கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு

Spread the love

 

பாவண்ணன்

vmbஇந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நேஷனல் புக் டிரஸ்டு வழியாக ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவருடைய ‘பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துத் தோழியும்’ நாவல்கள் அவரை இந்தியாவின் எல்லா மொழி வாசகர்களிடமும் கொண்டு சேர்த்தது. மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் வெளிவந்த ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ ‘மதில்கள்’ ஆகிய இரு நாவல்களும் இந்திய இலக்கியத்தில் பஷீருடைய இடம் எத்தகையது என்பதை  அழுத்தம் திருத்தமாக வரையறுத்தது. மானுடரின் இதயங்களில் கருணை சுடர்விடும் மாபெரும் தருணங்கலின் தொகுப்பாக இருக்கிறது பஷீரின் படைப்புலகம். அவர் பாதை வற்றாத கருணையின் பாதை. கனிவின் பாதை.

பஷீர் திருடர்களின் சித்திரங்களை நமக்கு அளிக்கிறார். விலைமகள்கள், வழிப்பறியாளர்கள், மோசடி செய்பவர்கள், சோம்பேறிகள், நோயாளிகள், பெண் தரகர்கள் என பலவிதமான எதிர்மறைப் பாத்திரங்களை தம் படைப்புகளில் சித்தரிக்கிறார். சிறிதளவு கூட மிகையோ குறையோ இன்றி அவர்களுடைய நடை, உடை, பாவனைகளை தம் எழுத்தில் கொண்டுவருகிறார். ஆனால், அவருடைய கதைகளின் உச்சம் என்பது இத்தகு மனிதர்களிடம் வெளிப்படும் கருணையின் தருணமாகவே உள்ளது. ஒரு கண கருணைக்குப் பிறகு அவரவர்களும் அவரவர்கள் வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள். பாலைவனப் பாதையில் நீர்ச்சுனைகள்போல வாழ்க்கையில் இத்தகு தருணங்கள் நிறைந்துள்ளன.

இன்று தமிழில் பஷீரின் முக்கியமான எழுத்துகள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்பல பகுதிகளாகச் சொல்லும் பல நூல்கள் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் இ.எம்.அஷ்ரப் என்பவரால் எழுதப்பட்ட ‘காலம் முழுவதும் கலை’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகமொன்று குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தது. பஷீரின் இளம்வயது அலைச்சல்களைப்பற்றிய சித்திரங்களை ஓரளவு அதன்வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. இப்போது வெளிவந்திருக்கும் எம்.கே.ஸானுவின் ’தனிமையில் பயணிக்கும் துறவி’ வாழ்க்கை வரலாறு பலவகைகளில் விரிவானதாக இருப்பதை உணரமுடிகிறது. நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பு இயல்பாகவும் வாசிப்புக்குத் துணைபுரிவதாகவும் இருக்கிறது.

பஷீரின் வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்து எம்.கே.ஸானு   எழுதியுள்ளார். முதல்பகுதி முழுக்க பஷீருடைய இளமைக்கால அலைச்சல்கள் நிறைந்துள்ளன. அவர் ஒரு எழுத்தாளராக உருப்பெறுவதற்கு மூலதனமாக அமைந்த அனுபவங்கள் இந்தக் கட்டத்திலேயே அவரை வந்தடைந்தன. இரண்டாவது பகுதி, மலையாள உலகின் மாபெரும் எழுத்தாளராக அவர் உயர்ந்த காலத்தை விவரிக்கிறது. நூல்வெளியீடுகள், விமர்சனங்கள், ஓய்வில்லாத எழுத்துமுயற்சிகள், நண்பர்களுடைய உதவிகள், எர்ணாகுளத்தில் அவர் திறக்கும் புத்தகக்கடை என அனைத்தையும் பற்றிய குறிப்புகள் அப்பகுதியில் உள்ளன. மூன்றாவது பகுதி மிகச்சுருக்காமனது. புகழின் உச்சத்திலேயே வாழ்ந்து, தொடர்ச்சியாக வாசகர்களின் பாராட்டுகளில் திளைத்து, மறைவது வரைக்குமான காலகட்ட வாழ்க்கையைப்பற்றிய விவரங்கள் இதில் உள்ளன.

பஷீரின் இளம்வயது வாழ்க்கை பல சுவாரசியங்களும் சாகசங்களும் நிறைந்த ஒரு கலவை. ஐந்து சகோதரசகோதரிகளுடன் பிறந்தவர் பஷீர். பஷீருக்கு நல்ல உயர்கல்வியை வழங்கவேண்டும் என்பது அவருடைய அப்பாவின் விருப்பம். பத்தாயிரத்துக்கும் அதிகமாக தேங்காய்களைக் கொடுக்கக்கூடிய பெரியதொரு தோப்பு ஆற்றங்கரையை ஒட்டி அவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒருநாள் விளையாட்டுத்தனமாக ஈர்க்கங்குச்சியால் சுருக்கிடப்பட்டு பிடிக்கப்பட்ட தண்ணீர்ப்பாம்பை தூக்கிக்கொண்டு தெருவெங்கும் ஒரு ராணுவவீரனைப்போல நடந்துவந்த சிறுவன் பஷீரை அடித்துத் திருத்த அவர் தயங்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரை குளக்கரைக்கு அழைத்துச் சென்று அந்தப் பாம்பை சுருக்கிலிருந்து விடுவிக்கச் சொல்லி, பாம்பு உயிர்பிழைக்கும்படி செய்தார். ’அல்லாவின் படைப்புகளில் எதையும் காரணமின்றி துன்புறுத்தக்கூடாது’ என்று அக்கணத்தில் அவர் சொன்ன சொற்கள் பஷீரின் நெஞ்சில் அப்படியே படிந்துவிட்டன.

பஷீரின் அம்மாவும் கருணை நிறைந்தவர். அவருக்குச் சொந்தமான ஒரு தோப்பில் ஓர் ஈழவக்குடும்பம் வசித்து வந்தது. தோப்பு வேலைகளை அவரே மேற்பார்வை பார்த்துவந்ததால், அங்கேயே அவருக்கு வீடு வசதி செய்து தரப்பட்டிருந்தது. அவர் அத்தோப்பின் மூலையில் ஓர் எட்டிமரத்தடியில் தாம் வணங்குவதற்குரிய தெய்வங்களின் சிலைகளை நிறுவி வணங்கிவந்தது அந்தக் குடும்பம். அந்த எட்டிமரம் வயதான மரம். நன்கு விலைபோகக்கூடியது. அதை வாங்கிக்கொள்வதற்காக வியாபாரம் பேச வந்த  வியாபாரியை பஷீரின் அம்மா திருப்பி அனுப்பிவிட்டார். தோட்டக்காரனின் நம்பிக்கையை தான் மதிப்பதாகவும் ஆயினும் அந்தக் குடும்பம்  அங்கிருக்கும் வரை அந்த மரத்தை விற்கமுடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.  பெற்றோரிடமிருந்த கருணையின் அம்சம் பஷீரின் நெஞ்சிலும் மிக இயல்பாக பெருக்கெடுத்தோடியது.

மதம் என்பதை மட்டுமே ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்ளும் பார்வை பஷீருக்கு உவப்பானதாக இருந்ததில்லை. மானுடம் மீதான இயற்கையான அவருடைய கருணையே அதற்குக் காரணமாக இருக்கலாம். ‘நானொரு நல்ல இந்துவாக இருந்தால்மட்டுமே ஒரு நல்ல முஸ்லிமாகவும் ஒரு நல்ல கிறிஸ்துவனாகவும் ஒரு நல்ல பார்ஸியாகவும் இருக்கமுடியும்’ என்ற காந்தியின் அறிக்கையை ஒட்டி ஒருமுறை பஷீருக்கும் அவருடைய நண்பர்களுக்கும்  இடையே ஒரு விவாதம் நிகழ்கிறது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட பி.கே.பாலகிருஷ்ணன் ‘காந்தியின் கருத்தில் ஒரு சாரமுமில்லை, அவர் ஒரு இந்து மட்டுமே’ என்று தெரிவித்தார். மேலும் காந்திஜி குண்டடி பட்டு இறந்தபோது ’இந்துக்களின் நல்லதொரு தலைவர் மறைந்துபோனார்’ என இரங்கல் செய்தியை வெளியிட்ட முகம்மது அலி ஜின்னாவின் சொல்லில் உண்மை இருப்பதாகவும் வாதிட்டார். அதற்கு அன்று கடும் எதிர்வினையாற்றிய பஷீர். எந்த நல்ல மதநம்பிக்கையாளரும் பிற மத நம்பிக்கையாளர்களை மதிப்பார்கள் என்று உறுதியாகச் சொன்னார்.

காந்தியின் வாழ்த்துகளுடன் வைக்கம் போராட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பஷீருக்கு வயது பதினாறு. பள்ளிமாணவர். 1925ஆம் ஆண்டில் காந்தி நேராக வைக்கத்துக்கே வந்திருந்தார். காந்தியின் தலைமையிலான போராட்டத்தில் ஈடுபட அவர் மனம் துடித்தது. (காந்தியைப் பார்ப்பதற்காக தான் சென்ற பயணத்தைப்பற்றியும் அவரைத் தொட்டு மனம் சிலிர்த்ததைப்பற்றியும் பஷீர் பிற்காலத்தில் எழுதியுள்ளார்.) அப்போது ஏதோ ஒரு வேலையைச் செய்யும்பொருட்டு பஷீரை வயலுக்கு அனுப்பிவைத்தார் அவர் அப்பா. வயலுக்குச் சென்ற பஷீர் வழியில் நண்பர்களைச் சந்தித்ததும் தந்தை சொன்ன வேலையை மறந்து விளையாடச் சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான் அப்பா சொன்ன வேலை நினைவுக்கு வந்தது. வேலையைச் செய்யாததற்குத் தண்டனையாக அப்பா அடித்தார். அடி வாங்கிய கோபத்தில் பஷீர் கோபத்துடன் வீட்டைவிட்டுக் கிளம்பினார். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவேசம் அதற்குரிய உந்துதலைத் தந்தது. நேராக வைக்கம் படகுத்துறைக்குச் சென்றார். அங்கிருந்து எர்ணாகுளம் சென்றார். பிறகு கோழிக்கோட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். காங்கிரஸ் அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்துவிட்டார். மறுநாளே தொண்டர்களுடன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்கைதியானார்.

இப்படி ஏராளமான பயணங்கள். ஒரு கண முடிவில் தொடங்கப்பட்டவை. எல்லாமே தனிமைப்பயணங்கள். இடையில் அவர் அரசாங்கத்தால் தேடப்படும் ஓர் அரசியல் கைதியாக அறிவிக்கப்படுகிறார். தலைமறைவு வாழ்க்கை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. அந்தக் கட்டத்தில் அவர் சந்திக்க நேர்ந்த ஒவ்வொருவரும் அவருக்கு ஏதோ ஒரு வகையில் துணையாக நிற்கிறார்கள். அறிமுகமே இல்லாத ஒரு கொங்கணிக்காரர் தன் பத்திரிகையில் அவர் முதன்முதலாக கதை எழுத ஒரு வாய்ப்பை அளித்து பணம் தருகிறார். இன்னொருவர் மும்பையில் உள்ள தன் உறவினனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து ‘இந்த முகவரியில் போய் பாருங்கள்’ என்று யாரோ ஒருவர் நம்பிக்கையூட்டி அனுப்பிவைக்கிறார். மும்பைப்பயணத்துக்குத் தேவையான பயணச்சீட்டை வேறொருவர் வாங்கிக்கொடுக்கிறார். மும்பையில்  அவர் தேடிச் சென்ற ஆளுடைய அறை பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைத்து வேறு வழி எதுவும் தோன்றாமல் அங்கேயே நின்றிருந்த தருணத்தில் எதிர்வீட்டிலிருந்து வெளியே வந்த இளம்பெண்ணொருத்தி அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து அவர் தங்கிக்கொள்ள உதவி செய்கிறார். வழிநெடுக அவர் நல்லவர்களைச் சந்தித்தபடியே செல்கிறார். அவரிடமிருந்து பணப்பையைத் திருடிய கள்வனொருவன், சாப்பிட்டுவிட்டு பணம் செலுத்த முடியாமல் வசைபட்டு நிற்கும் பஷீரைப் பார்த்து மனமிரங்கி, அந்தப் பணத்தைச் செலுத்தி அவரை மீட்கிறான். அவருடைய பணப்பையையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறான்.

அவர் எங்கு சென்றாலும் நன்மை அவரைத் தொடர்கிறது. அல்லது நன்மையின் பாதையில் அவர் தொடர்ந்து செல்கிறார். கராச்சி, தில்லி, ஜம்மு, காஷ்மீர் என பல இடங்களுக்குச் செல்கிறார். டால் ஏரிக்கரையில் நடந்த களைப்பில் கண்ணில் பட்ட ஒரு கூடாரத்தை நோக்கிச் செல்கிறார். வணக்கம் சொல்கிறார். அங்கிருந்தவர் அவரை வரவேற்று உணவு கொடுத்து அனுப்பிவைக்கிறார். இப்படியெல்லாம் நடக்குமா என நினைத்துக்கூட பார்க்கமுடியாத சம்பவங்கள் எல்லாம் பஷீரின் வாழ்க்கையில் மிகவும் இயற்கையாக நடைபெறுகின்றன.

அந்த நாடோடி வாழ்க்கையின் அனுபவங்கள் அவரை ஓர் அனுபவச்சுரங்கமாக மாற்றிவிடுகிறது.  கடும் குளிரையும் வெப்பத்தையும் அனுபவித்துவிட்டு இந்துக்களும் இஸ்லாமியர்களுமான துறவிகளுடன் வசித்த பிறகு அவர் கேரளத்துக்குத் திரும்பிவந்தார். பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். தீபம், பெளரநாதம் போன்ற பத்திரிகைகளில் திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸை ஆதரித்தும் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயரை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதினார். திருவிதாங்கூரில் அவை தடை செய்யப்பட்டு, அவர் அரசாங்கத்தால் தேடப்படக்கூடிய மனிதரானார். அதே சமயத்தில் பஷீர் என்னும் பெயருடைய இன்னொருவர் திருவிதாங்கூரில் வலுப்பெற்றிருந்த மாணவர் எழுச்சியின் தலைவராக விளங்கினார். அவர்தான் இந்த அரசியல் கட்டுரைகளை எழுதுகிறவர் என தவறாக நினைத்து, காவல்துறை அவரைத் தேடத் தொடங்கியது. உடனே தான் வேறு, அந்தப் பஷீர் வேறு என்பதைப் புலப்படுத்தும் விதமாக, தன் பெயரை அன்றுமுதல் வைக்கம் முகம்மது பஷீர் என்று மாற்றிவைத்துக்கொண்டார்.

மிகச்சிறந்த எழுத்தாளராக அவர் அறியப்பட்டிருந்தபோதிலும் அவரைப் பிடிக்காதவர்களும் எழுத்துலகில் நிறைந்திருந்தார்கள். அவருடைய படைப்புகள் வெளிவரும்போதெல்லாம் ஏதேனும் சில சில்லறை எதிர்பார்ப்புகள் முளைத்துவிடும். ’என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ நாவல் பாடப்புத்தகமாக அறிவிக்கப்பட்ட தருணத்தில் பலத்த எதிர்ப்பு உருவானது. பள்ளிக்கூடத்தில் அனுமதிக்கத்தக்க புத்தகம் மட்டுமல்ல, எந்த இடத்திலும் அனுமதிக்கத் தகுதியில்லாத புத்தகமென்று சட்டமன்ற உறுப்பினர்களும் இலக்கியவாதிகளும் உரைநிகழ்த்தினார்கள். சட்டசபையில் கேள்விகளும் தொடர்விவாதங்களும் நிகழ்ந்தன. அன்று கல்வியாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்விவாதமோ, ஆதரவான குரலோ எழவில்லை. இரண்டோ மூன்றோ பிரபலமான இலக்கியவாதிகளைத் தவிர யாரும் குறிப்பிடும்படியாக எதுவும் பேசவில்லை. இது பஷீரின் மனத்தை மிகவும் ஆழமாகப் பாதித்தது. ‘சப்தங்கள்’ குறுநாவல் வெளிவந்த சமயத்திலும் பஷீர் இதேபோன்றதொரு எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

எர்ணாகுளத்தில் புத்தகக்கடையை நடத்திவந்த போதும் நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு பஷீர் அடிக்கடி சென்னைக்கு வரும் பழக்கம் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் தலைமறைவாக இருப்பதற்காக சென்னையைத் தேடி வருவது பழக்கமாக இருந்த காலம் அது. அப்போது திருவிதாங்கூரிலும் மலபாரிலும் கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்து சிறைகளில் அடைத்துக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை சென்னைக்கு வந்த பஷீர் இடதுசாரி சிந்தனையைக் கொண்ட ஜெயகேரளம் என்னும் பத்திரிகை அலுவலகத்தில் தங்கியிருந்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயகேரளம் அடைக்கலம் தருகிறது என்று தெரிந்துகொண்ட காவல்துறையினர் எதிர்பாராத தருணத்தில் பத்திரிகை அலுவலகத்தை சோதனை செய்ய நுழைந்தார்கள். அங்கிருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்களில் பஷீரும் ஒருவர். அன்றைய கேரள அமைச்சர் கே.பி.மாதவமேனோனின் உத்தரவுக்கிணங்க அந்தச் சோதனை நடைபெற்றதாக பலர் சொன்னார்கள். பஷீர் எவ்வித அச்சமும் இல்லாமல் காவல்துறை அதிகாரியிடன் நேரிடையாக தனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென்று சொன்னார். தான் ஓர் எழுத்தாளன் என்றும் புரட்சியிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் அவர்களுடைய உதவி எதுவும் தனக்குத் தேவையில்லை என்றும் தன் வழியே வேறு என்றும் எடுத்துரைத்தார். அவர் பேச்சில் இருந்த நேர்மையும் நியாயமும் அந்தக் காவல்துறை அதிகாரியை சற்றே அசைத்தன. அப்போதே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கேசவ்தேவ், தகழி, பொற்றேகாட், உரூப், காரூர் போன்ற எழுத்தாளர்கள்  பஷீரின் காலத்தைச் சேர்ந்த முக்கியமான ஆளுமைகள். அவர்கள் எழுதிய ஒருசில படைப்புகளால் அவர்களுடைய பெயர்கள் இலக்கிய உலகில் நிலைத்துவிட்டன. அவர்களுடைய புகழுக்குரிய படைப்பின் உயரத்தை அவர்களுடைய மற்ற படைப்புகள் தொட்டதில்லை. ஆனால் பஷீரின் விஷயமே வேறு. அவர் எப்போதும் நிலைத்து நிற்கும் மைல்கல். அவர் எழுதிய ஒவ்வொரு படைப்பும் வைரமென சுடர்விட்டபடி இருக்கிறது. அவருடைய படைப்புகள் அனைத்தும் வாசிப்பவர்களின் நெஞ்சை நேரடியாகச் சென்று தொடக்கூடியவை. அவர் அடைந்த வாழ்வனுபவங்களின் சாரத்தின் துளிகளால் ஆனவை அவருடைய படைப்புகள். எளிமையும் மேதைமையும் நிறைந்தவை. குறும்புகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் அவர் படைப்புகளில் பஞ்சமே இருந்ததில்லை. அதே சமயத்தில் நன்மையும் ஆன்மிகமும் கருணையும் சத்தியமும் ஊடுபாவுகளாக நிறைந்திருக்கின்றன. இப்படி ஒரு கச்சிதம் வேறெந்த படைப்பாளியின் படைப்புகளிலும் பார்க்கமுடிந்ததில்லை.

 

 

(பஷீர்- தனிமையில் பயணிக்கும் துறவி. வாழ்க்கை வரலாறு. மலையாள மூலம்: எம்.கே.ஸானு. தமிழில்: நிர்மால்யா. சாகித்திய அகாதெமி வெளியீடு. சென்னை-18. விலை.ரூ.355 )

Series Navigationபெங்களூர் நாட்கள்பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்