ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

Spread the love

“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…”
பாரதி
மும்பை நகர் வீதிகளில் தேடினான்.

கவிதை என்றால்
இலக்கியம் நினவுக்கு வந்தது.
“காண்டேகரின்”எழுத்துக்களின்
மின்னல் பீலிகளாய்
அந்த “கிரவுஞ்ச வதம்”
அவ‌ன்
கண்ணுக்குள் நிழல் காட்டியது.

அந்த‌ காவிய‌க்க‌சிவோடு
“சேரத்து தந்தம்”தன்னை
பண்டமாற்றம் செய்ய‌
தேடினான் தேடினான்
ஒரு மராட்டியனை.

அன்று
அங்கே எல்லோரும்
தேடித்தேடி தேம்பினார்கள்
ஒரு மராட்டியனை.

ஆனால்
அந்த பேனா பிடித்த‌
மராட்டியனுக்குப் பதில்
அவ‌ன் பார்த்ததெல்லாம்
வாள் பிடித்த மராட்டியன்கள் தான்.

வாள் பிடித்ததானால் மட்டுமே
அவர்கள் சிவாஜிகளா?
இந்திய‌ ம‌ண்ணின்
இத‌ய‌த்தை தொலைத்து விட்டு
எந்த‌ ம‌ண்ணைக்கொண்டு
இத‌ய‌ம் செய்தார்க‌ள்?

சிவாஜியின் வீர‌த்தாய்
இந்திய‌ர்க‌ள்
எல்லோருக்குமே வீர‌த்தாய்.
த‌னக்கு ம‌ட்டுமே அந்த‌த்தாயை
ப‌ங்கு போட்டுக்கொண்ட‌
அந்த‌ப்புத‌ல்வ‌னிட‌ம்
முர‌ட்டுத்த‌ன‌ம் இருந்தாலும்
ஹிட்ல‌ர்த‌ன‌ம் தெரிந்தாலும்
அவ‌னுக்காக‌
இந்திய ச‌கோத‌ரர்க‌ள் எல்லோரும்
சிந்துகிறார்க‌ள்
க‌ண்ணீர்த்துளிக‌ளை.

உயிர்ப்ப‌லிக‌ளை வைத்து
க‌ண‌க்குப்போடும்
அர‌சிய‌ல்த‌ன‌ங்க‌ளுக்கு
அப்பாற்ப‌ட்டு
சிந்துவோம் ந‌ம் க‌ண்ணீர்த்துளிக‌ளை
அந்த‌ மைந்த‌னுக்கு!
ஆம்.
விலை ம‌திக்க‌ முடியாத‌
ந‌ம் க‌ண்ணீர்த்துளிக‌ளை
சிந்துவோம்
அந்த‌ மைந்த‌னுக்கு!

பார‌தி தேடிய‌
அவ‌னிட‌ம்
சிங்க‌ம் இருந்த‌து.
ம‌ராட்டிய‌ம் இருந்த‌து.

பாரதி
அவ‌ன் கால‌த்து
“முப்ப‌து கோடி மக்களின்
முகம் ஒன்று உடையாளை”
கனவில் அசை போட்டு
பாடிய பாட்டு அல்ல‌வா அது.

இப்போதோ
நூறு கோடிக்கும் மேலும்
ஒன்றாய்க் கோர்த்திருக்கும்
முக‌ம் அல்ல‌வா!

அந்த முகத்தை
அவன் தேடினான்..தேடினான்.
காணவில்லையே.

அந்த‌ சேர‌த்துத் த‌ந்த‌த்தை
கைக‌ளில் ஏந்தி
திரும்பிக்கொண்டிருந்தான்
பார‌தி.

இருப்பினும்
அந்த‌ த‌ந்த‌ம்
ந‌னைந்து கொண்டிருந்த‌து
அவ‌ன் க‌ண்ணீரில்.

=================================================ருத்ரா.
17.11.2012

Series Navigationமணலும், நுரையும்! (4)ரசமோ ரசம்