அழகிப்போட்டி

ப.அழகுநிலா

 

“கொஞ்சம் தள்ளி ஒட்கார முடியுமா? நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது”

‘’அதுக்கென்ன! இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா!’’

“ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?’’

‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே! அதை வச்சுதான்’’

“போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்?’’

‘’அது சாயந்திரம் ஆயிடும். எடையில லன்ச் பிரேக் ஒரு மணிநேரம்’’

‘’நீங்க எத்தனை வருஷமா கலந்துக்கிறிங்க?’’

‘’இந்த போட்டி ஆரம்பிச்சதிலேந்து கிட்டத்தட்ட 4 வருஷமா தவறாம கலந்துக்கிறேன். ஆனா அழகி பட்டத்தைதான் ஜெயிக்க முடியலை. ரன்னர் அப்பா கூட வரமுடியலை.’’

‘’நல்லா ஒயராம அழகா இருக்கிங்க. ஒங்களாலேயே ஜெயிக்கமுடியலைன்னா என்னை மாதிரி குள்ளமா இருக்கிறவங்கல்லாம் எப்படி வின் பண்றது’’

‘’ஒயரமா இருந்து என்ன பண்றது? இங்கெல்லாம் தோலு செவப்பா இருக்கணும். நீங்க குள்ளமா இருந்தாலும் வெள்ள வெள்ளேன்னு சூப்பரா இருக்கிங்க’

‘’எனக்கு இதுல எல்லாம் சுத்தமா இன்ட்ரெஸ்ட்டே கெடையாது. என்னோட அம்மா, அப்பாவுக்காகத்தான் கலந்துகிட்டேன். அவங்க ஒலகமே நான்தான். என்னை அவங்களோட சொந்தப்பொண்ணு மாதிரி பார்த்துக்கும்போது அவங்களுக்காக நான் இதுகூட செய்யலைன்னா எப்பிடி?’’

‘’ஓ! அப்படின்னா நீங்க அவங்க வளர்ப்பு பொண்ணா?’’

‘’ஆமாம். அவங்களுக்கு பிள்ளை இல்லாததால என்னை தத்து எடுத்திருக்காங்க. அப்ப நான் ஒரு மாச கொழந்தை.’’

‘’அப்ப இதுவரைக்கும் ஒங்க சொந்த அம்மா, அப்பாவை பார்த்ததே இல்லையா?’’

‘’இல்லை. எனக்கு அஞ்சு சிஸ்டர்ஸ் இருக்காங்கன்னும் அவங்கள்ளாம் என்னைவிட இன்னும் ரொம்ப அழகா இருப்பாங்கன்னும் இவங்க சொல்லிதான் தெரியும். ஆறும் பொட்டை புள்ளையா பொறந்ததாலதான் என்னை தத்து கொடுத்தாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.’’

‘’ஒங்களுக்கு அவங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ஆசையா இல்லையா?’’

‘’ஆசை இல்லாம இருக்குமா! போட்டியில கலந்துகிட்டதுக்கு இன்னொரு காரணமே, என் சிஸ்டர்ஸ் யாரையாவது பார்க்கமாட்டேனாங்கிற நப்பாசைதான்,.’’

‘’ஒங்களை பார்த்தா பாவமா இருக்கு’’

‘’அதைவிடுங்க! ஒங்களை பத்தி ஒண்ணுமே சொல்லலையே!’’

‘’சொல்றமாதிரி பெரிசா ஒண்ணும் இல்லை. நான் பொறந்து ஒரு மாசத்தில எங்கப்பன் எங்க அம்மாவை விட்டுட்டு ஓடிட்டான். என்கூடப்பிறந்தவங்க மூணு பேரு. நடுத்தெருவில அனாதையா நின்ன எங்களுக்கு அதோ மஞ்ச சட்டை போட்டுகிட்டு உட்கார்ந்திருக்காரே அவர்தான் வாழ்க்கை கொடுத்தாரு. பொண்டாட்டி, பிள்ளைங்களை ஒரு விமான விபத்துல மொத்தமா பறிகொடுத்துட்டு தனிமையில சிக்கி தவிக்கிற அவருக்கு இப்ப நாங்கதான் எல்லாமே. எங்களுக்கும் அப்படித்தான். அப்பா இல்லாத கொறையே தெரியாம பார்த்துக்கிறாரு’’

‘’ஓ! எவ்வளவு நல்ல மனுஷன்! இவங்க மாதிரி ஆளுங்க இருக்கிறதாலதான் நம்ம வாழ்க்கை எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் போவுது.’’

‘’சரியா சொன்னிங்க. அவருக்காகத்தான் நான் இந்த போட்டில விடாம கலந்துக்குறேன். என் அழகில என்னைவிட அவருக்குதான் பெருமை ஜாஸ்தி.

‘’கவலைப்படாதீங்க. இந்த வருஷம் பட்டத்தை ஜெயிச்சுருவிங்க’’

‘’ஒங்க வாய் முகூர்த்தம் பலிச்சா சந்தோஷம்தான்’’

‘’ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்த போட்டிக்காகவே மெனக்கட்டு ஸ்விம்மிங், டான்ஸ்ன்னு கத்துகிட்டேன்’’

‘’நான்கூடதான். ஆனா எனக்கு புடிக்கவே புடிக்காத ஒண்ணு என்னன்னா “கேட்” வாக்தான். நம்ம ஒரிஜினல் நடையை விடவா “கேட்” வாக் நல்லாருக்கு?’’

‘’அப்படி நடக்கிறதுதான் இப்ப ஃபேஷன். என்ன பண்றது?’’

‘’என்ன ஃபேஷனோ, என்ன எழவோ. “கேட்” வாக்ன்னு பேர்வைச்சவன் மட்டும் என் கையில கெடச்சான் அவ்வளவுதான்.’’

‘’கேட்கணும்ன்னு நெனைச்சேன். ஒங்க முடி இவ்வளவு ஷைனிங்கா இருக்கே, என்ன பியூட்டி ப்ராடக்ட்ஸ் யூஸ் பண்றீங்க?’’

‘’யாருக்குத் தெரியும்? என் அப்பாதான் அதெல்லாம் பார்த்து பார்த்து வாங்கிட்டு வருவாரு. ஒரு பேரும் வாயில நொழையாது’’

‘’நான் ‘செக்ஸி பீஸ்ட்’ ப்ராடக்ட்ஸ் மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். மத்த ப்ராடக்ட்ஸ் யூஸ் பண்ணா அலர்ஜி ஆயிடுது’’

‘’எனக்கு ஒரே ஒரு பிரச்சனைதான். என்னால வாயை கட்டுப்படுத்தவே முடியாது. ஏதாவது திண்ணுகிட்டே இருக்கணும். ஓவரா வெயிட் போட்டதால இந்த போட்டிக்காக கஷ்டப்பட்டு டயட்ல இருந்து வெயிட்டை கொறைச்சேன்.’’

‘’ஒங்க ஒயரத்துக்கு நீங்க வெயிட் போட்டாலும் அசிங்கமா தெரியாது’’

‘’ஒங்களுக்கு புரியுது. ஆனா என் அப்பாவுக்கு புரியமாட்டேங்குதே. டயட் கண்ட்ரோல்ங்கிற பேர்ல அவரு பண்ற டார்ச்சர் அப்பப்பா கொடுமையா இருக்கு. காலையில கூட ரெண்டு பிரட், முட்டை, ஒரு டம்ளர் பால் இவ்வளவுதான். பசி வயித்தை கிள்ளுது’’

‘’எனக்கு அந்த பிரச்சனையே இல்லை. எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறவே ஏறாது. என்னோட ஒடல்வாகு அப்படி. காலையிலகூட மட்டனை ஒரு புடி புடிச்சிட்டுதான் வந்தேன்’’

‘’கொடுத்துவச்ச ஆளு நீங்க. எனக்கு கூட நான்வெஜ்ன்னா கொள்ளை இஷ்டம். அதுவும் பீஃப்ன்னா சாப்பிட்டுகிட்டே இருப்பேன். ஆனா வாரத்துக்கு ரெண்டு தடவை நான்வெஜ் கெடைச்சா அதுவே பெரிய விஷயம்.’’

‘’ஒங்களுக்கு சாப்பாட்டு பிரச்சனை. எனக்கு லாங்குவேஜ் பிரச்சனை’’

‘’லாங்குவேஜ் பிரச்சனையா! எனக்கு புரியலையே!’’

‘’போட்டில இவங்க ஃபாஸ்ட்டா பேசற இங்கிலீஷை புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு’’

‘’ஓ! அதை சொல்றிங்களா! எனக்கு கூட மொத தடவை கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரிதான் இருந்துச்சு. அப்புறம் பழகிருச்சு. பயப்படாதிங்க. போகப்போக சரியாப்போயிடும்.’’

‘’இருங்க! பெல் சத்தம் கேட்குது. எதுக்கு இப்ப பெல் அடிக்கிறாங்க?’’

‘’நீச்சல் போட்டி தொடங்கப்போறாங்கள்ள. அதுக்குத்தான். வாங்க போலாம்’’

‘’ஆல் த பெஸ்ட்’’

‘’தேங்க்ஸ். விஷ் யு த சேம்.’’

******************************************

‘’அப்பாடி! ஒரு வழியா எல்லா போட்டியும் முடிஞ்சுச்சு’’

‘’ஆமாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.’’

‘’எப்ப ரிசல்ட் சொல்வாங்கன்னு தெரியலையே?’’

‘’இன்னும் ஒரு மணி நேரத்துல சொல்லிடுவாங்கன்னு நெனைக்கிறேன்’’

‘’நான் எதுவுமே சரியா செய்யலை. அம்மாவும், அப்பாவும் ரொம்ப அப்செட் ஆகப்போறாங்க.’’

‘’நீங்களா எதுவும் முடிவு பண்ணாதிங்க. ஜெயிக்கவே மாட்டாங்கன்னு நெனைச்சுகிட்டு இருப்போம். அவங்க பட்டத்தை ஜெயிப்பாங்க. ஜெயிச்சுருவோம்ன்னு ரொம்ப நம்பிக்கையா இருப்போம். நமக்கு புட்டுக்கும்.’’

‘’நீங்க பேசலை. ஒங்க நாலு வருஷ அனுபவம் பேசுது.’’

‘’இந்த வருஷம் பட்டத்தை ஜெயிச்சுட்டா இந்த பக்கம் தலைவைச்சு படுக்கமாட்டேன்.’’

‘’ஏன் அப்படி சொல்றிங்க? அவ்வளவு வெறுப்பாயிடுச்சா ஒங்களுக்கு?’’

‘’சே, சே வெறுப்பெல்லாம் ஒண்ணும் கெடையாது. ஒரு முறை அழகி பட்டத்தை ஜெயிச்சவங்க அதுக்கப்புறம் போட்டியில கலந்துக்க கூடாதுங்கிறது ரூல்’’

‘’ஓ! அது வேறயா’’

“ஒரு நிமிஷம், அங்க பாருங்க. அதான் ஒங்க அம்மா, அப்பாவா?’’

‘’ஆமாம். ஆனா எதுக்கு இப்பிடி துள்ளி குதிக்கிறாங்க?’’

‘’இருங்க! இருங்க! ஏதோ அறிவிப்பு சொல்றாங்க. என்னன்னு கேப்போம். வாவ்! கங்கிராஜுலேஷன்ஸ்! ஒங்களுக்கு பெஸ்ட் போட்டோஜெனிக் பட்டம் கெடைச்சிருக்கு.’’

‘’என்னால நம்பவே முடியலை. எப்படியோ அம்மா, அப்பாவை சந்தோஷப்படுத்திட்டேன். அது போதும் எனக்கு’’

‘’போட்டியில கலந்துகிட்ட முதல் தடவையே பட்டம் வாங்கியிருக்கிங்க. பெரிய விஷயம்தான்’’

‘’ரன்னர் அப் அறிவிக்கிறாங்க. யாருக்கு கெடைச்சிருக்குன்னு தெரியலையே’’

‘’அதோ நமக்கு முன்னால ரொம்ப திமிரா ஒருத்தி உட்கார்ந்திருக்காளே. அவளுக்குதான். போன வருஷம் அவதான் பெஸ்ட் போட்டோஜெனிக் பட்டம் வாங்கினா’’

‘’ஓ! அப்படியா! இப்ப யாரு வின்னர்ன்னு சொல்லப்போறாங்க. ரொம்ப டென்ஷனா இருக்கு’’

‘’இந்த வருஷமும் வெறும் கையோடுதான் போகப்போறேன்னு நெனைக்கிறேன். என்னைவிட அப்பாதான் ரொம்ப அப்செட் ஆவாரு’’

‘’ஏய்! வின்னர்ன்னு ஒங்க பேரை சொல்றாங்க’’

‘’ஏங்க நீங்க வேற வெறுப்பேத்துறீங்க. இருக்கவே இருக்காது. இருங்க, நல்லா கேப்போம். அட ஆமாம்! என் பேர்தான் சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு….., நானா…….., எனக்கா ………..வார்த்தையே வரமாட்டேங்குது. தொண்டையை அடைக்குது…….’’

‘’ஐயோ! என்ன இது. எதுக்காக இப்ப அழுவுறீங்க’’

‘’அழகி பட்டம் வாங்கிறவங்க தன்னோட சந்தோஷத்தை இப்பிடி அழுதுதான் வெளிப்படுத்துவாங்க. நீங்க டி.வியில பார்த்ததில்லையா?’’

‘’அது அவங்களுக்கு பொருந்தும். நமக்கு சரிப்படுமா. நமக்கு சந்தோஷமோ, துக்கமோ அதை வெளிப்படுத்துற ஒரே வழி கொரைக்கிறதுதான். மொதல்ல அதை செய்யுங்க.’’

‘’சரியா சொன்னீங்க. லொள்! லொள்! லொள்!”

முற்றும்

Series Navigationசிலைநினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’