கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

காலப்போக்கில்
களிமண் திரண்டு
கரையை நிறைத்ததால்
கடல் வணிகம் குன்றிப்போக
காலாவதியாகிப்போன
கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும்

காரைக்குடி சென்னை
கம்பன் எக்ஸ்பிரஸ்
கைவிடப்பட்டதால்
காற்று வாங்கும் ரயிலடிக்கும்
இடையே

பல ஆண்டுகளாக
பசுமை மாறாமல்
பரந்து நிற்கின்ற
பாதாம் மரத்தடியில்
பள்ளிப் பருவத்தில்
பரீட்ச்சைக்குப் படிக்கச்
செல்வதுண்டு

குட்டிக்ககுரா பவுடரும்
கொலுசுச் சப்தமுமாக
உலவும்
மோகினிப் பிசாசுக்குப்
பயந்து
கட்டிடத்துள்
செல்வதில்லை எனினும்

இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க

தூசு படிந்த தரையில்
சற்றே சுத்தமான மூலையில்
சப்பையான காலிக் குப்பியும்
காளிமார்க் சோடா போத்தலும்
நீர்த்துப்போன பீடித்துண்டுகளும்

கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும்

உதிரியாய்
பல பூவிதழ்களும்
சணலில் தொடுத்த காம்புகளும்
தரையில்
பிடரியளவு
ஒட்டிய எண்ணெய்ப் பிசுக்கும்
ஒரு சரிகை இழையும்
சில ஜிகுனா துகள்களும்
கண்டு

மோகினிப் பிசாசுவின்
பழக்க வழக்கங்கள் குறித்து
தெளிவில்லாமலிருந்தது

சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாளங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.

-sabeer.abushahruk@gmail.com

Series Navigationந‌டுநிசிகோடங்கிபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா