என் ம‌ண‌ல் குவிய‌ல்…

நான் மணல் குவித்து வைத்திருந்தேன்.
நேற்று அந்த மெரீனா பீச்சில்.
பூநுரைகள்
அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று.

அதைதேடி என்கால்கள் என்னை
அங்கே இழுத்துச்சென்றன.
அது அங்கேயே இருக்குமா?
இல்லை கரைந்திருக்குமா?

வெகு நேரம் வரை தேடினேன்.
அக்கினிக்குஞ்சு ஒன்றை
ஆங்கொரு பொந்திடை வைத்து
தேடியது போல் தேடினேன்.
கடல் என்ன பஞ்சுக்காடா
பற்றிக்கொள்வதற்கு.
மணல் குவித்து வைத்தது மட்டும்
மூளும் என் மனத்தீ தான்.

குமிழிகள் மோதி மோதி தின்றிருக்கலாம்.
உடைந்த கிளஞ்சல்கள்.
கடல் பாசிகள்.
வெறும் நண்டுக்கூடுகள்
கடல் குச்சிகள்.
வரிவரியாய் “டி.ஷர்ட்” போட்டுக்கொண்டு
சின்ன சின்ன சங்குபூச்சிக்கூடுகள்..

அது கடற்கரையின் ஆல்பம்.
அதை புரட்டிக்கொண்டே
என் கால்சுவடுகளால்
கையெழுத்துபோட்டுக்கொண்டே
நடந்தேன்.
நடந்ததும்
குறும்புக்கார சிறுவனாய்
அதை வந்து வந்து அழிக்கும்
பிஞ்சு அலைகள்..

அலைகளில் கூட‌
ஆண் அலை பெண் அலை என்கிறார்களே.
அப்படி யென்றால்
ஆதம் ஏவாளின்
ஆதி கால பிரம்மாண்ட‌ ஈட‌னின்
திர‌வ‌ வ‌டிவ‌மா இது?
அழுது கொண்டே பிற‌ந்த‌க‌ட‌லின்
அழுகையும் ஓய‌வில்லை
உப்புக்க‌ரிக்கும் க‌ண்ணீரும் மாற‌வில்லை.
ஆண் அலைக‌ளும் பெண் அலைக‌ளும்
எத‌ற்கு அழுகின்ற‌ன‌?

ஏதோ ஒரு வ‌ங்காள‌த்திரைப்ப‌ட‌த்தில்
பார்த்தேன்.
அவ‌னைப்பார்த்து
அவ‌ள் அழுதாள்.
க‌ண்ணீர் முட்டிக்கொண்டு
வார்த்தைக‌ளை
ஆழ‌த்தில் புதைத்துக்கொண்டு.
அது முத‌ல் ச‌ந்திப்பு.
அவ‌ர்க‌ள் காத‌ல‌ர்க‌ள்.
அழுவ‌து கூட‌
ர‌க‌சிய‌மாய் சிரிக்கும் இனிப்பின்
மொழிப்பெய‌ர்ப்பா? தெரிய‌வில்லை.

க‌ட‌ல் பூராவுமே
மொத்த‌ம் முக‌ம் காட்டி
அப்ப‌டித்தான் அழுத‌து.
என் ம‌ண‌ல் குவிய‌லை அங்கு
இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

===================================================ருத்ரா

Series Navigationஉட்சுவரின் மௌன நிழல்…மறுபடியும்