எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம்


(எஸ் சுவாமிநாதன்)

அர்த்தம் என்பதை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது என்பது மொழியியலும், சமூக வரலாறும், அன்றாட வழக்காடலும் இணைந்து நிற்கும் ஒரு களத்தில் எழுகிற கேள்வி. இதற்கான பதில் சுலபமானதோ எளிய ஸூத்திரங்களுக்குள் அடங்குவதோ அல்லது இதற்கு இது தான் அர்த்தம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதிலோ இல்லை. அர்த்தத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது எனபது ஒரு சமூகததின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதும் ஆகும்.

ஆங்கிலத்தில் புகழ் பெற்ற விமர்சகர்கள் ஐ ஏ ரிச்சர்ட்சும் அக்டனும் இணைந்து “அர்த்தத்தின் அர்த்தம்” என்று ஒரு ஆய்வு எழுதியுள்ளனர். இந்த ஆய்வுஅடிப்படையான சில கேள்விகளை எழுப்பியது. இந்தப் புத்தகத்தின் உபதலைப்பு சிந்தனை மீது மொழி ஏற்படுத்தும் தாக்கமும் குறியீட்டியலின் அறிவியலும் என்பதாகும். “The Meaning of Meaning: A Study of the Influence of Language upon Thought and of the Science of symbolism” எனபது முழுத் தலைப்பு.

ரிச்சர்டிசின் கருத்துப் படி எந்த உரையாடலும் அர்த்தத்தை முழுமையாய் பரிமாறிக் கொள்வதில்லை – உரையாடலின் போக்கில் அர்த்தம் இழந்து போகிறது. இந்த இழப்பு ஒலிக்குறிப்புகளின் பரிமாற்றத்தில் நிகழும் இழப்பு என்பதைக் காட்டிலும் மொழியின் இயல்பே அர்த்தத்தைக் கட்டமைபப்தில் இழப்பின்மையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்று கருதினார். இந்தக் கருதுகோள் தான் ரிச்சர்ட்சின் இந்த ஆக்கத்தை மொழியியல் ஆய்வாக மட்டுமின்றி தத்துவ ஆய்வாகவும் விரித்தது. தமிழில் மொழியியலின் இந்த தத்துவ எல்லைகளைத் தொட்டவர் முதலும் முடிவுமாக தொல்காப்பியர் என்று சொல்ல வேண்டும். இது ஆச்சரியமான உண்மை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. ” என்ற மிகச் சுருக்கமான ஒரு வரியில் அவர் சொல்லிச் செல்லும் கருத்து மிக ஆழமானது,

சொல்லுக்குப் பொருள் என்பது ஒரு கற்பிதம். ஒரு சமூக ஏற்பாடு. மலை என்ற ஒலிக்குறிப்பை மலை என்று எழுதுவதும், இந்த ஒலிக் குறிப்பினால் உயர்ந்த கல் அல்லது மண்ணால் ஆன இயற்கை உருவத்தை நாம் குறிப்போம் என ஏற்பட்ட சமுதாய ஒப்பந்தம் தான் மொழியின் எல்லா வெளிப்பாடுகளும்.

அர்த்தம் என்பதே பல விவாதத்தையும் அர்த்தத்தின் அர்த்தத்தையும் தூண்டும் ஒரு சொல். சம்ஸ்கிருத அர்த்தமும் சரி, தமிழின் பொருளும் சரி ஒரே விதமாய்ப் பொருள் தருகின்றன. இரண்டு மொழியிலுமே இந்தச் சொற்களுக்கு “செல்வம்” என்பதும் பொருளாகும் என்பதை உணர்ந்தால் சொல்லுக்கு அதன் நியாயத்தை வழங்கி அதன் இருப்பிற்கான பெருக்கத்தை அளிப்பது அர்த்தம் தான் என்பது ஆழமான பெறுதல்.

எஸ் சுவாமிநாதன், வா மூர்த்தி, பாரவி மூவருமே கடந்த முன்று சதாப்தங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வருபவர்கள். எஸ் சுவாமிநாதன். திருச்சியிலும், சென்னையிலும் நாடக இயக்கத்திலும், வாசகர் வட்ட இயக்கத்திலும் பங்காற்றியவர். வீதி நாடக முயற்சிகளிலும், பரிட்சா நாடக குழுவிலும் பங்கேற்றவர். பாரவி வித்தியாசமான குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதியவர். வா மூர்த்தி நாவல், சிறுகதை கவிதைகளை எழுதியவர். மூவரும் இணைந்து ஒரு பெரும் விவாதத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியை அளித்திருக்கிறார்கள் எனலாம்.

வா மூர்த்தியின் கட்டுரை இலக்கியப் பிரதியின் அர்த்தத்தில் மையம் கொள்கிறது. சொல்லுக்கு அர்த்தம் என்ற குறு தளத்திலிருந்து விரிந்து சொற்களின் சேர்ர்க்கையான இலக்கியப் பிரதியின் அர்த்தத்தைப் பேசுகிறது, இந்த விவாதத்தில் நுழைந்தால் புரிபடாமை என்பது இயல்பாகவே விவாதத்திற்கு உள்ளாகிறது. நகுலன், மௌனி, லா ச ராமாமிர்தம், பிரம்ம ராஜன் போன்ற பல முக்கியப் படைப்பாளிகளின் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டே இது தான்- இவர்கள் எழுதியது புரியவில்லை. சங்க இலக்கியம் புரியவில்லை என்று சொல்பவர்கள் யாரும் சங்க இலக்கியத்தின் மீதான குற்றச்சாட்டாக இந்தப புரியாமை பற்றிய ஆதங்கத்தினை முன்வைக்க வில்லை. ஆனால் சமகால இலக்கியம் என்பதால் அது எனக்கு என் குறுகிய மொழிப் பயிற்சியை மட்டுமே முன்னிறுத்தி எல்லா எழுத்தும் எனக்குப் புரியத்தான் வேண்டும் என்று புகார் செய்கிறார்கள். பார்க்கப் போனால் மேலே சொல்லப் பட்ட அனைவருமே மொழியின் அர்த்தம் பற்றிய ஆழமான விசாரத்தை தம் படைப்புகள் வழியாக முன்வைத்தவர்கள்.

“அர்த்தம் உறையும் தளம் எனபது களத்தை ஒட்டியது என்றும் அர்த்தம் இயங்கும் தளம் எனபது பிரதியை ஒட்டியது என்றும் கொள்வது” பற்றிப் பேசிச் செல்கிறார் வா மூர்த்தி. “உறையும் தளம் முக்கியமா , இயங்குகும் தளம் முக்கியமா என்ற கேள்வியை எழுப்பிய வா மூர்த்தி ஆங்கிலத்தில் static , dynamic என்று வேறுபடுத்திக் காட்டுகிறார், தமிழில் மட்டுமே இதனைச் சொன்னால் சிலர் இதன் பொருளைத் தவறவிட்டுவிடக் கூடும் என்று சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். தம்ழில் இந்த விதமான் கனகதியான விவாதங்களை படித்துப் புரிந்து கொள்கிற சிலரும் கூட ஆங்கிலத் துணை நாடுவோர் என எண்ணுவது வருத்தம் அளிப்பது தான்.

வா மூர்த்தி விட்ட இடத்திலிருந்து பாரவி தொடர்கிறார். இதை இப்படிச் சொல்கிறார் : ” இருத்தலின் பொருளுணராமை அர்த்தப் படாமை இயங்குதல் எப்படி? இயங்குதளம் எது? உணர்விலியாக நான் மரத்துப் போயிருக்கிறேன். தேக்கமுற்றுவிட்டேன் . எந்த நெருப்பும் என்னைச் சுடவில்லை.” சொற்தொகுப்பின் அர்த்தம் தேடும் முயற்சியைப் பின்தள்ளி தேக்கமுற்றுவிட்டேன், என்பதை சமூகத் தேக்கமாகவும் கொள்ளலாம்.கொள்ள வேண்டும். இதை சிந்தனை மரபின் விழ்ச்சி என்று அடையாளப் படுத்துகிறார் பாரவி. இது குறித்து அவர் மேலும் சொல்வது கவனத்திற்குரியது. “பொருள் இயங்க்குகலம் மரபு சார்ந்து இருப்பதில்லை. இயக்கவியலின் பாற்பட்ட பொருள் உணர்தல், அர்த்தம் இயங்கு தளமாக உயிர்நிலையின் உறக்கம் உலுக்கப் பட்டு உருவாக்கம் பெற மரபு சிதைகிறது. கேள்விகள் பெருக்கெடுக்கின்றன. மரபுக் குப்பைகள் அடித்துச் செல்லப் படுகின்றன .” என்று கூறுகிறார்.

மரபு பற்றிய மயக்கம் நாம் அனைவருக்குமே உண்டு. தி ஜானகிராமன் ஒரு முறை கூறினார். நமக்கு மரபு எது , சம்பிரதாயம் எது என்பதில் குழப்பம் இருக்கிறது என்பார் அவர். ஒரு கலைஞன் மரபை செழுமைப் படுத்துவான், சம்பிரதாயத்தைக் கேள்விக்குள்ளக்குவான். பாமரர்கள் சம்பிரதாயத்தைப பிடித்துத் தொங்கிக் கொண்டு மரபின் செழுமையைக் கை கழுவி விடுவார்கள்.

எஸ் சுவாமிநாதன் முழுக்க சமூக தளத்தில் அர்த்தம் பற்றிப் பேசுகிறார், . அதனாலேயே மிகவும் சினம் கொண்ட கட்டுரையாக அது உருவாகியுள்ளது. அர்த்தம் இழக்க வைக்கப்பட்டு தனித்து நின்று தமிழ், பொருள் தேடுவதே அர்த்தம் நிறைந்தது என்ற சமூக ஒழுக்கத்துள் உறைந்து போய் பொருளுக்காக ஏங்கி நிற்கும் ஒரு கையறு தன்மையை வெகுண்டு எழும் உரத்த குரலில் சொல்லிச் செல்கிறது.

*******************
ஒரு சொல்லின் பொருள் எப்படி சமுகத்தால் சுவீகரிக்கப் பட்டபின்பு மாறுதல் பெறுகிறது என்பதே பெரும் ஆய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம். நேற்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. அதன் பெயர் “பறையா” . இந்தச் சொல்லும் தமிழ்ச் சொல் தான். இதன் அர்த்தம் மாறுபாடுகளுக்கு உட்பட்டு எங்கெங்கோ பயணித்து விட்டது. இன்று அது இழி சொல்லாக தமிழ் நாட்டில் கருதப் படுகிறது. ஆனால் தன் பெயரை பெருமையுடன் “ராமசாமிப் பறையனார்” என்று அழைத்துக் கொள்கிறார். இன்று இந்தச் சொல் தமிழ் மட்டுமல்லாமல் எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் தீண்டத் தகாதவர்களின் போதுப பெயராக மாறி விட்டது. வெறுமே untouchable என்ற சொல்லைக் காட்டிலும் வெகுவான அர்த்தமுள்ளதாக “பறையா” உருவாகிவிட்டது.

ரஷ்ய மொழியின் Cosmonaut , பிரென்ச் மொழியின் rendezvous , சமஸ்கிருதத்தின் பண்டிட், குரு எல்லா மொழிகளிலும் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப் படிகிறது. ஆனால் தமிழ் மொழியிலிருந்து நாம் உலகிற்கு அளித்த சொற்கள்.பறையா, மிளகுத்தண்ணி சூப், கட்டுமரம்.

நாம் ஆய்வு செய்ய வேண்டிய அர்த்தம் இது தான்.
——————

Series Navigationபுத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு