எனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)


‘கணையாழி’ தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன் அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம் இல்லாத இதழ்களை வேண்டி அவரைச் சந்தித்தேன். கைவசம் இருந்த முன் இதழ்களைத் தந்து, விட்டுப்போனவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அப்படியே பிறகு வாங்கியும் தந்த அவரது அன்பையும், கரிசனத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.

அன்று அவர் அதிகம் பிபலமாகி இருக்கவில்லை. அவரது இயற் பெயரான ஜ.தியாகராஜன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். கலைமகள் நடத்திய ‘வண்ணச் சிறுகதை’ப் போட்டி’யில் அவரது ‘மஞ்சள் கயிறு’ என்ற கதை முதற் பரிசு பெற்ற பிறகுதான் அவர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தார். பிறகு தான் ‘அசோகமித்திரன்’ என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

கணையாழி இதழ்களுக்காகாக அவரைச் சந்தித்த பிறகு, சென்னை சென்ற போதெல்லாம் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தாமோதர ரெட்டிதெருவில் இருந்த அவரது வீட்டுக்குச் சென்று பலமுறை சந்தித்திருக்கிறேன்.

1967ல் திருச்சிக்கு, வானொலி நிலையத்தின் ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’ பதவிக்கான தேர்வு ஒன்றிற்காக நான் சென்றிருந்தபோது அதே தேர்வுக்கு அசோமித்திரனும் வந்திருந்தார். அப்போது அவர் எங்கும் வேலையில் இல்லை. “இது வெறும் கண்துடைப்பு! முன்பே ஆளைத் தேரந்து வைத்துக்கொண்டு நம்மை அழைத்திருக் கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை. வீணாக செலவு செய்து கொண்டு வந்தது தான் மிச்சம்” என்று விரக்தியோடு பேசினார். முடிவு அவர் சொன்னபடியேதான் ஆயிற்று. வானொலியில் முன்பே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்குத்தான் அந்த வேலை கிடைத்தது,

கஸ்தூரிரங்கன் சென்னைக்குத் திரும்பி, கணையாழி பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்ட பின், அசோகமித்திரன் அதிலிருந்து விலகிக்கொண்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு மேலாக கணையாழியின் வளர்ச்சிக்கு பலன் கருதாமல் உழைத்தவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத ஆதங்கத்தில் அவர் விலகியதாகப் பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு அவர் கணையாழியில் எழுதவுமில்லை. தொடர்பும் இல்லை. தன்னைப் புறக்கணிப்பதாக அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது என்றார்கள். எனக்கு அது பற்றி அப்போது அதிகம் தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் கணையாழி தொடங்கி முப்பது ஆண்டுகள் 1995ல் ஆனதை ஒட்டி, கணையாழியின் கடந்த காலங்களை நினைவு படுத்தும் வகையில் ஒரு தொடர் எழுதுமாறு திரு.கி.க அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 19995 ஜூன் முதல் ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில், முதல் இதழ் முதல் மாதம் ஒரு இதழாக அதன் வளர்ச்சியை எழுதி வந்தேன். அத்தொடரில் அசோகமித்திரன் படைப்புகளை அவ்வப்போது குறிப்பிட்டும் அவரது பொறுப்பில் சென்னையிலிருந்து வெளியானது பற்றிக் குறிப்பிட்டும் வந்திருக்கிறேன். ஆனால் யாரோ அவரிடம் அத்தொடரில் அவரை இருட்டிப்பு செய்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். முன்பே வருத்தம் இருந்த நிலையில் கஸ்தூரிரங்கள் அவர்கள் சொல்லித்தான் நான் அவரைக் குறிப்பிடாது எழுதி வருவதாக எண்ணி இருக்கிறார்.

அந்நிலையில், ஒருமுறை அவரை நான் இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில் சந்தித்தபோது ஆர்வமுடன் பேச அணுகிய போது அவர் சுமுகம் காட்டவில்லை. பின்னணி தெரியாமல், “நான் கணையாழியில் எழுதி வரும் தொடரைப் பார்க்கிறீர்களா?” என்று கேட்டதற்கு அவர் அசிரத்தையாய் “பார்த்து என்ன ஆகப் போகிறது? நீங்களும் அப்படித்தான்!” என்றார். பிறகு நான் அவரது அதிருப்தியின் காரணத்தை உணர்ந்து, “நீங்கள் படிக்கவில்லையா? கிடைத்தால் பாருங்கள். உங்களைப்பற்றி பல இதழ்களில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்காமல் யார் சொல்வதையாவது நம்பாதீர்கள்” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் திருப்தியடைந்த மாதிரி அவரது முகத்தோற்றம் இல்லாதது எனக்கு வருத்தத்தை அளித்தது. பிறகு அவருடனான தொடர்பு விட்டுப் போயிற்று. 0

Series Navigationகாலம் கடந்தவைதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.