அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1

அத்தியாயம்-13
சிசுபாலவதம் பகுதி -1
யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி முடிய வேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அப்படி ஒரு மகா வேள்வி நடந்து முடிவதற்கு பாண்டவர்கள் தமது நட்பு மன்னர்களுக்கென்று சில பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர். துச்சாதனுக்கு விருந்து மேற்பார்வை; வரவேற்புக் குழுவின் தலைவராக சஞ்சயன். கிருபருக்கு பரிசுப் பொருட்களின் மேற்பார்வை.; துரியோதனனுக்கு நன்கொடைகளின் மேற்பார்வை; ஸ்ரீ கிருஷ்ணருக்கு வருகின்ற அந்தணர்களின் கால் அலம்பி பாத பூஜை பண்ணும் பணி கொடுக்கப் பட்டது. எதற்காக அவருக்கு அப்படி ஒரு பணி ஒப்படைக்கப் பட்டது என்று தெரியவில்லை. இதை விட மேலான பணி எதுவும் ஏன் அவரிடம் ஒப்படைக்கப் படவில்லை? அந்தணர்களின் கால்களை அலம்புவது அதிலும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்ற மேன்மக்கள் இதை மேற்கொள்வது அந்த காலத்தில் அவ்வளவு முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியா? தான் ஒரு நற்குணங்கள் நிரம்பியவன் என்பதை முரசறிவிக்க அரண்மனை அடுமனையில் உள்ள பரிசாரகனாக வேலை செய்யும் கீழான அந்தணன் கால்களை அலம்பி விட வேண்டுமா?
ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அவ்வாறு ஒரு சல்லித்தனமான வேலையை புரிந்தார் என்பதற்கு பலவித வியாக்கியானங்கள் கொடுக்கலாம். முதலில் தற்கால அந்தணர்கள் கூறும் விளக்கத்தின்படி ஒரு சத்திரியனான ஸ்ரீ கிருஷ்ணர் அந்தணர்களுக்கு பாத பூஜை செய்வதன் மூலம் அந்தணர்களின் பெருமை உயர்த்தப் படுகிறது என்பதாகும்.
இது ஏற்றுக் கொள்ளும் பதில் கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர் மற்ற சத்திரிய மன்னர்களை போல அந்தணர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பதை பார்த்திருக்கிறோம் என்றாலும் அவர்களுடைய பெருமையை உலகறியச் செய்யும் விதமாக எந்த செயலையும் செய்ததாக தெரியவில்லை. சொல்லப் போனால் அதற்கு நேர்மாறான செயலைத்தான் புரிந்திருக்கிறார். பாண்டவர்களின் வனவாசத்தின் பொழுது அவர்களுடைய உபசாரத்தை ஏற்க மறுக்கும் அந்தண ரிஷியான துருவாச முனிவரை ஸ்ரீ கிருஷ்ணர் தந்திரத்தால் வெற்றி கொள்வதாகவே ஒரு கதை உள்ளது.( அந்த கதையை உண்மை என்றே கொள்வோம்.)
ஸ்ரீ கிருஷ்ணர் சாதி சமத்துவத்தை உயர தூக்கி பிடித்தவர். கீதையில் உலகிற்கு அவர் கூறிய செய்திகள் எல்லாம் அவரே கூறியது என்றால் அவர் பார்வையில் அந்தணன் , பசு, யானை, நாய் மற்றும் சண்டாளன் ஆகியோர் ஒரே நிறையாவர். இது ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து என்றால் அவர் அந்தணர்களின் பாதங்களை அலம்பி பாத பூஜை செய்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இரண்டாவது விளக்கம் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உதாரண புருஷன் என்பதால் அவருடைய பணிவும் ஒரு உதாரண குணமாக தோன்ற வேண்டும் என்பதற்காக இந்த கீழான கால் அலம்பும் பணியை மேற்கொண்டார் என்பதாகும். என்னுடைய வாதம் எல்லாம் அவர் அந்தணர்களின் பாதங்களை கழுவி பாத பூஜை செய்ததைப் போல் ஏன் ஒரு வயதில் முதிர்ந்த எவ்வித பந்தமும் இல்லாத அல்லது அறிமுகம் இல்லாத ஒரு சத்திரியனின் கால்களை கழுவி பாத பூஜை செய்யவில்லை என்பதுதான்.
மூன்றாவது விளக்கத்தின்படி ஸ்ரீ கிருஷ்ணர் காலத்திற்கு ஏற்ப நடந்து கொண்டார் என்பதாகும். எனவே அந்த காலத்தின் நடைமுறைக்கு ஏற்ப அந்தணர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்பதால் அவர்கள் பாதங்களை அலம்புவதன் மூலம் சர்வ ஜனபிரியனாக தன்னை பிரகடனப் படுத்திக் கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு அந்தணர்களின் பாதங்களை கழுவி விட்டார் என்பதாகும்.
என்னைப் பொறுத்த வரையில் இந்த பாதபூஜை குறித்த பகுதி மூலநூலின் பிற்சேர்க்கையாகவே தெரிகிறது. ஏன் என்றால் இந்த பகுதியிலேயே ஸ்ரீ கிருஷ்ணருக்கு வேறு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப் பட்டதாக குறிப்பு வருகிறது. அவர் அதனை சிறப்பாக செய்து முடிக்கவும் செய்கிறார். யாகத்தை தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் ஆயுதம் ஏந்தி காக்கும் பொறுப்பாகும் அது. ஸ்ரீகிருஷ்ணரும் தனது ஆயுதங்களைத் தாங்கி அதனைச் செவ்வனே செய்து முடிக்கிறார்
யுதிஷ்டிரரின் இந்த யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் பராக்கிரமசாலியான சிசுபாலனை .வதம் செய்கிறார். இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வேறு எங்கும் பாண்டவர்களுக்காக ஆயுதம் தாங்கி போர் புரியவில்லை.
சிசுபாலனின் முடிவை விவரிக்கும் இந்த பகுதி ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தியை தன்னிடத்தில் கொண்டுள்ளது .மகாபாரதத்தில் மறைந்துள்ள இந்த உண்மையினை இவ்வாறு விளக்கலாம்.
இந்த பகுதியின் இறுதியில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பகிரங்கமாக அறிவிக்கப் படுகிறார். குரு வம்சத்தின் ஒளிவிளக்காக திகழும் பீஷ்ம பிதாமகர் இதனை தன் வாயினால் கூறுகின்றார்.
இதனை உண்மை என்று நாம் ஏற்றுக் கொண்டாலும் இதற்கு முன்பு மகாபாரதத்தில் வேறு எங்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளின் அம்சம் என்று குறிப்பிடப் படவில்லை என்பதை சிந்திக்க வேண்டி உள்ளது. பீஷ்மர் இவ்வாறு கூறிய பின்பு அங்கு கூடியிருந்த மக்கள் இரண்டாக பிரிகின்றனர். ஒரு பிரிவினர் ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் அவதாரம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். மற்றொரு பிரிவினர் அவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். மறுக்கும் பிரிவின் தலைவனாக சிசுபாலன் திகழ்கிறான்.
யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின் பொழுது முதல் மரியாதஈதைக்கு ஸ்ரீ கிருஷ்ணரை தெரிவு செய்ததும் அதனை மறுக்கும் சிசுபாலன் அதன் மூலம் ஒரு பெரிய கலகத்தை ஏற்படுத்துகின்றான். அந்த கலவரத்தின் இறுதியில் அவன் கொல்லப்படுகின்றான்.
பீஷ்மரும் அவரைச் சார்ந்தவர்களும் ஒருமனதாக யாகம் நடத்தும் முன்பு ஸ்ரீ கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்க தீர்மானிக்கின்றனர்.இதனை சிசுபாலன் எதிர்க்கின்றான். அவனுக்கு உதவியாக வேறு சில மன்னர்களும் கட்சி சேர்க்கின்றனர். வாய்த்தகராறு வருகிறது. பின்னர் அது கலகமாக வெடிக்கிறது. இது கிருஷ்ண அபிமானிகளுக்கும் கிருஷ்ண துவேஷிகளுக்கும் இடையில் ஒரு யுத்தமாக மாறும் நிலைக்கு தள்ளப் படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாகத்தை காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருப்பதால் அது ஒரு யுத்தமாக மாறும் முன்பு சிசுபாலனை அழிக்கின்றார்.
இவ்வாறு சிசுபால வதம் நிகழ்ந்ததா என்று என்னால் உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சிசுபாலன் என்ற வலிமை மிக்க மன்னன் இருந்தான் என்ற குறிப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனைப் பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் எங்கும் காணப் படவில்லை.எனவே இந்த சிசுபாலனின் வதம் பற்றிய பகுதியை உண்மை என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. மகாபாரத முன்னுரையிலும் இதனை பற்றிய குறிப்பு காணப் படுவதால் இதனை உண்மை என்றே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி மிகவும் ரசனையுடன் விவரிக்கப் படுகிறது.எனவே இந்த சிசுபாலனின் வதம் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

Series Navigationநீங்காத நினைவுகள் – 25தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22