ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்

Spread the love

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்கமுடியாது என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய்வரைக்கும் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாகவும் அறிகிறேன். திமுக இதே போல அதிமுகவுக்கு இணையாக கொடுத்திருக்கிறது என்று அறிகிறேன். தவறாகவும் இருக்கலாம். ஆனால் ஆர்கே நகரில் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வீடியோ காட்சிகளாகவே சோஷியல் மீடியாவில் பலரும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக அதிமுக, திமுக இரண்டுமே ஒரு வாக்குப்பட்டியலை கையில் வைத்துகொண்டுதான் பணத்தை வினியோகிப்பார்கள். உதாரணமாக திமுக பணம் வினியோகிப்பவர்கள் கையில் பட்டியல் இருக்கும். இவர் திமுகவுக்கு கட்டாயம் வாக்களிப்பார். இவர் அடிக்கடி மாறி மாறி வாக்களிக்கக்கூடியவர். இன்னவர் நிச்சயம் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார் என்று பட்டியல் வைத்துகொண்டு அதற்கேற்றாற்போலவே பணம் வினியோகிப்படும். மாறி மாறி வாக்களிப்பவர்களுக்கு பணம் கொஞ்சம் அதிகமாகவே போகும். ஏனெனில் அவர்களே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் அல்லவா?

ஆனால், ஆர்.கே நகரில் டிடிவி தினகரன், தனக்கு வாக்களிப்பார்கள் என்று லிஸ்டு போட்டெல்லாம் பணம் வினியோகிக்கவில்லை என்று அறிகிறேன். ஏறத்தாழ எல்லா வாக்காளர்களுக்கும் பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறது.

டிடிவி தினகரன் சுமார் 1 லட்சம் வாக்குகளுக்கு (ஆர்கே நகரின் வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் சற்று குறைவு) பணம் கொடுத்திருக்கிறார் என்று வைத்துகொண்டாலும் சுமார் 100 கோடி ரூபாய் இவரால் பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இதே போல அதிமுகவும் சுமார் 100 கோடி ரூபாய்பணம் வினியோகித்திருக்கிறது என்று கணக்கிடலாம். இதனையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கணக்கிட்டு பாருங்கள். சுமார் 23400 கோடி ரூபாய் ஒரு கட்சியால் மட்டுமே தேர்தலில் வாரி இறைக்கப்படும் பணம். இந்த பணம் அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தேர்தல் கமிஷனில் காட்டிய சொத்து மதிப்புக்கு பல நூறு மடங்கு அதிகமான பணம். மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட, ஊர்சொத்து என்பதெல்லாம் இன்று அப்பாவிகள், பிழைக்கத்தெரியாத ஜந்துகள் பேசும் பேச்சாக ஆகிவிட்டது.

இதில் சுவாரஸ்யமானது என்று நான் பார்ப்பது அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை. நான் எதிர்பார்த்தது, டிடிவி தினகரனின் பணத்துக்கும், அதிமுக வாக்கு சிதறுவதால், திமுகவின் வாக்கு வங்கிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்பது. ஆனால், சுமார் 50000 வாக்குகள் வாங்கி டிடிவி தினகரனுக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கிறது இரட்டை இலை வைத்திருக்கும் அதிமுக அணி. இதில் கேவலமாக வாக்கு வாங்கியது பாஜக இல்லை. (பாஜக சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குக்கள் எண்ணிக்கை சுமார் 2000தான்) திமுக. முந்திய தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்று 57000 வாக்குக்கள் வாங்கிய திமுக இன்று டிடிவி தினகரனுக்கும், அதிமுகவின் மதுசூதனனுக்கும் வாக்குக்களை கொடுத்துவிட்டு மூன்றாவதாக வந்து 24000 வாக்குக்களை பெற்றிருக்கிறது.

TTV Dhinakaran 89013
AIADMK 48306
DMK 24651
BJP 1417
Naam Thamilar 3860
NOTA 2373

இது ஒரு முக்கியமான தெம்பை இரட்டை இலையின் இன்றையபிரதிநிதிகளுக்கு அளித்திருக்கிறது. ஒன்று இதே போல 234 தொகுதிகளிலும் டிடிவி தினகரனால் பணத்தை வாரி இறைக்க முடியாது. இரண்டாவது அதிமுகவின் தொண்டர்கள் பெரும்பாலும் இன்றைய இரட்டை இலையின் இன்றைய பிரதிநிதிகள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால்தான் 48000 வாக்குக்களை அதிமுக பெற முடிந்திருக்கிறது.

ஒரு சில அறிவுஜீவிகள், இன்றைய அதிமுக கட்சி, பாஜகவின் கைப்பாவையாக ஆகிவிட்டது என்று பொதுமக்களெல்லாம் கோபம் கொண்டு டிடிவி தினகரனுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தடுக்கில் பூறுகிறார்கள். அந்த கோபத்தை ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டு காட்டவில்லை என்று தெரியவில்லை. பாஜக மீது கோபத்தால், திமுகவினரும் சென்று டிடிவி தினகரனுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அதற்கெல்லாம் ஏதாவது அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய புத்தகங்களில் பதில் இருக்குமோ என்னமோ?

அதேபோல, பொதுவாக வாக்குப்பதிவு மெஷின்களில் செய்த பித்தலாட்டத்தால்தான் பாஜக ஜெயிக்கிறது என்று புலம்பிகொண்டிருப்பவர்களும், இந்த தேர்தலில் அந்த புலம்பலை செய்யமுடியாமல் பாஜக பெற்ற வாக்குகள் அவர்கள் வாயை அடைத்துவிட்டன. அதே போல, சீமானுக்கும் திருமாவுக்கும் எதிராக போராடிக்கொண்டிருக்கும் பாஜகவினரின் வாயும் அடைக்கப்பட்டுவிட்டது என்பதும் தெரிகிறது. மக்களெல்லாம் இந்த சீமான் திருமா பாஜகவினர் போடும் சண்டைகளை கோப்பைக்குள் நடக்கும் புயல் என்று ஒதுக்கிவைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுகவும் டிடிவி தினகரனும் இணைந்துவிடுவார்கள் என்றெல்லாம் ஜோசியம் சொல்லுகிறார்கள். அது நடவாது என்பதை அதிமுக பெற்ற சுமார் 50000 வாக்குகள் சொல்லிவிட்டன. டிடிவி தினகரன் ஒரு பக்கமாகவும், அதிமுக மற்றொரு பக்கமாகவும்.14 கட்சிகள் கூட்டணியின் தலைமையில் திமுக மூன்றாவது பக்கமாகவுமே வரும் தேர்தல் நடக்க சாத்தியம் உள்ளது. (தேர்தல் வருவதற்குள், இடையே நடக்கக்கூடிய தில்லுமுல்லுகளால் சட்டசபை கலைக்கப்படாமல் இருக்குமானால்… )

**
ஆனால், ஆர்,கே நகர் தேர்தலைவிடவும் சுவாரஸ்யமானது மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தல்.
இது பற்றிய ஒரு தரவுகள் மிக்க கட்டுரையை opindia தளத்தில் காணலாம்.

1982ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸின் கையில் இருந்த ஸபங் தொகுதியை இன்று திரினாமூல் கைப்பற்றியிருக்கிறது.

2016இல் காங்கிரஸ் இந்த தொகுதியை 1,26,987 வாக்குகள் பெற்று, 77820 வாக்குகள் பெற்ற திரினாமூல் கட்சியை தோற்கடித்தது.
ஆனால், வெற்றி பெற்ற காங்கிரஸ் எம் எல் ஏ திரினாமூல் கட்சிக்கு தாவி ராஜ்யசபா உறுப்பினராக ஆனதால் இங்கே மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதே தொகுதியில் ஒருவருடத்திற்கு பிறகு நடந்திருக்கும் இந்த இடைத்தேர்தலில் திரினாமூல் கட்சி 1,06,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ 18,060 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. சிபிஎம் கட்சி (2016இல் இந்த தொகுதியில் சிபிஎம் போட்டியிடவில்லை) இப்போது 41987 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது. ஆனால் முன்பு 5610 வாக்குகள் (2.6 சதவீதம்) பெற்ற பாஜகவோ தற்போது 37476 பெற்று (18.4 சதவீதம்) மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.

சிபிஎம் முன்பு 45 சதவீதம் பெற்ற இடத்தில் தற்போது 36 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. காங்கிரஸின் வாக்குகளும், சிபிஎம் வாக்குகளும் பாஜகவை சென்றடைந்திருக்கின்றன. இது வருங்காலத்தில் பாஜகவை மேற்கு வங்கத்தின் முக்கிய எதிர்கட்சியாகவோ அல்லது ஆளும்கட்சி போட்டியாளராகவோ ஆக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.

**
2g தீர்ப்பு வந்ததும், அறிவுஜீவிகள் எல்லாம் வினோத் ராய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் எழுதிகொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகள் எல்லாம் தமிழ்நாட்டின் கேடுகாலத்தின் அறிகுறிகள்.

Series Navigationவழி