இந்த மரம் போதுமா?

Spread the love

இந்த மரம் போதுமா?

இன்னும் கொஞ்சம்  வேணுமா ?

ராமா!

மரங்கள் வழியாக 

ஒளிந்து கொண்டு தானே 

அம்பு எய்தி 

தர்மம் நிலை நாட்டுவாய்.

குறி பார்க்க உனக்கு கூச்சம்.

தர்மத்தையும் தர்மமாகத்தானே 

“ஸ்தாபனம்”செய்ய வேண்டும் 

என்று 

இவர்கள் சுலோகங்களை 

குவித்து வைத்திருக்கிறார்களே !

உன் பக்தர்கள் எனும் 

இடிராமர்கள் 

அந்த கல்லறைக்கோவிலை 

இடித்தது  தவறு என்று 

தராசுத்தட்டுகள் 

தடுமாறி தடுமாறிச் சொன்னது 

உனக்கு உறுத்தலை தந்திருக்குமே !

அதற்கும் மேல் 

 அமங்கலமாய் அந்த 

“சமாதி”மேலா 

மங்களாசாசனம் செய்யப்பட்டு 

அமரப்போகிறாய்?

பரவாயில்லை 

இவர்கள் சொன்னது  இது தானே.

இதற்கும் கீழ் தானே 

உன்னைப்பிரசவித்த கோசலையின் 

மணி வயிறு இருக்கிறது!

அப்படியும் 

ஒரு தீட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறதே 

இதற்கு 

எதன் மேலாவது  கோபம் கொண்டு 

கணைகளை நீ தொடுத்தாக வேண்டும்.

அதற்கு என்ன செய்வது என்று 

நீ கலங்கவே வேண்டாம் 

ஓ!

ராமா!

இவர்களுக்கு இருக்கவே இருக்கிறது 

மனித நீதியால் எழுதப்பட்டு 

சமூக நியாயம் கொண்டு அச்சிடப்பட்டு 

இந்த மக்களின் உயிர்ப்பாக 

இருக்கும் 

அரசியல் அமைப்பு சட்டப்புத்தகம்.

இதன் காகிதங்களை ஒவ்வொன்றாகக்கிழித்து 

கத்திக்கப்பல் செய்து கொண்டிருப்பதே 

உனக்கு நடத்தும் 

இவர்களின்  அன்றாட பூஜை !

அந்த புத்தகத்தை 

நீயும் உன் பங்குக்கு வதம் செய்து விடு!

மறைந்து கொண்டு அம்பு விட 

இந்த மரங்கள் போதுமா 

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


=============================

Series Navigationதலைகீழ்