேடி, அக்கா,”ன்னு அவ ஒடைஞ்சு போன குரல்லே சொன்னதும், அரைக்கிறதை நிறுத்திட்டு நான் அவளை முழிச்சுப் பார்த்தேன்.

 “உன் சிநேகிதி ஆனந்திக்குக் கல்யாணமாகி, இன்னிக்குப் பத்து வயசிலே ஒரு பிள்ளை இருக்கான் அவளுக்கு. சில சமயங்கள்லே அப்பா மேலே எனக்கு எவ்வளவு கோபம் கோபமா வருது, தெரியுமா? இன்னிக்கு ரெண்டுலெ ஒண்ணு நேருக்கு நேரா நின்னுண்டு அப்பா கிட்ட கேக்கப் போறேன். கலகம் பொறந்தாத்தாண்டி நியாயம் பொறக்கும்,”ன்னு சொல்லிட்டு, இடுப்பிலே ரெண்டு கையையும் வெச்சுண்டு அவ நின்னப்போ பத்ரகாளியாட்டமா இருந்துது.

 “என்னடி கேக்கப் போறே?”                                                        “உன்னையும் பக்கத்துலே வெச்சுண்டுதாண்டி கேக்கப் போறேன். அப்ப நீயே தெரிஞ்சுக்கோ.”

 அப்பா தற்செயலா அந்த சமயத்துலே அந்தப் பக்கம் வந்தா. … குடத்துலேருந்து ஜலம் சரிச்சிண்டிருந்த அப்பாவை அவ முறைச்சுப் பார்த்துண்டு நின்னதைப் பார்த்ததும், ஏதோ பிரளயம் வரப் போறதுன்னு தெரிஞ்சுடுத்து. மனசு ‘பக் பக்’னு அடிச்சுண்டுது. அப்பா தம்ப்ளரைக் கவுத்து வெச்சுட்டுத் திரும்பினதும், ஜானகி, “அப்பா!”ன்னு அவரை அதட்டற மாதிரி கூப்பிட்டா.

“என்ன?”                                                                        “உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்.”                                     நான் அரைக்கிறதை நிறுத்திப்பிட்டேன். அவ பேசின தோரணையிலே தெறிச்ச கடுமையை அப்பா புரிஞ்சிண்டிருந்திருக்கணும்கிறது அவர் முழிச்ச முழியிலேயே தெரிஞ்சுது.                                                                “என்ன?”                                                                       “பரிமளாவுக்கு எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம்? தலையெல்லாம் நரைச்சுப் போனாவுட்டா?”                                       

அப்பா சட்னு தலையைக் குனிஞ்சிண்டா. ஜானகியோட பார்வை அவ்வளவு தீட்சண்ணியமா – தொளைக்கிற மாதிரி – இருந்துது, எனக்கே அவளைப் பார்க்க பயமாயிருந்துது.

  “கொழந்தைகளைப் பெத்துட்டதோட பொறுப்பு முடிஞ்சுடுத்தா? அசதி மறதியாக் கூட அவ கல்யாணத்தைப் பத்திப் பேசாமெயே இருந்தா என்னப்பா அர்த்தம்? படக்கூடாதவன் பார்வையிலே யெல்லாம் பட்டுண்டு – கேக்கக் கூடத பேச்செல்லாம் கேட்டுண்டு – நாங்க தெருத் தெருவாச் சுத்தறது உங்களுக்கே நன்னாயிருக்காப்பா? உங்களுக்கே நன்னாயிருக்கான்னு கேக்கறேன்!”

 “ ……. ”

 “பேசாமெ இருந்தா என்னப்பா அர்த்தம்? குப்பு சாஸ்திரிகள் பொண்ணு பண்ணின மாதிரி நாங்களும் பண்ணினாத்தாம்ப்பா உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!” – எனக்கு ரொம்பத் தூக்கிவாரிப் போட்டுடுத்து. குப்பு சாஸ்திரிகளோட பொண்ணு அன்னம் எவனோ வேற ஜாதிக்காரனை இழுத்துண்டு ஓடினதைப் பத்தி அவ பேசினதும், அந்தப் பொட்டிக்கடைக்காரன் ஞாபகம்தான் எனக்கு வந்துது. ‘எதையோ மோப்பம் பிடிச்சுட்டுத்தான் இந்த ஜானகி இப்படியெல்லாம் பேசறாளோ? ஒருவேளை அந்தப் பொட்டிக்கடைக்காரனே இவ என் தங்கைங்கிறதைத் தெரிஞ்சுண்டு இவ கிட்ட ஏதாவது சொல்லியிருப்பானோ?’

 அப்பா கண்ணுலே ஜலம் வந்துடுத்து: “கையிலே பணத்தை வெச்சுண்டுன்னாம்மா வரன் தேடணும்? வெறுங்கையெ வெச்சு மொழம் போட முடியுமா?”

 “நாப்பது வயசுக்கு மேலே இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிண்டு ஆறு கொழந்தைகளைப் பெத்து வைக்காம இருந்திருந்தா, இன்னிக்கு வெறுங்கையா இருப்பேளாப்பா நீங்க?””

 “ஏய், ஜானகி! என்னடி இது?”ன்னு நான் பதறிப்போய் கத்தினதைக் கொஞ்சங்கூடச் சட்டை பண்ணாமெ, “நீ சும்மா இருடி,”ன்னு அவ என்னை அடக்கினா.

  அப்பா மூஞ்சி ரத்த விளாறாச் செவந்து போச்சு: “என்ன சொன்னே? நாப்பது வயசுக்கப்புறம் நான் கல்யாணம் பண்ணிண்டதைப் பத்திப் பேசறதுக்கு நீ யாரு? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிண்டு போயிட்டப்புறம் எனக்கு யாரு இருப்பா? நீங்க செய்வேளா எனக்கு?”

 “அப்போ, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு நீங்க பண்ணிண்டிருந்திருக்கணும்…. வசிஷ்ட சூத்திரத்துலே வசிஷ்ட மகரிஷி என்ன சொல்லியிருக்கார்னு தெரியாதா உங்களுக்கு? வயசுக்கு வந்த பொண்னை மூணு வருஷத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிக் குடுக்கல்லேன்னா, தனக்குப் பிடிச்ச எவனோடேயும் –  அப்பாவுடைய சம்மதமில்லாமயே கூட – போயிட்றதுக்கு ஒரு பொண்ணுக்கு உரிமை உண்டுன்னும், அந்த மாதிரி செய்யற ஒரு பொண்ணோ, அவளை அழைச்சுண்டு போற ஆணோ குற்றவாளி இல்லைன்னு அவரும் மனுதர்ம சாஸ்திரமும் சொல்லியிருக்கிறதை நான் ஞாபகப்படுத்த வேண்டாம்னு பார்க்கிறேன். வயசுக்கு வந்ததுக்கப்புறம் ஏழு மாசத்துக்குள்ளே அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கல்லேன்னா, ஏழு கொழந்தைகளைக் கொன்ன பாவம் ஒரு தகப்பனாருக்கு வந்து சேரும்னு கூட மனுதர்ம சாஸ்திரத்துலே சொல்லியிருக்கு. … சும்மா சம்ஸ்கிருத புஸ்தகங்களை அலமாரியிலே வரிசையா அடுக்கி வெச்சுட்டாப்ல ஆச்சா?” – ‘ஜானகியா துளிக்கூடக் கூச்சம்கிறதே இல்லாமெ இப்படியெல்லாம் பேசறா!’ன்னு எனக்கு அதிர்ச்சியா யிருந்துது. இதுகளுக்கு சம்ஸ்கிருதம் ஏன் சொல்லிக் குடுத்தோம்னு அப்பா நிச்சயமா வருத்தப்பட்டிருப்பா.

அப்பா, “சே! நீயும் ஒரு பொண்ணா! வெக்கம்கிறது துளிக்கூட இல்லியே?”ன்னு சொல்லவும், ஜானகி வாய் விட்டு சிரிச்சா: “வெக்கப்பட வேண்டியது நீங்களா, நானா? இந்த ஆவணிக்குள்ள பரிமளா கல்யாணம் நடந்தாகணும். ஆமா! … குதிரு குதிராப் பொண்ணுகளை வளர்த்து வெச்சுண்டு அவா சம்பாத்தியத்துல வயிறு வளர்த்திண்டிருக்கேள்னும், அதனாலதான் எங்க கல்யாணத்தைப் பத்தின பிரக்ஞையே உங்களுக்கு இல்லேன்னும் ஊர்லே நாலு பேர் பேசற பேச்சு காதுல விழறச்சே உங்களுக்கு அவமானமா இல்லே? நானாயிருந்தா நாக்கைப் பிடுங்கிண்டு பிராணனை விட்டுடுவேன். …” –  அப்பா பதிலே பேசாம போயிட்டா. இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துண்டு, கூனிக் குறுகிப் போயி, சித்தி ஒரு ஓரமா நின்னுண்டிருந்தா.

அப்பா போனப்புறம், “என்னடி ஜானகி இது? என்ன இருந்தாலும் தகப்பனார் இல்லியா? இவ்வளவு ரசாபாசமாவா பேசறது?”ன்னு நான் அவளைக் கோவிச்சுண்டப்போ,  “பாவ புண்ணியம், அநாகரிகம், ரசாபாசம் இதையெல்லாம் பார்க்க வேண்டிய வீடுகள் வேறேடி. இந்த வீடு இல்லே! நீ ஒரு மண்டு. நானா இருந்தா …”ன்னு அவ முடிக்காமெ நிறுத்தினா.

 “நீயா இருந்தா?”

 “ஓடிப் போயிருப்பேன்! இருபத்தாறு வயசு வரைக்கும் பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத தகப்பனுக்கு  மரியாதை காட்டணுமாம், மரியாதை!” –  ஜானகி தன் வேலையைக் கவனிக்கப் போயிட்டா. எனக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துது.

 ‘ஓடிப்போயிருப்பேன்!’ – அடேயப்பா! வாய் கூசாமெ எவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லிப்பிட்டுப் போறா இவதான்! எனக்கு ஒரே கூச்சமா இருந்துது. இவ இந்த மாதிரியெல்லாம் கூடப் பேசக் கூடியவள்ங்கிற உண்மை அன்னிக்குத்தான் எனக்குத் தெரியும். …மறுபடியும் எனக்கு அந்தப் பொட்டிக்கடைக்காரனோட ஞாபகம்தான் வந்துது. – ‘போகலாமா, வேண்டாமா?’

… போனேன். அன்னிக்கு அவன் கடைக்கு நான் போனப்போ, நல்ல வேளையா எங்களுக்கு இடைஞ்சலா யாருமில்லே. அவன், “எங்கே கோவிச்சுக்கிட்டு வராம இருந்துடுவீங்களோன்னு பயமா இருந்தது..,”ன்னுண்டே ஒரு கடுதாசியெக் குடுத்தான்: “நாளைக்கு பதில் சொன்னாப் போதும்.”

 “சரி…” – யந்திரம் மாதிரி கடுதாசியெ வாங்கிண்டு கெளம்பினேன். ஏதோ செய்யக் கூடாத காரியத்தைப் பண்ற மாதிரி மனசு குறுகுறுன்னுது. கடுதாசியெப் பர்சுக்குள்ள வச்சுண்டு கூடையிலே காகிதத்துக்கு அடியிலே போட்டுண்டு நடந்தேன்.    …… எங்க வீட்டிலே இருந்த ஒரே அறைக்கதவைச் சாத்திண்டு இத்தனூண்டு ஜன்னல் வழியா வந்த வெளிச்சத்துல, ‘வெட வெட’ன்னு நடுங்கிண்டிருந்த கையால அந்தக் கடுதாசியெப் பிரிச்சுப் படிச்சேன்.

 “அன்புள்ள பரிமளா அவர்களுக்கு. நான் பெண்கள் வம்புக்குப் போகிற காலி இல்லை என்பதை முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இரண்டு ஆண்டுகளாக நீங்கள் என்னைக் கவனித்து வருவதால் இதை நம்புவீர்களென்று நினைக்கிறேன். உங்கள் அடக்கம், அழகு இரண்டும் என்னைக் கவர்ந்துள்ளன. நான் உங்களை மணக்க ஆசைப்படுகிறேன். நான் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். உங்களுக்குச் சம்மதமானாலும் என் ஜாதி குறுக்கே நிற்குமென்பதை அறிவேன். உங்கள் வீட்டாரைப் பகைத்துக்கொண்டு என்னை மணக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. இந்த ஊரில் நாம் வாழ்வது சாத்தியமில்லை. வேற்றூர் எங்காவது போய் பதிவுத்திருமணமும் செய்துகொண்டு கண்ணியமான மண வாழ்க்கையைத் தொடங்குவோம். தற்சமயம் என் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறது. நான் கைவிட்டு விடுவேனோ எனும் சந்தேகம் இருக்குமானால், அதை உங்களிடம் கொடுத்துவிடச் சித்தமாக இருக்கிறேன். உங்களுக்கு என் மேல் அவநம்பிக்கை இருந்தால் மனம்விட்டு அதைச் சொல்லிவிடுங்கள். அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் தொடங்கும் காதல் – அது கல்யாணத்தில் முடிந்தாலும் – இருவருக்கும் மனநிறைவை அளிக்காது. ஆயினும், நான் பாதியில் உங்களைக் கைவிட்டுவிடுவேனோ என்று சந்தேகப்படுவீர்களானால் அதையே உங்கள் பெண்மையின் சிறப்புக்கு ஓர் அடையாளமாய்க் கருதுவேனேயன்றி, வருத்தப்பட மாட்டேன்.

உங்கள் பதில் எனக்கு ஆதரவாக இருக்குமானால், என்னை மிகுந்த அதிருஷ்டசாலியாகக் கருதிக் கொள்ளுவேன். என்னை மணக்க நீங்கள் விரும்பவில்லை யென்றால், மனமுடைந்து போவேன். …இப்படிக்கு, நடேசன்.”

நடுக்கத்துடன் அதை நான் அஞ்சாறு தரம் வாசிச்சேன்.  ‘நமக்கும் ஒருத்தன் காதல் கடுதாசி எழுதிப்பிட்டானே’ங்கிற பரவசமும், ‘இது சொப்பனத்துல கூட நினைச்சுப் பார்க்கமுடியாத ஒரு காதல்ங்கிற நினைப்பாலெ ஏற்பட்ட வேதனையும் மாறி மாறி என்னை அலைக்கழிச்சப்போ, சிரிப்பும் அழுகையுமா நான் அதை மறுபடியும் மறுபடியும் வாசிச்சுண்டே இருந்தேன். ‘உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நான் ஆசைப்பட்றேன்’னு  ஒருத்தன் சொல்றதை சாகிறதுக்குள்ள ஒரு தரமாவது கேப்போமான்னு இந்தப் பாழும் மனசு அடிச்சிண்டிருந்தது எனக்குத்தான் தெரியும். அந்தக் கடுதாசியில தொனிச்ச சத்தியம் என் மனசைத் தொட்டுது. ரொம்ப கண்ணியமான கடுதாசி.  அந்த ஆச்சி பிள்ளையெ நடேசன் கால்ல கட்டி அடிக்கணும். படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமே இல்லேதான். ஆனா இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கில்லே. இது நடக்கவே முடியாத பகல் கனவு. ‘இந்த நடேசன் மொதலியார் ஜாதியிலெ போய்ப் பொறந்திருக்கானே? பிராமண ஜாதியிலெ பொறந்திருக்கக் கூடாதோ?’ன்னு என் மனசு முட்டாள்தனமான கற்பனையிலே ஏங்க ஆரம்பிச்சுது. என்ன பைத்தியக்காரத்தனம்! அன்னிக்கு ராத்திரி முழுக்க எனக்கு சிவராத்திரிதான். கண்ணைக் கொட்டணுமே!

 ‘நானா இருந்தா ஓடிப்போயிருப்பேன்!’ – அன்னிக்குக் கார்த்தாலெ ஜானகி பச்சையாப் பேசின வார்த்தைகள் திடீர்னு என் மண்டையைக் குடைய ஆரம்பிச்சுது. பட்டணத்துல எத்தனையோ பேர் கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிறது எனக்குத் தெரியும். ஆனா, இந்தப் பட்டிக்காட்டில அது நடக்காது. கலப்பு மணத்துலே பரஸ்பரம் விட்டுக்குடுக்கற மனப்பான்மை ரெண்டு பேருக்கும் இருக்கணும். பெத்தவாளை விரோதிச்சுண்டு தன்னை நம்பி ஓடி வர்ற ஒரு பொண்ணை அனுதாபத்தோட பார்க்கிற பரந்த மனப்பான்மை ஆணுக்கு இருக்கணும். இந்த சுபாவம் நடேசன் கிட்ட நிறைய இருக்கும்ங்கிற நம்பிக்கை ஏற்பட்டதாலெ, ஜானகி சொன்ன மாதிரி எனக்கும் தோணித்து –

 ‘ஓடிப்போனாத்தான் என்ன?’ – திடீர்னு எனக்கே தூக்கிவாரிப் போட்டுது. நானா இந்த மாதிரியெல்லாம் நினைக்கிறேன்? … ஓடிப்போறது ஒண்ணும் பிரமாதமில்லே. நிமிஷமா ஓடிப்போயிட முடியும். ஆனா, இந்தக் குடும்பத்தோட கௌரவம் என்ன ஆறது? ..எனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்காத இந்த அப்பாவோட குடும்ப கௌரவத்தைப் பத்தி எனக்கென்ன அக்கறை? நான் ஏன் அலட்டிக்கணும்? கடமைகளைப் பத்தின பிரக்ஞையே இல்லாத ஒரு மனுஷனுக்கு கௌரவம்னு கூட ஒண்ணு உண்டா என்ன? … அப்பாவோட கௌரவம் கெட்டுப்போறதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய ‘நியாய’த்தை எனக்கு ஞாபகப்படுத்தறதுக்கு யாருக்குமே உரிமையோ தகுதியோ இல்லைன்னாலும் – நியாய அநியாயங்களுக்கு உட்படாத சில தவிர்க்க முடியாத விளைவுகள் என் போக்கினாலே ஏற்பட்டுத்தான் தீரும்னு எனக்குள்ளே ஒரு குரல் இரைஞ்சு கேக்கறச்சே, அந்த விளைவுகள்லே ரொம்ப பயங்கரமான ஒரு விளைவு பூதாகாரமான ஒரு கேள்விக்குறியா மாறி என்னைத் திக்குமுக்காட வெச்சுது. …

 ‘நீ ஓடிப்போயிடுவேடி. ஆனா, அப்படி ஓடிப்போனவளோட கூடப் பொறந்தவளை யாரு கல்யாணம் பண்ணிப்பா நாளைக்கு? அதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? உனக்காகப் பரிஞ்சு அப்பா கிட்ட கன்னா பின்னான்னு பேசின ஜானகியோட வாழ்க்கையை உன்னோட காரியம் எந்த அளவுக்குப் பாதிக்கும்கிறதைப் பத்தித் துளிக்கூட யோசிச்சுப் பார்க்காம, ‘ஓடிப்போனா என்ன’ன்னு நீ நினைக்கிறது சுயநலமில்லையா?’ ஒரு ஆண்பிள்ளை எந்த வழியிலே போனாலும் அவனோட தங்கைகளுக்கெல்லாம் தடங்கலில்லாமெ கல்யாணமாயிடும். ஆனா, பொண்ணு  ‘நியாயமான தப்பு’களைப் பண்ணினாக்கூட, அவளோட தங்கைகள் வாழ்க்கையை அவளோட நடத்தை பாதிக்கிறது.

மறு நாள் காலம்பர, குளிக்கிற ரூம்ல உக்காந்துண்டு கோணலும் மாணலுமான எழுத்துலே நடேசனுக்குக் கடுதாசி எழுதினேன்: ‘அன்புள்ள நடேசன் அவர்களுக்கு. உங்களுக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிப்பதென்று தெரியவில்லை. ஆனால், நான் உங்களை மணந்து கொள்ளுவதற்கில்லை. எனக்கு ஜாதி உணர்ச்சி கிடையாது. என்னை மணக்கிறவர் நல்லவராக இருக்க வேண்டும் எனும் ஓர் எண்ணந்தான் எனக்கு. உங்களிடம் என் மனம் முழுமையாக ஈடுபடுகிற போதிலும், நான் செய்கிற காரியம் என் தங்கையின் திருமணத்தைப் பாதிக்கும் எனும் நிலையில் உங்களை நான் மணந்து கொள்ளுவதற்கில்லை. என் தங்கைக்கு முதலில் கல்யாணம் செய்விப்பதற்கோ, அது வரை நீங்களும் நானும் காத்துக் கொண்டிருப்பதற்கோ வழி இல்லை. என் திருமணத்துக்கே எங்கள் வீட்டில் இன்னும் எந்தவிதமான முயற்சியும் செய்யப்படவில்லை எனும் நிலையில், என்னைவிட ஐந்து வயது சிறியவளான என் தங்கை விஷயம் என்ன என்பதைப்பற்றி நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே, உங்களை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். மன்னிகவும்.

  • ரொம்ப நேரம் யோசிச்சு, யோசிச்சு, கடைசியிலெ இந்த மாதிரி ஒரு கடுதாசியை எழுதிண்டேன். நடேசனுடைய பொட்டிக்கடை கிட்டப் போனப்போ, மனசு ‘பக் பக்’னு அடிச்சுண்டுது. காலு ரெண்டும் பின்னிண்டு போச்சு. என்னையே கண் கொட்டாம ஆவலோடயும் நம்பிகையோடயும் பார்த்துண்டிருந்த அவனைப் பார்த்ததும் என் மனசு சுக்கல் சுக்கலாத் தெறிச்சு சிதறிப் போன மாதிரி இருந்துது. அழுகை வரும் போல இருந்துது. யாரோ ஒருத்தன் கடையிலே வியாபாரம் பண்ணிண்டிருந்தான். அவனை அனுப்பிச்சுட்டு, நடேசன், “வாங்க,”ன்னு என்னைப் பார்த்து சிரிச்சான். என்னால சிரிக்க முடியல்லே. கடுதாசியை அவனுக்கு முன்னால வெச்சுட்டு நான்  ‘விடுவிடு’ன்னு நடந்தேன். ஓட்டமும் நடையுமா வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.                அதுக்கப்புறம் நான் நடேசன் கடைக்குப் போகல்லே. அவன்  கண்ணுல படாமெ இருக்கணுமே பகவானேன்னு நான் கடவுளை வேண்டிக்காத நாள் இல்லே. எப்படியோ ஒரு வருஷம் வரைக்கும் அவன் கண்ணுல படாமெ தாக்குப் பிடிச்சுட்டேன். திடீர்னு ஒரு நாள் அவனைப் பார்க்கணும்னு மனசு அடிச்சுண்டுது. தூர நின்னுண்டாவது அவனை ஒரு தரம் பார்த்துடணும்கிற உத்தேசத்தோட நான் காலை எட்டிப் போட்டேன். பொட்டிக்கடையோட பேரு மாறியிருந்துது. நடேசனோட எடத்துலெ தொந்தியும் தொப்பையுமா ஒருத்தர் உக்காந்துண்டு வியாபாரம் பண்ணிண்டிருந்தார். 

       “நடேசன் இல்லியா?”ன்னு நான் விசாரிச்சதும், “அவர் கடையெ வித்துட்டுப் போயி ஏழெட்டு மாசமாச்சே,”ன்னு அவர் பதில் சொன்னார்.

       “இப்ப எங்க இருக்கார்?”

       “அவரு கடையை எனக்கு வித்துப்போட்டு இந்த ஊரை விட்டே போயிட்டாரே. இப்ப அவரு இருக்குற ஊரு கூடத் தெரியாது,” ன்னார் அவர்.

       என் நெஞ்சிலே ஒரு நரம்பு படீர்னு அறுந்த மாதிரி இருந்துது. எல்லாம் ஒரு நிமிஷத்துக்குத்தான். சமாளிச்சுண்டுட்டேன். ஒரு விதத்துல அதுவும் நல்லதுக்குத்தான்னு தோணித்து. …

      அப்புறம் ஒரு ஆவணி போய், ரெண்டாவது ஆவணி கூட வரப்போறது….

      அன்னிக்கு என்னமோ  காரணமே இல்லாமெ மனசு வழக்கதத்தெ விட ரொம்ப சோர்வா இருந்துது. இந்தப் பாழும் மனசு எப்பவும் ஒரே மாதிரியேவா இருக்கு? … வாசல் திண்ணையிலெ நின்னுண்டு ஜானகி வராளான்னு நான் தெருவைப் பார்த்துண்டிருந்தேன். கூடத்துலெ உக்காந்துண்டு அப்பா பசங்களுக்கெல்லாம் சம்ஸ்கிருத சுலோகங்கள் சொல்லிக் குடுத்திண்டிருந்தா. சாமிக்கு நமஸ்காரம் கூடப் பண்ணல்லே இன்னிக்கி… ‘ஆ…மா. தினமும் நமஸ்காரம் பண்ணிப் பண்ணி என்னத்தைக் கண்டோம்’ அப்படின்னு ஒரே வெறுப்பாயிருந்துது.

      தெருக்கோடியிலெ ஜானகி வேகமா நடந்து வந்துண்டிருந்தா. அவ நடையே கொஞ்சம் வேகம்தான். இன்னிக்கென்னமோ வழக்கத்தை விட அதிக வேகமா வந்துண்டிருந்ததாத் தோணித்து. அவ தலையைக் குனிஞ்சுண்டு நடந்து வந்துண்டிருந்தா. எனக்குப் பெருமையா இருந்துது. ஜானகி தனக்குத் தானே சிரிச்சுண்டாப்ல இருந்துது.

      அவ படியிலெ கால் வெச்சதும், “என்னடி, நீயே சிரிச்சுக்கறே?”ன்னு கேட்டேன். ஒரு செகண்ட் தெகைச்சுப் போயிட்டா.

       “எப்பவோ படிச்ச ஒரு ஜோக் ஞாபகம் வந்துது. சிரிப்பை அடக்க முடியல்லே,”ன்னு அவ சொன்னப்போ என்னாலெ அந்த பதிலை நம்ப முடியல்லே. எதையோ மறைக்கிறான்னு தோணித்து. எதை மறைக்கிறான்னு அன்னியிலேருந்து ரெண்டு நாள் வரை என்னாலெ புரிஞ்சுக்க முடியலை. ஆனா, ரொம்ப முக்கியமான விஷயம்னு மட்டும் எனக்கு சந்தேகம். ரெண்டு நாள் கழிச்சு எனக்கு எல்லா விஷயமும் புரிஞ்சுது.

      … ஜானகி என்னண்டை வந்து மர்மமா சிரிச்சுட்டு, சொன்னா: “அக்கா! நான் கல்யாணம் பண்ணிக்கிறதாத் தீர்மானிச்சிருக்கேன்…” – ஜானகி இப்படிச் சொன்னதும், என்ன சொல்றதுன்னு கூடத் தோணாமெ தெகைச்சுப் போய் நின்னுட்டேன்.

       “என்னக்கா பேசாமெ இருக்கே?”

       “திடும்னு சொன்னதாலெ சந்தோஷ அதிர்ச்சியிலெ ஒண்ணும் சொல்லத் தோணாமெ இருந்துட்டேண்டி, ஜானகி. இப்ப சொல்றேன். ரொம்ப சந்தோஷம்… யாருடி பையன்? அப்பாவுக்கெல்லாம் சொல்லிட்டியா?”

        “உன்கிட்ட மட்டுந்தான் சொல்றேன். அவாள்ளாம் தன்னாலெ அப்புறம் தெரிஞ்சுக்கட்டும். … நீயே சாவகாசமா அவா கிட்ட சொல்லிக்கோ.”

       “என்னடி, புதி போட்ற மாதிரி பேசறே? தெளிவாச் சொல்லேன்.”

       “அன்னிக்கி சொன்னேனோல்லியோ? அதைக் காரியத்துலெ காட்டப் போறேன். …அதாவது ஓடிப் போகப் போறேன்…”

       “…….”

       “பையன் யாருன்னு தெரிஞ்சா அப்பா கட்டையை எடுத்துண்டு வருவா. …நீ கூட என்ன நினைப்பியோ, தெரியல்லெ…” என்று தயங்கி விட்டு, “ …மெயின் ரோடுலெ ஹோட்டல் வெச்சிருக்கானே, கேசவன் நாயர், அவனோட தம்பி, மாதவன் நாயர்,” என்றாள்.

       “சேப்பா ஒசரமா இருப்பானே?’

       “ஆமா. அவரேதான். ரெண்டு வருஷமா எங்களுக்குள்ளெ ‘இது’… உனக்கு ஆனப்புறந்தான் பண்ணிக்கணும்னு இருந்தேன்.  ஆனா, அவா வீட்டிலெ அவசரப்பட்றா. அதான்… அவா இங்கே இருக்குற கடையை மூடிட்டு, கேரளத்துக்கே போயிடப் போறாளாம். நானும் அவாளோட போயிடலாம்னு இருக்கேன்…”

       “நீ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மானிச்சிருக்கிறதைப் பத்தி உண்மையிலெ எனக்கு ரொம்ப சந்தோஷம், ஜானகி. ஆனா, ரெண்டு வருஷமா நீ இந்த விஷயத்தை மூடி மறைச்சிருந்திருக்கியே, நியாயமா?”ன்னு கேட்டேன். ‘அதனாலெ எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்குன்னு உனக்குத் தெரியுமா?’ன்னு கேக்க முடியாமெ – அப்படிக் கேக்கறதாலெ எந்த விதமான பிரயோஜனமும் இல்லைங்கிறதாலெ – மனசுக்குள்ளெ பொருமினேன். நடேசனோட களையான முகம் என் கண் முன்னால வந்துது. மனசே பிளந்து போயிடும் போல இருந்துது.

      ஜானகி கொஞ்ச நேரம் பதில் சொல்லாம இருந்தா: “அக்கா! என்னை ஆசீர்வாதம் பண்ணுடி,”ன்னுண்டே அவ திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு பாய்ஞ்சு வந்து என்னைக் கட்டிண்டப்போ, என்ன சொல்றதுன்னே தோணாமெ அவ முதுகைத் தடவிக் குடுத்தேன். ஜானகியோட கண்ணீர் என் தோள்லெ விழுந்தப்போ நானும் அவளோட சேர்ந்துண்டு அழுதேன்.

       “ஜானகி! என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுடி. அதை நீ கேட்டு வாங்கிக்கணும்னு இல்லே …”ன்னு சொல்லிட்டு அவ தோள்லெ என் முகத்தை அழுத்திண்டேன். என்ன முயற்சி பண்ணியும் அழுகையை அடக்கிக்க முடியல்லே.

      அவளை விட்டுப் பிரியப் போறதுக்காக மட்டுந்தான் நான் அழுதேன்னு அவ நினைச்சுண்டிருந்திருப்பா. ஆனா நான் அழுதது அதுக்காக மட்டுமில்லேன்னும், வேற இன்னொண்ணுக்காகவும்னும் அவளுக்கு எப்படித் தெரியும்?

*******

     

     

  •              

 

 

     

Series Navigationமலை சாய்ந்து போனால்…தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *