எஸ்.வைத்தீஸ்வரனின் ‘திசைகாட்டி’

This entry is part 8 of 48 in the series 11 டிசம்பர் 2011

‘அறுபதுகளில் ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதைப் பிரவேசம் என் போன்ற மரபுக்கவிதை ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. புதுக்கவிதை புரியவில்லை என்ற குறை பலருக்கும். அப்போது ‘எழுத்து’வில் வந்த ‘உரிப்பு’ என்ற ஓரு புதுக்கவிதை என்னை ஈர்த்தது.

“இந்த நகரத்துச்சுவர்கள்
நகராத பாம்புகள்
அடிக்கடி
வால்போஸ்டர் தோல்
வளர்ந்து தடித்துவிட
நள்ளிரவில்
அவசரமாய் சட்டையுரித்துப்
புதுத்தோலில் விடிந்து
பளபளக்கும்
பட்டணத்துப் பாம்புகள்
இந்த நகரத்துச்சுவர்கள்.”

– எழுதியவர் பெயரைப்பார்த்தேன். எஸ்.வைத்தீஸ்வரன் என்றிருந்தது. புதுக்கவிதை மேல் இருந்த எரிச்சல் மாறி இதமளித்தது இந்தக்கவிதை. அதற்குப் பிறகு அவரது கவிதைகளைத் தேடிப் படித்தேன்.அவரது ‘கிணற்றில் விழுந்த நிலவு’ கவிதை, படித்துப் பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் நெஞ்சில் அசை போடச் செய்கிறது. அந்தக் காலகட்டத்தில் நிறைய அவரது கவிதைகள் பிரசுரமாகியின. அவர் ஓரு சிறந்த ஓவியர் என்றும் அறிந்தேன். மிகச் சிறந்த கவிஞராகவே அறியப்பட்ட அவர் ஒரு நல்ல உரைநடைக்காரர் என்பதை தாதமாகவே ‘யுகமாயினி’ பத்திரிகை மூலம் அறிந்தேன். அதில் அவர் தொடர்ந்து ‘பத்தி’ எழுத்தாளராக பலது பற்றியும் தான் கண்டது, கேட்டது, படித்தது, பார்த்த படங்கள், மேற்கண்ட பயணங்கள் என ஒரு கலவையான சித்திரங்களை சலிப்புத் தராத, வாசிப்புச்சுகம் தருகிற படைப்புகளைத் தந்து வந்தார். இப்போது அந்த ‘பத்தி’ எழுத்துக்கள் ‘திசைகாட்டி’ என்ற தலைப்பில் ‘நிவேதிதா புத்தகப் பூங்கா’வினால் நூலாக வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்தேன்.

அணிந்துரையில் இந்திராபார்த்தசாரதி அவர்கள் கூறியுள்ளபடி, ‘இத்தொகுப்பில் கட்டுரை இருக்கிறது. கவிதை இருக்கிறது. கதை இருக்கிறது. தன்வயப்பார்வையாக விமர்சனம் இருக்கிறது.’ இவை அவரது வாழ்க்கை அனுவங்களின் பதிவுகள் மட்டுமல்ல – இந்த தலைமுறையினருக்கு கடந்தகாலத்தின் ‘கரைந்துபோன சமுதாயத்தின் பொற்கணங்களைச் சொல்லும் வரலாறு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் எழுதி எழுதி மெருகேறிய கையின் திகட்டாத அரிய ஆவணம் இத்தொகுப்பு. இடையிடையே அவரது ரசமான பழைய கவிதைகளும் மீள் வாசிப்புக்குக் கிடைப்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பம்சம்.

‘உள் பயணம்’ என்கிற கட்டுரை ‘காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்று இனி சொல்ல முடியாத – நரகத்தில் வாழ்வதற்கு முன் அனுபவமாய் விளங்கும் இன்றைய நமது நகரத்துச் சூழலை ஆதங்கத்தோடு கூறுகிறது. ‘மரணம் ஒரு கற்பிதம்’ கட்டுரை, மரணத்தின் வெவ்வேறு சாயல்களை – மரணம் பலரது பலவீனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் நிஜத்தைச் சொல்கிறது. இதன் இறுதியில் வரும் அவரது கவிதை ஒன்று மரணத்தின் யதார்த்தத்தை இயற்கையின் நிகழ்வொன்றை மென்குரலில் சொல்கிறது:

“மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;
சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு”.

பல விருதுகளைப் பெற்ற ‘Slum dog millionair என்ற திரைப்படத்தின் பாதிப்பினால் எழுந்த மனித துக்கத்தை, ஓரு கலைஞனில் மன நெகிழ்ச்சியை வேதனையோடு சொல்கிறது. ‘வறுமை நமக்கோர் பெருமை’ என்கிற திரை விமர்சனம். இதனையொட்டி எட்டு ஆண்டுகளுக்கு முன் தான் எழுதிய – இந்திய வறுமையைப் படம் பிடித்து விருதுகள் பெற்ற ஒரு கலைஞனின் அவஸ்தையைப் பற்றிய – கவிதை ஒன்றையும் நம் பார்வைக்காகக் கொடுத்திருக்கிறார். மற்றும் தான் ரசித்த – Daoud Hari என்பவர் எழுதிய ‘The Translator’ நூலின் சுவாரஸ்யமான விமர்சனமும் கவிஞரின் பன்முக ரசனையைச் சொல்வதாக உள்ளது.

மேலும் கேதார்நாத் பயணத்தின் சிலிர்ப்பான அனுபவத்தைச் சொல்லும், ‘ ஒரு குத்துப் புல்’, இளமையில் மரத்தின் மீது கொண்டிருந்த நேசத்தைச் சொல்லும் ‘மரத்தில் வாழ்ந்தவன்’, “Shasank redumption’ என்ற ஆங்கிலப்படத்தின் ஒரு சின்ன கதாபாத்திரத்தின் வரிகளால் தூண்டப்பட்ட கற்பனைச் சித்தரிப்பான ‘அர்த்தமற்ற வார்த்தை’, வள்ளலாரின் ‘வானத்தின்மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி’ என்ற கவிதை வரிகள் தரும் ஆன்மீகச்சிந்தனைகள் பற்றிய அர்த்தமிக்க விளக்கம் சொல்லும் ‘காட்சிப்பிழைதானோ?’. குறும்பாக்களான ‘ஹூக்கள்’ தரும் இலக்கிய இன்பம் பற்றிப்பேசும் ‘மூன்று அடிகள்’. ‘வ.ரா நினைவுகள்’, Umberto Eco இத்தாலிய எழுத்தாளரின் கட்டுரை காட்டும் Bongoநாட்டு மக்களின் ‘ஒரு வினோதமான கலாசாரம்’, இந்தப் பூமியையும் இயற்கையையும் வாழ்க்கையையும் புலன்கள் நமக்கு எந்த அளவுக்கு அவசியம் கேள்விக்கு விடை தரும் ‘திசைகாட்டி’ – என எத்தனை விதமான ரசனைப் பதிவுகள்! இவை ‘இது வித்தியாசமான இலக்கிய வரவு’தான் என்பதை நமக்கு உணர்த்தும். கட்டுரைகளினூடே வாசிப்பவரை மென் முறுவல் பூக்க வைக்கிற மொழி நடை பரவசமூட்டுவன.

தொகுப்பு முழுவதையும் படித்து முடித்ததும், பதிப்பாளர் தன் உரையில் நூல் ஆசிரியர் பற்றிச் சொல்லி உள்ள ‘சுகமான எழுத்துக்காரர்’ என்ற ரசிப்பை நாமும் ஆமோதிக்கவே செய்வோம். 0

நன்றி : கணையாழி

Series Navigationகெடுவான் கேடு நினைப்பான்வெந்நீர் ஒத்தடம் – இரண்டாம் பாகம்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Comments

  1. Avatar
    deepaprakasan says:

    i had the pleasure of reading the book under review..it is true that it is unique in the sense that it is a collection of fiction, essay, poetry, cricism, autobiograhy, biography.it is a veritable magazine. we do not have such a collection by one author.it is good that sri aasanoor ve sabanayakam who belongs to that period has written such a neat appreciation which is rare among tamil speaking good world!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *