அதுவும் அவையும்!

யாரங்கே
என
ஏய்த்துக்கொண்டிருந்தது அது
பசுத்தோல் நம்பி
மேய்ந்துகொண்டிருந்தன அவை

பாம்புக்கு வாலும்
மீனுக்கு தலையும்
காட்டிக்கொண்டிருந்தது அது
பாம்பென்று பயந்தும்
மீனென்று வியந்தும்
மாட்டிக்கொண்டிருந்தன யாதும்

வாங்கமாட்டேன்
வரதட்சனை யென
விழித்துக்கொண்டது வாலிபம்
வெள்ளையுஞ் சொள்ளையு மென
வேட்டியுஞ் சட்டையுமோ
பட்டும் பகட்டு மென
சேலையுஞ் சோளியுமோ அணிந்து
இளித்துக்கொண்டிருந்தது அது

இருமனம் இணையும்
திருமண நிகழ்வை
ஒருமனதாக யாவரும்
ஏற்றுக்கொண்டிருந்தும்
ஆணுக்கு வரவும்
பெண்ணுக்கு செலவுமென
மாற்றிக்கொண்டிருந்தது அது

சிலாகித்தும் சமாளித்தும்
சிரித்தும் மழுப்பியும்
சேர்த்து வைத்தது மணமக்களை
சில காலம் சென்றபின்
கேட்டு வைத்த தொரு கேள்வி
வேட்டு வைத்த தது வாழ்வில்:

கல்யாணத்துக்கு முன்
பேசிக்கொண்டபடி
காசுமாலையும்
கற்களற்ற அட்டியலும்
வாங்கிக்கொண்டு
வீட்டுக்குள் வா

துரத்தியடித்தது அது

எதிர்க்கத் திராணியும்
இணங்கத் தகுதியு மின்றி
மரத்து நின்றன அவை!

Series Navigationநகரத்து மாங்காய்..காரணமில்லா கடிவாளங்கள்