எல்லா அப்பாக்களிலும் தெரியும் என் அப்பாவிற்காக !!!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

குமிழ்ந்து தரை விழுந்த
நீர்க் குமிழிப் பாதையின் குறுக்காக
சர சர வெனக் கடந்த போது,
வேகச் சீற்றத்துடன் தலை குத்தி
வழிந்த போது,

சாரல் மறைத்த பார்வையில்
சாலை தெரியாக் குருடியாய்
பயணித்த நொடி
எங்கிருந்தோ வந்து
இதயத்தைக் கீறிச் சென்றது உன்
நினைவுகளின் உயிர் !

குடை தாங்கி நீளும்
உன் கரங்கள் தரும்
பாதுகாப்பின் உயிரலைகள்
காற்றில்
கரைந்துக் கொண்டிருக்கிறது
நினைவுப் படுகையில்.

நனைந்து விழும் கூந்தல்
நீர்ச் சொட்டுகள் ஏந்த
விரைந்து வரும்
உன் மண் வாசத் துண்டுக்காக
ஏங்கித் தவிக்கிறது
என் கூந்தல் மயிர்கள் !

உன் கைலியைத் தூளியாக்கி
விளையாடிய நாட்களில்
நினைவலைகளைப் பத்திரப்படுத்த
வகை தேடுகிறது
நிரந்தரமற்றுக் கடந்து போகும்
எண்ணத் துளிகள்.

நான் இல்லம் சேரும் வரை
வாசற் படியில் படுத்துக் கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !

இருளில் தனித்து நின்ற போதுதான்
தவித்து உணர்கிறேன்
அப்பா நீ இல்லாத வெறுமையை
புழுதி கரைந்த உன் வேர்வை
வாசத்திற் காக நாசி சுழித்த
பொழுதுகள் இன்று திட்டித் தீர்க்கிறது
எனக்கு உள்ளாகவே.

நீ போதித்த கதைகள்
எழுத்தின் சிகரம் நோக்கிப்
பயணப்படும் என் வாழ்க்கை
இப்போது புரிகிறேன் உன்னை,
எழுத்தின் விதையை,
எனக்குள் ஊன்றி சென்றவன் நீ
தர்க்கிப்பிலும் கண்டிப்பிலும்.

என் ஆழ்மன ஆண்மனச்
சிநேகிதன் நீ !
என்னைக் கையில் ஏந்தி
உச்சி முகர்ந்த முதல்
ஆடவன் நீ
ஆண்கள் இல்லாத உலகம் வெறுமைதான்
கயவர்கள் என்று புறந்தள்ள இயலா
இலகு மனம் கொண்ட நட்புறவுகள்.

தரை ஓடும் நீரோடு
உன் பெயர் எழுதிப் பார்க்கிறேன்
முன்பொரு மழைப் பொழுதில்
மழைவிழாக் குடையாக
உன் உடல் குறுகிக் காத்த காட்சி
மழை ஈரத்தில் கண்கள் கரைந்து
காணாமல் போகிறது.

ஒவ்வொரு முகத்துளிகளிலும்
தாயுமானவ னாக ஒளிந்து நிற்கும்
என் தகப்பனே !
உன்னைத் தேடுகிறேன்
இப்பிரபஞ்சப் பெருவெளியில்
ஒவ்வொரு தகப்பனுக் குள்ளும்
ஒளிர்ந்து கொண்டிருக்கும்
ஒரு தாயுமானவனை.

Series Navigation