கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1

Spread the love

ஆர் கோபால்

வி எஸ் ராமச்சந்திரன் என்ற அறிவியலாளரை பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியாது என்று கருதுகிறேன். ஆகவே அவரை பற்றிய சில அறிமுக வார்த்தைகள்.

விலயனூர். எஸ்.ராமச்சந்திரனது விக்கி பக்கம் அவரை பற்றிய ஏராளமான தகவல்களை தருகிறது.
http://en.wikipedia.org/wiki/Vilayanur_S._Ramachandran
சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனவியல் துறை பேராசிரியராகவும், நியூரோசயன்ஸ் க்ராசுவேட் புராகிராமின் இயக்குனராகவும் இருக்கிறார். நியூஸ்வீக் பத்திரிக்கை இவரை 1997இல் உலகத்தில் மிக முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்திருந்தது. 2011இல் டைம் பத்திரிக்கை இவரை உலகத்தின் மிக முக்கியமான நூறு பேர்களில் இவரை சேர்த்திருந்தது.

மனித மனத்தை பற்றி வி.எஸ் ராமச்சந்திரன் அளித்த டெட் உரை இங்கே இருக்கிறது
http://www.ted.com/talks/vilayanur_ramachandran_on_your_mind.html

ஹ்யூமானிட்டீஸ், அறிவியல் என்ற இரு தனியான துறைகளை இணைக்கும் அவரது சயன்ஸ்நெட்வொர்க் உரை
http://thesciencenetwork.org/programs/beyond-belief-enlightenment-2-0/v-s-ramachandran

நேரம் இருக்கும்போது அவற்றை எல்லாம் பார்க்க அழைக்கிறேன்.

இப்போது நான் விளக்க இருப்பது அவரது டெம்போரல் லோப் பற்றிய ஆய்வுகளும் அதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களது அனுபவங்களும், அதன் மூலம் அறிவியல் அடையும் முடிவுகளும்.

டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal lobe epilepsy என்றால் என்ன?

வலிப்பு நோய் என்பது மூளையில் திடீரென்று மூளை நியூரான் செல்கள் கன்னாபின்னாவென்று மற்ற மூளைப்பகுதிகளுக்கு தொடர்பில்லாமல் மின்சார சிக்னல்கள் பாய்வதால் உருவாகிறது. எந்த பகுதியில் அப்படிப்பட்ட மூளை நியூரான்களின் கன்னாபின்னா மின்சார சிக்னல்கள் பாய்கின்றன என்பதை வைத்து அதற்கு அந்த பெயர் சூட்டுவார்கள்.

மனித மூளையில் பல பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. நீங்கள் இந்த படத்தில் பச்சையாக இருப்பது டெம்போரல் லோப்.

டெம்போரல் லோபில் உருவாகும் கன்னாபின்னா மின்சார சிக்னல்கள்களால் வலிப்பு நோய் பெறுகிறவர்களுக்கு கடவுள் சந்திக்கிற உணர்வு, தேவதைகளை பார்ப்பது, மிகவும் வலிமையான ஆன்மீக உணர்வு அடைகிறார்கள் என்பதை மருத்துவவியலாளர்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். சில சமயங்களில் கடவுளோடு ஐக்கியமான உணர்வு, சில சமயங்களில் உலகம் பிரபஞ்சம் அனைத்தோடும் ஒன்றிய ஒவ்வொரு துகளோடும் ஐக்கியமான உணர்வு பெறுகிறார்கள்.

இதற்கான விக்கி பக்கம் இங்கே
http://en.wikipedia.org/wiki/Temporal_lobe_epilepsy

இந்த வலிப்பு நோய் துவங்குவதற்கு நேரம் காலம் ஏதும் இல்லை. 17 வயதில்தான் முதன்முறையாக இந்த நோய் தோன்றியவர்களும் இருக்கிறார்கள். 43 வயதில் முதன்முறையாக பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இதற்கான சில முக்கியமான பக்க விளைவுகள், ஜூரம் வந்து, கடுமையாக குளிர்வது போன்ற உணர்வு, இது மற்ற வலிப்பு நோய்கள் போல நீடித்துகொண்டே செல்வதில்லை. ஒரு சில வினாடிகள், அல்லது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இதனால், மற்ற வலிப்பு நோய்கள் போல கால் கைகளை இழுத்துகொண்டு கிடப்பதோ அல்லது ஒரு பக்கத்தில் வலி தோன்றுவதோ இல்லை.

இதற்கு ஹெர்ப்பஸ் என்னும் பால்வினை நோய் வைரஸ் human herpesvirus 6 காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் தலையில் அடிபடுவதோ, ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டதோ, முதுகுத்தண்டில் மெனிஞ்சிடிஸ் நோய் உருவாவதோ, மூளையில் கட்டிகள் உருவாவதோ காரணமாக அறியப்படுகிறது.

கீழே காணும் இந்த இரண்டு வீடியோக்களும் “கடவுளும் டெம்போரல் லோபும்” என்பது பற்றிய ஆவணப்படத்தின் பகுதிகள்

ஜான் என்ற ஒரு டெம்போரல் லோப் வலிப்பு நோய் கொண்டவரது அனுபவங்கள் இங்கே பகிரப்படுகின்றன.

”நான் கடவுளாக உணர்ந்தேன். நான் சொர்க்கத்தையும் நரகத்தையும் உருவாக்கியது நானே என்று உணர்ந்தேன்” என்கிறார் ஜான்.

ஒருமுறை தனது பெண் நண்பரோடு மலைகளுக்கு நடுவே நடந்துகொண்டிருந்தபோது தனக்கு இந்த தாக்குதல் நடந்ததை உணர்ந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகவும் தத்துவரீதியில் அவரது மனது ஆன்மீகம், கடவுள், இந்த மாபெரும் நடனத்தில் தனது இடம் என்பதை மிகவும் ஆழமாக தீவிரவாக சிந்தித்துகொண்டிருந்ததை உணர்ந்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு பிறகு மிகவும் பலவீனமாக உணர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் எதையுமே சாதிக்கக்கூடிய வலிமை பெற்றவராகவும் தன்னை உணர்ந்தார்.

ஒருமுறை திடீரென்று தெருவில் நடந்துகொண்டிருந்தபோது இந்த உணர்வு வந்ததும், “நானே கடவுள்” என்று நடுத்தெருவில் கத்திகொண்டே ஓடினார். அவரது தந்தை அவரை திட்டி உள்ளே வா என்று கூட்டிக்கொண்டு சென்றதை கூறுகிறார்.

ஒரு சில நேரங்களில் அந்த நிகழ்வு நடக்கும்போது அவர் வேறொரு தளத்தில் வேறொரு உண்மையில் அவர் சில நிகழ்வுகளை அனுபவித்துகொண்டிருக்கும் உணர்வை பெறுகிறார்.

அந்த நிகழ்வு வரும்போது மிக அற்புதமான இன்ப உணர்வு பெறுவதும், மிகவும் அதிகமான துன்ப உணர்வை பெறுவதும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த உணர்வை விளக்கவே முடியாத துன்பத்தை அடைவதையும் விளக்குகிறார்.

அப்பாவும் மகனும் எந்த காலத்திலும் மத உணர்வாளர்களாகவே இருந்ததில்லை. இருப்பினும்,  ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மத உணர்வை பெறுகிறார்கள் என்ற முக்கியமான கேள்விக்கு விடையறிய ராமசந்திரன் முயல்கிறார்.

”உண்மையில் ஒருவேளை கடவுள் இந்த நோயாளிகளை மனத்தில் சந்திக்கலாம். அது உண்மையாக இருந்தாலும் அதனை ஒரு அறிவியலாளனாக என்னால் பரிசோதனை செய்து அறியமுடியாது. இன்னொரு விளக்கம், இந்த நியூரான்களின் வெடிப்புகள் அந்த உணர்வை இவர்களுக்கு அளிக்கின்றன என்று கூறலாம்.” என்கிறார் எஸ். ராமச்சந்திரன்.

அடுத்த வீடியோ

”மூன்றாவது விளக்கம் என்று நான் கருதுவது என்னவென்றால், இந்த டெம்போரல் லோப் என்பது உலகத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை அறிய உதவும் பகுதி.  நீங்கள் உலகத்தில் நடந்து செல்லும்போது அதன் பொருட்களில் எது உணர்வுப்பூர்வமாக நமக்கு முக்கியமானது, எது முக்கியம் குறைவானது என்பதை பற்றிய ஒருவரைபடத்தை வைத்து அதன் மூலம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம்.  இந்த டெம்போரல் லோப்பின் மிக அருகே அமைந்துள்ளது அமிக்டலா என்னும் பகுதி. இது உணர்ச்சிகளை நமக்கு உருவாக்கித்தரும் பகுதியோடு இந்த டெம்போரல் லோபை இணைக்கும் பகுதி. இந்த பகுதிகளுக்குள் இருக்கும் தொடர்பின் வலிமையே எந்த பொருள் நமக்கு முக்கியம், எது முக்கியமில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.  நம் ஒவ்வொருவருக்கும் நமது வாழ்க்கை மூலமாக எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதற்கான வெவ்வேறு வரைபடங்கள் இருக்கின்றன. டெம்போரல் லோபில் வலிப்பு நோய் உருவானார்களுக்கு என்ன ஆகும் என்று சிந்தியுங்கள். கன்னாபின்னாவென்று பாரபட்சம் இல்லாது ஏதேதோ இணைப்புகள் வலிமையாகும். மலை மேலிருந்து வழியும் தண்ணீர் ஒரு பாதையை உருவாக்க, தொடர்ந்து பாயும் தண்ணீர் அந்த பாதையை இன்னும் ஆழமாக இன்னும் அதிக வேகத்துடன் வருவதாக மாற்றுகிறது. இதனால் பல விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இவர்களுக்கு ஆகின்றன.  இதனால், அம்மா, அப்பா, வேலை, பாய தயாராக இருக்கும் புலி ஆகியவை உணர்வு ரீதியில் முக்கியமாக இருப்பதை விட்டுவிட்டு, உலகத்தில் அனைத்து பொருட்களுமே மிகவும் உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக ஆகின்றன.  ஒரு மணல் துகள், ஒதுங்கிக்கிடக்கும் ஒரு மரத்துண்டு, கடற்பாசி ஆகிய எல்லாமே மிகவும் ஆழமாக உணர்வுப்பூர்வமாக முக்கியமானவையாக பெரும் பொருள் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. இப்படி உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே மாபெரும் பொருள் கொண்டவையாக பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து அவற்றோடு பங்குபெற்ற உணர்வைத்தான் நாம் ஆன்மீக உணர்வு என்று அழைக்கிறோம்..” என்று எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார்.

“வலிப்பு நிகழ்வு நடக்கும்போது அவரது மனத்தில் ஓடியவற்றை பற்றி அனைத்து விஷயங்களையும் தனது நிகழ்வு முடிந்ததும் வேகவேகமாக பேசுகிறான் ஜான்.” என்று ஜானின் தந்தை கூறுகிறார். “எது நியாயம் எது அநியாயம் என்பதெல்லாம் உருவாகிறது. ஏதேனும் பேரழிவு நடந்திருந்தால், அழிவு நடந்தது நியாயமானதுதான். அது அவர்களது தவறுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்ற எண்ணமெல்லாம் உருவாகிறது. ” என்று ஜான் கூறுகிறார்.

ஜான் கூறுகிறார்” இந்த மனித குலத்துக்கு நடந்ததெல்லாம் நூற்றுக்கு நூறு நடந்தது சரியாகவே நடந்தது என்ற உணர்வு தோன்றுகிறது. நான் நூற்றுக்கு நூறு சரியாகவே சொல்கிறேன். நான் வெளியே சென்று எல்லோரையும் என்னை பின்பற்ற வைக்க முடியும் என்று கருதுகிறேன். தலையில் தொப்பிகளை வைத்திருக்கும் பாதிரிமார் முட்டாள்களைப்  போலல்லாமல் நான் உண்மையான விஷயத்தை சொல்கிறேன். உலக மக்கள் மிக மிக சரியானவற்றையே சொல்லும் என்னைத்தான் பின்பற்ற வேண்டும்” என்று சொல்கிறார்

“நான் தான் புதிய தீர்க்கதரிசி என்ற உணர்வை பெறுகிறேன். உலகத்தை காப்பாற்ற வந்தவன் நான். நான் இதுவரை மத நம்பிக்கையே இல்லாதவனாக இருந்தேன். ஆனால் இப்போதோ உலகத்தை நானே காப்பாற்ற வந்தவன் என்ற உணர்வை பெறுகிறேன்”

ராமச்சந்திரன் தவறாக இணைக்கப்பட்ட நியூரான் வயர்களே இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு காரணம் என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்னால், பத்திரிக்கைகள் மூளையில் கடவுள் பகுதி இருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன.

டெம்போரல் லோபில் சில நியூரான்கள் ஆன்மீக உணர்வை உருவாக்குபவையாக இருக்கலாம். இந்த உணர்வை ஆன்மீக உணர்வு என்று பெயர் வைத்து அழைக்கப்பட்டிருக்கலாம். உலக மனிதர்களிடம் இப்படிப்பட்ட மத உணர்வு எல்லா சமூகங்களிலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத உணர்வுகள் ஒரு சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதாலும் இருக்கலாம் என்று கூறுகிறார்.


(தொடரும்)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி