கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

trmahalingam

 

 

 

 

(டி.ஆர்.மகாலிங்கம்)

சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் நிலைபாடு. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக ஏராளமான அளவில் பணத்தைச் செலவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏராளமாக முதலீடு செய்பவர்கள் ஏராளமாக லாபத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது. தன் லாபம் பாதிக்காதபடி கலையம்சங்கள் இடம்பெறுவதில் அவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஒருபோதும் அது தன் எல்லையைத் தாண்டிவிடக்கூடாது. அடிப்படையில் அது ஒரு வணிகம் மட்டுமே என்பது இரண்டாவது அணியினரின் நிலைபாடு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மீண்டும்மீண்டும் தம் நேர்காணல்களில் ’இது ஒரு வணிகம், இது ஒரு வணிகம்’ என்று அழுத்தம் கொடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்விரண்டு கருத்துகளும் தமிழ்ச்சினிமாவின் தொடக்கத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றன. கலையாளுமை மிக்க இயக்குநர்களும் கலைவிருப்பம் கொண்ட தயாரிப்பாளர்களும் ஒன்றிணையும் தருணங்களில் கலையொருமை பொருந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. மற்ற தருணங்களில் வணிகநோக்கத்தை நிறைவேற்றுகிற திரைப்படங்களே அதிக அளவில் வெளிவருகின்றன. அவற்றை கலையொருமை குறைந்த படங்கள் என்று சொல்லலாம். தமிழில் முதன்முதலாக 1917-ல் மெளனப்படம் எடுக்கப்பட்டு, 1931 முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றளவும் அது வெற்றிகரமாக தொடர்ந்தபடி இருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாறு ஒருவகையில் தமிழ் ரசனையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். விட்டல்ராவ் எழுதியிருக்கும் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ அந்தப் பார்வையைத் தொகுத்துக்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள முக்கியமான புத்தகமாகும்.

விட்டல்ராவ் தமிழுலகம் நன்கறிந்த நாவலாசிரியர். சிறுகதையாசிரியர். தன் ரசனையின் அடிப்படையில் ‘இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தமிழ்ச்சிறுகதைகளைத் தொகுத்தவர். இளமைமுதல் அவர் திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருப்பவர். அப்படங்கள் தமக்குக் கொடுத்த அனுபவங்களை நோட்டுபோட்டு எழுதிவைத்திருப்பவர். பத்து வயதில் பார்த்த படங்களின் காட்சிகளையும் பாடல்வரிகளையும் தம் உரையாடல்களில் சர்வசாதரணமாக நினைவுபடுத்திப் பேசும் அளவுக்கு நினைவாற்றல் உள்ளவர். . தமிழ்த்திரைப்படங்களில் காலந்தோறும் மாறிவந்திருக்கும் உள்ளடக்கங்களைத் தொகுத்துரைக்கும் போக்கில் திரைப்படத்துறையின் பரிமாணமாற்றங்களை மதிப்பிட்டுச் சொல்ல விட்டல்ராவின் புத்தகம் முயற்சி செய்கிறது. தமிழ்த்திரைப்படங்கள் பக்தி ரசனையையும் புராணங்களையும் பயன்படுத்திக்கொண்ட விதம், சமூகக்கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக்கொண்ட விதம், சுவாரசியத்தை ஊட்டும் விதங்களில் துப்பறியும் கருக்களையும் அறிவியலையும் கையாண்ட விதம், வீரத்தையும் சாகசத்தையும் வெளிப்படுத்திய விதம், வன்முறையையும் தீமையையும் பயன்படுத்திக்கொண்ட விதம், பாலியலையும் நகைச்சுவையையும் பயன்படுத்திக்கொண்ட விதம் என தனித்தனிப் பிரிவாகப் பிரித்து தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார் விட்டல்ராவ். அந்த ஆய்வு வழக்கமான ஆய்வாளர்களின் ஆய்வுபோல இல்லாமல், ஒரு தேர்ந்த ரசனையுணர்வு மிக்க ஒருவருடைய நேருரைபோல இருக்கிறது. இதை இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய வலிமை என்று சொல்லலாம். ஒரு காட்சியை முன்வைத்து நிகழ்த்தும் ஆய்வின்போது, அதையொட்டி அவரால் வெகுதொலைவு பயணம் செய்து ஏராளமான விஷயங்களை தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. இது வேறு எந்த ஆய்வாளரின் குறிப்பிலும் பார்க்கவியலாத அம்சமாகும்.

தொடக்கக்காலத்தில் பம்பாயைச் சேர்ந்த ரம்னிக்லால் மோகன்லால்கள் முக்கியமான தயாரிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். 1937-ல் இவர்கள் எடுத்த ’மின்னல்கொடி’ ஒரு வெற்றிப்படம். மோகினி ஓர் இளம்பெண். மின்னல்கொடி என்பவன் ஒரு புரட்சிக்காரன். அவன் சாகும் தருணத்தில் தன் கடமைகளை நிறைவேற்றும்படி மோகினியிடம் கேட்டுக்கொள்கிறான். அதற்கு உடன்பட்ட மோகினி, அவனைப்போலவே ஆணுடை தரித்து, அவன் செய்ய நினைத்த செயல்களைச் செய்து எதிரிகளை அழிக்கிறாள். பெண்ணுருவில் அவளைக் காதலிக்கும் போலீஸ் அதிகாரி, அவளே மின்னல்கொடி என்பதை அறியும் தருணத்தில் கதையோட்டத்தில் முடிச்சு விழுகிறது. இறுதியில் தீயவர்கள் அனைவரும் அழிய, காதலர்கள் இணைகிறார்கள். இதே நிறுவனம் இந்தப் படத்தையடுத்து ‘தஞ்சாவூர் ரெளடி’ என்றொரு படத்தைத் தயாரித்தது. தஞ்சைவாழ் மக்கள் இந்தப் படத்தின் தலைப்பை கடுமையாக எதிர்த்ததால், படத்தின் பெயர் ’பக்கா ரெளடி’ என்று மாற்றப்பட்டது. இப்படி சில தயாரிப்பாளர்கள் இருந்தார்கள் என்பதே இன்று தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது. இதுபோன்ற பல புதிய தகவல்கள் புத்தகம் முழுக்க உள்ளன.

ஒத்த தன்மையையுடைய பல தகவல்களை ஒன்றிணைத்துச் செல்கிறபோக்கில் ஒரு புதிய உண்மையை வாசகர்களே மதிப்பிட்டு உய்த்துணரும்வண்ணம் எழுதும் விட்டல்ராவின் உத்தி இப்புத்தகத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். தண்டபானி தேசிகர் நடித்து முப்பதுகளின் வெளிவந்த பட்டினத்தார் படத்தையும் டி.எம்.செளந்தரராஜன் நடித்து அறுபதுகளில் வெளிவந்த பட்டினத்தார் படத்தையும் முன்வைத்து அவர் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் முக்கியமானவை. இரண்டு படங்களின் மையமும் ஒரே கதை என்றாலும் எடுத்துரைப்புமுறையில் பல வேறுபாடுகள் இருந்தன. திருவெண்காடருக்கும் அவருடைய மனைவி சிவகலைக்கும் ஈசனே மகனாக பிறக்கிறார். பழைய பட்டினத்தார் படத்தில் தரும தேவதையின் முறையீட்டால் சிவநேசஞ்செட்டியாருக்கும் ஞானகலைக்கும் குபேரன் குழந்தையாகப் பிறக்கின்றான். குபேரக்குழந்தைதான் திருவெண்காடர். அவருக்கு ஈசனே மருதவாணனாகத் தோன்றி, பொருளீட்டலில் ஞானமூட்ட ‘காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே’ என்ற ஓலையை விட்டுச் செல்ல, திருவெண்காடர் முற்றுந்துறந்து பட்டினத்தாராகிறார். இவ்விதமான தலைமுறை தெய்வாம்சம் புதிய பட்டினத்தாரில் கிடையாது. 1945-ல் டி.ஆர்.மகாலிங்கம்-ருக்மணி நடித்த ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் கிடைத்த அனுபவத்துக்கும் 1961-ல் சிவாஜி கணேசன் – பத்மனி நடித்த ஸ்ரீவள்ளி திரைப்படத்தில் கிடைத்த அனுபவத்துக்கும் உள்ள வேறுபாடுகளை மனம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விளக்குகிறார் விட்டல்ராவ். இப்படி பலவிதமான ஒப்பீடுகள் வழியாக எழுதிச் செல்லும்போக்கில், தமிழ் சினிமா அடைந்துள்ள பரிமாணங்களை அவர் மதிப்பிட முயற்சி செய்கிறார் என்றே தோன்றுகிறது. பி.யு.சின்னப்பா நடித்த ஆர்யமாலா – சிவாஜி கணேசன் நடித்த காத்தவராயன் ஒப்பீடு, எஸ்.எம்.குமரேசன் நடித்த அபிமன்யு – ஏ.வி.எம்.ராஜன் நடித்த அபிமன்யு ஒப்பீடு, 1940-ல் பி.யு.சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் – 1968 –ல் சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் ஒப்பீடு, 1941 – என்.எஸ்.கே. நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1956 –ல் எம்.ஜி.ஆர். நடித்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஒப்பீடு, 1935-ல் பரூவா நடித்த தேவதாஸ், 1953-ல் நாகேஸ்வரராவ் நடித்த தேவதாஸ், 1955 –ல் சைகல் நடித்த தேவதாஸ ஒப்பீடு என ஏராளமான ஒப்பீடுகள் புத்தகம்முழுக்க நிறைந்துள்ளன.

தண்டபானி தேசிகர் என்றதுமே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் படம் நந்தனார். விட்டல்ராவ் அப்படத்தை மட்டுமன்றி, தேசிகர் நடித்த மாணிக்கவாசகர், திருமழிசை ஆழ்வார் போன்ற படங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். விட்டல்ராவ் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு முக்கியமான படம் காளமேகம். சைவ வைணவ மதங்களிடையே நிலவி வந்த போட்டியையும் பொறாமையையும் முன்வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கினன. அவற்றில் ஒன்று காளமேகம். அதன் கதை மிகவும் சுவாரசியமானது. திருவரங்கம் கோவில் மடப்பள்ளி பணியாளன் வரதனும் திருவானைக்காவல் சிவன் கோவில் தாசி மோகனாங்கியும் காதலர்கள். திருவெம்பாவைப்பாடலில் ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்ற அடியை மோகனாங்கி பாடுகையில் மற்ற தாசிகள் அவளைச் சூழ்ந்து அவமதித்துவிடுகிறார்கள். அதனால் சைவரல்லாதவனை இனி தீண்டுவதில்லை என உறுதி கொள்கிறாள். மதத்துக்கும் காதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறான் வரதன். வேறு வழியில்லாமல் காதலுக்காக சைவனாக மாறி, திருவானைக்காவல் மடைப்பள்ளியிலேயே பணியாளனாகச் சேர்ந்துகொள்கிறான். பிறகு தேவியின் அருளால் கவி காளமேகமாகிறான்.

தமிழ்த்திரைப்படங்களில் வெளிப்பட்ட பக்தியுணர்வைப்பற்றி எழுதிச் செல்கிற போக்கில் சிவன் வேடம் தாங்கி நடித்த பலரைப்பற்றி எழுதுகிறார் விட்டல்ராவ். இடுகாட்டில் சாம்பலைப் பூசிக்கொண்டு தாட்சாணியைத் தோளில் சுமந்தவாறு ஊழிக்கூத்தாடும் பரமசிவனைக் காட்டும் தட்சயக்ஞம் படத்திலிருந்து அவர் தொடங்குகிறார். அவ்வேடத்தில் மிகவும் பொருத்தமாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற கலைஞராக ராஜகோபாலய்யர் என்னும் நடிகரைப்பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. இவர் சிவன் ராஜகோபாலய்யர் என்றே மக்களால் அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு அவர் புகழ் பரவியிருந்தது. அருந்ததி, ஆர்யமாலா போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தவை. அவரை அடுத்து சி.வி.பந்துலு என்பவர் சிவனாக நடித்தார். அவர் நடித்த படம் பக்தகெளரி.

தாழ்ந்த குலத்தில் பிறந்த நந்தனாரின் சிவபக்தியைப் புலப்படுத்தும் திரைப்படம் வெளிவந்ததுபோலவே, தலித் பெண்ணொருத்தியின் சிவபக்தியைப் புலப்படுத்திய திரைப்படம் அருந்ததி. திருஞானசம்பந்தரின் அறிவுரைகளைக் கேட்டு சிவபக்தையாக மாறும் பெண்ணொருத்தியைப்பற்றிய படம் பூம்பாவை. வாசகர்களுக்கு இவை மிகவும் புதிய தகவல்களாகவே இருக்கக்கூடும்.

நாகேஸ்வரராவ் என்றதுமே எல்லோருக்கும் நினைத்துக்கொள்ளும் ஒரு படம் தேவதாஸ். தேவதாஸ் போலவே, அவருக்குப் பேரும் புகழும் சம்பாதித்துக்கொடுத்த மற்றொரு திரைப்படம் காதலை மையமாகக் கொண்ட கானல் நீர். வங்க எழுத்தாளர் சரத்சந்திரர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம். 1961-ல் வெளிவந்த இப்படத்தில் நாகேஸ்வரராவ், பானுமதி, செளகார் ஜானகி போன்றோர் நடித்திருந்தனர். இளம்விதவை ஒருத்திக்கும் அவளுடைய குழந்தைக்கு பாடம் சொல்லித் தர வரும் இளம் ஆசிரியர் ஒருவருக்கும் உருவாகும் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர். இதுவும் நாம் அறிந்திராத ஒரு புதிய தகவல்.

ரஞ்சன், எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே., பாலையா. போன்றோரைப்பற்றி விரிவான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. தமிழ்த்திரைப்படங்களில் வளர்ந்துவந்த நகைச்சுவையைப்பற்றிய நீண்டதொரு கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது. அதில் அப்பண்ண ஐயங்கார், ஜோக்கர் ராமுடு, குஞ்சிதபாதம், கொளத்தூர் மணி, பி.எஸ்.ஞானம், காளி.என்.ரத்தினம், சி.டி.ராஜகாந்தம், ஏழுமலை, எஸ்.எஸ்.கொக்கோ, டி.எஸ்.துரைராஜ், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம், டி.ஆர்.ராமச்சந்திரன், புளிமூட்டை ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், கருப்பையா, காகா ராதாகிருஷ்ணன், தங்கவேலு, கருணாநிதி, சந்திரபாபு, ராஜகோபால், ராமராவ், நாகேஷ் என பெரியதொரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார். அந்நடிகர்கள் இடம்பெற்ற ஒரு சில நகைச்சுவைக்காட்சிகளைப்பற்றியும் அவர்கள் நடித்த முக்கியமான சில படங்களைப்பற்றியும் சுருக்கமாக இக்கட்டுரை பேசுகிறது.

ஒரு தகவலை வெறும் தகவலாகமட்டுமே ஒருபோதும் விட்டல்ராவ் தன் நூலில் கொடுப்பதில்லை. அந்தத் தகவல் உயிர்ப்புள்ள ஒரு சித்திரம்போல அவர் புத்தகத்தில் இடம்பெற்றுவிடுகிறது. ஒவ்வொரு தகவலைச் சுற்றியும் ஒரு பின்னணி இருக்கிறது. அந்தத் தகவலோடு ஒரு மனிதரோ அல்லது பல மனிதர்களோ இருக்கிறார்கள். விட்டல்ராவ் அவை அனைத்தையும் உள்ளடக்கி, அந்தத் தகவலுக்கு உயிரூட்டுகிறார். காகித மலரை உண்மையான மலராக மாற்றக்கூடிய ரசவாதம் விட்டல்ராவின் எழுத்தாற்றலுக்கு இருக்கிறது. அந்த ரசவாதக்கலையே இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கவைத்துவிடுகிறது. ஒரு கோலத்தை ஒற்றை நேர்க்கோட்டில் தெளிவாகத் தொடங்கி, தெளிவாக முடிக்கலாம். அல்லது, பல்வேறு கோணங்களிலிருந்து தொடங்கித்தொடங்கி, குறுக்கும்நெடுக்குமாக அலைந்து சிக்குக்கோலமாகவும் முடிக்கலாம். இரண்டும் தனித்தனி அழகுகள். விட்டல்ராவ் இரண்டாவது முறையைப் பயன்படுத்தி தமிழ் சினிமா அடைந்திருக்கிற பலவிதமான பரிமாணங்களை அடையாளப்படுத்துகிறார்.

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்