ஒரு கொத்துப் புல்

ஒரு கொத்துப் புல்
This entry is part 14 of 43 in the series 29 மே 2011

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில்  யாத்ரீகர்களுக்காக    நவீன வசதிகளுடன்  அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில்    நான்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும்    மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்……

கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட்  என்ற    ஸ்தலத்திலிருந்து  14 கிலோ  மீட்டர் குட்டைக் குதிரையின் மேல்    ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந்   தது. அந்த அனுபவ அவஸ்தையில்  உடம்பும் மனசும்   ஒரு வித்யா   சமான    வெளியில்   பரபரத்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு  குதிரை சவாரியை நினைத்  துக்  கொண்ட போது  திடீர் திடீரென்று  சிரிப்பு  வந்தது.. முன்னும்   பின்னுமாகவும்   பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கி   கொண்டு  வந்த அந்த வித்யாசமான  பயணம்  எங்களுக்குள்   ஒரு குழந்தையின்   சந்தோஷத்தை  மலர்த்திக் கொண்டிருந்தது…

” இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாமா   இருக்கு அப்பா! ”  என்றாள்  மகள்..

‘ ஆமாம்…குதிரைகளுக்குக் கூட ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே    ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட     ஒரு வாழ்க்கை  இருக்குன்னு    நெனைக்கிறேன்…ஒவ்வொன்றும்    அது பொறக்கர இடத்தை   பொறுத்துத் தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவொ அமைகி   றது…..”” என்றேன்…

“” நினைத்துக் கொண்டால் நம்ப முடியாமல் இருக்கிறது…    பார்ப்பதற்கு  குட்டையாக பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற    குதிரை  நம்ப பாரத்தை அனாயாசமாக தூக்கிக் கொண்டு  கல்லும்    கரடும் வழுக்கலுமாக இருக்கிற மேட்டுப் பாதையில்  ஒரு இடத்தில்    கூட   கால் இடறாமல்  ஒரு பொறுப்புள்ள சிநேகிதன்  போல்    உச்சி வரை ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே…    அந்த ஜீவனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட வேண்டும் ! ”    என்றாள் மகள் உணர்ச்சி வசப்பட்டு..

“” நிச்சயமாக “” என்றேன்…

எங்களுக்கு எதிரே  ஒரு கிழவர் தனியாக உட்கார்ந்து கொண்டு   டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்….அவர் கூட வந்தவர்கள்  பக்கத்தில்   எங்காவது இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்…

திடீரென்று   அந்தக் கிழவர்   நெஞ்சைப் பிடித்துக் கொண்டு   மூச்சு விட முடியாமல் வாயை அகலமாக திறந்து கொண்டு ஏதோ   ஒரு விதமாக குரல் எழுப்பினார்.. நான் பதறிப் போய் எழுந்து    நின்றேன்.. அங்கே சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த பணியாள்   அவர் அவஸ்தைப் படுவதைக் கண்டவுடன் ஓடி வந்து தாங்கிப்   பிடித்தான் .. கூட இருந்த இன்னொரு ஆளிடம் ஏதோ ஹிந்தியில்   கத்தினான்..அந்தப் பையன் உடனே எங்கோ வெளியே ஓடினான்..

ஐந்து நிமிஷத்துக்குள் ஒரு டாக்டர் கையில் மருத்துவ சாதனங்   களுடன்  முதல் உதவிக்கு ஓடிவந்தார்….நாடித்துடிப்பையும் இதயத்   தையும் சோதனை செய்து விட்டு  கிழவரின் நரம்பில் ஊசி போட்டார்..      அவர் மூக்கில்  ஒரு ப்ளாஸ்டிக்  மூடியை பொறுத்தி அடியில்   இணைத்திருந்த குழாய் மூலம்  கொண்டு வந்திருந்த   சிறிய ஆக்ஸிஜன்  சாதனத்தை இணைத்தார்..

இப்போது கிழவர் மெதுவாக சகஜ நிலைமைக்கு திரும்பிக்     கொண்டிருந்தார்

அப்போது தான்  அந்தக் கிழவரின் கூட வந்திருந்த அவருடைய   வயதான மனைவி அங்கே வந்து சேர்ந்தாள்..அவள் அற்பசங்கைக்கு   போயிருந்தாள் என்று தெரிந்தது.. .தன் கணவனின் நிலைமையை   கண்ட போது அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.. உதடு நடுங்கி    கண்ணீர் தளும்பியது.. அவள் டாக்டரை கை கூப்பி நன்றி தெரிவித்துக்   கொண்டாள்.. அவளுக்கு  பாஷை  தெரியவில்லை..

“”இந்த வயதில் இவ்வளவு  கஷ்டமான பயணம் பண்ணி  இந்த உச்சிக்கு   வரணுமா?.. ” என்று  வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள் என் மனைவி..

“” ஏன் எனக்கும் அந்தக் கிழவர் வயது தான் ..எனக்கும் தான்..    அது நேரலாம்…”  என்றேன்..    மனைவி என் வாயை பொத்தினாள்

கிழவருக்கு வைத்தியம் செய்து முடித்து விட்டு  அந்த   டாக்டர்  எங்கள் மேஜைக்க்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்   தார்… ” நான்  தேங்க் யூ  டாக்டர் என்றேன்…

அவர் என்னைப் பார்த்து விட்டு சற்று நின்றார்..” அவருக்கு வேறெ..   பிரச்னையில்லை. இந்த உயரத்துலே ப்ராணவாயு அடர்த்தி குறைவா   இருக்கும்.. அதனாலெ சில பேருக்கு இங்கே ஆக்ஸிஜன் போதாம   மூச்சு முட்டும் ..அதுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கிறது    மிகவும் அவசியம்..’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்..

அதே தொடர்ச்சியில் ” ஸார்.. நீங்களும் வயசானவரா இருக்கீங்க..   எதுக்கும் உங்களையும் சோதனை பண்ணி பாத்துடறேன்..’ என்றார்..

சோதனை செய்யும் போது மனைவி கவலையுடன்    அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்   அவள் கவலையை ஊர்ஜிதம் செய்வது போல்..டாக்டர்  ” அடடா..   உங்களுக்கு ஆஸ்த்துமா உண்டா..?  உங்க நுரையீரல்லெ காத்து   சராசரி அளவுக்கும் கம்மியா தான் இப்போ போயிக்கிட்டிருக்கு..   மூச்சுத் திணறல் எப்ப வேணா வரலாம்.. என்னுடைய மருத்துவ அறை   இதே வளாகத்துலே தான் இருக்கு .. உடனே அங்கே வந்துடுங்க..   You need Oxygen  inhalation at least for  two or three hours   plus an injection”

அன்று இரவு முழுவதும் நான் மருத்துவக் கட்டிலில்  மூக்கில்    ப்ளஸ்டிக் முகமூடியை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்    தேன்.. என் மனைவியும் மகளும் வெது வெதுப்பாக்கப் பட்ட வேறு    அறையில் கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்…           எனக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டிலில்  அதே கிழவர்    ஆயாசமாக படுத்துக் கொண்டு ப்ளாஸ்டிக் மூடி வழியாக என்னைப்    பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்…

எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. ஊசி மருந்தின் வேலையாக   இருக்கலாம்..இருதயம் லப் டப் என்று  குதிரை ஓட்டிக் கொண்டிருந்தது..   எனக்கு எங்களை ஏற்றிக்கொண்டு வந்த குதிரையின் ஞாபகம் வந்தது.   அந்த மாதிரி பிராணிகள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும் ..   மனிதன் என்கிற பாவ மூட்டைகளை  ஓயாமல் உச்சியிலிருக்கும்   சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாக கொண்டு  மடிகின்ற   அந்தப் பிறவிகள்  மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள் என்று   தோன்றியது.

அதற்கு தன் முதுகின் மேலுள்ள பாரத்தைப் பற்றிய ஒரு தெளிவான   உணர்வு இருந்தது…எந்த பாரத்துக்கு  எவ்வளவு பலத்தையும் வேகத்   தையும் உபயோகப் படுத்த வேண்டுமென்ற பிரக்ஞை அதற்குள் இயல்   பாக அமைந்திருக்கிறது..     அதன்  செயல் பாட்டை கவனித்துப் பார்க்கும் போது  நமக்கு நம்    வாழ்க்கையை அதன் பிரச்னைகளை சமாளிக்கும்  தெளிவு கிடைக்க   ஏதோ ஒரு வித சாத்தியம் இருக்கும் என்று நினைத்தேன் ..

கௌரிகுண்டிலிருந்து 7 கிலொமீட்டர் ஏறியவுடன்   பயணத்தை  நிறுத்தி  சிற்றுண்டிக்காக  சிறிது நேரம் எங்களை   குதிரைக் காரன் இறக்கி விட்டான்.. பாரம் இறங்கியதும் குதிரை   இறுக்கம் தளர்ந்து விடுதலையாக முதுகை சிலிர்த்துக் கொண்டு   இரண்டு தரம் கனைத்துக் கொண்டது..விடுதலையாக மூச்சு   விட்டது..

பிறகு    குதிரைக்காரனின் தோல் பையை  செல்லமாக இழுத்தது..   ”இரு.. இரு..’ என்று  பையன் தோள்பையை இறக்கினான். அதிலிருந்து   வெடிகுண்டுகளைப் போல் இருந்த மாவு  உருண்டைகளை எடுத்தான்.    பாறை மேல்   வைத்து கல்லால் உடைத்து சின்னக் கட்டிகளாக்கி   னான்..கொஞ்சம்   தண்ணீரை எடுத்து அதில் தெளித்தான்..பிறகு    கட்டிகளை எடுத்து   குதிரைக்கு ஒரு வாய் அவனுக்கு ஒரு வாய் என்று   உண்ண ஆரம்பித்தான்..

அந்த சத்து மாவு  கொள் கோதுமை தினைப்பயிறு  முட்டைக்கரு என்று   பலதும் கலந்து செய்யப் பட்டதென்று பின்னால் தெரிந்து கொண்டேன்…    குதிரைக்கார பைய்யன்  மற்றபடி எந்த சிற்றுண்டியும் சாப்பிட   வில்லை.. எனக்கு  வியப்பாக இருந்தது.. ஆனால் அதில் வியப்பதற்கு   ஒன்றுமில்லை..குதிரையின் கூடவே  குதிரையைப் போலவே மலை ஏறி   இறங்கும் அவனுக்கும் அந்தப் பிராணிக்கும் ஒரே விதமான ஊட்டம் தான்   தேவையாய் இருந்தது.. போலும் ..அல்லது  சகபிராணியையும் தன்னைப்    போல் பாவிக்கிரானோ என்னவோ!

டாக்டர் வரும் சத்தம் கேட்டது..நான் விழித்துக் கொண்டேன்..இல்லை   என் நினைவுகளிலிருந்து மீண்டேன்  என்று சொல்லலாம்..டாக்டர் என்    மூக்குக் குழாயை எடுத்து விட்டு  என் இதயத்தை சோதித்து விட்டு..   ”இப்போது நீங்கள் தைரியமாக  போகலாம் ” என்றார்..

நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு..இன்னும் தூங்கிக் கொண்டி   ருந்த என் மனைவியையும் மகளையும் எழுப்பி  கேதாரநாதரை தரிசனம்    செய்வதற்கு அவசரப் படுத்தினேன்..தரிசனம் முடிந்த கையோடு    கீழே இறங்க வேண்டும் ..

க்யூவில் நின்று  சந்நிதிக்குள்  உள்ளநெகிழ்வுடன் போனபோது   சற்று ஏமாற்றத்துடன் நின்றேன்..வடக்கு கோவில்களில் உள்ள   மூலவர்கள் நம்மூர் கோவில்களைப் போல் அழகுடன் அற்புத ஆகிருதியுடன்   காட்சி அளிப்பதில்லை..மூலவர்  குட்டையான பளிங்கு கல்லில் ஆமணக்கு   கொட்டை கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு பூஜை செய்த பண்டாக்கள் கேதாரநாதரை  விட உயரமாக   இருந்தார்கள்..பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் திருஞான சம்பந்தரின்   சிவனைப் பற்றிய பாடல் பதிக்கப் பட்டிருந்தது.    எப்படியோ கேதாரநாத்துக்கு போய் சிவனின் அருளுக்கு   பாத்திரமாக வேண்டுமென்ற எங்கள்  லட்சியம் பூர்த்தியாயிற்று..

நாங்கள் மீண்டும் குதிரை ஏறினோம்..எங்களை ஏற்றி வந்த அதே   குதிரைகள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தன. ஏறுவதை விட    இறங்குவது தான் கடினமானதென்றும்  குதிரைகளுக்கு அதிக  எச்சரிக்கை தேவை இருக்குமென்றும் அங்கொருவர் சொன்னார்..   குதிரை எச்சரிக்கையுடன் தான் இறங்கிக் கொண்டிருந்தது…

பாதி மலை இறங்கியபோது எங்களுக்கு கீழேயிருந்து  சில   தகவல்கள் வந்தது.  இறங்கும் பாதைகளில் சில இடங்களில் நிலசரிவு   ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதாகவும் எச்சரிக்கையுடன்    பயணம் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியது..

குதிரைக்கார பைய்யன் பத்திரமாகத் தான் குதிரையை வழி   நடத்தி சென்றான்.. கீழே அடிவாரத்தில் குதிரையை நிறுத்தி   எங்களை இறக்கி விட்டான்..குதிரையோடு சேர்ந்து நாங்களும்   பெருமூச்சு விட்டோம்..  இறங்கி மேலும் நடந்து வந்து கொண்டிருந்த   போது பக்கவாட்டில்  பாறைகளின் ஓரமாக ஒரு கூட்டம் கூடி   இருந்தது..            நாங்கள்  பரபரப்புடன் நெருங்கிப் போய் என்னவென்று   பார்த்தோம்.. பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றுப் போனோம்..   ஒரு குதிரையின் பின்னங்கால்களில் ஒரு பாறை விழுந்து கிடந்   தது.  அதன் நுரைஈரல் புடைத்துப் போய் முன்னங்கால்கள்   வானைப்  பார்த்துக் கொண்டிருந்தன.

”பாவம் நிலச்சரிவில் .பாறை உருண்டு வந்து இளைப்பாறிக்   கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்திருச்சி…பரிதாபம்..”   என்று ஜனங்கள்  பேசிக்  கொண்டார்கள்…

சற்று நேர மௌனத்துக்குப் பின்  கண்களில் ஈரத்துடன்  “” ஒரு வழியா இந்த பாரம் தூக்கும் பிறவியிலிருந்து குதிரைக்கு   விடுதலை கிடைத்து விட்டது…” என்றாள் மகள்..

“”   இது விடுதலையா..தெரியவில்லை..விடுதலை இப்படிப்பட்ட   கோரவிபத்தாக  இருந்திருக்க வேண்டாம்..மேலும் அந்தக் குதிரை   இப்படிப்பட்ட வாழ்க்கையை  சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு வாழ  வில்லை என்று  எப்படி நாம்  முடிவுக்கு வர முடியும்?  “”

என்று  சொல்லிவிட்டு  மேலும் நடந்தேன்..

மல்லாந்து விழுந்து கிடந்த அந்தக் குதிரையின் வாயில்  இன்னும் தின்னப்படாமல் தொங்கிக்  கொண்டிருந்த ஒரு கொத்துப்புல்     எனக்கு வாழ்க்கையின் தீராத பற்றை  சொல்லிக் கொண்டிருந்தது.

-வைதீஸ்வரன் – ஆகஸ்ட் 09

 

Series Navigationயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்ராக்கெட் கூரியர்

6 Comments

  1. Avatar Anban

    Excellent narration, with a extra ordinary message.

  2. Avatar ravi

    மிகவும் நன்றாக இருந்‌து ஒரு யாத்திரிகனின் குதிரை பயணம், குதிரைக்கு மோடசம் கொடுத்து , யாத்திரிகனுக்கு ஞான முயற்சி.

    குதிரைக்கு புல் , யாத்திரிகனுக்கு பற்று…

Leave a Reply to Anban Cancel reply

Your email address will not be published. Required fields are marked *