உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை

This entry is part 27 of 42 in the series 25 மார்ச் 2012

உஷாதீபனின் கதைகளில் காணப்படும் மனிதாபிமானம் ஆசிரியரின் மன நிலையைக் காட்டுகிறது. சிறுகதைகளில் ஆளப்படும் சில சிறந்த யுக்திகளை அவர் கையாண்டிருப்பது மெச்சத்தக்கதாக உள்ளது. சுருங்கச் சொல்லித் தாம் ஸ்ருஷ்டித்திருக்கும் கதாபாத்திரங்களை படிப்பவர் மனதில் உணர்ச்சி பொங்க வைத்திருக்கிறார் என்பது உண்மை.

எட்கர் ஆலன் போ சொன்ன கருத்தான “சிறுகதை என்பது அரை மணியிலிருந்து ஒரு மணி அல்லது இரண்டு மணி அவகாசத்துக்குள் ஒரே மூச்சில் படித்து முடிக்க்க் கூடியதாக இருக்க வேண்டும். அது தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாயிருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்வித குறுக்கீடுகளும் பாதிக்காமல் வாசகர்களின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாயிருக்க வேண்டும்” என்ற இலக்கணத்தை இவர் கதைகளில் காண முடிகிறது. கதைகள் ஒரு நல்ல எழுத்தாளனை அடையாளம் காட்டுகின்றன.

வயதானவர்களுக்கு அவர் காட்டும் பரிவு, அவ்வயதானவர்களுடைய குறைபாடுகளையும் காட்டிச் சொல்லப்படுகையில் யதார்த்தமாக வாழ்க்கை முறை விவரிக்கப்படுவது போல உள்ளது. அக்கதா பாத்திரங்களின் உண்மையான நடைமுறைகள் சிறுகதையின் ஓட்டத்தை நளினப்படுத்தி வாசிப்பவனின் மனதில் அகலாத நினைவுகளை ஏற்பட வைக்கும். சிறுகதைகளின் கற்பனைச் செறிவு, நடை முறையில் இருப்பவற்றை உணர்ச்சி பூர்வமாக அறிய வைப்பதுதான் என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார் உஷாதீபன்.

உதாரணமாக வாடகைச் சுமையில் வரும் பாட்டி மீது மற்றவர்களுக்குக் கோபம் வருமாறு நடந்து கொண்டாலும் கிழவரின் மனோபாவம் பாட்டியின் மீது ஒரு அனுதாபத்தையும் உண்டாக்காமல் விடவில்லை. வீட்டின் சொந்தக்காரர் படும் தொல்லைகளும், அவர்களது தார்மீக மனப்போராட்டங்களும் ஒரு சிறந்த சிறுகதையாக ஆசிரியர் கையில் பரிணமித்துள்ளது. “தனித்திருப்பவனின் அறை“என்ற தலைப்புக்கதை படிப்பவர் மூச்சையே பிடிப்பது போல உள்ளது. சிறப்பான இக்கதை இன்னும் சிறப்பாக முடிக்கப்பட்டிக்கலாம் என்றாலும் நம்மை திணறத்தான் வைக்கிறது.

சாதாரண நிகழ்வுகளுக்கு உயிரோட்டம் சிறுகதைகளில் கிடைக்கும் என்ற உண்மை “பாக்கி“ என்ற கதையில் வெளிப்படுகிறது. ஆசிரியரின் பார்வை பன்னோக்கு கொண்டதாய் உள்ளதால் இது சாத்தியமாகிறது.

லட்சியம், பிரதிக்ஞை என்பதெல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களுக்குத்தான். வசதி வாய்ப்போடு உள்ளவர்களுக்குத்தான் என்று எவன் சொல்லி வைத்தது? அது மன உறுதியும், உலகாயத அனுபவங்களும் சார்ந்த விஷயமாக ஏன் அமையக் கூடாது? என்ற கேள்வியுடன் நாகசாமியின் மன உறுதியைச் சொல்லும் கதையும் ஒரு சிறந்த கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.

மொத்தத்தில் உஷாதீபனின் கதைகளில் காணப்படும் பாத்திரங்கள் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள்தாம்! ஆனால் அவர்களை நம்மிடையில் சிறந்த மனிதர்களாக உலவ விட்டிருக்கும் திறமை ஆசிரியரைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் சொல்லும் “பாசிடிவ் அவுட்லுக்“ இவரது கதைகளில் முற்றிலும் தெரிகிறது. படித்தவுமடன் மன நிறைவையும் ஏற்படுத்துகிறது. தமிழ்ச் சிறுகதைகளுக்கு இத்தொகுப்பு ஒரு சிறந்த சேர்மானம்.

===================

Series Navigationகொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
author

நரசய்யா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *