கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

ஓடுகளாய். 
ஒரு சந்திப்புக்குப்
பின்னான நம்பிக்கைகள்
பொய்க்காதிருந்திருக்கலாம்.
தூசு தட்டித் தேடி
எடுக்கப்பட்ட கோப்புகளில்
இருந்து பெய்யும்
எண்ணத் தூறல்களில்
நனையாது இருந்து
இருக்கலாம்.
எங்கோ அகதியாய்
விட்டு வந்த
நிலக்கோப்புகளை
பராமரித்துப் பொடியாய்
அடுக்காதிருந்திருக்கலாம்.
பழையனவற்றில்
நனைவதும், மூழ்குவதும்
தவிர்க்கயியலா போதுகளில்
திசைவிட்டு திசை நகர்ந்து
குடியிருப்பை அமைக்கும்
சிலந்தியை காணுவதும்
தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம்.
இதுதான் என தீர்மானித்தபின்
உயிர்வாழ்வதும்
மரணிப்பதும்
ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட
ஓடுகளாய் சரியும்வரை.

வேர் பாய முடியாத செடிகள்..:-
**********************************************

நெருப்புப்பொறி பறக்க
சந்திப்பு நிகழ்ந்தது
ஒரு எதிரியோடோ
முன்ஜென்ம விரோதியோடோ
உராய்ந்து திரிந்து
இந்த ஜென்மத்தில்
ஏன் கண்டுபிடித்தாய்
என்ற கண்டனத்தோடு.

பாலை தேசங்களில்
மண்ணைப் பதியமிட்டு
செடிகளைச் செருகி
நீரூற்றில் நனைந்து
பசியக் கிடந்தாலும்
காலூன்ற முடியாமல்
வேக்காளமும் தாக்க
கருகும் அல்லது
அணுங்கும்.

ஒவ்வொரு முறையும்
செடிகள் வருவிக்கப்பட்டு
பதியமிடப்படும்
மண்ணோடு..
மண் ஊன்ற விழைந்தாலும்
வேர்பாய முடியாத செடிகள்
வாழும்வரை பூப்பூத்து மடியும்
வெவ்வேறு இடங்களில்

Series Navigationஅன்னையே…!செல்லம்மாவின் கதை