கயல் – திரைப்பட விமர்சனம்

இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண‌ உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம்.

இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி (ladder) என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஏணிப்படியின் ஏதாவதொரு நிலையில் தன்னை பொருத்திக்கொள்ளவே மனிதன் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. பெரும்பாலான அவனது உழைப்பு, இதற்கே போய்விடுகிறது. அதாவது, ஆதி காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால், பிறந்ததற்கே உங்களிடம் பணம் கேட்பது போல.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். அமேரிக்காவின் அட்லாண்டாவில் ஒரு மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்தேன். போகும் வழியில் ஓரிடத்தில் அவலட்சணமான, அழுக்கடைந்த ஆடைகளுடன், பார்த்த நொடியில் அசூயை கொள்ளவைக்க‌க்கூடிய ஒரு பிச்சைக்காரி, மக்கள் கூடும் இடத்தில் அமர்ந்திருந்தாள். அமேரிக்க போலீஸ்காரர்கள் அவளை துரத்த முற்படவில்லை. ஏனெனில் , அவர்களுக்கு தெரியும். அது பொது இடம். அங்கே நிற்க அவளுக்கு உரிமை உள்ளது. அவள் யாரையேனும் தொந்திரவு செய்தாளே தான் போலீஸ் அவளை அங்கிருந்து விரட்ட முடியும். அந்தக் காரியத்தை அவள் செய்யவே இல்லை. ஆனால், அந்த இடத்தில் அவளால் ஜீவித்திருக்கவும் முடியாது. ஏனெனில், சுற்றிலும் இருப்பது குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மிருகக்காட்சிசாலை. இந்தப் பூமி நம் எல்லோருக்குமானது. ஆனால், வணிக வளாகத்தில் பொருள் வாங்க பணம் வேண்டும். குடியிருப்பில் வாடகை தர பணம் வேண்டும். மிருகக்காட்சிசாலைக்குள் செல்ல பணம் வேண்டும்.

அவளிடம் பணமில்லை. இதுவே ஆதிகாலம் எனில், அங்கே வளர்ந்திருக்கும் ஏதேனும் மரத்தின் கனிகளை உண்டு அவள் பசியாறியிருக்க முடியும். அல்லது நிலத்தில் எதையேனும் விளைவித்து அவள் உண்டிருக்க முடியும். அவளுக்கான பூமியில், அவளுக்கான உணவைத் தர இயற்கை தயார். ஆனால், இயற்கைக்கும் அவளுக்கும் இடையே இன்னொரு மனிதன் வந்து, ‘எனக்கு பணம் கொடு..இல்லையெனில் உனக்கு இந்த மரத்தின் கனி இல்லை’ என்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? நிதர்சனம் என்னவெனில், இது தான் இன்றைய உலகம். இதையே புரிந்துகொள்ளாமல் பலர் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

இந்த உலகத்தினின்றும் மனித இனத்தை விடுவித்து, அத்தியாவசிய தேவை தவிர மீதமுள்ள மனிதனின் செயற்கை கட்டமைப்புகளை களையத்தான் நாம் எல்லோரும் இக்கணம் போராடிக்கொண்டிருக்கிறோம். இலக்கியத்தின் மையமும் அழகியலோடு இந்த உண்மைகளை பதிவு செய்வது தானே..

ஆதி வாழ்க்கையை இன்றைய உலகில் வாழ்வது எப்படி? அப்படி ஒரு மனிதன், ஆதி வாழ்வை, இன்றைக்கு இருக்கும் உலகில் வாழ முற்பட்டால் எப்படி இருக்கும்?. இயற்கையோடு வாழலாம். ஆனால் பணம் இல்லாமல் வாழ வேண்டுமானால் காட்டிற்குத்தான் செல்ல வேண்டும். பழகுவதற்கு காட்டில், மனிதர்கள் இருக்க மாட்டார்கள். மனிதர்களும் வேண்டும். இயற்கையும் வேண்டும். நகரத்துக்குள்ளேயே இயற்கையோடு எப்படி வாழ்வது? பணம் வேண்டும். ஆறு மாதம் உழைக்க வேண்டியது. பொருள் ஈட்டியதும் மீதமுள்ள ஆறு மாதம் இயற்கையோடு வாழவேண்டியது.

இதிலிருந்து துவங்குகிறது கயல்.

இப்படி ஊர் ஊராக செல்லும் கதா நாயகனும், அவனது நண்பனும்.

இந்த இடத்திலிருந்து எஞ்சிய கதையின் பாதையை இலக்கியம் அறிந்த பார்வையாளன் எளிதாக தீர்மானித்துவிடுவான். ஏனெனில், எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும். இயற்கையோடு இணைந்த வரை, மனிதனின் ஆயுள் குறைவாகவே இருந்தது. எப்போது அறிவியல் உள்ளே வந்ததோ, அப்போதுதான் மனிதனின் சராசரி ஆயுள் நீட்டிக்கப்பட்டது. ஆக, ஆயுள் நீட்டிப்பு என்கிற கோணத்தில் பார்த்தால், அறிவியல் கொண்ட நவீன உலகம் சாதகமே.

நகர வாழ்க்கை என்னும் பாம்பு தரும் செளகர்யம் என்னவெனில், அது பிறிதொரு பாம்பின் வாயில் விழுவதிலிருந்து காப்பாற்றுகிறது. ஆயுர்வேத மருந்துகளை நம்பி யாரேனும் திடீரென்று நவீன மருத்துவத்தை புறக்கணித்துவிட்டு, கிராமத்திற்கு சென்றால் உடனடி சாவு தான். ஏனெனில், அப்படி போனால், முதலில் ஆயிர்வேதம் என்கிற பெயரில் ஜல்லியடிக்கும், லேகியம் விற்கும் போலி டாக்டரிடம் தான் போய் விழ வேண்டி இருக்கும். அப்படிப் போய் பாதிக்கப்பட்டவர் ஏராளம். வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காட்டில் பிழைத்திருக்க தெரியாதவர்களை, நகர வாழ்க்கை ஒர் அடையாளத்தை தருவதுடன், காப்பாற்றிக்கொண்டும் தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

6 மாத காலம் உழைத்த வரை அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அடுத்த ஆறு மாதத்தின் துவக்கத்திலேயே பிரச்சனை. அதுவும் யாரோ ஓடிப்போனதற்கு அவர்கள் உதை வாங்குவார்கள்.

செளகர்யமாக, காதலர்கள் சேர்வது வரை கதை பண்ணிவிட்டு விட்டுவிட்டார் பிரபு சாலமன். காதலர்கள் இணைந்த பிறகு தான் உண்மைக்கதையே துவங்கும். தனியாக இருக்கும் வரை, காடு விட்டால் நாடு, நாடு விட்டால் காடு என்று இருந்துவிடலாம். துணை என்று வந்துவிட்ட பிறகு அப்படி இருக்க முடியாது. பாதுகாப்பின்மை வந்துவிடும். குழந்தை என்று வந்துவிட்டால் அதற்கும் சேர்த்து பொருள் ஈட்ட வேண்டும். நிரந்தர‌ ஊதியம் தேவைப்படும். கணவன் மனைவி ஆனால் தானே நிரந்தர ஊதியம் தேவை. இருவரும் சம்பாதிக்கலாம். சேர்ந்து வாழ்ந்தால் என்ன என்றால் அதற்கும் வழியில்லை. காலம் மாறும். சிந்தனையில் மாற்றங்கள் வரும். முன்பு சரி எனப்பட்டது தவறெனப் படும். அல்லது தட்டிச்செல்ல வேறு எவனாவது / எவளாவது வருவான்/வருவாள். அங்கே யார் பெரியவர் என்கிற மோதல் நிகழும்.

இந்த சிக்கல்களையெல்லாம், எந்த படங்களுமே காட்டுவதில்லை ஏனெனில், காட்டினால் யார் பார்ப்பது? ஆண்கள் பார்க்க தயாராக இருந்தாலும் பெண்கள் பார்க்க தயாராக இல்லை. ஏனெனில், உண்மை தெரிந்துவிட்டால் காதலாவது கத்திரிக்காயாவது! பெண்கள் நிறைய கேள்வி கேட்பார்கள். அவர்களது கேள்விகளின் பின்புலன், உண்மைகளைத் தெரிந்துகொள்வதே. ஆனால், சில உண்மைகளை தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாதவர்களிடம் அவ்வுண்மைகளைச் சொல்லி என்ன பயன்? வாழ்க்கைச்சக்கரம் தொடர்ந்து சுழல வேண்டுமே.

அதற்காக, உண்மைகளையே ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டு, பூடக உலகையே முன்னிறுத்தி எத்தனை நாளைக்கு உண்மையை விட்டு தள்ளியிருப்பது? இன்றைய நவீன உலகில், இத்தனை தடைக்கற்களையும் மீறி உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் பெண்கள் இலக்கற்று போய்விடுகிறார்கள். வெறுமை சூழ்ந்து கொள்கிறது அவரகளை. ஏன்? திடீரென்று பார்க்கக் கிடைக்கும் உண்மையின் தரிசனம். மாறாக, உண்மைகளுக்கு அவர்களை பழக்கப்படுத்திவிட்டால்? பூடக உலகையே காட்டிக்கொண்டிருந்தால் உண்மைக்கு எப்போது பழக்கப்படுவது?

கயல், பூடக உலகின் எல்லைக்குள்ளேயே நின்று விடும் படம்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationஇலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்