`ஓரியன்’ -5

This entry is part 9 of 21 in the series 10 ஜூலை 2016

 

“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.”

இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார்.

“மனித ஜீன்களில் நாங்கள் ஏதாவது திருத்தங்கள் செய்து பழைய மனிதர்களை உருவாக்க முடியுமா?..” —அது சிறிது நேரம் மவுனம் சாதித்தது.

“வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.”

             மறுநாள் காலை விஞ்ஞானியிடமும்,தலைவரிடமும் சிலவற்றை கலந்து ஆலோசிக்க வேண்டி ஜீவன் வெளியே கிளம்பும்போது கவனித்தான். ஸோம்னா சற்று தொலைவில் யாரோ இரண்டு ஆட்களுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தாள். ஆட்கள் வாட்டசாட்டமாய் இருந்தார்கள். இமா எச்சரித்தது நினைவுக்குள் வந்துபோனது. ஆனால் ஸீகம்—II சொன்ன வித்தியாசப் படும் dio3 ஜீன்கள் இந்த மனிதர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி உற்பத்தியை குறைக்கின்றன?, என்பது பற்றி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ஜனத்தொகை வீழ்ச்சிக்கான சூட்சுமம் இதில்தான் ஒளிந்திருக்கிறது. முக்கியமாக அதற்கான விடையை ஸோம்னா மூலம்தான் நாம்மால் தெரிந்துக் கொள்ள முடியும். அன்றைக்கு மதியம் என்ன ஆனாலும் சரி என்று அவன் ஸோம்னாவை மீண்டும் சீண்டினான்.

வேண்டுமென்றே சற்று எல்லை மீறினான். இழுத்து அவளை கட்டியணைத்து உணர்ச்சியுடன் அழுந்த இச் பதிக்க, அப்போதும் அவளிடம் எந்த பாதிப்பும் இல்லை, அதைவிட சுவாரஸ்யமாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதென்ன சவம் போல. மீண்டும் அவளிடம் கூடுதலாக சேட்டையைக் காட்ட, அப்போதுதான் சற்று சினம் காட்டினாள்.

”சும்மா இருங்க. இந்த விஷயத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்கணும்னு ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்புறம் எதுக்கு இப்படி?.”—என்றாள்.

“அதென்ன கணக்கு இரண்டு மாதங்கள்? சொல்லு..”—அதற்கு அவள் பதில் சொல்லாமல் தலையிலடித்துக் கொண்டு போய்விட்டாள். அவன் விடுவதாக இல்லை. அப்போதே கிளம்பி விஞ்ஞானி கோபனிடம் போய் நின்றான்.

“ஆமாம் திடீர்னு.அதில் என்ன உங்களுக்கு சந்தேகம்? நீங்களும் மனுஷன் தானே?. அதற்கு.இன்னும் ரெண்டு மாசம் போகணுமில்ல?…”.

“அதான் ஏன் அந்த ரெண்டுமாசம்?.”—அவர் சிரித்து விட்டார்.

“சரி..சரி..இதுக்கு பதில் சொல்லுங்க அந்த விஷயத்துக்கு இப்ப நீங்க தயாரா?.”                                           *

“நான் எப்பவுமே தயார்.” ——அவர் பலமாக சிரித்துவிட்டு

“இல்லை, சாத்தியமில்லை.” — அவர் போய்விட்டார். ச்சே! இந்த கிழவனை நம்பியும் பிரயோஜனமில்லை. ஸோம்னாவைத்தான் பிடிக்கணும். இமாவையும் இழுத்துக் கொண்டு ஓடினான். அப்பொது ஸோம்னா அன்றைக்கு பேசிக்கொண்டிருந்த திம்சு கட்டை மனிதர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவனுக்கு உள்ளே சிலீரென்று பயம் கவ்வியது. சே..சே..வெளியே காட்டி கொள்ளக் கூடாது

ஸோம்னா ஜீவனையும், இமாவையும் பார்த்ததும் அவசரமாக அவர்களை அனுப்பிவிட்டு வந்தாள்.

“ஸோம்னா! நான் முதலிலேயே சொல்லிட்றேன். உன்னிடம் கொஞ்சம் எல்லை மீறி நடந்துக் கொண்டது ஒரு ஆராய்ச்சிக்காகத்தான். தப்பா எடுத்துக்காதே.”

“அதில தப்பு எங்கே இருக்கு?. எல்லோருக்கும் இருக்கும் இயற்கையான உணர்ச்சிதானே?. ரெண்டுமாசம் எப்ப முடியும்னு நானும் ஆர்வத்தோட காத்திருக்கேன் ஜீவன்.”—-இமா அழுதுடுவாள் போல இருந்தாள்.

“சரி ஸோம்னா இப்ப உன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த ரெண்டு நபர்கள் யார்?. அவங்களோடு உன்னை அடிக்கடி பார்க்கிறேனே.”

“என் கணவர்கள்.”

“ரெண்டு பேருமேவா?.”

“ஆமாம்.”

“ இதுக்கு மேல நானுமா?.ஐயோ! நான் அம்பேல்ரா சாமி. சரி..சரி..இங்க நீங்க எத்தனை பேரை வேணாலும் கட்டிக்கலாமா?.” “ஆமாம் இந்த விஷயத்திற்குஅவர்கள் கணவர்களாக இருக்க வேண்டும்என்பது கூட இல்லை.எதுவும் தடைகிடையாது. பற்றாக்குறைதான் காரணம்.. . ” —-ஜீவனும், இமாவும் பேஸ்து அடிச்சி நின்னுட்டாங்க.

“இப்பவாவது சொல்லு அது என்ன ரெண்டு மாசம்?. மண்டை வெடிக்குது.” —

அப்புறம் ஸோம்னா ஜீவனிடம் நெருங்கி வந்து சொன்னதில் ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி. ஓ! கடவுளே! இதென்ன சபித்து விட்ட இனம் மாதிரி. ஒரு வேளை பல தலைமுறைகளுக்கு முன்பாகவே இந்த பண்பு மாற்றங்கள் வந்திருக்கலாமோ. அதனால்தான் இங்கே யாருக்கும் நிஜம் தெரியவில்லையோ. ஆச்சரியம், அதிர்ச்சி தாளமுடியவில்லை. ஒரு வேளை இவர்கள் மனிதர்கள் இல்லையோ. மனிதர்கள் மாதிரியான தோற்றத்தில் ஒரு விலங்கினமோ?. இல்லை இல்லை இது மனித இனம்தான் என்றால் எப்படி இது சாத்தியமாச்சு?. இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே?. அதனால்தானே அன்றைக்கு இங்கே மக்கள்தொகை1640 கோடியாக பெருகியது?. இந்தஉடலியல் பண்பு மாற்றம் எப்போது நடந்திருக்கும்?, எப்படி நேர்ந்திருக்கும்?.

.          சே! உப்புசப்பு இல்லாத வாழ்க்கை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எத்தனை விதமான வாழ்க்கையை அர்த்தப் படுத்தும் சுவாரஸ்யங்கள்?. இது எதுவுமில்லாமல், துறவு நிலையில் ஒரு வாழ்க்கை.ச்சே!. இந்த ஓரியன் கிரகத்து மனிதர்களை நினைக்க பாவமாய் இருந்தது.பாலியலில் இவங்க பிரச்சினையின் ரகசியம் என்னவென்பதை  அன்றைக்கு ஸோம்னா போட்டுடைத்தாள், கோபன் அதை உறுதி செய்தார்..

“என்ன புரியாத மாதிரி நடிக்கிறீர்கள்?. நமக்கெல்லாம் இனச்சேர்க்கை காலம் என்பது வருடத்தில் பனிபெய்யும் அந்த  ஒரேயொரு மாதம் மட்டும்தானே?. அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமே.. மற்ற சமயங்களில் நமக்கு அந்த உணர்வுகள் துளியும் இல்லாமல் நான் எப்படி உனக்கு உடன் படுவேன்?. நீயுந்தான் என்ன பண்ணிவிடுவாய், சொல்லு.”

ஜீவனுக்கும், இமாவுக்கும் விளங்கி விட்டது.  நரிகள், சில வகை மான்கள் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அது போன்ற பாலியல் குறைபாடுகளுடன் சுணங்கிக் கிடக்கும் இந்த ஓரியன் கிரகத்து மனிதர்களின் மேல் இரக்கம் சுரந்தது. இந்த விஷயத்தை யோசிக்க யோசிக்க ஆச்சரியமாகவும், அது ஒரு பெரிய ஆராய்ச்சிக்கான களமாகவும் உள்ள கனமான விஷயமாக இருந்தது. விடையை கண்டுபிடித்தாயிற்று.  பரிணாமம் நான்கு விதங்களில் மனித இனப் பெருக்கத்தை ஒடுக்கியிருக்கிறது. 1)மக்களிடம் மலட்டுத்தன்மை அதிகரிப்பு.2)ஆண்களின் பிறப்பு விகிதம் மட்டும் மடங்குகளில் அதிகரிப்பு.3) வருடத்தில் ஒருமாதம் மட்டுமே ஏற்படும் இனச்சேர்க்கை காலமும், அதையொட்டி ஏற்படும் பாலியல் போர்களினால் மடியும் ஆண்களும், குறுகிப்போய்விட்ட கருத்தரிக்கும் வாய்ப்புகளும். 4)இயற்கைச் சீற்றங்களினால் உயரப் போய்விட்ட இறப்பு விகிதமும். போதும், மனிதகுல பேரழிவுக்கு இந்த காரணங்களே போதுமானது. உற்பத்தி இல்லாமல் செலவுமட்டும் அதிகம்,

அவர்கள் ஓரியன் கிரகத்திலிருந்து கிளம்ப வேண்டிய வேளை வந்துவிட்டது. எல்லாருக்கும் எல்லாவற்றிற்குமான காரண காரியங்கள் விளங்கி விட்டன.

“கேப்டன்! நல்லவேளை நம்ம பூமியில் இந்த பாலியல் குறைகள் ஏற்படவில்லையோ தப்பித்தோம்.”

“ இல்லை இமா! அளவைமீறி மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படும் போது நம் பூமியிலும் இந்த நிலை வரும், வரலாம். இன்றைக்கு அங்கே நம்முடைய தேவைக்காக நிலத்தில் அதிகளவில் நாம் கொட்டிக் கொண்டிருக்கும் செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நாளை விஸ்வரூபம் எடுக்கும்.”

அவர்கள் விடைபெற்று பூமிக்கு கிளம்பும்பொது தலைவர் சூர்யாவும், விஞ்ஞானி கோபனும் கூட இவர்களை வழியனுப்ப வந்திருந்தார்கள். சூர்யா ஜீவனின் கையைப் பிடித்துக் கொண்டு

“ஜீவன்! நாங்கள் எங்களுடைய ஜீன்களை திருத்த முடிவு செய்திருக்கிறோம்.இல்லையென்றால் முழுசாக அழிந்து விடுவோம்.எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை. உங்கள் நாட்டு தலைவருக்கு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறேன். எங்கள் கோரிக்கையை நீங்களும் சொல்லுங்கள்.”—-ஜீவன் தலையசைத்தான்.              

                விண்கலம் கிளம்பவிருக்கும் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்க, ஜீவனுக்கும், இமாவுக்கும் உள்ளே சில்லிடுகிறது. பெண்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆண்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவும் பெருத்துப் போய் கிடக்கின்ற இந்த சூழலில் வருஷத்தில் ஒரேயொரு மாதம் மட்டுமே இனப்பெருக்கக் காலம் என்ற நெருக்கடியில் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாலியல் நெருக்கடிகளை, இம்சைகளை, வேதனைகளை, யோசிக்க மனசு பதைக்கிறது. பாவம் பெண்கள். ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் எப்போதோ பழகிப் போயிருக்கும். ரொம்ப காலங்களாக இப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்?. என்று மனசு ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதுதானே உயிர்கள் தப்பிப் பிழைப்பதற்கான தகுதி.

அவர்கள்  கையசைத்து விடைபெற்று விண்கலத்தின் படியில் ஏறும் முன்பாக இமாதான் தலைவர் சூர்யாவிடம் கேட்டாள் .

“ தலைவரே! இந்த கிரகத்தில் இந்த இடத்தை`பிரிவு88’ என்று எண்களால் பிரித்திருக்கிறீர்களே. முற்காலத்திலும் இதற்கு இதே பெயர்தானா?.. ”

“ இன்றைக்குத்தான் இது பிரிவு—88, ஆதியில்இதன் பெயர்– `தமிழ்நாடு’. விண்கலம் நிற்கும் இந்த காட்டுப் பகுதிதான் அன்றைய— `சென்னைதேனாம்பேட்டை

(6.நிறைவு)

Series Navigationஒரு கவிதையின் பயணம்காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *