இதற்கு அப்புறம்

Spread the love

சாவை எதிர்த்தானா
சாவை ஏற்றுக்கொண்டானா
என்று சடலத்தின் முகம்
காட்டிக் கொடுத்துவிடும்
பிறந்த நொடி முதல்
மரணத்தை நோக்கியே
மனிதனின் பயணம்
மரண பயத்தை
எதிர் கொள்ள அஞ்சியே
ஏதோவொரு போதையில்
தினம் தினம் மிதக்கிறோம்
மனிதனை
எடை போடத் தெரிந்தவர்களெல்லாம்
மாட்டிக் கொள்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்கிறார்கள்
எந்த ஊருக்கான பயணம்
என்று தெரியாமல் தான்
புறப்பட்டு வருகிறோம்
உயிர்த்தெழுதல் சாத்தியமில்லை
தேவ மைந்தர்கள் அரிதாகவே
பூமி வயலில் விளைகிறார்கள்
ஆன்மாவுக்கு அழிவில்லை என்று
உபன்யாசம் கேட்கிறோம்
புதுத் தெம்பு உண்டாக
பாவச் சேற்றில் மீண்டும்
மூழ்குகிறோம்
முதுமை அடைந்திருந்தாலும்
ஏதோ ஒரு விதத்தில்
வாழவேண்டும் என்ற
ஆசை மட்டும்
இறுதி வரை
எல்லோருக்கும் இருக்கிறது.

Series Navigationபடங்கள்எனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா