அந்த முடிச்சு!

Spread the love

அது
சம்பவித்துக் கொண்டிருந்தது

அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருந்தேன்

உடல்
கிடத்தி வைக்கப்பட்டு
உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடியை இழக்க
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது

அது
சம்பவித்து முடிவதில்
ஏதோ ஓர்
எதிர்ப்பு இருப்பதாக
என்னால்
உணர முடிந்தது

எனினும்
அது
கால்களின் விரல்களில் துவங்கி
மேல்நோக்கி
கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான
அடையாளங்களைக்
காண முடிந்தது

அது
கடந்து சென்ற வழியெல்லாம்
நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க
உஷ்ணம்
குறையத் தொடங்குவதைக்
குறிக்கத் தவறவில்லை நான்.

மரணப் படுக்கையில்
பார்வை
பிரத்தியேகமானது என்று
கேள்விப்பட்டிருந்தும்
அந்த வகையான பார்வையை
நான் என்
வாழ்நாளில் கண்டதில்லை

வெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்
அடையாளம் காண முடியாத பயமும்
அளப்பதற்கரிய ஆசைகளும்
அது
சம்பவித்துக் கொண்டிருப்பதை
அறியாததோர் அப்பாவித்தனமும்
உச்சகட்ட வலியை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
சுரணையோ இல்லாத நிலையும்
இன்னும்
அலைகளற்ற கடலை
அடிவானம் வரை பார்ப்பது போலும்
ஒரு பார்வை

மூச்சு இழுத்து விடுவதில்
முடிச்சு ஒன்று
விழுவதும் அவிழ்வதுமாகவே
எனக்குப் பட்டது.

ஒரு சில சமயங்களில்
அவிழ்ந்து முடிகிறதோவென
நினைக்க
சட்டென மீண்டும்
முடிச்சு விழ
அது
எதிர்ப்பை விஞ்சி
சம்பவிக்க முயல்வதைக்
காண முடிந்தது

நான்
வெளியேற எத்தனிக்கயில்
என் முகம் நோக்கியப் பார்வையில்
பிரியாவிடையின் சாயல் தெரிய
சன்னமான சப்தத்தோடு
அவிழ்ந்த முடிச்சில்
இரத்த வாடை வீசியதாக ஞாபகம்.

வாயிலைக் கடக்கும்போது
கோஷம் போன்றதொரு
அதிக ஓசையுடனான
அழுகுரலால்
அது
சம்பவித்து முடிந்திருக்கலாம்
என
யூகிக்க முடிந்தது.

-sabeer.abushahruk@gmail.com

Series Navigationவழிமேல் விழிவைத்து…….!கசீரின் யாழ்