Posted in

கல்பீடம்

This entry is part 20 of 23 in the series 14 ஜூன் 2015

மனிதனுக்கும் கடவுளுக்குமான
உரையாடல் –
நீ தடுக்கி விழுந்தால்
இடறியது என் கால் என்று அறி
என்றான் இறைவன்
நான் நாளை இருந்தால்
உன் அதிகாரம் இங்கே
கேள்விக்குறி என்றான் மனிதன்
வானளாவிய அதிகாரம் படைத்த
என்னை
கோவிலில் வைத்து
பூட்டிவிட்டாயே என்றான் இறைவன்
நான் எழுப்பிய ஆலயத்தில்
யார் உன்னை குடிபுகச்சொன்னது
என்றான் மனிதன்
வருடத்தில் ஒருமுறை தானே
என்னை வீதியுலா அழைத்துச் செல்கிறாய்
என்றான் இறைவன்
எங்களின் சரண கோஷத்துக்கு
ஏன் மயங்குகிறாய்
என்றான் மனிதன்
என்னை வந்தடையவே
ஏழு பிறவிகள் எடுக்கிறாய்
என்றான் இறைவன்
விதி என்று சொல்லி
நீ செய்யும் திருவிளையாடல்
எங்களுக்கு புதிதா என்ன
என்றான் மனிதன்
பிறக்கும் முன்னே
எங்கிருந்தாய்
என்றான் இறைவன்
நிச்சயம் உன் கைப்பாவையாக
இருந்திருக்க மாட்டேன்
என்றான் மனிதன்
இறந்த பின் எங்கிருப்பாய்
என்றான் இறைவன்
நீ வசிக்கும்
சுவர்கத்தின் திசையில்
தலை வைத்துக் கூட படுக்கமாட்டேன்
என்றான் மனிதன்
நான் உன் முன்பு தோன்றினால்
என்ன வரம் கேட்பாய்
என்றான் இறைவன்
உன்னைக் கண்டவர்கள்
எல்லோருக்கும்
திருவோட்டைத் தானே
நீ பரிசளித்திருக்கிறாய்
என்றான் மனிதன்
என் லீலையிலிருந்து நீ
தப்பிவிட முடியுமா
என்றான் இறைவன்
இறப்பதற்கு துணிந்த பின்
இது என்ன வெட்டிப் பேச்சு
என்றான் மனிதன்
உன் முற்பிறவியை அறிந்து கொள்ள
வேண்டாமா என்றான் இறைவன்
அதனை அறிந்து கொண்ட பின்
உயிரோடு இருக்கவும் கூடுமோ
என்றான் மனிதன்
உனக்கு கட்டற்ற சுதந்திரத்தை
நான் ஏன் அளிக்கவில்லை தெரியுமா
என்றான் இறைவன்
உன்னை நகல் எடுத்து
உன்னுடன் மோத விட்டுவிடுவோமோ
என்ற பயத்தில் தானே
என்றான் மனிதன்
கோள்களை வைத்து
உனது ஜாதகக் கட்டத்தில்
ஏன் ஆட்டம் காட்டுகிறேன்
என்று தெரியுமா
என்றான் இறைவன்
இன்னொரு இயேசு
பிறந்துவிடுவாரோ
என்ற பயத்தில் தானே
என்றான் மனிதன்
இயற்கைக்கு அடிமை செய்ய
இனி என்னால் முடியாது
என்றான் இறைவன்
இறப்பை யாவர்க்கும்
பொதுவில் வைத்த
இயற்கைக்கு என் நன்றி
உரித்தாகுக
என்றான் மனிதன்.

ப.மதியழகன்

Series Navigationமிதிலாவிலாஸ்-22ஒரு நிமிடக்கதை – நிம்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *