இந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !

Spread the love

 

“என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத ஒரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம்” என்றெழுதுகிறார் மலர்மன்னன்.

 

எல்லாருக்கும் அந்தப் பேரதிசயத்தின் மூல காரணம் தெரியவேண்டுமென அவாவினால் இக்கட்டுரை இங்கு வரையப்படுகிறது.

 

பேரதிசயத்தின் காரணம் இந்து மதத்தின் தொன்மையன்று. அதன் லிபரல் நேட்ச‌ரே.  எவர் என்ன சொன்னாலும் நாம் கண்டு கொள்ள மாட்டோம் என்ற உணர்வே காரணம். மேலும்,  இம்மதத்தின் ‘இதுதான் கொள்கை; இதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லா விட்டால் நீவிர் இந்துக்கள் அல்ல!” என்ற மூர்க்கத்தனமில்லை.

 

மக்களில் பெரும்பாலோருக்கு மதமே வாழ்க்கையில்லை. மதத்தால் ஒரு வாய்க்கஞ்சி கூட ஊற்ற‌ முடியாது.  உழைத்தால்தான் வாழ்வு. முத்தீ வளர்த்து வேதம் ஓதினால் இருக்கும் பொருளும் தீயில் காலியாகி விடும். டைம் வேஸ்ட். காசும் வேஸ்ட்.  எனவே மதங்கள் மனிதனுக்கு இவ்வுலகில் உதவும் என்றொரு வியாபாரத் தந்திரம் மதவாதிகளால் பரப்பப்பட்டது..  இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் குழந்தை பேறடையலாம் என புத்திர புத்திரி பாக்யமில்லாதோரை ஏமாற்றுவது போல‌.   இவ்வுலகைக்காட்டிக் பொய் பரப்பி எவ்வளவு காலம்தான் கடையை விரிக்க முடியும்?  அவ்வுலகைக்காட்டித்தான் பொழப்பை ஓட்ட வேண்டும். எனவே, விண்ணுலகம் புகுவது மண்ணவர் விதியே என மக்களுக்குச் சொல்லப்பட்டது. அதைக்கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாமென வாழ்ந்து கிழடு தட்டும் போது பட்டையும் நாமமும் அடித்துக்கொண்டு,. அல்லது ரோசாரியை உருட்டிக்கொண்டு, அல்லது குரானைப்பற்றி களியக்கா விளையில் உணர்ச்சிவசமாகப்பேசிக்கொண்டு தமிழன் டி.வி பார்த்துக் கொண்டு மாறி விடுகிறார்கள்.  ஆசை யாரை விட்டது ? அவ்வுலகத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிவிட்டால், ஸ்டேஷனில் டி டி ஆருக்கு வெட்ட வேண்டாமில்லையா ?

 

போகட்டும்.. இந்து மதத்துக்கே வருவோம். ஏனென்றால் மலர் மன்னனுக்குத்தான் பதில் போடுகிறோம். எந்த முல்லாவும் பாதிரியும் திண்ணையில் மதமே வாழ்க்கை என்று டுபாக்கூர் விட்டாரென்றால் அவர்களுக்கும் பதில் போடலாம்.

 

மதம் மக்களின் அத்யாவசியத் தேவையில்லாததாலும், ஒரு ஜான் வயிற்றுக்கு உணவு தேடலே தலையாய வேலையாகி விட்டதாலும், மக்களுக்கு தங்கள் தலைகள் மேல் உட்கார்ந்து அழுத்திக்கொண்டு, தங்கள் பொருள் அல்லது உணவு வேட்டைக்குத் தொல்லை செய்யும் மதம் எரிச்சலையேத் தரும்.

 

காதலித்து, காமத்தில் கட்டுண்டு பிள்ளைகளைப் பொல பொலவென பெற்றுப்போட்டு, நர்சரி அட்மிசனுக்கு நாயாக அலையும் மக்களுக்கு மதம் ஒரு இடஞ்சலாகவிருக்கிறதென்று தெரிந்தும் மதம் வேண்டுமேயென்றால் அவர்கள் எல்லாரும் சன்னியாசிகளாத்தான் வேண்டும். அப்படியே ஆனாலும் அங்கேயும் ஆரணங்குகள் வந்து சன்னியாச வேடத்தை வைத்துக் கொண்டே ஜமாய்க்காலாம் சார்? காவியென்றாலே எனக்கு ஒரு மாதிரியா வருது!’ என்று சொன்னால் என்னதான் செய்வது ? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. அவ்வுலகமாச்சே? அல்லாவின் காலடியிலோ, வைகுந்தத்தில் பெருமாளிடமோ, கைலாசத்தில் சிவராஜ்ஜியமே இவ்வுலகத்தை விட சூப்பராக இருந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது ? எனவே ஒரு காம்ப்ரமைஸ் செய்வோம். மதம் வேண்டும். ஆனால் தொட்டு தொடாமலும் இருக்க வேண்டும். பி.எஃ சேமிப்பு மாதிரி. எப்போ வேணுமோ அப்போ  வித்டராயல் பண்ணிக்கொண்டு வாழலாம். இதற்கு ஏற்ற மதமே இந்து மதம். தலைவனும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எவனும் அடிப்பேன் கொல்லுவேன் இவன் தலையைக் கொய்து வந்தால் பத்து லட்சம் தருவோம் என்று டயலாக் பேச முடியாது. ‘கோட்டிக்கார பய புள்ள விட்டுத்தள்ளு” என்று இந்துக்கள் ஃபட்வா போடும் படுவாவை எள்ளி நகையாடுவர்;.

 

இந்து மதம் இத்தகைய எரிச்சல்களைத் தரா. வ‌ன்முறை விரும்புவன் ‘சகோதரனாயானாலும் கொன்று விடு ;அஃது ஒரு பெரும்தேவையும் நன்மையும் தருமெனில்’ என்ற பக்கா சுயநலமும் வன்முறையையும் எடுத்து வாழலாம்; விரும்பாதவன், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ எனவும் வாழலாம். மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு பார்ப்பான் வேடம் போடலாம். சைவம் மட்டுமே சாப்பிடுறேன் என்று சொல்லியும் பார்ப்பன வேடம் போடலாம். .அந்தணர் என்பர் அறவோர் எனச் சாதிப்பெருமை பேசலாம்.  சாதிகள் இல்லையடி பாப்பா எனவும் பாட்டெழுதி ஊர்மக்களை ஏமாற்றலாம்.

 

சைவம், வன்முறை, சமாதானம். சாதிகள், அல்லது சாதிகளே வேண்டாம், பூஜைகள் புனஸ்காரங்கள், அல்லது ஒரே ஒரு பூவை எனக்குத்தந்தால் போதும் என்றார் கடவுள் (இச்சுலோகம் பகவத் கீதையிலிருந்து). கல்சாமியே வேணாம் போ என தயானந்த சரசுவதி போல, அல்லது நட்ட கல்லும் பேசுமோ? என நையாண்டி மேளம் வாசிக்கலாம். அல்லது அர்ச்சாவதாரத்தில் (தெய்வத்திருமேனிகளில்) மூழ்கி, ‘என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!  என்று பாசுரம் மழை பொழியலாம். எண்ணற்றக் கடவுளர்கள், அதே சமயம் வேதங்கள் ஒரே கடவுளைத்தான் சொல்கின்றன என்று வியாக்யானம் பண்ணித் திண்ணை வாசகர்களை அசத்தலாம். ஆக முரண்பாடுகள், முரண்பாடுகள்,  ஒரே முரண்பாடுகள்.  Conflicts all the way.

 

பல்பொருள் அங்காடி. ஆச்சி சிக்கன் மசாலாவுக்குப் பக்கத்தில் மாம்பலம் ஐயர் சாம்பார் பொடி (இன்று சென்னையில் விற்கும் ஒரு மசாலா பிராண்டு)  எஃது எவருக்கு வேண்டுமே அஃதை அங்கே வாங்கிக் கொள்ளலாம். U can get ot cheap if u r poor; u can get it expensively if u r rich. அடடே ஒன்றைச் சொல்ல மறந்துட்டேனே. அதான் நாத்திகனாகயிருந்தாலும் கமப்ர்டபுளா இந்துவா இருக்கலாம். இந்து என்றாலே திருடன் என்று சொல்லிவிட்டு நானும் இந்துதான் எங்கப்பா சொன்னாரு எனலாம். ராமர் ஒரு குடிகாரன் என்று சொல்லிவிட்டு அப்படித்தாங்க வால்மீகி எழுதி வைச்சிருக்காரு நான் என்ன பண்ணுவேன் ? என நைசாகப் பேசலாம். எல்லாருக்குமே எல்லா வழிகளிலும் வாய்ப்பாக வரும் மதம் இந்து மதம். எல்லாருக்கும் பொதுவான கடை.  All things to all men.

 

இப்படிப்பட்ட பலவிதமான வாய்ப்புக்களடங்கிய பல்பொருள் அங்காடியாக‌ இருப்பதனாலேயே இந்து மதம் இன்று வரைமட்டுமல்ல என்றுமே இருக்கும்.  தொன்மை எனவே இருக்கிறது என்பதெல்லாம் சுத்த கப்சா.

Series Navigationமழைப்பாடல்மண் சமைத்தல்