காப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்

Spread the love

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

 

சீவகசிந்தாமணி காப்பிய காலத்தில் ஆண்களும் பெண்களும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவியது. இந்நம்பிக்கைகள் அவர்களின் உள்ளக்கிடக்கையினைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

பெண்கள்  மலைக்குச் சென்று தவம் செய்தால் நல்ல மைந்தர்களைப் பெற்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது(465). ஈடும் இணையுமற்ற குழந்தைகளைத் தவத்தால் மட்டுமே பெற இயலும் என்று அவர்கள் நம்பினர்(467) பெண்கள் ஆண்களுக்குத் தொண்டுபுரிவதற்கு உரியவர்கள் என்ற நம்பிக்கையும் பெண்களிடையே நிலவிவந்ததை சீவகசிந்தாமணி எடுத்துரைக்கின்றது.

ஆடவர்களின் அறிவைச் சிதைப்பவர்கள் பெண்கள். பெண்களை விரும்புவர்கள் வீடுபேற்றை நினைக்க முடியாது. மனஉறுதி இல்லாதவர்கள் பெண்கள். எண்ணிப் பத்துவிதமான பொருள்களை வைத்தால் பொருளை வைத்தவரின் பின்னால் செல்லக் கூடியவர்கள். திருமணம் முடிக்காமல் பெண்களை நீண்டகாலம் வைத்திருத்தல் பாவம். செயற்கரிய செயல்களைப் பெண்களால் செய்ய இயலாது.

மேலும் பெண்ணின்பத்தை விரும்புவர்கள் நரகத்தை அடைவர் என்பது போன்ற பெண்களைக் குறித்த இழிவான நம்பிக்கைகள் அக்காலத்தில் சமுதாயத்தில் நிலவி வந்தது நோக்கத்தக்கது. கற்புடைய பெண்கள் தெய்வம் போன்றவர்கள். கணவன் இறந்தால், அல்லது துன்புற்றால், வேற்றூருக்குச் சென்றாலோ, மன்மதன் பெயரைக் கூறாது கணவனை வணங்கி வாழும் பெண்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள் என்பன போன்ற பெண்களை உயர்வு செய்யும் நம்பிக்கைகளும் அக்காலத்தில் நிலவியது என்பதை சீவகசிந்தாமணி எடுத்தியம்புகின்றது.

ஆண்கள் குறித்த நம்பிக்கைகள்

ஆண்கள் பொன்னுக்காக இழிந்த குலத்தைச் சார்ந்த பெண்களைத் தழுவுதல் கூடாது. ஆண்கள் துன்பம் வரும்போது அழக்கூடாது. அழுவது அவர்களது இயலாமையைப் புலப்படுத்தும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவியதை(509) திருத்தக்கதேவர் எடுத்தியம்புகின்றார். கணவன் மனைவியைப் பிரிந்து வாழக் கூடாது. இணைந்தே வாழ்தல் வேண்டும்(1599). அந்தணர் வருந்த கடுஞ்சொல் கூறக்கூடாது. அவ்வாறு ஆண்கள் அந்தணர் வருந்த கடுஞ்சொல் கூறினால் துன்புறுவர்(934). அதேபோன்று ஆசிரியரின் சொல்லை மதித்து நடத்தல் வேண்டும். ஆண்கள் ஆசிரியர் சொல்லை மதித்து நடப்போர் சிறப்பினை அடைவர்(393) என்பன போன்ற ஆண்கள் குறித்த நம்பிக்கைகளை சீவகசிந்தாமணி குறிப்பிடுகின்றது.

ஆண் பெண் இருவருக்குமான நம்பிக்கைகள்

ஆண்களின் விரல் அமைப்பை வைத்து அவர்கள் விற்பயிற்சிக்கு ஏற்புடையவரா என்பதை அக்காலத்தில் அறிந்தனர்(1645). மாணவர்கள் ஆசிரியரிடம் தீயைப் போல நெருங்காமலும், விலகாமலும் பழகுதல் வேண்டும்(1648). அழகு, வலிமை, வெற்றி என்ற மூன்றையும் கல்வி உருவாக்க வல்லது. அதனால் முயன்று கல்வி கற்றல் வேண்டும்(1922). ஆண், பெண் இருவருக்கும் திருமணம் என்பது முன்வினையால் நிகழ்வதாகும்(1340).

அமங்கலமான சொற்களை யாரும் கூறுதல் கூடாது. அவ்வாறு இழிந்த மங்கலமற்ற சொற்கள் காதில் விழுவதாகத் தெரிந்தால் அச்சொல் காதில் விழும்முன்பாக மங்கலச் சொல் ஒன்றைக் கூறிவிடுதல் வேண்டும். அச்சொல் அமங்கலத்தை மங்கலமாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் ஆண்பெண் இருவரிடையேயும் நிலவிவந்தது(2043).

ஆணோ பெண்ணோ நோன்பிருந்தால் அவர்கள் பிறரது அடிகளைப் பணிவர்(889). இவ்வுடலானது முன் செய்த தீவினையை அனுபவிப்பதற்காகவே இவ்வுலகிற்கு வந்துள்ளது(945) என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் நிலவியது. தீர்த்தங்களில் நீராடுவது புனிதமாகக் கருதப்பட்டது. குமரிக்கடலில் நீராடினால் மூப்புத் தொலையும்(2020) என்று மக்கள் நம்பினர். இன்றும் புனிதத் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் போய் புண்ணியம் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவிவருவது ஒப்பு நோக்கத்தக்கது.

சமய நம்பிக்கைகள்

அருகப்பெருமானது திருவடிகளைத் தொழுதால் நன்மை விளையும். இறப்பு, வாழ்தல் ஆகிய முன்வினைப்பயன்கள் தொலையும்(510,511) என்று மக்கள் கருதினர்.  புயல், தெய்வத்தின் சீற்றம், ஊழ்வினை ஆகியவற்றை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது(508). வீடுகளில் உள்ள தூண்களில் தெய்வம் வந்து உறையும்(1527,1530,2926). தேவர்கள் மண்ணுலகில் நடப்தை அறிவர்(1377). ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் அமராவதி நகரில் அரம்பையர் சூழ அவையில் வீற்றிருப்பான்473) என்பது மக்களின் சமய நம்பிக்கையாக இருந்தது.  அருகதேவனின் பாதங்களை மலர்தூவி வழிபடுபவர்கள் மறுபிறப்பில் அரசர்களாகப் பிறப்பர்(2739) எனபன போன்ற சமய நம்பிக்கைகள் பல அக்காலச் சமுதாயத்தில் ஆண், பெண் இருவரிடையேயும் நிலவியது.

சீவகசிந்தாமணிக் காப்பியம் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைக்கும் காப்பியமாக இருந்தாலும் அதில் அக்கால சமுதாயக் காட்சிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இக்காட்சிகள் அனைத்தும் அக்கால மக்களின் வாழ்க்கையைப் புலப்படுத்துவனவாக உள்ளன. இக்காட்சிகள் அனைத்தும் சமுதாயத்தையும் தனிமனிதனையும் நல்வழிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. காப்பியத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து கற்றால் இன்னும் பற்பல காட்சிகள் விரிந்து இன்பம் பயக்கும் என்பது திண்ணம். (முற்றும்)

Series Navigationசைக்கிள் அங்கிள்தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு