கிளம்பவேண்டிய நேரம்.:

Spread the love


**********************************

காலம் கடந்துவிட்டது
நீங்கள் கிளம்பவேண்டிய
நேரம் வந்துவிட்டது.
நொடிக்கணக்குடன் துல்லியமாய்.

ஒரு புத்தக வாசிப்பு
பாதிப்பக்கங்களில்
சுவாரசியம் தீர்க்காமல்
உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது.

உங்கள் புத்தகத்தையே
கடைசிப் பக்கம்வரை
வாசிக்க அனுமதிக்கப்
படுவதில்லை நீங்கள்.

நீங்கள் சேர்த்த மூட்டை
முடிச்சுக்கள் கட்டப்பட்டுவிட்டன.,
நீங்கள் உருவாக்கிய
எண்ணம் தவிர்த்து.

யாருக்கு சேர்க்கிறோம்
எதற்கு சேர்க்கிறோம்
யார் யாரோ எடுத்துக் கொண்டால்
என்ன செய்வது என பதட்டமடைகிறீர்கள்.

இது இன்னாருக்கு என
உயில் எழுத நினைக்கிறீர்கள்.
உங்கள் பேனாக்களில்
போதுமான மை இல்லை.

உங்கள் குழந்தைகளை நினைக்கிறீர்கள்.
கொள்கைகளை நினைக்கிறீர்கள்.
இயங்க முடியாமல் செய்த
இயக்கங்களை வெறுக்கிறீர்கள்.

கண்ணீரோடு கருணைமனு
அனுப்பிக் காத்திருக்கிறீர்கள்
மிச்சபக்கங்கள் முடிக்கும்வரையாவது
பொறுக்கச் சொல்லி..

Series Navigationவிடுவிப்பு..:-சேமிப்பு