இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்

இராம. வயிரவன் (11-Aug-2012)

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடைவெளிகளைத் தொடர்வது சந்தோசமாகத்தான் இருக்கிறது. தங்கமீன் இணைய இதழில் ஏழு மாதங்கள் இடைவெளிகள் கட்டுரைத்தொடர் வெளிவந்தது. அதன்பிறகு சில இடைவெளிகளால் இடைவெளித் தொடர் நின்றுபோனது. இப்போது மீண்டும் தொடர்கிறேன். முந்தய  கட்டுரைகளைப் படிக்க விரும்புவோர் தங்கமீன் இணைய இதழைப் புரட்டுங்கள். கடந்த இதழ்களில் என் கட்டுரைகளைக் காணலாம். முகவரி இதோ: http://thangameen.com/ அங்கே சென்று படிக்கமுடியாதவர்கள், கவலை வேண்டாம் என்னோடு தொடருங்கள். நானே சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.

 

அப்படியென்னதான் சொல்லியிருக்கிறோம் அந்தக் கட்டுரைகளில்?  பார்த்துக்கொண்டால் எனக்கும் நல்லதுதான். கூறியது கூறல் அலுப்புத் தட்டிவிடும் என்பதால் ஏற்கனவே கூறியவை மீண்டும் தலை தூக்காமல் பார்த்துகொள்வது அவசியமாகப் பட்டது. அதனால் மீண்டும் படித்து விட்டேன். உங்களுக்குச் சுருக்கமாக இதோ…

 

மனிதனுக்கும், அவன் உருவாக்கி வைத்திருக்கிற மனித பிம்பங்களுக்கும் உள்ள இடைவெளி, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள தலைமுறை இடைவெளி, Communication Gaps புரிதலில் ஏற்படுகிற விதவிதமான இடைவெளிகள், தவறான கற்பனைகளால் ஏற்படுகிற இடைவெளிகள், நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படுகிற இடைவெளிகள், விழாக்களில் ஏற்படுகிற இடைவெளிகள், எதிர்பார்ப்புகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையே காணப்படுகிற இடைவெளிகள், நாடுகளுக்கிடையே உள்ள இடைவெளிகள், சிந்தனைகளில் இருக்கிற இடைவெளிகள் என்று சிலவற்றை விரிவாக உதாரணங்களோடும், சிலவற்றைத் தொட்டுக்காட்டியும் சென்றிருக்கிறேன். அவற்றையெல்லாம் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டுப் பருந்துப்பார்வையில் இன்னும் கொஞ்சம் மேலே பறந்து அடிப்படைக்காரணம் என்ன என்று யோசித்தேன். எனக்குப் படுகிறது இப்படி…மனிதனுக்கு மனம் இருப்பதால் எல்லாவற்றைப்பற்றியும் ஒரு கருத்து அல்லது ஒரு நினைப்பு இருக்கிறது. அந்த நினைப்புக்கும், நிஜத்துக்கும் உள்ள இடைவெளிதான் இவை எல்லாமே! இனித்தொடரலாம் மேலே.

 

தங்கமீனுக்குப் பிறகு இப்போது எட்டாவது கட்டுரை மொட்டவிழ்க்கிறது. இந்த இடைக்காலத்தில் எத்தனை நிகழ்வுகள்? எத்தனை அனுபவங்கள்? இடைவெளிகளைக் காட்டிக்கொண்டு புதுப்பரிமாணங்களை விரித்துக்கொண்டு? அத்தனையும் அங்கங்கே என் உடல்முழுதும் மூளையின் மூலைமுடுக்கில் விரல் இடுக்கில் என்று எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. சமிக்ஞை கிடைத்தவுடன் பனிக்கட்டிகள் உருகுவது போல, ஒவ்வொன்றும் பல கிளை ஆறுகளாக உருவாகி வளைந்து நெளிந்து ஓடி, பின் அவை ஒன்றாகி ஒரே ஆறாகி கடலை நோக்கி ஓடுவது போல உருவாகிப் பிரவாகமெடுக்கின்றன.

 

இதோ இந்தக்கிளை நதி இப்படித்தான் பிறப்பெடுக்கிறது. வாழ்க்கை என்று தலைப்பிட்டுக் கொண்ட கவிதைகளை படிக்கிற போதெல்லாம் ஏன் அது மட்டும் இத்தனைமுறை தன்னைத் தலைப்பாக்கிக் கொள்கிறது என்று எனக்கு எண்ணத்தோன்றும். அதற்குக் காரணம் இருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய பிரக்ஞையோடே மனிதனின் பயணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குழியில் படுத்துக்கொள்கிற வரைக்கும் மனிதனுக்கு புதுப்புது அனுபவங்களும்  பாடங்களும் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. பாடங்கள்தான் படைப்புகளாகின்றன. பாடங்களை எழுதுகிறவன் எழுதிவிடுகிறான், பேசுகிறவன் பேசிவிடுகிறான். அவை மனிதனுக்குள் ஊறிக்கொண்டே கிடக்கின்றன. எங்காவது அவை வெளிப்பட்டுப் பிறப்பெடுத்துக் கொள்கின்றன. இந்தக்கட்டுரையும் அப்படித்தான் பிறப்பெடுத்துக் கொள்கிறதோ?

 

சோமுவின் மகன் கிடுகிடு என்று உயரமாக வளர்ந்து நிற்கிறான். பதின்ம வயது. அவனைப்பார்ப்பவர்கள் அவனைப் பெரிய மனிதனாக எண்ணிக்கொண்டு பழகுகிறார்கள். ஆனால் சோமுவிற்குத்தான் தெரியும் அவன் மகன் உள்ளத்தில் இன்னும் குழந்தை என்பது. சோமுவும் அவன் மனைவியும் பேசிக்கொள்வார்கள், அவன் ஆளுதான் பெரிய ஆளா இருக்கான், அவன் இன்னமும் பக்குவப்பட வேண்டுமென்று. இன்னும் சில குழந்தைகள் பார்ப்பதற்குக் குழந்தைகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் புரியும். பெரியவர்களைப் போல நடந்துகொள்வார்கள். இரண்டுமே சாத்தியம்தான்.  இரண்டுமே இடைவெளிதான். 16 வயது இளைஞனுக்கும் 10 வயதுப் பையனுக்கும் உள்ள இடைவெளியாக இருக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.

 

இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் ஆங்காங்கே அதிகமான இடைவெளிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மனிதன் முன்னெப்போதையும் விட அதிகமான இடைவெளிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றானோ என்று தோன்றுகிறது. காரணம் மனிதர்கள் பேசிக்கொள்கிற நேரத்தை ஊடகங்கள் பறித்துக்கொண்டு விட்டன.

 

முரணாக இந்தக் காலக்கட்டத்தில்தான் தொடர்புக்கருவிகள், தொடர்புத் தொழில்நுட்பங்கள் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளன. அப்படியென்றால் அதிக அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிற கைத்தொலைபேசிகளில் மனிதர்கள் என்னதான் பேசிக் கிழிக்கிறார்கள்? ‘நீ எங்கே இருக்கிறாய்? நான் இங்கே இருக்கிறேன்..’ என்று மேலோட்டமான பேச்சுக்கள்தானா அத்தனையும்? புரிந்துணர்வுப் பேச்சுக்கள் என்னவாயிற்று? அவற்றையெல்லாம் பேசிக்கிழிக்க மனிதர்களுக்கு எங்கே நேரம்? வாழ்க்கை முன்னைவிட அவசரமோ அவசரமாகி விட்டது.

 

ஒரு விவாகரத்து பற்றி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. சம்பந்தப்பட்ட கணவன், மனைவி இருவரையும் விசாரித்த நீதிபதி ஒர் அறையில் 15 நிமிடங்கள் ஒன்றாக அடைத்து வைக்கச் சொன்னாராம். வெளியே வந்து இருவரும் சேர்ந்துவாழ விரும்புவதாக வழக்கைத் திரும்பப்பெற்றுக் கொண்டார்களாம். அப்படியென்றால்..அப்படியென்றால் அவர்கள் அன்றாட வாழ்வில் 15 நிமிடங்கள் கூடப்பேசிக்கொள்ளாமலே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்வது எதற்காக? செக்சுக்காக மட்டுமா? அவளுக்கு அவனும் அவனுக்கு அவளும் வடிகாலாக இருக்க வேண்டும். மன உளைச்சலை மட்டுப்படுத்த பகிர்தல் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ள வேண்டும்.

ஒரு அமைப்பில் எப்படி ஒவ்வொரு நிகழ்விற்குப் பிறகும் என்ன செய்தோம்?, எப்படிச் செய்தோம்? எப்படிச் செய்திருக்கலாம்? நிகழ்விற்கு வந்தவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? அடுத்தமுறை எப்படிச் செய்யலாம்? என்றெல்லாம் கருத்துப் பறிமாறிக்கொள்வதைப்போல வாழ்க்கையிலும் இம்முறையை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன் என் பெற்றோர் பேசிக்கொண்டே இருப்பார்கள். நான் நினைப்பேன் இவர்கள் அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்களோ என்று?

 

சமீபத்தில் வேலு இந்தியா சென்றுவந்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பலரைச் சந்தித்தான்; உறவினர்கள், நண்பர்கள், இதுவரை சந்திக்காத புதியவர்கள் என்று பலபேர். ஒவ்வொருவருக்கும் பரிசுப்பொருட்கள், சாக்லேட், ரொட்டி எல்லாம் வாங்கிச்சென்று அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தான். எல்லோரும் அவனை நன்கு கவனித்துக் கொண்டார்கள், சிலர் கோபப்பட்டார்கள் ஏன் பேசுவதே இல்லை என்று. சிலர் அன்போடு விருந்தளித்தார்கள். சிலர் அடுத்தமுறை கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளை போட்டார்கள். மனத்திருப்தியோடு சிங்கை திரும்பினான். வந்த பிறகு வாரக்கடைசி வரை பல தொலைபேசி அழைப்புகள். அவன் மனைவி அவர்களுடன் பேசினாள்; நிறையப் பேசினாள். பின் அவனோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டாள். எல்லாம் அவன் பயணத்தின் போது அவன் எப்படி நடந்து கொண்டான், என்ன தவறு செய்தான்? என்ன சரியாக செய்தான்? எப்படிச் செய்திருக்கலாம், ஏன் இன்னாரைப் பார்க்கவில்லை, ஏன் சரியாகப் பேசவில்லை, ஏன் மதிக்கவில்லை என்று பலப்பல நிறைகுறைகள். ஒவ்வொரு விமரிசனமும் அவனை அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டது போல நீண்ட விமரிசனங்கள். வேலு இந்தியா சென்றது ‘நிகழ்வு’. அப்போது அவனுக்கு ஏற்பட்டது அனுபவம். இப்போது அது பற்றிய கருத்து, பேச்சு, விமரிசனம் அத்தனையும் ‘பாடம்’. வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ள உதவும் பாடம். இப்படித்தான் ஒவ்வொரு நிகழ்வும், அனுபவமும், பகிர்தலும், பயனும்.

 

இது எல்லோருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. பலர் கருத்துப்பறிமாறலுக்குக் காலம் ஒதுக்குவதில்லை. நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளாமலேயே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தமக்கு ஏற்படுகிற  இடைவெளிகளை இட்டு நிரப்பாமலே விட்டுச் சென்றுவிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் கற்பனைகளால் நிரப்பிக்கொண்டு கடந்து போய் விடுகிறார்கள். அது அவர்கள் வாழ்வில் ஒரு பாதிப்பை, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் போதுதான் விழித்துக் கொள்கிறார்கள். அப்போது அது காலம் கடந்ததாகி விடுகிறது.

குமாரும், லதாவும் தம்பதிகள். எந்த ஒரு நிகழ்விற்குச் சென்றாலும் அது பற்றிப் பேசுவார்கள். உதாரணமாக ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றுவந்தாலும் கூட அது பற்றிப் பேசுவார்கள். மணப்பெண்ணின் பெற்றோரிடம் வாழ்த்துக்களைச் சொல்லாமலே வந்து விட்டீர்கள் என்பாள் லதா. கருத்துப்பறிமாறலோடு, கவனமான பரிசீலிப்பும் முக்கியம். அடுத்த முறை திருத்திக்கொள்ள வேண்டும் என்கிற மனப்போக்கும் முக்கியம்.

 

இன்று Face book ல் கேலிச்சித்திரக் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு செய்தியைப் படித்தேன். Some relationships are like Tom & Jerry. They tease each other, they knock down each other, irritate each other, but can’t live with out each other. இதனை விவாகரத்து செய்து கொள்கிற தம்பதிகளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நல்லதும் கெட்டதும், அடித்துக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் வாழ்க்கைக்குத் தேவைதான் போலிருக்கிறது. என்ன ஒன்று வெறுப்பு நிரந்தர வெறுப்பாகிவிடக்கூடாது அவ்வளவுதான். பல கடினமான நாட்களும், சவால்களும் வேண்டும்தான். அப்போதுதான் வாழ்க்கை அலுப்புத்தட்டாமல் சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருக்கும்.

 

இரத்தினத்தின் பணியிடத்தில் திடீரென்று தலை எண்ணிக்கை குறைந்து விடும். உடன் வேலை செய்வோர் வேலையை விட்டு நின்றுவிடுவார்கள். அவர்களுடைய வேலையையும் அவனே சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும். மிகுந்த சவாலாக இருக்கும். ஆண்டு முடிவில் நினைத்துப் பார்த்தால், மற்ற நாட்களை விட அந்தச் சவால் மிகுந்த நாட்களில்தான் அவன் அதிகம் கற்றுக்கொண்டிருப்பான். சவால்கள் ஆரம்பிக்கும் போதே பாடமும் ஆரம்பமாகி விடுகிறது. சவால்களை வாய்ப்புக்களாக எண்ணி வரவேற்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

இடைவெளிகளைப் பற்றி எழுத நினைக்கும் போதெல்லாம் எதிர்மறைச் சிந்தனைகளும் தோன்றி ‘என்னை எழுது!..என்னை எழுது! ‘ என்று என்னைத்துரத்திக் கொண்டே இருக்கும். நான் அப்படி எதிர்மறைச் சிந்தனைகளையும் எழுதலாம், ஆனால் அதனைக் கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். அதனால் அது கொஞ்சம் மட்டுப்பட்டது. தலைப்பு ‘இடைவெளிகள்’ என்று மட்டுமே எப்படியோ அமைந்து விட்டது. அதனால் இரண்டு பக்கங்களையும் எழுதலாம்தானே? ஆரம்பத்தில் ‘இடைவெளிகள் ஏன்?’ என்கிற ரீதியில்தான் எல்லாம் போய்க்கொண்டிருந்தது. போகப்போகத்தான் முரண்கள் தோன்ற ஆரம்பித்தன.

 

முரண்கள் எப்போதுமே அதிகம் இரசிக்கப்படுகின்றன. சினிமாவாகட்டும்; சிறுகதையாகட்டும்; கவிதையாகட்டும்; வாழ்க்கையாகட்டும் முரண்கள் இணைகிற புள்ளிகள்தான் முக்கியப்புள்ளிகளாகின்றன. உயிர்ப்புள்ளிகளாகவும் ஆகி விடுகின்றன. கதாநாயகன் மட்டுமே இருந்தால் கதையே இல்லை. வில்லனும் வேண்டியதாக இருக்கிறது. படைப்புக்கடவுள் ஆணைப் படைத்ததோடு நிறுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? திருப்பம் இல்லாத சிறுகதை எப்படியிருக்கும்? இராவணன் இல்லையென்றால் இராமாயணமே இல்லை. பெண் ஆணிற்கு 180 டிகிரி இடைவெளி. எதிர் துருவங்களும் எதிர் வினைகளும் இல்லாவிட்டால் இயக்கம் இல்லை. இயக்கங்கங்கள்தான் அனுபவங்களைத் தருகின்றன. அனுபவங்களிலிருந்தான் மனிதன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்கிறான். இரும்பை நெருப்பில் காட்டிக் காட்டி அடித்து அடித்துக் கருவிகள் செய்வது போலத்தான் இதுவும். அதிக அதிகமாய் அனுபவங்கள் வேண்டும். அப்போதுதான் மனிதனுக்கு அதிகமான பாடங்கள் கிடைக்கும். அதிக அனுபவங்களுக்கு அதிக அதிகமாய் இயக்கங்கள் வேண்டும். சும்மா இருப்பதே சுகம் என்று மனிதன் இருந்துவிடக்கூடாது. இயக்கங்களில் அவன் பங்கு கொள்ள வேண்டும்.

இந்தக்கருத்தோடு எனக்குள் முளைவிட்டது ஒரு கவிதை.

 

மனிதா!

சுற்றிக்கொண்டே இரு!

பூமியைப்போல..

 

நீ பற்சக்கரங்களால் ஆனவன்

 

இயக்கம் தொற்ற – நீ

இயங்கும் சக்கரங்களுக்கிடையே – உன்னை

இணைத்துக்கொள்!

 

தொற்றுவதற்குத்

தொட்டுக் கொண்டிருந்தாலே போதும்!

பற்கள் விழுந்தாலும்

பற்றுதல் விடாமல்

சுற்றுதல் தொடர்ந்தால்

சுற்றும் பயணுமும் தொடரும்!

 

சேர்ந்து செயல்புரி! – உன்

சிற்றசைவும் பேரியக்கமாகலாம்!

விலகி நின்றால் – உன்

விசுவரூபமும் வீணாய்ப்போகலாம்!

 

சுற்றிக்கொண்டே இருந்தால் – நீ

சுத்திகரிக்கப்படுவாய்!

சுத்திகரிக்கப் படுவதால்

சுகப்படுவாய்!

 

இந்தக் கட்டுரையை ஒரு கவிதையில் முடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். சரியாக ஒரு கவிதை வந்து மாட்டிக்கொண்டது. நல்லவெளை நீங்கள் பிழைத்தீர்கள்.

Series Navigationபெரியம்மா