எதிர் வினை!

காத்தமுத்துப் பேத்திக்குக்

காதுவரை வாய்

காட்டுக் கூச்சல் போடும்

காது கிழியப் பேசும்

கட்டிக்கப் போகிறவனுக்குக்

கஷ்டம்தான் என்பர்

சொந்தங்களுக்கு இடையேயான

உரையாடல்களிலும் கூட

சந்தம் வைத்துக் கத்தும்

சந்தைக்கடை தோற்கும்

ஒன்றுமில்லா விடயத்திலும்

கத்திப் பேச

அதற்குக்

காரணங்கள் இருக்கும்!

பழநியப்பன் பேரனோ

பரம சாது

சொற்ப டெஸிபலுக்கே

சுருங்கிப் போகும் முகம்

கண்களைப் பொத்திக்கொண்டு

காது மடல்களைக்

கைகளால் மடிப்பான்

ஒலி கலந்த வார்த்தைகளைப்

பல சமயங்களில்

புன்னகையோ தலையசைப்போ

கொண்டு எதிர்கொள்வான்

நான்கு பேர்கள் இருக்கும்போது

மூன்று குரல்களோடும்

பெரும்பாலும் இவன்

மவுனம்கொண்டே பேசுவான்!

நியாய விலைக் கடையில்

அநியாயக் கூட்டம்

சர்க்கரை வாங்கி முடிக்கும்போது

இலவசமாக

இரவையும் சேர்த்துத் தந்தனர்

நிலவு

நலிந்து வளைந்து

பிறையெனப் பெயர் கொண்டு

மேகம் போர்த்தி

வடிகட்டிய வெளிச்சத்தை மட்டும்

வீதியில் ஊற்றி இருந்தது

நசுவுனி ஆற்றுப்

பாலத்தின் மேல் செல்லுகையில்

காய்ந்த ஆற்று மணலிலிருந்து

காற்றில் வந்த சலசலப்பு

நிச்சயம்

நீர்வரத்தினா லல்ல

மதகுப் பக்கம்

பழநியப்பன் பேரன் மடியில்

காத்தமுத்துப் பேச்சி

சாய்ந்திருந்தது ஒன்றும் காரியமல்ல

அவன் பேசிக்கொண்டிருக்க

அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்!

 

-Sabeer.abuShahruk

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32அக்னிப்பிரவேசம்- 5