அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

புதியமாதவி, மும்பை

அத்தியாயம்…6

திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை
கேட்டது…

சூரியனே , உனக்குச் சூடில்லையா?
உனக்கு மட்டும் சாவி,
எங்களுக்குப் பூட்டா? என்று.

ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஏனேனில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தப் பின்
திமுகாவில் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக 1971ல் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று கலைஞரின் தலைமையில் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தப்பின் நகர்ப்புறத்து முதலாளிகளும் கிராமப்புறத்து ஆதிக்கச்சாதியினரும் வெற்றி பெற்ற அரசியல் கட்சியில் சுயலாபத்திற்காக இணைகிறார்கள். இவர்கள் எவருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதலோ இயக்க வரலாறோ தெரியவில்லை என்பதுடன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு திமுக தன் ஆரம்ப கால பாதையிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டது
என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த இயக்கம் முன்வைத்த அரசியல் கோட்பாடும் சமூகக்கோட்பாடுகளின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? இதற்கு யார் காரணம்?

முதலில் இவர்களின் அரசியல் கோட்பாட்டின் சரிவுகளைப் பார்ப்போம்.

ஒரு வரைபடம் (சிந்தனையாளன் டிச 2013 தலையங்கம்)

11/9/1938 திருவல்லிக்கேணி கடற்கரை இந்தி எதிர்ப்பு
பேரணியில் பெரியாரின் முழக்கம் –
தமிழ்நாடு தமிழருக்கே.

1939ல் பெரியாரே மாற்றிக்கொள்கிறார்
என்னவென்று: திராவிடநாடு திராவிடருக்கே.

1940ல் திருவாரூரில் நீதிக்கட்சி மாநாடு. எல்லா திராவிடமொழித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
திராவிட நாடு படம் திறந்துவைக்கப்பட்டது.

1942ல் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் அமைச்சரவைக்குழு தலைவர் சர்.ஸ்டாப்ஃபோர்ட் கிரிப்ஸ் என்பவரிடம் திராவிட நாடு கோரிக்கையை
முன்வைக்காமல் பெரியார் தலைமையிலானக்குழு
“சென்னை மாகாணத்தைத் தில்லி ஆட்சித் தொடர்பிலிருந்து விடுவித்து அப்பகுதி மட்டும் நேரடியாக பிரிட்டிஷாரால் ஆளப்படவேண்டும்
என்ற கோரிக்கையை முன்வத்தார்கள்.கிரிப்ஸ் குழு
அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரிட்டிஷ் அரசு
இக்கோரிக்கையை நிராகரித்தது.

1945ல் செப் 29,30ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் முதன் முதலாக “தனிச் சுதந்திர
திராவிட நாடு ‘ பற்றிய தெளிவான திட்டவட்டமான
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பெரியாரின் இயக்கம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் மட்டுமே என்று பெரியாரின் தொண்டர்களும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். தனிச்சுதந்திர திராவிட நாடு கேட்ட பெரியார் இயக்கம் ஒரு அரசியல் கட்சி
ஆகும் என்கிறார். வே.ஆனைமுத்து அவர்கள்.

1949ல் திக விருந்து பிரிந்த திமுக திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையை 1962 வரை பேசியது, எழுதியது.
ஆனால் தேர்தலில் போட்டியிட வந்தப்போது தேர்தலில்
வெற்று பெற்று பதவி ஏற்கும்போது “ஒற்றை இந்திய விசுவாசம் பற்றி எடுக்க வேண்டிய உறுதிமொழியை
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விண்ணப்பம் தரும்போதே கூற வேண்டும்” என்று அரசமைப்பு
சட்டம் திருத்தம் செய்யப்பட்டதால் திமுக
திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டது. அதுவும்
தற்காலிகமாக கைவிட்டு இருப்பதாக சொல்லிக்கொண்டது.

1973 தந்தை பெரியார் மறையும்வரை தனித்தமிழ் நாடு வேண்டும் என்ற கோரிக்கையை திராவிடர் கழகம்
தூக்கிப்பிடித்திருந்தது.

1975ல் எமர்ஜென்சி கொடுமைகளுக்குப் பின் திராவிடர் கழகம் “இந்திய ஒருமைப்பாட்டை ஏற்று தீர்மானம்
நிறைவேற்றியதன் மூலம் தனிச்சுதந்திர தமிழ்நாடு
கோரிக்கையைக் கைவிட்டது.

16/11/1975ல் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆனைமுத்து தலைமையிலான
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி
தன் அரசியல் இலக்காக,
“பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் தவிர்த்து மற்றெல்லாத் துறை அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட உண்மையான, மதச்சார்பற்ற சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை நிறுவுவோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
.

மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி என்ற இன்னொரு துப்பாக்கியை
விளையாட்டுப் பிள்ளைகள் பயன்படுத்துவது போல திமுக பயன்படுத்திக்கொண்டதை , பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் பகுத்தறிவு உள்ள எவரும் இவர்கள் மீது மட்டுமல்ல, இவர்கள்
பேசிக்கொண்டிருக்கும் இக்கருத்துருவாக்கங்கள் மீதும்
நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள்..

இனி , அடுத்த வாரம் திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.

தொடரும்

Series Navigation