காப்பியக் காட்சிகள் – ​14. சிந்தாமணியில் க​லைகள்

, தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

மனிதனின் உள்ளத்தைத் தன் வயமாக்கி இன்பம் தந்ததோடு மட்டுமல்லாது தான் உணர்ந்து மகிழ்ந்ததை பிறரும் உணர்ந்து மகிழ அவ்வாறே வெளிப்படுத்தும் ஆற்றலே கலை எனப்படும், இக்கலைகள் ஓவியம், சிற்பம், காவியம் எனப் பலவகைகளில் வெளிப்படும். இவ்வாறு வெளிப்படும் கலைகளை 64 வகையாகப் பிரித்தனர். புத்தர் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரம் எனும் நூலிலும், சமண நூல்களிலும், இந்து சமய நூல்களிலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன(மா. இராசமாணிக்கனார், தமிழகக் கலைகள், ப.,3).

சமணர்களின் நூல்களில் ஆடவர் கலைகள் 72 என்றும் பெண்கள் கலைகள் 64 என்றும் கலைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன(மா. இராசமாணிக்கனார், தமிழகக் கலைகள், ப.,3). சமணசமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் இசை, ஓவியம், சிற்பம், ஒப்பனை, நாடகம், போர் ஆகிய கலைகளைப் பற்றிய பல்வேறுவிதமான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

இசைக்கலை

சிந்தாமணியில் இசைக்கலையைக் குறித்த செய்திகள் 56 இடங்களில் இடம்பெற்றுள்ளன. நீரின் வரவை அறிவிப்பதற்கும், திருமணச் செய்தியைப் பிறருக்குத் தெரிவிப்பதற்கும், போர்க்களத்திற்குச் செல்வதை வெளிப்படுத்துவதற்கும், வணிகம் செய்வதற்குச் செல்லும் வணிகர்களின் பயணத்தைக் குறிப்பதற்கும் பழங்காலத்தில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

முரசு, சங்கு, தொண்டகப்பறை, துடி, பேரியாழ், முழவு, குழல், யாழ், தண்ணும்மை, மொந்தை, தகுனிச்சம், சிறுபறை முதலிய இசைக்கருவிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்தன(சீவகசிந்தாமணி, பா-ள்.,433,434,530,965). இவற்றில் மிகவும் சிறப்பிற்குரியதாக வீணை எனப்படும் இசைக்கருவி விளங்கியது. இவ்வீணையை அறிஞர்கள் யாழ் என்று குறிப்பிடுகின்றனர்.  இவ்யாழில் மாணிக்கக்கற்கள், மரகதக் கற்கள் முதலிய விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன((728). யாழைச் சிறப்பிக்கும் வகையில் மாதங்கி என்னும் தெய்வத்தை யாழுக்குரிய தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்தனர்(550). யாழில் நரம்பு, வார்க்கட்டை, பாதிமதி(பிறைநிலா) போன்ற உருவம் உடைய ஆணிகள் இடம்பெற்றிருந்தன(559).

யாழில் செம்பாலை, நூவழி, சாமவேதம் முதலிய பண்கள் பாடப்பட்டன(723,854,2038) யாழிசையில் கிளை என்னும் நரம்பிசையும் இளி என்னும் நரம்பிசையும் இனிமையான நரம்பிசைகளாகக் கருதப்பட்டன(1537,2857). ஆடவர்கள், பெண்கள் என்ற இருபாலரும் யாழில் தேர்ச்சி பெற்று விளங்கினர். இசையின்மீது மக்களுக்கு இருந்த விருப்பத்தைக் குழந்தை பிறந்ததும் அக்குழந்தை பிற்காலத்தில் நன்கு பாடுவதற்கு ஏற்ப வாயை அகலப்படுத்தினர்(2703) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது. இதிலிருந்தும் காந்தர்வதத்தையின் திருமணம் யாழிசைப் போட்டி வழி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்தும்(551,552) இசைக்கலையின் சிறப்பை அறியலாம்.

இசையைக் கற்பிப்பதற்கு வீணாபதி என்ற இசையாசிரியர் இருந்தமையையும் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(618). மேலும் இசையின் உயர் தரத்தையும் தரமற்ற தன்மையையும் அறிந்து கொள்வதற்கு ஐயறிவு உயிர்களையும் உயிர்களற்ற கல்தூண்களையும் நம்பினர். நல்ல இசைக்குக் கல்தூணும் துளிர்விடும்(657).  கின்னர மிதுனம் எனும் பறவை மண்ணில் வீழும்(659). கெட்ட இசைக்கு கின்னரமிதுனம் எனும் பறவைகள் அஞ்சிப் பறக்கும்(651). இச்செயல்களைக் கொண்டே ஓர் இசை நல்ல இசையா கெட்ட இசையா என்பதை முடிவு செய்தனர்.

இசைக்கலையின் சிறப்பு

இசைக்கருவிகளோடு போட்டி போட்டுக் கொண்டு குரலிசையும் பாடப்பட்டதை சிந்தாமணி குறிப்பிடுகின்றது. யாழிசையும் குரலிசையும் பருந்தும் நிழலும் போல விளங்க வேண்டும்(730). யாழிசையும் குரலிசையும் சேர்ந்து பாடத் தெரியாதவர்கள் இசைக்கல்வியில் தோல்வி                அடைந்தவர்களாகக் கருதப்பட்டனர்(735). குரலிசையில் பாடும்பொழுது பாடுபவரின் புருவம் நெற்றியில் ஏறக்கூடாது. கண்கள் ஆடக்கூடாது. தொண்டை விம்மக் கூடாது. பற்கள் வெளியில் தெரியுமாறு பாடுதல் கூடாது. வாய் திறப்பது தெரியாத வகையில் பாடவேண்டும்(658). இவற்றில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் யாழிசையில் தோல்வி அடைந்தவர்களாகக் கருதுவர். இதைக் காந்தருவதத்தை இசைப்போட்டியில் தோல்வியடைந்ததை எம். நாராயணவேலுப்பிள்ளை குறிப்பிடும்போது,

மூன்று தாழிசைக் கொச்சகமும் இளவேனில் வருகின்றமை கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்கு உரைத்தனவாகக் கூறினாள். வேட்கையும் சிறிது புலப்பட்டு நின்றது. காந்தருவதத்தை பாடிய பாட்டும் யாழும்       வேறொரு திறமாய் இருந்தன. தத்தையின் மெல்விரல் யாழ் நரம்பின் மீது செல்லவில்லை. அவள் யாழை விடுத்து கண்டத்தால் பாடினாள். மிடறு நடுங்கிற்று. அதனால் அவள் தோல்வியுற்றாள்(ஐம்பெருங்காப்பியங்கள்,     ப., 134)

என்று தெளிவுறுத்தியுள்ளார். இதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளில் ஏதேனும் ஒரு சில தவறுகள் இருப்பினும் போட்டியில் தோல்வியடைந்தவர் என்று கருதப்படுவர் என்பது தெளிவாகிறது.

யாழ் என்னும் இசைக்கருவியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் யாழ் நரம்பில் இருக்கும் குற்றத்தையும் யாழ் செய்ய பயன்பட்ட மரத்தின் தன்மையையும், யாழிசையை மீட்டியே அறியும் வல்லமை பெற்றிருந்தனர். நல்ல  இசையை எழுப்ப முடி சேர்ந்த நரம்பும் அழுகிய மரத்தால் செய்த யாழும் பயன்படாது என்பதை நன்கு அறிந்திருந்தனர்(714,-719).

யாழிசை திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது(834). பெண்கள் ஆடவரைக் கூடக் கருதியபொழுது யாழிசைத்து அழைத்தனர்(2718). இன்ப நுகர்ச்சியின் குறியீடாக யாழிசை விளங்கியது. அரசர் முதல் வேளாண் மக்கள் வரை யாழிசையில் வல்லவர்களாக விளங்கினார்கள் என்பதைக் காந்தர்வதத்தையின் திருமணத்தியற்காக நடந்த இசைப்போட்டியில் ஏழு நாட்கள் வரை பல்வேறு வருணத்தவர்களும் கலந்து கொண்டதைக் கொண்டு உணர முடிகிறது(659-663). இசைக்கருவிகள் பலவாகவும் பண்கள் பலவாகவும் அனைத்து மக்களும் விரும்பும் கலையாகவும் இசைக்கலை விளங்கியது என்பதை உணரலாம்.

ஓவியக்கலை

சிந்தாமணியில் பத்து வகையான குறிப்புகள் ஓவியக்கலை பற்றி காணப்படுவது நோக்கத்தக்கது. ஆண்கள், பெண்கள் இருவரும் ஓவியங்கள் வரைவதில் திறம்பெற்றவர்களாக விளங்கினர். ஓவியங்கள் தன் மனதில் பதிந்ததை வரையவும் தன்னைக் காப்பாற்றிய மயிற்பொறி வடிவத்தையும் ஓவியமாக வரையும்  முறை இருந்தது(2603). பெண்கள் தங்கள் தோளில் கொடிகளை ஓவியமாக     வரைந்து கொள்ளும் தொய்யில் எழுதும் முறையும் வழக்கத்தில் இருந்தது(2716). துணிகளில் பலவகையான ஓவியங்களை வரைந்தனர்(1033). ஓவியங்களை வரைவதற்குத் திரைச்சீலைகள், சுவர்கள், மண்டபங்கள் முதலியவை பயன்பட்டன(2085).

ஓவியங்கள் பல வண்ணங்களைத் தன்னுள் கொண்டிருந்தன. வண்ணங்களை உருவாக்குவதற்குப் பல நிறத்தால் ஆன மணிகளைக்       கரைத்து ஓவியம் வரையப் பயன்படுத்தினர்(1003). ஓவியங்கள் வரைய எழுதுகோல்கள் பயன்படுத்தப்பட்டன(1107). ஓவியத்தைத் தொழிலாக ஏற்று நடத்தும் ஓவியர்களும் இருந்தனர்(594,596,597). இவர்கள் வரைந்த ஓவியம் மிகவும் நேர்ததியுடையதாக இருந்தது. ஓவிய மண்டபத்தில் இருந்த ஓவியங்கள்    அவை வெளிப்புறம் வரையப்பட்டதா? உட்புறம் வரையப்பட்டதா என்பதை அறிய முடியாத வகையில் நேர்த்தியுடன் விளங்கியதையும் விலங்கினங்கள் தங்களைப் போன்ற விலங்குகளின் ஓவியங்களைக் கண்டு இவை உயிருள்ள விலங்குகள் என்று மயங்கியதையும் கொண்டு ஓவியக்கலை அக்காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதை உணரலாம். (தொடரும்…………..15)

Series Navigationசூடு சொரணை இருக்கா?கவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)