இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

 


ஜோதிர்லதா கிரிஜா

ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு பழநிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் ஜக்கி வாசுதேவ் பற்றிய விமர்சனமே பெருமளவுக்கு இருக்கிறதே தவிர, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அமைச்சரிடமிருந்து சரியான பதில்கள் இல்லை!

அரசின் பிடியினின்று இந்துக் கோவில்களை விடுவித்தல் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அமைப்பு எதுவானாலும் அதில் ஊழல் பெருச்சாளிகளின்  சுரண்டல் இருந்தே தீரும் என்பது எல்லாருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. ஆனால், எதில் சுரண்டல் குறைவாக இருக்குமோ அதனை ஏற்பதே நியாயமாகும்.

அற நிலையத் துறையின் பிடியில் இருக்கும் கோவில்களிலிருந்து எடுக்கப்படும் உண்டியல்களின் பணம் அவற்றின் பராமரிப்புக்கு உரிய முறையில் செலவழிக்கப்படுவதில்லை என்பது பரவலான குற்றச் சாட்டு. பக்தர்கள் அளிக்கும் எண்ணெய், நெய் போன்றவைதான் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாய்ச் சொல்லப்படுகிறது. சிதிலமுற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழைய கோவில்களை அற நிலையத் துறை கண்டுகொள்ளுவதே கிடையாது. அவற்றைப் புதுப்பிக்கும் பணி அறநிலையத் துறையின் பொறுப்பு இல்லையாமா?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய குட முழுக்கு ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு நடத்தப்படவே இல்லை. குடமுழுக்கு என்பது கோவில்களையும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களையும் இடி, மின்னல் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றக் கூடியது என்பது விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் அறநிலையத் துறை செய்யவில்லை?

உண்டியல் வசூல் கிடைக்கும் கோவில்களே சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில், பாழடைந்து கிடக்கும் கோவில்களைப்பற்றிய  அக்கறை அத் துறைக்கு எங்கே வரப் போகிறது?

இந்து அற நிலையத் துறை அமைச்சர் கோயம்புத்தூரிலுள்ள ஈஷா யோகா அமைப்பில் நிதி சார்ந்த ஊழல்கள் உள்ளனவா என்பதை ஆராய இருப்பதாய்க் கூறியுள்ளார். செய்ய வேண்டியதுதான். அதே நடவடிக்கை அற நிலையத் துறைக்கும் பொருந்தும்தானே?

 ‘கோவில்களை எந்த பக்தர்கள் வசம் ஒப்படைப்பது? அதற்கான கமிட்டியை யார் நிறுவுவது? அக்குழுவின் உறுப்பினர்க்கான தகுதியை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது? ஒரு கோவில் எந்தக் கிராமத்தில் உள்ளதோ அதே கிராமத்திலிருந்தா, இல்லாவிட்டால் வெளியிலிருந்தா? உதாரணமாக மதுரையில் பிறந்து, ஆனால் தேவி மீனாட்சியின் பக்தராக உள்ள ஒருவர் தற்போது சென்னையில் வசித்தால், அவருக்கு அந்தத் தகுதி உண்டா?’ ஆகிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

‘மேலும் ஒரு கோவில் அரசின் கட்டுப்பாட்டினின்று எடுக்கப்படும்போது, அது ஒரு தனி இருப்பாகப் (entity) பதிவு செய்யப்பட வேண்டும். அதை எந்தப் பெயரில் பதிவு செய்வது? ஓர் அறக்கட்டளையின் பெயரிலோ அல்லது கூட்டுறவு அமைப்பின் பெயரிலோ என்றால், அது சட்டரீதியான  அமைப்பினுள் இருத்தப்பட வேண்டும். அதை யார் முறைப்படுத்துவது? அந்த வாரியத்தின் உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்வது? அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அவர்களின் மரணம் வரையிலும் அந்தக் குழுவில் நிலையாக இருப்பார்களா? வாரிய உறுப்பினருக்கான  தகுதி என்ன?’ என்றும் அவர் வினவியுள்ளார்.

நேர்மைக்கும் நாணயத்துக்கும் பெயர் பெற்ற ராமகிருஷ்ணமடம், மதுரை ஆதீனம், மற்றுமுள்ள எண்ணிறந்த இந்து மதம் சார்ந்த நம்பகமான அமைப்புகள் ஆகியவற்றிடம் இந்துக் கோவில்களை ஒப்படைக்கலாமே! அவர்களின் தலைமையாளர்கள் கூடிப் பேசி இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்து அறநிலைய  நிர்வாகிகளிடம் தெரிவித்து இறுதியான ஒரு முடிவுக்கு வர இயலுமே!

மனமிருந்தால் மார்க்கமுண்டுதானே?

ராமகிருஷ்ண மடம் இந்தப் பொறுப்பை ஏற்குமா என்பது தெரியாது. ஏற்காவிடினும் அவர்களது யோசனை பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.

     கடைசியாக அமைச்சரிடம் ஒரு கேள்வி. நேர்முகத்தின் எடுத்த எடுப்பில் தனியாரிடம் இந்துக் கோவில்களை ஒப்படைப்பதை “நான்சென்ஸ்” என்று ஒரே சொல்லில் விமர்சித்துள்ள அமைச்சர், “கிறிஸ்துவச் சர்ச்சுகளும், இஸ்லாமியத் தொழுகைத் தலங்களும் தனியாக இயங்கிவரும் நான்சென்ஸுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவற்றையும் அற நிலையத் துறை எடுத்துக்கொள்ளும்,” என்று அறிவிக்கத் துணியாதது ஏனய்யா?

…….

     மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நியாயமான முடிவை எடுத்து அனைத்து மக்களினுடையவும் நன்மதிப்பைப் பெறுவாரா?

…….

 

Series Navigationகவிதைகள் பொக்கிஷம் !