இதற்கும் அப்பால்


 

கதவில் பூட்டு தொங்கியது

யார் பூட்டியிருப்பார்கள்

காலையில் நான் தான் பூட்டினேன்

இந்த நாய்

நகர்ந்து தொலைக்க கூடாது

வாலை மிதித்துவிட்டேன்

நல்ல வேளை கடித்து தொலைக்கவில்லை

வீட்டில் வைத்தது வைத்தபடி

அப்படி அப்படியே இருந்தது

கலைத்துப் போட குழந்தையுமில்லை

துவைத்துப் போட மனைவியுமில்லை

அலமாரியிலிருந்து புஸ்தகங்களை எடுத்து

மேஜையின் மீது வைத்தேன்

தன்னைப் பற்றிச் சிந்திப்பது

ஞானத்தை பரிசளிக்கும்

ஆனால் ஊர் பைத்தியம் என

பட்டம்கட்டிவிடும்

வாசலில் பூனை கத்தியது

இரவு உணவில் பங்கு கேட்க

முன்பே வந்துவிட்டது போலும்

படுக்கையை விரித்தேன்

இனி என்னிடம் வாலாட்ட முடியாது

இவ்வுலகம் என்று

எப்போதும் போல்

நினைத்துக் கொண்டு படுத்தேன்

விடிந்ததும்

எவரிடம் கைகுலுக்கி

எவரைப் புகழ்ந்து பேசி

எவர் ஜோக்குக்கு

சிரிக்க வேண்டியிருக்குமோ

சாக்கடையில் குளித்துவிட்டு

சந்தனத்தை பூசிக் கொள்வது தான்

வாழ்க்கையோ.

Series Navigationதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்புஇரண்டு கூட்டங்கள்