கந்தா ( தமிழ் )

சிறகு இரவி.

அடுத்தவனுக்கு நடக்கும் அநியாயத்தைக் கண்டும் காணாமல் போகும் சராசரி மனிதன், அது தனக்கே ஏற்படும்போது, கொதித்தெழும் வழக்கமான கதை. பல நாள் தயாரிப்பில், காரம் குறைந்து போன மசாலா படம்.

கந்தா ( கரண் ), வரதராசன் ( ராஜேஷ் ) வாத்தியாரால் வளர்க்கப்படும் அனாதை. அவனை பண்போடு வளர்க்கும் அவர், தான் பெற்ற மகனை தத்துக் கொடுத்ததால், ஏற்படும் வினைகள்தான் முழுக்கதையும். கோலாலம்பூரில் இருந்து வரும் கந்தா, வாத்தியாரைக் கண்டெடுக்கும் இடம், ஒரு பேருந்து நிலையம். ரவுடிகளால் துரத்தப்படும் அவரைக் காப்பாற்றும் கந்தாவுக்குக், காத்திருக்கிறது பல அதிர்ச்சிகள். வாத்தியாரின் மகனை தத்தெடுத்த மந்திரமூர்த்தி ( காதல் தண்டபாணி ), அவனை ஒரு சமூக விரோதியாக வளர்க்கிறான். அவனால் பல கொலைகள். ஆனால் காவல் நிலையத்தில் ஒரு புகார் இல்லை. புகார் கொடுத்ததினால் கந்தா, மந்திரமூர்த்தி ஆட்களால் துரத்தப்படுவதும், அவர்களை வென்று, வாத்தியார் மகனை அகிம்சை வழிக்குத் திருப்புவதும், பத்து வருடங்களுக்கு முன்பு வரவேண்டிய படம். இடையில் தேன்மொழி ( ‘காவலன்’ மித்ரா) -கந்தா காதல், டூயட்டுகளுக்காக சேர்க்கப்பட்ட பாக்கெட்.

சின்ன பிரபு போல் இருக்கும் கரண், ஒரு தேர்ந்த நடிகர். ஆனால் காலாவதியான கதைகளில், அவர் தன்னை வீணடித்துக் கொள்கிறார். மாமாங்கத்துக்கு ஒரு ‘கொக்கி’ போதுமா என்று அவர்தான் சொல்ல வேண்டும். மித்ரா அந்த காலத்து சரோஜாதேவி போல, மென்மையாகச் சிரித்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். தமிழாக வரும் சத்யன், காமெடி, குணச்சித்திரம் என்று பங்கு போட்டுக்கொண்டதில், டெபாசிட் இழக்கிறார். இணைத் தண்டவாளம் போல விவேக் ( தங்கமகன் )-செல்முருகன் ( நீதிநாயகம் ) காமெடி டிராக், ஒட்டாமல் பயணிக்கிறது. விட்டாலும் சேதமில்லை. படத்தை முடித்து வைக்க வரும் காவல் அதிகாரி ஜாபர் சேட் ( ரியாஸ் கான் ) வழக்கம்போல சுத்தம்.

அறிமுக இசை அமைப்பாளர் சக்தி ஆர் செல்வராஜின் உழைப்பு ‘ சாதுர்யம் பேசாதேடா “ என்கிற மேலைநாட்டு பாடலில் தெரிகிறது. “ உயர்திரு காதல் கண்ணில் “ – கொஞ்சம்போல திறமை தலை நீட்டுகிறது. சுரேஷ் அர்ஸின் எடிட்டிங், கொடுத்த துணிக்கு தைத்த பழைய பாவாடை. நாடா நீளமென்பதால் சுற்றல் அதிகம். பாபு கே. விஸ்வநாத், இயக்குனராக நிலைக்க புதிதாக சிந்திக்க வேண்டும் என்பது காசு கொடுத்து படம் பார்க்கும், ரசிகனின் கட்டளை.

0

மொத்தத்தில் : சாம்பல் / காவடி / கப்பறை

பாமரன் குரல் : காவல் நிலையத்துல கலைஞர் படம். கரண் ஓட்டறது நவீன வெஸ்பா வண்டி. ஒட்டமாட்டேங்குதே மக்களே!

0
கொசுறு :

இப்பல்லாம் பல சினிமா அரங்குகள்லே போர்வெல் தண்ணிதான். எவ்வளவு குடிச்சாலும் தாகம் அடங்காமே, ரெண்டு ரூபா பாக்கெட் தண்ணிய அஞ்சு ரூபாய்க்கு வாங்க வைக்கிற டெக்னிக், ‘தொண்டைய அடைக்க’ன்னு சாபம் விடத் தோணுது.

டிடிஎஸ்ஸ¤, டிஜிட்டல் மேஜிக்குனு டெண்ட் கொட்டாயெல்லாம் மாறினாக்கூட (நம்மூர்ல அப்படித்தான் இருக்குது த்¢யேட்டருங்க ), பத்து டிக்கெட் மேலே போனாதான் படமே போடறாய்ங்க. பின்னே சிக்ஸ்டி-பார்ட்டில கரண்டு செலவுக்கே காட்டாது போலிருக்குதே வரக் கூட்டம்.

பரங்கிமலை ஜோதில ‘மதில் மேல் பூனை’ன்னு ஒரு படம். 12 மணி ஆட்டத்துக்கு 1 மணி வரையிலும் பூனை தெரியுது, ஆனா ‘மியாவ்’ சத்தம் கேக்கல.. ஆடீயோ அவுட். பணத்த திருப்பி வாங்கிட்டு பக்கத்து தியேட்டருக்குப் பொனா, பயபுள்ள பாதி படம் ஓட்டிட்டான்.

0

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடகதமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்