என் மனைவியின் தாய்க்கு

சு.மு.அகமது

 

முடிவின் ஆரம்பம்

அழுகுரல் விசும்பலுடன்

ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும்

மரணம் என்ற சொல்லுக்கு

அருகிலான பயணமும்

நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும்

சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய்

உயிர்ப்பின் முகவரி தொலைத்து

தொலைப்பில் உழலும் அறிமுகம்

தேசாந்திரியின் அழுக்குப்பையில் கிடக்கும்

கசங்கிய துணிச் சுருளாய்

சவக்குழியில் இறக்கப்பட்டு

சலனமற்ற முகத்தோடு

இறுதி உறக்கம் கலையாத உணர்வுக்கு

கனவுகளற்ற புதிய உலகில்

பகிர்ந்து கொள்ள ஏதும் உளதோ

அமைதியாய் சரியும் மண்ணும்

இருளாய் போகும் உலகமுமாய்

கண்களின் இரு துளி

ஈரமாய் என் கைக்குட்டையில்.

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரிசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53