இரண்டு குறும்படங்கள்

Spread the love

யூ டியூப்பில் அருமையான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. நல்ல நடிப்பு, துல்லிய ஒளிப்பதிவு என அமர்க்களப்படுத்துகின்றன அவைகள். சில காதலில் சொதப்பும் ரகம். சில பிரச்சார நெடி. இனி நான் பார்த்த இரண்டு குறும்படங்கள் பற்றிய எனது பார்வை.

ஹரியின் “ 1680 “

தினமும் தண்ணியடித்துக்கொண்டு வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் முன்று இளைஞர்கள். அதில் ஒருவனுக்கு காது கேட்காது, ஆனால் சினிமா பைத்தியம். இன்னொருவன் மேலைநாட்டுச் சங்கீதத்துக்கு குத்து நடனம் ஆடுபவன். அவனுக்கு அது மட்டும்தான் தெரியும். அவர்கள் தண்ணியடிக்கும் இடம் கேட்பாரற்ற காவல் நிலையம். முன்றாமவன் கதை நாயகன். சேட்டுப்பையன். அதாவது வெள்ளையாக இருப்பவன். கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறதா?

சில்லறை கோல்மால் வேலைகளைச் செய்து காசு பார்த்து சரக்கடிக்கும் இவர்களுக்கு பெரிய லெவலில் ஏதாவது செய்ய ஆசை. நண்பனொருவன் காதலியுடன் காரையும் லபக்கிய கதை உந்து சக்தியாகிறது. திட்டம் ரெடியாகிறது.

அருண் பெரிய முதலாளி. அவன் பெண்ணை மாலைக் கல்லூரியிலிருந்து அழைத்து வரும்போது வழி மறித்து, அவன் பணத்தைக் கையாட திட்டம். அதற்கான முஸ்தீபுகள் கலகல ரகம். ஒருவன் குங்பூ கற்றுக் கொள்கிறான் சுயேச்சையாக. பிறகு மாட்டிக் கொண்டால் தப்பி ஓட ஓட்டப்பயிற்சி. எல்லாம் சொதப்பல்.

மோட்டார் சைக்கிளில் மூன்று பேரும் குறுக்கே பாய்ந்து அருணின் காரை மறிக்கிறார்கள். அருண் அவர்களை அடித்து வீழ்த்துகிறான். கடைசியில் அவனது பெண்ணைக் கத்தியால் கீறி அவனது பெட்டியை களவாடுகிறார்கள். எஸ்கேப்!

கிளைமேக்ஸ். மற்ற இரண்டு பேரும் சேட்டுப் பையனுக்காக காத்திருக்க, அவன் அருணின் பெண்ணுடன் வருகிறான். அவனும் அவளும் காதலிக்கிறார்கள். அவளைக் கடத்த மற்ற இரண்டும் பேரும் விவரம் தெரியாமலேயே உதவியிருக்கிறார்கள். இதில் அந்தப் பெண் தான் போகும் காரில் துப்பட்டாவை வெளியே விட்டு சிக்னல் காட்டும் யுக்தியெல்லாம் வருகிறது. கடைசியில் நாலு 420 ம் 1680 என முடிகிறது படம்.

கொஞ்சம் காசு இருந்தால் இன்னமும் பளிச் என்று படம் எடுக்க முடியும் ஹரி என்று நிரூபிக்கும் படம். பாதி வசனங்கள் லைவ் ரெக்கார்டிங் என்பதால் காதில் விழவில்லை. ஆனால் சித்தார்த் காதில் விழுந்தால் இன்னொரு சொதப்பல் இயக்குனர் ரெடி!

#

அசோக்குமாரின் “ துவண்ட யுத்தம் “

ராமேஸ்வரம் களம். மீனவர்கள் பாத்திரங்கள். தீர்வுக்கு வழி காண குறுக்கு வழியில் தீவிரவாதம். கொஞ்சம் சீரியஸ் படம். பெரிய இம்பாக்ட் இல்லை. ஏனென்றால் நாம் அதை அனுபவித்ததில்லை.

மூன்று இளைஞர்கள். மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் கொடூரம். உயிரிழப்பு. உடைமைகள் பறிமுதல். இத்யாதி இத்யாதி. தீர்வுக்கு இரு இளைஞர்கள் கையிலெடுப்பது அமைச்சர் ராமகிருஷ்ணனைக் கடத்துவது.. சில மணிநேரம் கடலுக்குக் கொண்டு சென்று நேரடியாக அவருக்கு மீனவர்களின் பிரச்சினையை லைவ் ரிலெயாகக் காட்டுவது. திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதும், இலங்கை கப்பற்படையால் ஒருவன் இறப்பதும், இன்னொருவன், ஈழம், கச்சத்தீவு என எல்லாவற்றையும் தொட்டு அமைச்சரிடம் ஒப்பாரியுடன் முறையிடுவதுமாக முடியும் படம்.

பெரிய டெக்னிக்கல் விஷயங்கள் இல்லாத படம். ஸ்டாடிக் கேமராக் கொணங்கள். பிரச்சார நெடி தூக்கலாக. வசனங்களில் பெரிய ஈர்ப்பும் இல்லை. ஆனாலும் ஏதோ சொல்ல முயல்கிறார்கள் என்கிற கோணத்தில் இது ஒரு நல்ல முயற்சிதான்.

ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடும்போதும் இறுதியில் நடித்தவர்கள் பெயர்கள் ரோல் ஆகும்போதும் இருக்கும் டெக்னிக்கல் பிரில்லியன்ஸ் படத்தில் இல்லை. படத்தில் மருந்துக்குக்கூட ஒரு பெண் பாத்திரமில்லை. மீனவரின் குடும்பச்சூழல் தொடப்படவே இல்லை. அதனால் தட்டையாக முடிகிறது படம்.

பெரிய திரைக்குக் குறி வைப்பவர்கள் தாம் இம்மாதிரி குறும்படங்களை எடுக்கிறார்கள். இப்படியெல்லாம் எடுத்தால் பெரிய திரை கதவைத் திறக்காது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

#

Series Navigationபிரேன் நிசாரின் “ இஷ்டம் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.