உ(ரு)ண்டை பூமியை நோக்கி

அண்டத் தொகுதியின்

எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ

ஓர் அதீத ஜீவி

கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில்

கட்டமைத்த விண்கலத்தில்

உ(ரு)ண்டை

பூமியை நோக்கிப்

பயணித்துக் கொண்டிருக்கும்.

 

எத்தனை சூரியரோ?

சூரிய வெளிச்சக் கீற்றுகளின்

சூக்குமப் படிக்கட்டுகளில்

சும்மா மாறி மாறித்தாவி

சீறி சீறிப்

பாய்வது போல் பயணிக்கும்.

 

கால முள் பின்னகர

இந்த ஸ்திதியிலிருந்து

இன்னொரு ஸ்திதியில் மாறி

இனிப் பயணம் தொடரும்.

 

பூமி சேருமுன்

எந்த ஸ்திதியில்

எப்படிச் சேரும் என்பதைக்

கணிணியில் செயல்நிரல் போட்டு

கணித்துக் கொள்ளும்.

 

அதனின்

பல்வித ஸ்திதிகளின்

பல்வித சேர்மானங்கள்

கணிணியின் செயல்நிரல் படி

திரும்பித் திரும்பி

அதே சுற்றாய்ச் சுழலும்

சுழலில்

கால முள்ளை இருக்கும் ஸ்திதியோடு

ஜீரோ தளத்தில் பொருந்த நகர்த்தி

ஒரு e-மயானத்தை வடிவமைத்து

ஒரு “மெளஸ் கிளிக்கில்”

முன்னை ஸ்திதிகளை

ஒளி வெம்மை குவித்து எரியூட்ட

முடிவு செய்து கொள்ளும்.

 

முழுமையின் கைவசத்தில்

நித்தியம் கைவசமென்று

கணிணியில் போட்ட செயல்நிரலில்

காலப் பிழையைக்

கண்டுபிடித்து சரிசெய்யப் பார்க்கும்.

 

பிரபஞ்ச இரகசியம்

பிடிபட பிடிபடக்

’கடவுளை’ நெருங்கும்

மனித ஜீவிகளின் மண்ணில்

அண்டவீதியின் அதீதஜீவி

காலடி எடுத்து வைக்கும் போது

ஒரு சவ ஊர்வலம் எதிரில் செல்லும்.

 

பிரபஞ்சம்

வெறிச்சிட்டுக் கிடக்கும்.

—————-

Series Navigationவிட்டல் ராவின் கூடார நாட்கள்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9