கடவுள்களும் மரிக்கும் தேசம்

mariyanமுதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை கிடைக்கும் தமிழனுக்கு ? ஆர்ப்பரிக்கும் கடல் , வலையைத்தொட்டாலே கொன்று போடும் சிங்களவன். தமிழ்நாடு இலங்கைக்கு அருகில் இருப்பதால் தான் இத்தனை பிரச்னைகளும்.கொஞ்சம் நகர்த்தி ஆந்திரா பக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டால் சூடுபடுவதாவது குறையும்.

 

தனுஷ் இது போன்ற ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டேயிருந்தால், இனி நடிக்கவே அவசியமிருக்காது. அப்படியே ஆகிவிடுவார். பூ’வில் தம் மாமனுக்காக ஏங்கிய பார்வதி இங்கு தன் காதலுக்காக ஏங்குகிறார். அங்கு பெட்டிக்கடையில் ‘தங்கராசு’ வேணும் எனக்கேட்டவர், இங்கு தொலைபேசியில் ‘நீ வந்துருவடா’ என்று உருகுகிறார். ஒவ்வொரு முட்டுச்சந்தாகத்தவிர்த்து அடுத்த சந்து அடுத்த சந்து என்று நடந்து செல்பவரின் கொலுசொலி பார்த்துக்கொண்டிருக்கும் நம் காதுகள் வரை ‘ஆரோ 3டி’யில் நன்றாகக்கேட்டும் தனுஷுக்கு ஏனோ கேட்கவில்லை. எனினும் அந்தக்காட்சி முடிந்ததும் ‘அது வந்துருச்சுடா’ என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. கடலோரக்கவிதைகளில் ‘அதே ஆடு நானாக இருந்தால்’ என்று கேட்டு காதல் வந்ததாக பாரதிராஜா காட்டியது போல பல்லிளிக்கிறது.

மழைச்சீற்றத்தில் பொங்கும் கடலில் சென்று இன்னும் திரும்பி வரவில்லை என்று பரிதவிக்கும் பார்வதி ‘வந்துட்டேல்ல அதுபோதும்லே’ என்ற காட்சியில் காதல் வந்திருக்கலாம் என்பதாகக் காட்டியிருக்கலாம், பார்க்கும் நமக்கும் இன்னும் படத்தைப்பார்க்கவேணும் என்று காதல் வந்திருக்கும். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் மனம் கடல் நுரை போல் கரையத்தான் செய்கிறது. வீடு வரை கையில் மீனோடு வந்துவிட்டு , கதவைத்தட்டத் தயங்கி நிற்கும்போது அந்த தோரணமாகத்தொங்கும் ‘வாயிற்சிப்பிகள்’ காற்றில் ஆடி ஆடி தனுஷின் மனதை நமக்குச்சொல்கின்றன. இது போல நுணுக்கமாக பல இடங்களில் முன்னரே ஒத்திகை பார்த்து செய்தமை பாராட்டுக்குரியது.

 

சூடானின் நிலவறையில் தனுஷும் , அவர் நண்பரும் காற்றிலேயே விருந்துண்ணுவதும் பின்னர் தண்ணீர் குடிப்பதும், இதெல்லாம் முடிந்தபிறகு,சுருட்டுப்புடிக்கிறியா மாப்ளே என்று கேட்பதும் , இல்லாத ஒன்றை நடந்து கொண்டு இருப்பதாக காட்டிக்கொள்ளும் Schizophrenic அதீத மனநிலை எனப்பல இடங்களில் போட்டுத் தாக்குகிறார் தனுஷ்.

 

‘ஜெயிக்கிறவனுக்கு பொண்ணுங்க வாடை பட்டுக்கிட்டேதாண்டே இருக்கும்’, என்றெல்லாம் இது வரை கேட்டிராத வசனங்கள் வருவது , கூடவே ‘நினைத்துக்கொண்டே இருப்பது நடந்தே தீரும், நினைக்காமல் இருப்பது வேணுமானால் நடக்காமல் போகலாம்’ என்ற வணிகக் கதாநாயகர்களின் வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றன. ‘ஜே.டீ. க்ரூஸ்’ உள்ளேன் ஐயா என்று கூறி நிற்பது படத்தில் கடல் இருக்கும் வரையே, சூடான் போனவுடன் இங்கேயே விட்டுவிட்டுப்போனதுபோல அவரை எங்கேயும் காணோம்.

 

ஒலி,பின்னணி இசைச்சேர்ப்பு,பாடல்கள் செருகப்பட்டிருக்கும் இடங்கள் எல்லாம் பொருத்தம். கடல் மணலில் கால்களில் செருப்பு போட்டுக்கொண்டு நடந்தால் அந்தமண் அரைபடுவது நமக்கே யாரோ கூடவே நடந்து வருவதுபோலவே இருக்கும்,இங்கும் அதேபோல அருகிலிருந்து பார்த்தது போல அரைபடுகிறது, நம் காதுகளில். நிறைய உழைத்திருக்கிறார் ரஹ்மான். அதைச்சொல்லித்தானாக வேண்டும். ஆனாலும் பல இடங்களில் அவருக்கு என்ன இசை கொடுப்பது எதைக்கொண்டுவந்து சேர்ப்பது என்றே குழம்பிப்போய்க் கிடக்கிறார். படம் ஆரம்பிப்பது நமது கடற்கரைகளில், இன்னும் பயணித்து சூடானின் சூடான பாலைவனம் வரை விடாது பயணிக்கிறது.  இசை அந்த உணர்வை , வெறுமையை வெம்மையைக்கொண்டுவந்து சேர்க்கவில்லை. ஒருபக்கம் முழுக்க காயவே விடாது தொடர்ந்து நனைந்து நனைந்து போகவைக்கும் கடல் , இன்னொருபக்கம் எத்தனை தூரங்கள் கடப்பினும் ஒரு சொட்டு நீர் கூடப்பார்க்கவியலாத பாலை.

 

ரஹ்மான் ‘தீபா மேத்தா’வின் ஐம்பூதங்கள் பற்றி அவர் வரிசையாக எடுத்த படங்களில் தொடர்ந்தும் பின்னணி இசை அமைத்திருக்கிறார். வசந்த்தின் படத்தில் கூட ஒவ்வொரு பாடலும் ‘நிலம். நீர், காற்று ,வெளி ,நெருப்பு’ என நம்மைக்கூறுபோட்டது அவரது இசை. இசையமைக்க இசையமைப்பாளர் தேர்வு என்னவோ சரிதான். அதில் அவரின் முன்னரே நமக்கு செய்து காட்டிய மாயாஜாலங்கள் தொடர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் பாலைவனம் போல அவரின் கற்பனை வறண்டுதான் போய்க்கிடக்கிறது

 

பாலையும் கடலும் இணையும் காட்சி முன்னே விரிகிறது. ஒளிப்பதிவாளனுக்கு இதற்கு மேல் ஒரு காட்சி தேவையில்லை , ஜென்ம சாபல்யம் அவருக்கு. இப்படி ஒரு காட்சியைக்கற்பனையில் உரித்தெடுத்து அதற்கேற்ற இடத்தைக்கண்டறிந்து அனைவரையும் அங்கே கொண்டுபோய்ச்சேர்த்து என பரத்பாலா’வின் பகீரத முயற்சி,.தனுஷ் என்னவோ கடவுளைக்கண்ட பக்தன் போல செய்வதறியாது விக்கித்து நின்றுகொண்டு ‘ஆத்தா’ என்று விளித்தபடி அவர் பங்குக்கு உரம் சேர்க்க, எங்கே ரஹ்மான் என்று தேடிப்பார்க்க வேண்டியிருப்பது அவலம் அந்தக்காட்சியில். இன்னும் பல மடங்கு பேருவகையைத் தூண்டுவது போல அமையவேண்டிய இசை  ’அதான் கடலப்பார்த்துட்டான்ல’ என்று அவரோடு சேர்ந்து சும்மா நின்று பார்ப்பது போல இருப்பது Pathetic.  இத்தனை கால இசையனுபவம் எங்கும் கை கொடுக்கவில்லை புயலுக்கு. பரிதாபம்.

 

‘கேபா ஜெரீமியா’வின் கிட்டார் கோலங்கள் நம்மை தந்திகள் பிளக்கப்படுவது போல அறுத்துப்போடுகிறது பார்வதியின் மனத்தைப்போல. இத்தனை இருந்தும் படம் நம்மை என்னவோ ஒரு வேற்றுமொழிப்படம் பார்ப்பது போன்ற,இது நம்ம சங்கதியே இல்லை என்றே அன்னியப்பட்டு நிற்கிறது.

 

‘கடல் ராசா’ பாடல் சோகப்பாடல் ( Pathos ) ஆக ஒலிக்கிறது. வெளியே கேட்கும்போது குதூகலமாகவும் , உள்ளே கேட்கும்போது சோகமாகவும் ஒலிப்பது விந்தை. ஒரு வேளை இரண்டு வெர்ஷன்கள் போட்டாரோ என்றே தோணுகிறது எனக்கு. சோகத்தில் குழைந்து குழைந்து பாடுகிறார் யுவன். நல்ல குரல் தேர்வு. அதற்கேற்ற தனுஷின் உடல்மொழி. சுற்றி துப்பாக்கி பிடித்து நிற்கும் ஆப்ரிக்கர்களுக்கு, என்ன புரியப் போகிறது ? இது போன்றே காட்சிகள் , அவர் ஏற்கனவே ‘யாரடி நீ மோகினி’ போன்ற படங்களில் செய்தது போலவே நடித்துவிட்டுப்போகிறார், அத்தனை தீனி இல்லை. அத்தனை வறண்ட பாலையில் ஒலிக்கும் ‘நெஞ்சே எழு’ ஏன் இப்படி ரஹ்மான் என்று நம்மை அவரைப்பார்த்து வருந்த வைக்கிறதே தவிர எந்தவித எழுச்சியையும் கொடுத்துவிடவில்லை.

 

கடத்தி வைத்துக்கொண்டு பணம் பறிக்க மிரட்டி, இந்திய அரசாங்கத்திடம் பேசு என்று பணிக்கும்போது தனுஷ், பார்வதியுடன் பேசும் காட்சி, ’இவன எங்கருந்துடா புடிச்சீங்க’ என்று சபாஷ் போடவைக்கிறார். அத்தனை நெருக்கடியிலும், தரையில் விழுந்து சிரிப்பது Silence Of the Lambs’ ல் Anthony Hopkins ன் குரூர Schizophrenic Acting – ஐ விடவும் பல மடங்கு மேலே பயணிக்கிறது.  விருதுகளுக்கென நடிக்காமல் பார்ப்பவனைக்கொன்றே போடவேண்டும் என்றே நடிக்கிறான் இந்த உண்மைக்கலைஞன். ஏற்கனவே அவருக்கு இயல்பாக இருக்கும் ஒல்லியான திரேகம் , பல நாட்கள் உண்ணாமல் நிலவறையில் கிடந்து உழன்ற தேகம், கிழிந்து தொங்கும் ஆடை எனப்பல வகைகளில் அந்தக்காட்சி சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து நிற்கிறது.

 

‘ஆதாமிண்டே மகன் அபு’ சலீம், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி என்று பல கதாபாத்திரங்கள் தனுஷுக்கு சவால் கொடுத்து முன்னே நிற்கின்றன. திமிரு’வில் நடித்த விநாயகன் இங்கு தீக்குரிசி’யாக தனுஷுக்கு சமமாகவும் இன்னும் ஒரு படி மேலேயுமாக நிற்கிறார். அந்தக்கருத்த அடர்ந்த தாடியும்,இடுங்கிய கண்களும் பனிமலருக்காக இறைஞ்சி நிற்கிறது. தேவாலயத்தின் வெளியில் கிடக்கும் பனிமலரின் செருப்பை காலால் வருடுவதில் இன்பம் பிறக்கிறது J

 

ஆரோ 3டி’யில் அருமையான பின்னணி இசைக்கோர்ப்பு, மீளாமலும் ஒருங்கேயும் சேர்ந்திசைக்கும் பின்னணி இசை ( பல இடங்களில் எதற்கெனவே தெரியாவிட்டாலும் ), ஒளிப்பதிவாளனின் கருணையினால் Picturesque Locations  , கூர்ந்து கவனித்து எதைச் செய்யவேணும் எதைச்செய்யவேண்டாம் என்றே தேர்ந்தெடுத்த தனுஷின் நடிப்பு, இப்படி எல்லாமுமான தேர்ந்த தொழில்நுட்பக்கலைகள் உலகத் தரத்திற்கு விரிந்தாலும் இது ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைப்பார்ப்பவர் மனதில் கொண்டு வந்து சேர்க்கவில்லை என்பதே ஒரு பெரிய குறை. பல மொழிகள் பேசப்படும் தமிழ்ப்படங்கள் இப்போது வந்த ‘விஸ்வரூபம்’,முன்னர் வந்த ‘ஹேராம்’, எனப்பல இருந்தும் அவை தமிழ்ப்படங்களாகவே காட்சியளித்தன. அன்னியப்பட்டு நிற்கவில்லை. கூடவே இமான் அண்ணாச்சி’யைத்தவிர யாருக்கும் அந்தப்பிராந்திய மொழி வழக்கைப்பேச வேண்டும் என்று தோணாமலேயே போவது ( தனுஷுக்கும் கூட பல இடங்களில் ) ஒரு பெரிய குறை.

 

முன்னூறு கிலோமீட்டர் அத்தனை பாலையில் நடந்தே வந்தவர், கொஞ்சம் கூட சரியான உணவு என்றே ஒரு வேளையும் கூட உண்ணாதவர் , இயல்பிலேயே நல்ல Physique கொண்ட ஆப்ரிக்கனை ஆர்ப்பரிக்கும் கடலில் அமிழ்த்திக்கொல்வது, கூடவே வந்த நண்பன் என்ன ஆனாரென்றே யாரும் கேட்காமலேயே போவது, என்னமாதிரியான இசையை இசைப்பது எனக்கற்பனையின்றி வறண்டு போய் என்றே பல இடங்களில் காட்சிகளைத் தப்பித்தால் போதும் எனக்கடத்திவிடுவது, ஒரு புல்பூண்டு கூட இல்லாப் பாலையில் முறுக்கித்திரியும் சிறுத்தைகள் ,முட்டுச்சந்தில் என்ன நடந்தது என்றே நமக்குத் தெரிய வைக்காமல் சடாரெனெக்காதல் பற்றிக்கொள்வது  என்று பலவகையான தர்க்கமீறல்கள் , ஒருபக்கம் இயல்பான கதையாக நகர்த்திச்செல்ல நினைப்பதும், மறுபக்கம் அத்தனை வணிகத்தந்திரங்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும் என நினைப்பதென எங்கும் ஒட்டாமல் போகிறது முழுப்படமும்.

 

இத்தனை இடர்ப்பாடுகளும் பட்டு நொந்து, கடைசியில் அவரைக்கொணர்ந்து சேர்க்கும் காதல் , குன்றின் மீதமர்ந்திருக்கும் பார்வதி , என்று அழகிய கவிதை போல விரியும் காட்சிக்கு இசை , ஏற்கனவே படத்தில் இருக்கும் பாடலை மெல்லிய கிட்டார் கொண்டு இசைத்து அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறது.

ஆர்ப்பரிக்க வேண்டாமா ரஹ்மான்..ஹ்ம்…என்ன ஆயிற்று உமக்கு ?!  படத்தில் Theme Music  என்ற Concept வைத்துக்கொள்வது காலமாகிவிட்டாலும், இங்கு அந்தந்த காட்சிகளுக்குத் தேவையான இசைத்துணுக்குகள் எங்கும் ஒட்டவில்லை.எப்போதும் இவரின் பின்னணி இசை பற்றிச்சிலாகித்துப்பேசுவார் எவரும் இல்லை. அதுவே இங்கும் தொடர்கிறது.

 

சர்வதேச ஒளிப்பதிவாளர், ஆஸ்கர் வரை சென்று விருதுகள் அள்ளிய நமது ரஹ்மான், எந்தச்சூழலுக்கும் ஈடு கொடுத்துச் சுலபமாக அபிநயித்துக்காண்பிக்கும் தனுஷ், இப்படி ஏகத்துக்குப்பிரபலங்கள் இருந்தும் ஏன் படத்தை முழுமையாக ரசிக்க இயலவில்லை என்றே எனக்கும் தெரியவில்லை.

 

கடவுள்களும் சாதாரண மக்களுக்கென மரிக்கும் தேசத்தில் , தன் காதலுக்காக, அசாதாரண முயற்சிகள் எடுத்து , திரையரங்கில் நுழைந்து படம் முடிந்து வெளிவந்த ரசிகனுக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, மரிக்காது வீடு திரும்புகிறான் இந்தச் சாதாராணமான மீனவன்.

 

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]