கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன.

இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god helmet என்பதிலிருந்து, பிறவியிலேயே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, இயற்கையாகவே டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டதன் மூலமாகவோ, செயற்கையாக, அதாவது அடி படுவதாலோ, அல்லது வேறு விதமான மருந்துகளாலோ டெம்போரல் லோப் பாதிப்படைவதன் மூலமாகவோ இந்த ஆன்மீக உணர்வை அடையலாம் என்பது பல ஆத்திகர்களுக்கு சங்கடமான ஒரு உண்மையாகத்தான் இருக்கும். அதுவும் டெம்போரல் லோப் பாதிப்படைந்ததும் உடனேயோ அல்லது பல வருடங்களுக்கு பின்னரோ கூட இந்த பாதிப்பு தன் வெளித்தோற்றத்தை ஆரம்பிக்கிறது.

இவ்வாறு “இறை உணர்வினால்” உந்தப்பட்டு, டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் வாசகங்கள் “revelation” (அதாவது இறைவன் இவர் மூலமாக பேசுவது) என்று அவரை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களாக சில உதாரணங்களை பார்த்தோம். பஹாவுல்லா, செயிண்ட் பவுல், மிர்ஸா குலாம் அஹமது, ஜோஸப் ஸ்மித் ஆகியோரோடு இன்னும் பலரையும் தாராளமாக இணைக்கலாம்.

உதாரணமாக, முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று பலர் கூறுகிறார்கள். அதற்கான பல ஆதாரங்களை வைக்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்துவ போதகர்கள் முகம்மது நபி டெம்போரல் லோப் பாதிக்கப்பட்டவர் என்று காட்ட பிரயத்தனப்படுகிறார்கள்.

உதாரணமாக கூகுளில் mohammad temporal lobe என்று தேடலில் இட்டால் ஏராளமான தளங்கள் வருகின்றன.

கூகுள் தேடல்

இது மிகவும் பரவலான குற்றச்சாட்டாக இருப்பதால், முகம்மதுவுக்கு டெம்போரல் லோப் வலிப்பு நோய் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல இஸ்லாமிய தளங்களும்உள்ளன.

முகம்மதுவுக்கு இருந்த டெம்போரல் லோப் வலிப்பு நோய் பற்றி தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழோவியம்.காமில் ஒரு தொடர் வந்தது

நாம் நம்புவதை நாம் ஏன் நம்புகிறோம்? இது ஒரு முக்கியமான கேள்வி. உதாரணமாக இந்துக்களின் குழந்தைகள் இந்து மதத்தை நம்புகிறார்கள். கிறிஸ்துவர்களின் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை நம்புகிறார்கள். முஸ்லீம்களின் குழந்தைகள் இஸ்லாமை நம்புகிறார்கள். காரணம் என்ன? இதனை அறிவியல் பூர்வமாக ஆராய முடியுமா?

ரிச்சர்ட் டாகின்ஸ் குழந்தைகளின் மத நம்பிக்கை என்பது அவர்கள் தன்னிச்சை இல்லாமல் ஏற்றுகொண்ட ஒரு விஷயம் என்று கூறுகிறார்.

ஒரு ஆடு பிறந்ததுமே நின்று நடக்கிறது. பெரும்பாலான பாலூட்டி விலங்குகள் பிறந்ததுமே அடிப்படை வாழ்க்கை வாழ தேவையான பெரும்பாலான விஷயங்களை பெற்றவாறே பிறக்கின்றன. ஆனால், சமூக விலங்குகளான குரங்குகள், மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பெற்றோர், பெற்றோர் அல்லாத சமூக பாதுகாப்பில் வளர்கின்றன. ஒரு குரங்கு குழந்தை தன் தாயை விட்டு விலகுவது கிடையாது. ஒரு குரங்கு தாயும் தன் குழந்தையை மற்ற ஒரு குரங்கிடம் கொடுத்து பார்த்துகொள்ளச்சொல்வதும் கிடையாது. ஆனால், மனிதர்கள் என்ற பாலூட்டிகள் மட்டுமே பிறந்த குழந்தையை கூட சமூக நிறுவனங்களின் பாதுகாப்பில் விட்டுவிடவும், சமூக நிறுவனங்கள் மூலமாக தன் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை அளிக்கவும் கொடுக்கின்றன. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாம் உலகில் வாழ தேவையான விஷயங்களை பெற பெற்றோரிடமிருந்து விஷயத்தை பெறுவது மிக முக்கியமானது. அந்த பருவத்தில் நாம் ஒரு பஞ்சு ஈரத்தை உறிஞ்சுவதுபோல, வெகு விரைவில் எந்த கேள்வியும் இல்லாமல் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பெற்றோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் எந்த கேள்வியும் இல்லாமல் குழந்தை விஷயங்களை பெற்றுகொள்கிறது. மொழி, எழுத்தறிவு, சமூகத்தில் எப்படி நடந்துகொள்வது, எங்கே எச்சில் துப்பக்கூடாது, எங்கே எச்சில் துப்பலாம், எங்கே மல ஜலம் கழிக்கலாம், எங்கே நடக்கலாம், எங்கே நடக்கக்கூடாது என்ற அனைத்தின் கூடவே, உடை நடை பாவனை, பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்து கலாச்சார உபகரணங்களோடு மத நம்பிக்கையும் ஏறி வருகிறது. இங்குதான் கேள்வி கேட்காமல் குடும்பம் சொல்லும் தெய்வத்தை ஏற்றுகொள்வதும் வருகிறது. அந்த குடும்பம் பஹாவுல்லாவை ஏற்றுகொண்டிருந்தால் குழந்தையும் பஹாவுல்லாவை ஏற்றுகொள்கிறது. அந்த பெற்றோர் ஜோஸப் ஸ்மித்திடம் கடவுள் பேசினார் என்று குழந்தையிடம் சொன்னால், அந்த குழந்தையும் கேள்வி கேட்காமல், அதனை ஏற்றுகொள்கிறது. அது வளரும்போது அந்த நம்பிக்கையுடன் கூடவே வளர்கிறது. அது தன் குழந்தையிடம் அதே விஷயத்தை சொல்லிச் செல்கிறது.

Why We Believe What We Believe: Uncovering Our Biological Need for Meaning, Spirituality, and Truth [Hardcover]
Andrew Newberg (Author), Mark Robert Waldman (Author)

நம்புவது என்பது என்ன என்று சிந்தித்தால், எதனை கேள்வி கேட்காமல் ஏற்றுகொள்கிறோமோ அதனை நம்புவது எனலாம்.

நாம் சமையலறையில் சமைக்க வேண்டும், அங்கே மலஜலம் கழிக்கக்கூடாது என்பது நமக்கு பெற்றோர்களின் போதனையிலிருந்து வருகிறது. இது போன்ற சமூக ஒழுக்கங்களுக்கு பின்னால் கற்றறிந்து, பண்பட்ட ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த சமூகத்தின் அறிவே நமக்கு போதனையாக வருகிறது. இவற்றில் பெரும்பான்மையானவை சரியானவையே.

உதாரணமாக கூறுவதென்றால், ஒரு வீட்டில் மரணம் சம்பவித்தது என்றால், அந்த குடும்பத்தினர் கோவில் போன்ற திருவிழா நடக்கும் இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டது என்று அறிவோம். இது ஏன்? இதனை நாம் சமூக ஒழுக்கமாக பெற்றோர், குடும்பத்தினர், சமூகத்தில் உள்ள இதர குடும்பங்கள் வழியாக இந்த செய்தியை பெறுகிறோம். அதனை ஏற்றுகொள்கிறோம்.

ஒரு குடும்பத்தில் மரணம் சம்பவித்தால், முக்கியமாக துர்மரணம், அகால மரணம் சம்பவித்தால், அது ஒரு நோய் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அந்த நோய் கிருமிகளோடு பழகியவர்கள் கோவில் போன்ற பலர் கூடும் இடங்களுக்கு சென்றால், அந்த நோயை பரப்ப ஏதுவாகும். அது பலரின் மரணத்துக்கு காரணமாகலாம். அது சமூகத்துக்கு கெடுதி.

ஆகவே இந்த சமூக நியதிகள் ஒரு சமூகத்தின் பொது அறிவாக நிற்கிறது. மற்றவர் மீது படும்படி தும்முவதோ இருமுவதோ நாகரிகமானதில்லை என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம். இது சுகாதாரமானதல்ல என்பது நவீன அறிவு. இவை பெரும்பாலும் சமூக நியதிகள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், புராணக்கதைகள், இதிகாசங்கள், நாடோடி கதைகள், நாடோடி பாட்டுகள், கிராமப்புற உழவு பாட்டுகள், விளையாட்டுகள் என்று நம்மிடம் சமூக அறிவு இந்தியாவில் வருகிறது. இவற்றின் விதிகளையோ இவற்றின் போதனைகளையோ நாம் கேள்வி கேட்பதில்லை. ஏன் கபடி அப்படி ஆட வேண்டும் என்று நாம் யோசிப்பதில்லை. ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பது ஆதர்சம் என்பதை நாம் ஏற்றுகொள்கிறோம். ராமாயணத்தில் சொல்லப்படும் ஒரு தார மணம் என்பதன் சமூக பின்புலமோ அதன் சமூக பயன்பாடோ நாம் ஆராயவில்லை என்றாலும் அதற்கு இருக்கும் மதிப்பை நாம் உள்ளூர அறிந்திருக்கிறோம். ஆராய்வதற்கு இந்திய பின்னணியில் இவற்றை ஆராய ஒரு அறிவுஜீவி உலகம் நம்மிடம் இல்லை. மேற்குலக சிந்தனையில் ஊறியவர்களே இந்தியாவின் அறிவுஜீவிகளாக இருக்கிறார்கள் என்பது ஒரு துயரமான காலனிய பின் விளைவு.

மேற்கத்திய உலகில் “நம்பிக்கை” என்பதை மற்றொரு வடிவத்தில் கூறுகிறார்கள். அறிவுப்பூர்வமாக பொய் என்பதை உதாசீனம் செய்து ஒரு விஷயத்தை உண்மை என்று நினைக்கிறோமோ அதனை நம்புவது என்று கூறுகிறார்கள். இதற்கான காரணம், பொது அறிவு உலகம் பல கோடி வருடங்கள் பழையது என்று சொல்வதை மீறி, உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது, அது தோன்றி 7000 வருடங்களே ஆகிறது என்று நம்புவது ஒரு அறிவுக்கு பொருந்தாத, அறிவியலுக்கு பொருந்தாத ஒரு நம்பிக்கை.

ஆனால் எந்த ஒரு நம்பிக்கையாக இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கை என்பது மனித மூளை என்னும் கம்ப்யூட்டரின் நினைவு தளங்களில் சேமிக்கப்பட்ட ஒன்று சைபர் ஒன்று சைபர் என்ற செய்தி தொகுப்பாக இருக்கலாம். ஆனால் பௌதீக ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.

மேலே குறிப்பிட்ட புத்தகத்தில் ஆரம்பத்தில் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

UCLA என்ற யூனிவர்ஸிட்டி ஆஃப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் என்ற பல்கலைக்கழகத்தில் உண்மையில் நடந்த ஒரு விஷயம்.
அங்கே மருத்துவ பரிசோதனைக்காக ஒருவர் வந்து பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்ந்தார். உடலெங்கும் கான்ஸர் உருவாக்கிய புற்றுகள். கட்டிகள். சாகக்கிடந்தார். ஒரு மருந்து எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை அறிய ஒரே கான்ஸர் உள்ள பத்து பேரை எடுத்து அதில் ஐந்து பேருக்கும் placebo எனப்படும் சர்க்கரை மாத்திரையும் மற்ற ஐந்து பேருக்கு பரிசோதிக்கப்படும் மருந்தும் கொடுப்பார்கள். சர்க்கரை மாத்திரை கொடுத்தவர்களுக்கு குணமானதை விட எந்த அளவுக்கு ஒரிஜினல் மாத்திரை கொடுத்தவர்கள் குணமானார்கள் என்பதை அறிந்து இந்த மருந்து உண்மையிலேயே குணப்படுத்துகிறதா என்பதை அறிவார்கள்.

அப்படிப்பட்ட பரிசோதனையின்போது இந்த மனிதருக்கு சர்க்கரை மாத்திரையை கொடுத்திருக்கிறார்கள். அந்த மனிதருக்கு உடலிலிருந்து கட்டிகள் கரைந்து ஒரே வாரத்தில் குணமானார். (இதன் பெயர் placebo effect இதனை பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Placebo )
எந்த மருந்து கொடுப்பதாக அந்த நபர் அறிந்தாரோ அந்த மருத்து சுத்த வேஸ்ட் என்று பத்திரிக்கை செய்திகள் சொன்னதை படித்தபின்னர் ஒரே வாரத்தில் அந்த கட்டிகள் மீண்டும் தோன்றிவிட்டன. மருந்து கொடுத்த டாக்டர், அதே சர்க்கரை மாத்திரையை அவருக்கு கொடுத்து, “இது புதிய வேறுபட்ட சரிசெய்யப்பட்ட மருந்து” என்று சொல்லி கொடுத்தபோது மீண்டும் அந்த கட்டிகள் மறைந்து அவர் குணமானார். FDA எனப்படும் அமெரிக்க உணவு மருந்து அமைச்சகம், அந்த பரிசோதனையே தோல்வியை தழுவியது என்று அறிவித்ததை அறிந்தபோது அந்த கட்டிகள் மீண்டும் தோன்றின.

இந்த நிகழ்ச்சி எவ்வாறு நமது மூளை நமது உடலை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.

நாம் ஒரு optical illusion பார்க்கிறோம். அதுவே உண்மை என்று நாம் நம்பினால், அது உண்மையாகிறது. அதுவே நமது உலக அறிவாகவும் ஆகிவிடுகிறது. சிறு குழந்தைகள் பூச்சாண்டியை நம்புகின்றன, மேலை நாடுகளில் சாண்டா கிளாஸ் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் ஒவ்வொரு கிறிஸ்துமஸும் வந்து பரிசுப்பொருட்களை தருகிறார் என்று நம்புகின்றன. குழந்தைகளை பொருத்த மட்டில் அவை உண்மையானவை. இதே போலத்தான் அமானுஷ்யமான செய்திகளையும், மத நம்பிக்கைகளையும் மனிதர்கள் வைத்துகொண்டிருக்கிறார்கள். நமது மூளை 30 வயதில் இறுகிவிடுகிறது. அதன் பின்னால் மெல்ல மெல்ல தனது மாறுபடும் தன்மையை இழந்துவிடுகிறது. பொய்யான நிகழ்ச்சிகளை நடந்ததாக குழந்தைகளை கருத வைப்பது எளியது. அப்படி அவர்கள் நம்பிவிட்டால், அவை மூளையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் உண்மையானவையாக நிறுவப்பட்டுவிடுகின்றன.

சிறுவயதிலிருந்து அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று பழக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது ஒழுக்க மதிப்பீடுகளை உதாசீனம் செய்து அதிகாரத்தில் உள்ளதாக நம்மால் நம்பப்படுபவர்கள் சொல்வதை அது என்ன கேவலமான விஷயமாக இருந்தாலும் செய்ய தயாராக இருப்போம். பைபிள் சொல்கிறது என்பதற்காகவும் குரான் சொல்கிறது என்பதற்காகவும் தற்கொலை செய்துகொள்ளவும், மற்றவர்களை கொல்லவும் தயாராக இருந்திருக்கிறார்கள். சிலுவைப்போர்களும், ஜிஹாத் போர்களும் இவற்றை வரலாறாக நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கின்றன. அதனாலேயே மத வேறுபாடு எளிதில் அழிக்க முடியாதது.

இந்த புத்தகமும், பெந்தகொஸ்தே கிறிஸ்துவ பிரிவினர் அன்னிய பாஷைகள் பேசுவதாக நம்பிக்கொள்வதையும், பௌத்தர்கள் தியானம் மூலம் அடையும் காலமற்ற நிலையையும் நியூரோ பயாலஜி மூலமாக விளக்க முனைகிறது.

படிக்க வேண்டிய புத்தகம்

Series Navigationவந்தவர்கள்இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012