இன்னொரு எலி

எப்படி

எலியைப் பிடிக்கும் எனக்கு?

 

எனக்குப் பிடித்த புத்தகங்களைக்

கடித்துக் குதறியிருக்கும்.

 

சிறுநீர் கழித்து

ஈரமாக்கியிருக்கும்

 

புத்தகங்களின் தராதரம்

தெரியவில்லை அதற்கு.

 

எழுதப் படிக்கத் தெரியாத

அற்பம் அது.

 

சினந்து கவிதை எழுதி

சபித்து விடலாம் அதை.

 

ஆனால் அதற்கு

கவிதையை இரசிக்கத் தெரியாது.

சுட்ட தேங்காய் ருசி தான் தெரியும்.

 

திருத்த முடியாது எலியை.

எப்படியும்

பிடித்து விட வேண்டும்.

 

வன்மம் கூடிய இரவில்

வஞ்சக எலிப்பொறிக்குள்

சூழ்ச்சி தொங்கும்

சுட்ட தேங்காயாய்.

 

பிடிபட்ட

எலியின் பற்களில்

இரவின் வலை

கிழிபட்டிருக்குமோ?

 

விடிந்து போய்ப் பார்த்தால்

திறந்திருக்கும் புத்தகம் போல்

வாய் திறந்தே காத்திருக்கும்

எலிப்பொறி

எனக்காக.

 

பட்!

ஒருகணம்

பொறிக்குள் விழுந்து

பரபரப்பேன்

சுட்ட தேங்காய் கடிக்காமலேயே.

 

எலிகளில்

எந்த எலி

புத்திசாலி ?

Series Navigationதுறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்புகவிதைகள்