ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

இரு பகைவர்களும் போருக்கு ஆயத்தமாகி விட்டனர்.இந்த நிலையிலும் துருபதனின் அறிவுரைப் படி அவருடைய புரோகிதரை கௌரவர்களின் சபைக்கு தூது அனுப்பினான். தூது தோல்வியில் முடிந்தது.ஊசி முனை அளவு நிலத்தைக் கூட துரியோதனன் பாண்டவர்களுக்கு அளிக்க முன்வரவில்லை. போர் தவிர்க்க முடியாமல் போகும்பொழுது அப்படி ஒரு போரில் பீமனையும் அர்ஜுனனையும் எதிர்ப்பது தோல்வியில் முடியும் என்பது திருதராட்டிரனுக்கு நன்கு தெரிந்திருந்தது.. எனவே திருதராட்டினன் சஞ்சயனை தூதுவனாக அனுப்பி பாண்டவர்களை பகைமை பாராட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்ள சொல்கிறான். இது எவ்வளவு பெரிய அபத்தம். இது எவ்வளவு பெரிய அநீதி. ஒரு பக்கம் அவர்களுக்குரிய நிலத்தை கொடுக்க மறுப்பு. மற்றொருபுறம் போரிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுகோள் விடுப்பு. சஞ்சயன் பாண்டவர்களிடம் ஆற்றிய நீண்ட உரையின் சாராம்சம் பாண்டவர்களுடைய போர் முனைவு அதர்மத்தில் கொண்டு நிறுத்தும் என்பதாகும்.
யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் பேசத் தொடங்குகிறான்.” ஒ! சஞ்சய ! ஆண்டவனின் விருப்பம் என்றாலும் கூட நான் இந்த பூமியில் எதற்கும் ஆசைப் படுபவன் இல்லை. சொர்கமே கிடைக்கும் என்றாலும் அதை முறையற்ற வழிகளில் பெற மாட்டேன்.சட்டதிட்டங்களை நன்கு அறிந்தவரும், அந்தணர்களை பூஜிப்பவரும், பாண்டவர் கௌரவர் ஆகிய இருவரிடமும் சமமான அன்பினை உடையவருமான மகாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் எனக்கு எது உகந்ததோ எது தர்மத்தின் வழி நிற்பதோ அதனை செய்யும்படி என்னைப் பணித்துள்ளார்.போரின் மூலம் நான் அமைதியை நாடவில்லை என்றால் உலகம் என்னை தூற்றும்.. ஒரு சிறந்த சத்திரியனான நான் உரிமைக்காக போர் புரிவதை மறுத்தால் தூற்றப் படுவேன். சாத்தியகியும், கேசி தேசத்தவர்களும் , அந்தகர்களும் , விருஷ்னியின் குலதை சேர்ந்தவர்களும் , போஜர்களும், குகுரர்களும், ஸ்ருஞ்சயர்களும் வாசுதேவனுடைய புத்தியை அனுசரிப்பவர்களாக இருக்கின்றனர். யாதவர்களில் பலவான்களும் புத்தியில் சிறந்தவர்களும்- இவ்வளவு ஏன் இந்திரனுக்கு நிகரான உக்கிரசேன மகராஜாவும் கூட ஸ்ரீ கிருஷ்ணரின் புத்திமதியைக் கேட்டுதான் நடக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் படி நடந்த காசி தேசத்து மன்னன் பப்ரு மிகப் பெரிய செல்வாக்கை பெற்றான். கோடைக்குப் பின் வரும் மழையினைப் போல் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை மழையினால் அவன் வேண்டியதைப் பெறுகிறான். ஒரு சிறந்த போர்த் தலைவனுக்குரிய குணங்கள் அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உள்ளன. அவர் எங்களுக்கு பிரியமானவர். எங்களுக்கு நன்மை புரிபவர். இப்படிப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளை நான் மீற மாட்டேன்.”
உடன் இருந்த வாசுதேவர்” ஓ ! சஞ்சயனே ! நான் இந்த பாண்டவர்களுக்கு நன்மையையும் ஐஸ்வர்யத்தையும் பிரியத்தையும் விரும்புபவன். அதே போலவே திருதராட்டிணனின் அநேகம் புதல்வர்களின் நன்மையை விரும்புகிறேன். அவர்கள் இருவரையும் சமாதானமாக போகுமாறு கூறுவதை விட என்னிடம் கூறுவதற்கு எதுவுமில்லை. பாண்டவர்களுடன் நான் பழகிய வரையில் யுதிஷ்டிரன் சமாதானத்தை விரும்புபவனாகவே இருக்கிறான். ஆனால் திருதராஷ்டிரனின் புதல்வர்கள் பேராசை பிடித்தவர்களாகவே இருக்கின்றனர். இரண்டு பங்காளிகளின் நடுவிலும் சமாதானம் என்பது எட்ட முடியாத இடத்தில் உள்ளது. சஞ்சயா! நானும் யுதிஷ்டிரரும் தர்மத்தின் பாதையிலிருந்து ஒரு போதும் விலகியதில்லை. இதைத் தெரிந்திருந்துமா நீ தர்மரைப் பார்த்து அதர்மத்தின் வழி நிற்பவர் என்று கூறினாய்?”
இதன் தொடர்ச்சியாக ஸ்ரீ கிருஷ்ணர் தர்மம் குறித்து மிகப் பெரிய உரை நிகழ்த்துகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் இயல்பின் முக்கிய மிக முக்கியமான தர்மத்தின் தன்மை குறித்து மிக நீண்ட உரையாற்றுகிறார். நாம் ஏற்கனவே கூறியது போல ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்நாள் முழுவதையும் தர்ம ராச்சியம் அமைக்கவும் தர்மத்தை உபதேசிக்கவும் அயராது பாடுபடுகிறார்.
மகாபாரதம் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு தர்ம ராஜ்ஜியம் நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை விரிவாகக் கூறுகிறது. மகாபாரதத்தில் பீஷ்மபர்வத்தில் இடம் பெறும் ஸ்ரீ கிருஷ்ணரின் நீதி நேர்மை பற்றி கூறப்பட்ட உபதேசங்களின் தொகுப்பான கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனை என்பது வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கீதை ஸ்ரீ கிருஷ்ணரின் சிந்தனையின் ஒரு பகுதி என்று எவ்வாறு நம்புவது? முழு காவியத்தையும் எழுதிய வேத வியாசரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருந்திருக்கக் கூடாதா? மகாபாரதத்தின் வேறு சில இடங்களிலும் இந்த குறிப்பிட்ட தனது பிரத்யேக மதம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம் செய்வதாக வருகிறது. மகாபாரத்தில் வேறு சில இடங்களில் இடம் பெறும் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்கள் கீதையில் கூறப் பட்டுள்ள உபதேசங்களுடன் முற்றிலும் ஒத்துப் போவதால் கீதை ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப் பட்டதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ணர் சஞ்சயனிடம் கூறியதை பார்ப்போம்.
“ நமது ஸ்ம்ருதிகள் அனைத்தும் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் நல்ல நிலையில் வாழலாம் என்று கூறுகின்றன. வேதங்களை கற்றுணர்ந்த அந்தணர்கள் தங்களுக்கென்று சில நியமங்களைக் கொண்டுள்ளனர். அவர்களில் சில கருமங்களை செவ்வனே செய்வதன் மூலமே பிரும்மத்தை அடைய முடியும் என்ற கொள்கை உடையவர்கள். வேறு சில அந்தணர்களோ நித்திய கருமங்களை விடுத்து வேதங்களை கற்றுணர்வதால் ஏற்படும் ஞானமே பரபிருமத்திடம் கொண்டு சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றனர். உணவு உண்ணாமல் பசியை ஆற்றிக் கொள்ள முடியாது. வேறு ஒன்றினையும் செய்யாமல் வேதத்தை கற்றுனர்வதன் மூலம் மட்டும் பரபிரும்மத்தை அடைய முடியாது. கருமம் எதையும் செய்ய வேண்டாம் என்ற படிப்பு வீணானது. தாகம் கொண்டவன் தண்ணீரைத் தேடி செல்வதைப் போல பிரச்சனைகளின் நடை முறைத் தீர்வினுக்காகப் போராடுவதே இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே இந்த கோட்பாடு கர்மத்தின் அவசியத்தை கூறும் கோட்பாடு. பிரச்சினைகளுக்கான தீர்வினை தேடிச் செல்வதற்கு கர்மமே சிறந்தது என்பதால் இந்த கர்மம் உலகில் வேறு எதனைக் காட்டிலும் மேலானது. இதற்கு ஒத்துப் போகாதவன் தன் உழைப்பை வீணடிக்கிறான்.”
ஸ்ரீ கிருஷ்ணரின் கோட்பாட்டிற்கு முன்பிருந்தே கர்மம் என்பது கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பு கர்மங்கள் என்பது வேதம் விதித்த சம்ஸ்காரங்களாகவே இருந்தன. மேற்கத்திய நாடுகளில் கடமை ( duty ) என்ற சொல்லானது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கூறுவதைப் போன்று ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் நிலவி வந்த கர்மா என்ற சொல்’ குறிப்பிடவில்லை. கீதையில் குறிப்பிடப் படும் கர்மா என்ற சொல்லானது அது வரையில் நிலவி வந்த பொருளில் அல்லாமல் கடமை என்ற உட்பொருளுடன் விளிக்கப் பட்டது.. இந்த இடத்திலும் அதாவது சஞ்சுயனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் மறுமொழி கூறும் இந்த இடத்திலும் கர்மா என்ற சொல் கடமை என்ற பொருளிலேயே வருகிறது. இங்கே சொல்லப்படும் மொழி வேறு படுகிறது என்றாலும் உட் கருத்து ஒன்றாக இருப்பதால் கீதையில் சொன்னதும் சஞ்சயனிடம் கூறியதும் ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளே என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
தனக்குரிய கடமையை ஆற்றுவதே ஒவ்வொருவரின் சுய தர்மமாகும். கீதையின் ஆரம்பத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை முதலில் கடமையை செய்யுமாறு பணிக்கிறார். மகாபாரதத்தின் இந்த பகுதியிலும் சஞ்சயனிடம்கடமை என்பதன் பொதுவான விளக்கம் குறித்து எடுத்துரைக்கிறார்.” நான்கு வருணத்தவர்களாகிய பிராமணன், சத்திரியன் , வைசியன் , சூத்திரன் ஆகியோர் தத்தம் ஆசிரமங்களுக்குகேற்ப ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்கும் சஞ்சயா எதற்காக பாண்டவர்களை அவர்கள் கடமையை ஆற்ற விடாமல் தடுக்கிறாய்? { தங்களுக்கு உரிமையுள்ள பூமியை மீட்க ஒரு சத்திரியனாக போரிடும் கடமை ) கௌரவர்களின் நன்மைக்காக வந்துள்ள உன்னிடம் ஏன் இப்படி ஒரு ஓரவஞ்சனை? வேதங்களை நன்கு கற்றுணர்ந்த தர்மிஷ்டரான யுதிஷ்டிர மகராஜா அசுவமேதம் மற்றும் ராஜசூயம் போன்ற வேள்விகளை புரிந்தவர். போர்த் திறமையை உடையவர். சிறந்த யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் கற்றவர். கௌரவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் எண்ணம் இல்லாமலும் எந்நேரமும் பொங்கி எழக் காத்திருக்கும் பீமனை சாந்தப் படுத்தி போரைத் தவிர வேறு வழிகளில் இழந்த பூமியை மீட்பதற்கு தங்கள் கடமைகளை பாண்டவர்கள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்னை கேட்டால் பாண்டவர்கள் கௌரவர்களை போருக்கு அழைத்து போரில் வெற்றி பெற்று பூமியை மீட்க வேண்டும் அல்லது போரில் செத்து மடிய வேண்டும் என்பேன்.. ஆனால் நீயோ அவர்களை ராஜ்ஜியமும் கேட்கக் கூடாது போருக்கும் அழைக்கக் கூடாது என்று கூறுகிறாய். நீயே விடையளி. ஒரு சத்திரியனின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? நீதிக்காக போராடுவதா? அல்லது போராடாமல் கோழையைப் போல் பதுங்குவதா? இதில் எது சிறந்ததென்று நீயே கூறு. உன் பதிலைப் பொறுத்துதான் என் நடவடிக்கை இருக்கும்.”
இதன் பிறகு நான்கு வருணத்தவர்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து மேலும் விவரித்துக் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் பதினெட்டாவது அத்தியாத்தில் கூறப் பட்டுள்ள உட்பொருளும் இந்த பகுதியில் அவர் கூறியவற்றின் உட்பொருளும் ஒன்றாக இருகிறது. அதே போலவே மகாபாரதத்தின் பிற பகுதிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வப்பொழுது கூறும் உபதேசங்களும் பகவத்கீதையில் அவர் த்வனியாக கூறும் உபதேசங்களும் ஒன்றாகவே உள்ளன. பகவத் கீதை ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப் பட்டது என்பது பொதுவான கருத்தாக இருப்பினும் இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கீதையில் அவர் கூறிய உபதேசங்கள் அனைத்தும் அவர் சிந்தையிலிருந்து தோன்றியவையே என்பது நிருபணம் ஆகின்றது.
ஐரோப்பியர்கள் வேற்று நாட்டினர் மீது படையெடுத்து அவர்கள் ராச்சியத்தைக் கை பற்றுவதை தர்மமாக கொண்டுள்ளனர். இதனை அவர்கள் வெற்றி என்றும் கீர்த்தி என்றும் சாம்ராஜ்ஜிய விரிவாக்கம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.கீர்த்தி என்ற வார்த்தையின் போதையினால் ப்ருஷ்யாவின் ( PRUSSIA ) மன்னன் இரண்டாம் பிரடெரிக் மொத்த ஐரோப்பாவையுமே நெருப்புக்கு இரையாக்கி விட்டான். இவனுடைய இந்தப் பேராசையினால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஐரோப்பியர்கள் உயிர் இழந்தனர். இவர்களுக்கும் சின்ன சின்ன திருட்டுக்கள் புரியும் கொள்ளையர்களுக்கும் அளவில்தான் வேறுபாடு. உலகை ஆளுதல் என்ற வசீகரம் இவர்களிடமிருந்து சில ஆரிய மன்னர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. அவர்கள் நல்வழியிலிருந்து விலகத் தொடங்கினர். கிரேக்க தத்துவ ஞானி தியாஜனஸ் அலெக்சாண்டர் சக்கரவர்த்தியை கடுமையாக சாடுகிறார். “ உன்னை ஒரு பெருங்கொள்ளைக்காரன் என்பதைத் தவிர வேறு எப்படி குறிப்பிட முடியும்? “ என்கிறார். பண்டைய பாரதத்தில் இது போன்ற பேராசை பிடித்த மன்னர்களை குறித்து ஸ்ரீ கிருஷ்ணரும் இதே த்வனியில்தான் குறிப்பிடுகிறார்.
இந்த காலத்து சட்டவல்லுனர்களைப் போலவே ஸ்ரீ கிருஷ்ணரும் ஒருவர் தன்னுடைய உடைமைகளின் மீது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆங்கிலத்தில் சிறிய திருட்டிற்கு எதிராக போராடுவது நீதி என்றும், ஒரு நாட்டிற்காக போராடுவது தேச பக்தி என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டிற்கும் ஹிந்து மதத்தில் ஒரே பெயர் –தர்மம்.ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். “ ஒருவன் தன் இன்னுயிரை துறந்தாலும் பரவாயில்லை தான் இழந்த ராச்சியத்தை மீட்டே தீர வேண்டும்.”
தர்மத்தின் வழி நடப்பதாகக் கூறிக் கொண்டு சஞ்சயன் தர்மத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை முன் வைக்கும்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் எரிச்சலுறுகிறார். அவனைக் கண்டிக்கிறார்.
“ சஞ்சயா! இன்று தர்மத்தை பற்றி பிரஸ்தாபிக்கும் நீ அன்று கௌரவர்கள் சபையினில் பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு அவமானப் படுத்தப் பட்ட பொழுது என்ன செய்து கொண்டிருந்தாய்? உன்னுடைய தர்மம் எங்கே போயிருந்தது?”
அனைவரிடமும் இன்முகத்துடன் பேசும் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தை நிலை நாட்ட வேண்டிய தருணங்களில் கடுமையான த்வனியில் தன் கருத்துகளை முன் வைக்க தயங்கியதில்லை.
சஞ்சயனை அனுப்பி விட்டு இருதரப்பினரின் நன்மைக்காக தானே ஒரு முறை அத்தினாபுரம் சென்று வரப்போகும் செய்தியை வெளியிடுகிறார். அது ஒரு சமாதானத் தூதாக இருக்கும் என்கிறார்.எந்த வழியின் மூலம் பாண்டவர்களுக்கு இழந்த பூமியை மீட்டுத் தர முடியுமோ, எந்த வழியின் மூலம் கௌரவர்கள் சமாதானத்தை ஒப்புக் கொண்டு உயிரிழப்பையும் பொருளிழப்பையும் தவிர்க்கலாமோ அப்படி ஒரு வழியை தேடுவதே தனது நோக்கமாக ஸ்ரீ கிருஷ்ணர் கொண்டிருந்தார்.
பொதுவான நன்மைக்கும், பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டும், கெட்ட நோக்கம் கொண்டவர்களாக இருப்பினும் அவர்கள் கௌரவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுடைய நன்மைக்குமாக அவ்வளவு எளிதில் நிறைவேறாத சமாதான முயற்சியின் பொருட்டு ஸ்ரீ கிருஷ்ணர் தானே தூது போக முன்வருகிறார். இந்த தூது திட்டம் ஸ்ரீ கிருஷ்ணரைப் பொறுத்தவரை சற்று கடினமான எளிதில் நிறைவேற முடியாத
ஒன்றுதான். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் மனிதனாகவே சித்தரிக்கப் பட்டுள்ளதால். இரண்டாவது என்னதான் இருவருக்கும் பொதுவாக தூது சென்றாலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்கனவே பாண்டவர்களின் பக்கம் இருக்கப் போகும் முடிவை எடுத்து விட்டதும்தான். இதனால் ஸ்ரீ கிருஷ்ணரை கௌரவர்கள் எதிரியாகவே கருதும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே ஸ்ரீ கிருஷ்ணர் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித ஆயுதமுமின்றி தனியாக தூது போகிறார்.
——————————————————————————————————————————————————

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *