ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!

 

இந்த எழுத்தாளர் பெண்ணுரிமைவாதிதான்.  ஆனால் “லெக்கின்ஸ்” போன்ற உடலை ஒட்டிய – அதன் அமைப்பை அப்பட்டமாய்க் காட்டும் – வெளிப்பாடான உடைகளுக்கு முதல் எதிரி. எனவே, என் உடை என் சொந்த விஷயம் என்று ஒரு பெண் சொல்லுவதில் உடன்பாடு இல்லாதவள். உடலளவில் வலுக்குறைவான பெண்ணை ஆண் அடிப்பது தவறெனில், மனத்தளவில் வலுவற்ற ஆணை ஒரு பெண் பாலியல் தூண்டுதல் செய்வதும் தவறுதான். சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூடச் சில ஆண்கள் விட்டு வைக்காத நிலையில் பெண்ணின் உடை வெளிப்பாடாக இருப்பதே வன்னுகர்வுக்குக் காரணம் என்பதை முழுவதுமாய் ஏற்க இயலாதுதான். எனினும் அதுவும் ஆணைத் தவறு செய்யத் தூண்டுகிறது என்கிற நிலையைப் பெண்கள் ஏற்றுத்தானாக வேண்டும். எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்து அதை மேலும்  கொழுந்து விட்டு எரியச் செய்வது அறிவுடைமை யாகாது.

பாரதியார் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்கு இணையாக எல்லாத் துறைகளிலும் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என்று சில அறிவுஜீவிகள் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது காதில் பூச்சுற்றுகிற வேலைதான்.! ஒரிரண்டு பெண்களின் முன்னேற்றத்தை வைத்து ஒட்டுமொத்தக் கணிப்பில் ஈடுபடுவது முறைதானா? இந்திரா காந்தி, ஜெயலலிதா, திலகவதி, சிவகாமி, சந்திரலேகா, மம்தா பேனர்ஜி, மாயாவதி போன்றவர்கள் இன்றளவும் சிறு பான்மையினரே. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் அனைத்துப் பெண்ணினத்தின் நிலையையும் கணிப்பது நேர்மைதானா?

பெண்ணியம் என்கிற சொல்லே ஆண்களுக்குக் கசக்கிறது. இந்தக் கசப்பை வெளியிடவும் ஆண்கள் தயங்குவதில்லை. அப்படி ஒரு சொல் புழக்கத்தில் வருவதற்குக் காரணாமாக இருந்ததே ஆண்களின் அராஜகமே என்பதை ஆண்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பெண்களில் பெரும்பாலோர் முன்னேறி விட்டதாய் இவர்கள சொல்லிக்கொண்டிருப்பது எந்த அடிப்படையில்? எந்த நாட்டின் முன்னேற்றமாக இருந்தாலும், அதன் கிராமங்களும் பட்டிதொட்டிகளும் அவற்றில் வாழும் மக்களும் எந்த அளவுக்கு முன்னேறி யுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் தான் அந்த நாட்டின் நிலையைக் கணிக்க வேண்டும். அல்லது அதன் பெரும்பாலான மக்களுடைய முன்னேற்றத்தின் அடிப்படையில் அதைக் கணிக்க வேண்டும்.

’நம் அரசியல் அமைப்புச் சட்டம்தான் பெண்களுக்குச் சம உரிமைகளுக்கு வகை செய்துள்ளதே? அப்படி இருக்க, இன்னும் ஏன் பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று கோஷம் போடுகிறீர்கள்?’ என்றும் பல ஆண்கள் கேட்கிறார்கள். பெண்களுக்குச் சம உரிமையை நம் சட்டங்கள் தருவது உண்மைதான். ஆனால் அந்த உரிமைகள் எந்த அளவுக்கு அவர்களை முன்னேற்றியுள்ளன என்பதே கேள்வி. கீழ் மட்டத்துப் பெண்கள் யாவரும் குடிகாரக் கணவர்களிடம் அடி வாங்கிச் சாகிறவர்களாகவே இன்றளவும் இருக்கிறார்கள். மேல் மட்டத்திலும் அதே நிலைதான் என்று சொல்லப்படுகி
றது. கானடா, அமெரிக்கா, மேலும் சில ஐரோப்பிய நாடுகள் போன்ற முன்னேறிய நாடுகளிலும் குடிகாரக் கணவர்களிடம் பெண்கள் நாள்தோறும் அடி வாங்குவதாய் ஆண் சமுதாய ஆர்வலர்களே அந்நாடுகளின் ஏடுகளில் எழுதும் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. (சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் – திண்ணைக் கட்டுரையாளர் – திரு ஜெயபாரதன் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த கானடா நாட்டு ஏடுகளிலிருந்து தெரிந்து கொண்ட தகவல் இது. இப்போதும் அப்படித்தான் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.)

ஒரு காலத்தில் கணவனின் பெயரைச் சொல்லுவது கூடக் குற்றமாய்க் கருதப்பட்டு வந்தது.  காலப்போக்கில் அது மறைந்து விட்டது.  ஆனால் பன்மையில் தான் ஒரு பெண் தன் கணவனை அவர், இவர் என்றெல்லாம் மரியாதையாகக் குறிப்பிடுவாள்.  தந்தை பெரியார் தன் மனைவியே யானாலும் ஒருவன் அவளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியவர். திராவிடக் கழகத்தினர் பலர் தங்கள் மனைவியரை ‘வாங்க, போங்க’ என்றுதான் மரியாதையுடன் விளித்துப் பேசுவதாய்ச் சொல்லப் படுகிறது.

ஆனால், அண்மைக்காலமாகச் சில பெண்கள் கணவனை ஒருமையில் விளித்துப் பேசுவது பெருகி வருகிறது. இதற்காகச் சில ஆண்கள் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள். கணவனை வாடா போடா என்று ஒரு பெண் விளிப்பதும் அவளுக்கு அவன் குற்றேவல் புரிவதும் இருவருடையவும் சொந்த விஷயம்.  ஆனால்  காலங்காலமாகக் கணவர்கள் ‘அடியே, வாடி, போடி’ என்று பெண்களை அழைத்து வந்துள்ளமைக்கும் இருபத்து நான்கு மணி நேர ஊழியைகளாகக் கருதி வந்துள்ளமைக்கும் இன்றளவும் அது தொடர்வதற்கும் எவரும் ஆட்சேபிப்பதில்லை.  “டீ” தவறில்லை யெனில்  “டா” வும் தவறில்லை.

சில பெண்கள் – எழுத்தாளர்களும், கவிஞர்களும் – மனித உடல் உறுப்புகள் பற்றிக் கொச்சையாக எழுதுவது பற்றியும் சில அறிவு ஜீவி ஆண்கள் புலம்பத் தொடங்கி யிருக்கிறார்கள். கொச்சையாகவும் வக்கிர உணர்வுகளைக் கிளறும் வண்ணமும் ஆபாசமான முறையில் உடல் உறுப்புகள் பற்றி யார் எழுதினாலும் அது அருவருப்பானதுதான்.  இதுகாறும் படு மட்டமாக எழுதிவந்துள்ள ஆண் எழுத்தாளர்களை இத்தமைய அறிவுஜீவிகள் விமர்சித்தது உண்டா? அவர்கள் எழுதினால் இவர்களும் எழுதலாம் என்பது நமது நிலைப்பாடன்று. யாருமே அப்படி  எழுதிச் சமுதாயத்தைக் கெடுக்கக் கூடாதுதான். இத்தகைய எழுத்துகள் வன்னுகர்வை நிகழ்த்த வல்லவை. ஆனால், பெண் என்று வரும் போதுமட்டும் ஆண்கள் தனி அளவுகோலுடன் அலைகிறார்களே அது சரியா என்பதே கேள்வி.

இரவு விடுதிகளில் சில பெண்களும் குடித்துக் கூத்தாடுவது பற்றியும் இவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இரவு விடுதிகள் தடை செய்யப்பட வேண்டியவை. அங்கே யார் குடித்துப் புரண்டாலும் தவறே. பெண்ணை மட்டும் தனிப்படுத்திக் கண்டிக்க வேண்டியதில்லை. சிகரெட்டும் அப்படியே. தவறான பழக்கங்களுக்கு இருபாலருமே ஆளாகாமல் இருப்பது அவர்கள் பெறும் குழந்தைகளின் உடல்நலத்துக்கு உகந்தது. பெண்களும் கெட்டுப் போவதற்கு அடிகோலுகிற ஆண்களையும் இந்த அறிவுஜீவிகள் திருத்த முயல வேண்டும். அதுதான் நேர்மையான அணுகுமுறை! அதை விடுத்து, ஆணகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் பெண்கள் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று பேசுவதும் எழுதுவதும் நடுநிலை ஆகாது.

………

 

Series Navigationவே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்ஒரு கவிதையின் பயணம்