ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “

Spread the love

சிறகு இரவிச்சந்திரன்.

ஒரு சிக்கலான முடிச்சை எடுத்துக் கொண்டு, ஓரளவு தெளிவாக கதை சொல்ல முடியுமென்றால், அந்த இயக்குனருக்கு ஓரளவுக்குத் திறமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். அது பன்னீர்செல்வத்தின் விசயத்தில் உண்மையும் கூட. ஆனால், மறை கழண்ட கதையா, கூப்பிடு பன்னீரை என்று திரையுலகம் ஏலம் போடும் ஆபத்தும் அவருக்கு இருக்கிறது. உஷார்.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரபல தயாரிப்பாளர். ஆனால், அதற்காக, தன் மகன் ஜானிக்கு, இம்மாதிரி வேடங்களையே அவர் தேர்ந்தெடுத்தால், நிக் மகன் விரைவில் செக் அண்ட் மேட் ஆகி விடுவார். விழித்துக் கொள்க.
இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ, ஜானி இல்லை. சத்யேந்திரன். இவர், எடிட்டர் லெனினின் குறும்படம் ஒன்றில், பிணமாகத் தத்ரூபமாக நடித்தவர். இப்போதும் அவர் வெகு ஜன சினிமாவில் இல்லை. பரிட்சார்த்தப் படங்களிலும், குறும்படங்களிலும் தான் காணப்படுகிறார். பிச்சைக்கார வேடம், பைத்தியக்கார வேடம் என்றால் கூப்பிடு சத்யேந்திரனை என்பதுதான் வெகுஜன சினிமா அவருக்குக் கொடுக்கும் மரியாதை. கிட்டத்தட்ட ஒரு நாயகனுக்கு இணையான பாத்திரம் அவருக்கு. மனிதர் பிச்சு உதறுகிறார் நடிப்பில். அவர் மேல் பன்னீர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
தொலைக்காட்சி பேட்டிகளில் எல்லாம் தெளிவாகப் பேசுகிறார் ஜானி. படத்தில் மட்டும் ஏன் முசுமுசுவென்று குரல்? அது பன்னீரின் கேரக்டரைசேஷன் என்றால், அவர் டார்கெட்டை விட்டு வெகுதூரம் விலகியிருக்கிறார். புதுமுகம் காயத்ரி நல்ல அறிமுகம். இன்னமும் சில படங்களில் பார்க்கலாம்.
தினேஷ் – சார்லஸ் போஸ்கோ இசை நம்பிக்கை தருகிறது. அரவாணிகளின் முதல் பாடல் தவிர, மற்றதெல்லாம் மெலடி. இசைச் சேனல்களில் பலமுறை ஒலிக்கும் தகுதி அந்தப் பாடல்களுக்கு உண்டு. அடுத்தடுத்த வாய்ப்புகளில், இசை, குரலையும், வரிகளையும் மூழ்கடிக்காமல் இருக்கக், கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு மன நோயாளிக்கு உதவும் வயதான நண்பனும், ஒரு மன நோயாளி என்பது ஒரு புதிய முடிச்சு. அதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்று, வெற்றியும் பெற்றதில், படம் பாதி ஜெயித்து விட்டது. அனாதையான ஒரு இளம்பெண், உதவுகிறேன் என்று வரும் உறவினரால், தப்பான வழிக்கு திருப்பப்படும் தருணத்தில், எதிர்பாராத ஒரு கொலையால், காப்பாற்றப்படுவது புத்திசாலித் திருப்பம்.
இவ்வளவு இருந்தும் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு காரணங்கள் இரண்டு.
ஒன்று: படத்தின் நீளமான 157 நிமிடங்கள். இரண்டு : கதையை நகர்த்தாமல் ஜானியின் முகத்தையும், இடுங்கிய கண்களையுமே க்ளோஸப்பில் காட்டிக் கொண்டிருப்பது.
கலை இயக்குனருக்கு ஒரு சபாஷ்! சத்யேந்திரனின் இருப்பிடம் க்ளாஸ். அதேபோல் வவ்வால்கள் பறக்கும் அந்த கோடவுன், அருமையான செட்டிங்.
வன்முறை அதிகம் காட்ட வேண்டிய கட்டாயம் உள்ள கதையில் அதையெல்லாம் தவிர்த்து, பார்வையாளனின் கற்பனைக்கே அதை விட்டதற்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. இரண்டு படங்களிலுமே ஜானியை கீழ்பாக்கத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆக்கியதற்காக ஒரு பெரிய குட்டு.
கொஞ்சம் தெய்வத்திருமகள் விக்ரம். கொஞ்சம் நந்தலாலா மிஷ்கின். கொசுறுக்கு நான் கடவுள் ஆர்யா என்று ஏகத்துக்கு குழப்பம் ஜானியின் பாத்திரப்படைப்பில். இனியும் பன்னீர் – ஜானி காம்பினேஷன் தொடர்ந்தால், ரசிகன் ரவுண்டு கட்டி அடிப்பான் என்பது மினிமம் கேரண்டி.
0
கொசுறு
போரூர் கோபாலகிருஷ்ணாவில், நடுவில் மின்தடை ஏற்பட்டபோது, குரல் கொடுத்த ரசிகனின் காமெண்ட்தான் சரியான விமர்சன பன்ச். “ காசைக் கொடுங்கப்பா.. ஓடிப்போயிர்றோம் “
போரூர் அஞ்சப்பரில் ஒரு சுவர் முழுக்க மலை, மரம், செடி எனத் தத்ரூபமாக மியூரல் ஆர்ட் செய்திருக்கிறார்கள். அசைவர்கள் அஞ்சாமல் நுழைகிறார்கள். அஞ்சுவது ஆடு, கோழிகள் தாம்.
0

Series Navigationகுற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புதொலைந்த உறவுகள் – சிறுகதை