குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21

Spread the love

“வாங்க, மேடம்!…. அப்பா! நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் இவங்கதான்!… உள்ள வாங்க, மேடம்  நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? …எல்லா டிகெகெட்சும் வித்தாச்சு, மேடம்!” என்று ஒரு போலியான உற்சாகத்துடன் ராதிகா அவளை உள்ளே அழைத்தாள்.

தமக்கு முதன் முதலாய் அறிமுகப்படுத்தப்பட்டவருக்குச் சொல்லுவது போல், தீனதயாளன், “வணக்கம்!” என்றார்.
“இவர் என் அப்பா. மிஸ்டர் தீனதயாளன். ரெய்ல்வே டிபார்ட்மெண்ட்ல இருக்காரு.”

“அப்ப ரிசெர்வேஷனுக் கெல்லாம் உங்கப்பாவை அப்ரோச் பண்ணலாம்னு சொல்லு!” என்று சிரித்த சிந்தியா அவருக்குப் பதில் வணக்கமாய்க் கைகூப்பினாள்.

“வாங்க. உக்காருங்க.”

மூவரும் உட்கார்ந்தார்கள்.

“நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னு கேட்டேனே, மேடம்?”

“உன் வீடுன்னு தெரிஞ்சு நான் வரல்லேம்மா.  டிக்கெட் விக்கிறதுக்கு இந்த ஏரியாவுக்கு வந்தேன். அப்படியே, இது உங்க வீடுன்னு தெரியாமயே, இங்க வந்தேன்.  .. நீதான் எல்லாத்தையும் வித்தாச்சுன்றியே! அதனால உன் வீட்டாரை மேக்கொண்டு உபத்திரவப்படுத்தறதா இல்லே!”  என்று கூறிவிட்டு, சிந்தியா சிரித்தாள்.

பற்பசை விளம்பரங்களில் வருவது போன்ற ஒழுங்கான பல் வரிசையும், அதன் வெண்மையும், ஈறுகளின் ரோஜா வண்ணமும் ராதிகாவை அயர்த்தின.  அது யார் வீடு என்பதே தெரியாமல் அவள் அங்கு வந்து அழைப்புமணியை அழுத்தினாள் என்பதை நம்ப ராதிகா தயாராக இல்லை. தொலைபேசி இலக்க வழிகாட்டி நூலில்தான் தீனதயாளனின் முகவரியும் அச்சாகியுள்ளதே!  ‘ஓர் ஆர்வத்தில் அதைத் தெரிந்துகொள்ளாமலா அவள் இருப்பாள்? பொய் சொல்லுகிறாள்!  இன்று அப்பா வீட்டில் இருப்பார் என்பதும் இவளுக்குத் தெரிந்தே இருந்திருக்க வேண்டும். அவருடைய மனைவி-மக்களைப் பார்க்கும் ஆர்வக் கோளாற்றால் வந்திருக்கிறாள்! தப்புச் சொல்ல முடியாது. இயல்பான ஆவல்!’

“ராதிகா! உங்கம்மாவை நான் பாக்கலாமா?”

“ஷ்யூர்! ஒய் நாட்? அம்மா! அம்மா! இங்க கொஞ்சம் வாங்களேன்!”

தனலட்சுமி தன் ஈரக்கையை ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே அங்கு வந்தாள்.

“நீங்களும்  உக்காருங்கம்மா.  நான் சொன்னேனே, அந்த மிசஸ் சிந்தியா தீனதயாளன் இவங்கதான்….”

உட்கார்ந்தபடியே, “சொன்னே, சொன்னே. நான் கூட உன்னை கலாட்டா பண்ணினேனே, உங்கப்பா பேரு அவங்க பேரோட ஒட்டிக்கிட்டு இருக்கிறதால, அவங்க மேல உன்னையும் அறியாம ஒரு ‘இது’ ன்னு!”  என்ற தனலட்சுமி சிந்தியாவை நோக்கிப் புன்னகை புரிந்தாள்

தீனதயாளன் தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்திருக்க, சிந்தியா ஓர் அசட்டுப் புன்னகை செய்தாள். ஆனால் அவள் தலைகுனியாமல், தனலட்சுமியை ஓர் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ராதிகாவின் முகம் இறுகிவிட்டது: ‘அட, அசட்டு, அப்பாவி அம்மாவே! இவள் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தீனதயாளன் அச்சு அசல் உன்னோட புருஷன்தான் என்பதும், அந்த ஆள் வேறு யாரோ அல்லரென்பதும் உனக்குத் தெரிந்தால் நீ தாங்குவாயா?’
“நீங்க லேடீஸ் பேசிட்டிருங்க. நான்  வர்றேன். கொல்லன் பட்டறையில ஈக்கு என்ன வேலை?” என்று ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு எழுந்து தீனதயாளன் தமது அறை நோக்கி நடந்தார். சிந்தியாவின் பார்வையைக் கவனமாய் அவர் தவிர்த்துச் சென்றதை ராதிகா கவனித்தாள்.

“உங்களுக்குப் பசங்க இருக்குறாங்களா?” என்று தனலட்சுமி அவளை விசாரித்தாள்.

“இல்லீங்கம்மா! ரொம்ப நாளுக்கு முந்தி ரெண்டு அபார்ஷன் ஆச்சு.  அதுக்குப் பெறகு எதுவும் இல்லே.” – சிந்தியாவின் முகம் கணம் போல் களையிழந்து பின் தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
அவளுக்குக் குழந்தைகள் இருந்தனவா என்றறியும் ஆவல் ராதிகாவுக்கும் இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே தன் அம்மா அவ்வாறு அவளைக் கேட்டது நாகரிகக் குறைவான செயலாக அவளுக்குப் பட்டது. அதே நேரத்தில், தனக்குக் குழந்தைகள் இருப்பினும், தீனதயாளனின் கட்டளைப்படி அதை மறைக்கிறாளோ என்றும் அவளுக்குத் தோன்றியது.

“சாரி, மேடம். எங்கம்மாவுக்கும் சேத்து!”

“அதனால என்ன? பரவால்லே.  எல்லாரும் கேக்குற கேள்விதானே?”

அதன் பின்னரே தன் தவற்றை உணர்ந்த தனலட்சுமி, “சின்ன வயசுதானே உங்களுக்கு? இன்னும் வயசு இருக்கே! கட்டாயம் பொறக்கும்! அது சரி, உங்க வீட்டுக்காரர் என்னவா யிருக்காரு?” என்றாள்.

கடைசிக் கேள்விக்குப் பதில சொல்லுவதைத் தவிர்த்தவாறு, “எனக்கு நாப்பத்தஞ்சு வயசாச்சும்மா. இனிமே பொறக்காது!” என்று அவள் தனலட்சுமியின் முதல் கேள்விக்குப் பதில் சொன்னதாய் ராதிகாவுக்குத் தோன்றியது.

“என்னது! நாப்பத்தஞ்சா! நம்பவே முடியலியே! உங்களை யாரும் முப்பத்தஞ்சுக்கு மேல சொல்லவே மாட்டாங்க. உடம்பை நல்லா வெச்சிருக்கீங்க!”

சிந்தியா தலை கவிழ்ந்து வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டாள்.

“அப்ப, நான் வரட்டுமாம்மா?” என்று அவள் எழ, ராதிகா அவளை ஆழமாய்ப் பார்த்தாள்.  எதனாலோ, திடீரென்று அவள் மீது இவளுக்கு இரக்கம் வந்தது.

“ஒரு கூல் ட்ரிங்க் கூடக் குடிக்காம போனா எப்படி?” என்றவாறு எழுந்த ராதிகா அடுத்த நிமிடமே ஒரு குளிர்ப் பானத்துடன் அவள் முன் ஆஜரானாள்.

அதைக் குடித்த பின், “தாங்க்ஸ்… அப்ப வரட்டுமா? உங்கப்பா கிட்ட சொல்லிடுங்க!” என்று கூறிவிட்டு அவள் புறப்படத் தயாரானாள்.

“அப்பா! அவங்க கெளம்புறாங்க.”

“சரிம்மா!”

தீனதயாளனை எழுந்து வரச் செய்ய ராதிகா மேற்கொண்ட முயற்சி தோற்றது. அவர் தம் அறையிலிருந்தவாறே பதில் சொல்லிவிட்டார்.  வெளிவாசல் வரை தொடர்ந்து சென்று ராதிகா அவளை வழியனுப்பினாள்.  ராதிகாவின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிவிட்டு, சிந்தியா படியிறங்கிப் போனாள்.

கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே வந்த ராதிகாவின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  தன்னைப் பார்ப்பதில் அவளுக்கு இருக்கக்கூடிய ஆவலை அவளால் புரிந்துகொள்ள முடிந்தாலும்,  ‘என்ன துணிச்சல்! எவ்வளவு நெஞ்சழுத்தம்!’ என்று தோன்றியது.  முன்னறிவிப்பின்றி அவள் வந்தது அப்பாவுக்கு அறவே பிடித்திருந்திருக்காது என்று அவள் நினைத்தாள். தன்னறைக்குப் போவதற்கு முன்னால் தீனதயாளனின் அறையைக் கடந்த போது அவள் ஜாடையாக அதனுள் கவனித்தாள். அவர் தமது மடியில் இருந்த புத்தகத்தைப் பார்த்தபடி இருந்தார்.  ஆனால், அவர் விழிகள் அசையாமல் நிலைகுத்தி ஒரு வெறித்தலோடு இருந்தது கண்டு அவரால் படிப்பில் ஈடுபடமுடியவில்லை என்று அவள் கண்டுகொண்டாள்.

சொல்லாமல் கொள்ளாமல், திடீரென்று தமது வீட்டுக்கு வந்து நின்று தம்மைத் திகைப்பிலும் திடுக்கிடலிலும் ஆழ்த்தியமைக்காக அவளை அவர் அடுத்த முறை சந்திக்கும் போது கோபித்துக் கொள்ளக் கூடும் என்று அவள் எண்ணினாள். உண்மையாகவே டிக்கெட்டுகளை விற்பதற்கு அந்தப் பகுதிக்கு வந்தாலும், தீனதயாளனின் வீடு அது என்பது தெரிந்தேதான் அவள் வந்திருக்க வேண்டும் எனும் நிச்சயமான ஊகம் அவளை வியப்புறச் செய்தது.  ‘செய்கிற  தப்பையும் செய்துவிட்டு, தன்னால் துரோகமிழைக்கப்பட்ட ஒரு நல்ல பெண்மணிக்கு முன்னால் வந்து நிற்கவும் அவளால் முடிகிறதே!  அப்படியானால், அவள் ஒரு கல்நெஞ்சுக்காரிதான். மனச்சாட்சி என்பதே கடுகளவும் இல்லாதவள்தான்!  ஹ்ம்…இந்த அப்பாவுக்கே மனச்சாட்சி இல்லாத போது, அவளிடம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்?  ….’

“எம்புட்டு அழகா யிருக்குறா அந்த சிந்தியா! சினிமா ஸ்டார் கணக்காவில்ல இருக்குறா!  இது மாதிரி ஒரு அழகை நான் பாத்ததே இல்லே.  அவளுக்குக் கொழந்தைங்க பொறந்தா ரொம்ப அழகா யிருப்பாங்க”

“அவங்க ஜாடையில பொறந்தா அழகாயிருப்பாங்க.  எங்கப்பாவைக் கொண்டு ….” – வாக்கியத்தை முடிக்காமல் அந்த இடத்தில் புரை ஏறியது போல் ராதிகா இருமத் தொடங்கினாள்.

பிறகு, “எங்கப்பாவைக் கொண்டு நாங்க பொறந்திருந்தா அழகாயிருந்திருக்க மாட்டமே!…அது மாதிரி அவங்க வீட்டுக்காரரைக் கொண்டு பொறந்திச்சுங்கன்னா?”   என்றாள்.

“அவரை நீ பாத்திருக்கிறயா?” என்று தனலட்சுமி வினவ, “இல்லேம்மா. ஒரு பேச்சுக்குச் சொன்னேன்!” என்று ராதிகா சமாளித்தாள்.
கழிவறை நோக்கி நடந்துகொண்டிருந்த தீனதயாளனின் தப்படி தவறியதைக் கவனித்து அவள் தனக்குள் கசப்புடன் சிரித்துக்கொண்டாள்.  தொடங்கிய வாக்கியம் பாதியில் அறுபட்ட நிலையில் தீனதயாளனுக்குத் தூக்கிவாரித்தான் போட்டது.  அதை அவள் முடித்த பிறகு அப்பாடா என்றிருந்தது.  அந்த விளையாட்டுப் பேச்சுக்கு வழக்கம் போல் எதிரொலிக்காமல் தாம் இரண்டு தப்படிகளுக்கும் மேல் நடந்து விட்ட தவறு புரிய, வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன் தலை திருப்பி ராதிகாவைப் பார்த்து, “ஏய்! என்ன? உதை கேக்குதா?” என்று தமாஷாய் மிரட்டிவிட்டுக் கழிவறை நோக்கிச் சென்றார்.

“பாவம்டி அவங்க! கொழந்தைங்க இருக்குதான்னு கேட்டதும் அவங்க மொகம் ஒரு மாதிரி ஆயிடிச்சு.  கொழந்தைங்க இல்லாத துக்கத்தை மறக்கத்தான் அநாதை விடுதி வெச்சு நடத்துறாங்க போல இருக்கு!”

‘அட, அசட்டு அம்மாவே! அவள் உங்கள் சக்களத்தி என்பதும் உங்களுக்கு அநியாயம் செய்தவள் என்பதும் தெரிந்தால், அவள் மீது பரிதாபப்பட்டு இப்படிப் பேசுவீர்களா?’

தீனதயாளனும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார்.  சிந்தியாவின் மீது அவருக்கு ஒரே கோபம்.  அவள் தன் மனைவி-குழந்தைகளை ஒரு போதும் சந்திக்கக் கூடாது என்று தாம் இட்டிருந்த கட்டளையை இப்படி மீறுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

‘உன்னை சிந்தியா என்று மட்டுமே சொல்லிக்கொள். உன் பெயரோடு என் பெயரை இணைத்துக்கொள்ளாதே என்று எத்தனையோ தடவைகள் படித்துப் படித்துச் சொல்லியாகி விட்டது. கண்டிப்பாகச் சொல்லிவைத்துவிட வேண்டும் – இனி என் வீட்டுப்பக்கம் தலை வைத்தும் படுக்காதே என்று.  நான் செய்தது தப்பே யானாலும், ஏதோ என் குடும்பம் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறது.  அதைக் கெடுத்து விடாதே என்று கறாராய்ச் சொல்ல வேண்டும்.   அவளை அறவே ஒதுக்கிவிடலாம், கழற்றி விடலாம் என்று பார்த்தால் முடியவில்லை.  அவள் அழகும் வாளிப்பும் என்னைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன. அப்படியே, அவளை விலக்கிவிட முடிந்தாலும், அதன் பின் அவள் என்னை எப்படிப் பழி வாங்குவாளோ! யார் கண்டது?  … இல்லை, இல்லை. இது பொய்யான நொண்டிச்சாக்கு.  என்னால் அவளின்றி இருக்க முடியாது என்பதே உண்மை….அவளது அழகுக்கும் ஆளுமைக்கும் முன்னால் மற்ற காரணங்கள் யாவும் இரண்டாம் பட்சமானவைதான்! என் பலவீனத்தை என்னால் வெற்றிகொள்ளவே முடியாது என்பதே கசப்பான நிஜம்….’

கழிவறையிலிருந்து வெளிப்பட்ட பின் தமது அறையை அடைந்த தீனதயாளன சாப்பிட்டுவிட்டு உடனே வெளியே செல்லத் தீர்மானித்தார்.  டிக்கெட் விற்பதற்குத் தான் நாலு இடங்களுக்குப் போகவேண்டிய திருக்குமென்றும், எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் வந்தால் போதுமென்றும் அவள் அவரிடம் ஏற்கெனவே சொல்லி யிருந்தாள்.  அதனால்தான் அலுவலகத்தில் வேலை இருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு வழக்கம்போல் பத்து மணிக்கெல்லாம் புறப்படாமல் அன்று வீட்டிலேயே தங்கி யிருந்தார்.

கூடத்துக்கு வந்து உட்கார்ந்துகொண்ட ராதிகா தன் கைப்பையில் இருந்த பொருள்களைத் தரையில் கொட்டி, வேண்டாதவற்றை யெல்லாம் கழிக்கத் தொடங்கினாள்.

“என்னம்மா பண்றே?”

“ரொம்பக் குப்பை யாயிடிச்சுப்பா என்னோட ஹேண்ட்பேக். பஸ் டிக்கெட்ஸ், பில்ஸ், வேண்டாத காகிதங்கள்னு ஏகத்துக்குக் குப்பை சேந்திடிச்சுப்பா.  அப்பப்ப ஒழிக்கக் கை வர்றதே இல்லே. அதான் இன்னைக்கி ஒழிச்சுக்கிட்டு இருக்கேன்.”

“ஏம்மா? பஸ்லேர்ந்து எறங்குறப்பவே பஸ் டிகெட்டைத் தெருவில வீசிப் போட வேண்டியதுதானே? எதுக்கு பேக்ல வெச்சுக்கறே? பழசு, புதுசு எல்லாம் கலந்து போயிறாதோ? செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து டிக்கெட்டைக் கேட்டு, நீயும் தவறுதலாப் பழசை எடுத்து நீட்டினியானா வம்பாகாதோ? டிக்கெட்டே வாங்காம நீ பழசைக் காட்டி ஏமாத்துறதா இல்லே சந்தேகப்படுவாங்க?”

“நீங்க சொல்றது கரெக்டுப்பா.  இனிமேப்பட்டு அப்படித்தான் செய்யணும்.”

அந்தச் சமயத்தில் தொலை பேசி மணியடிக்க, ராதிகா எழுந்தாள்.  கூப்பிட்டவள் பத்மஜாதான். அப்போது கூடத்துக்கு வந்த தனலட்சுமி, துண்டுக் காகிதங்கள் தவிர சின்னச் சின்ன சாமான்களை மகள் தரையில் பரப்பி வைத்திருந்ததைக் கவனிக்காமல், மின்விசிறியைச் சுழலவிட, காகிதத் துணுக்குகள் நாற்புறங்களிலும் பறந்தன. வரிசை இலக்கங்கள் கொண்ட டிக்கெட்டுகள் கிழிக்கப்பட்ட ஒட்டுச்சீட்டுகளின் சேர்க்கை சுழன்று பறந்து தீனதயாளனின் காலடியில் வந்து விழுந்தது.  அவர் குனிந்து அதை எடுத்துப் பார்த்தார். காசினோ தியேட்டரில் வெள்ளிக்கிழமையன்று சினிமாப் பார்த்ததற்கான டிக்கெட்டுகளின் ஒட்டுச்சீட்டுகள் அவை என்பதைக் கண்டதும் அவர் முகம் வெளுத்தது.  ஏதும் அறியாதவர் போல், எச்சில் விழுங்கியபடி எழுந்த அவர் அதை கசக்கிச் சுருட்டி எடுத்துக்கொண்டு தமது அறைக்குப் போனார்.

பிற்பகல் காட்சிக்கு சிந்தியாவுடன் காசினோவுக்குச் சென்ற தமது மடமையை நொந்துகொண்டார். ‘ராதிகா ஜாடைமாடையாகச் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என்னை இடிக்கத்தான்!  மாலைக் காட்சிக்குச் சென்றிருந்தால் இப்படி ஒரு வம்பில் மாட்டிக்கொள்ள நேர்ந்திருக்காதல்லவா!  மினர்வா தியேட்டர் என்று ராதிகா பொய் சொன்னது எனது கள்ளம் தனக்குத் தெரிந்துவிட்டதை உணர்த்தி என்னைச் சங்கடப்படுத்தக்கூடாது என்னும் அவளது பண்பாட்டினால்தான்!  சிந்தியாவை மறு தடவை பார்த்தால் அவளை அடையாளம் தெரிந்துகொள்ள முடிகிற அளவுக்கு அன்று தியேட்டரில் அவளை ராதிகா மிக நெருக்கத்தில் பார்த்திருந்திருப்பாளளா?… அதைத்தான் நிச்சயமாய் ஊகிக்க முடியவில்லை.  யாரோ ஒரு பெண்மனி என்கிற அளவுக்குத் தொலைவில் இருந்து பார்த்தாளா, இல்லாவிட்டால் சிந்தியா என்பதைத் தெரிந்து கொள்ளூகிற அளவுக்கு நெருக்கத்தில் பார்த்திருப்பாளா? அவ்வளவு அண்மையில் அவள் எங்களை அன்று பார்த்திருந்திருக்கும் பட்சத்தில், அவள் ஏன் என் பார்வைக்குத் தட்டுப்படவில்லை?… அவள் எங்கே இருந்தபடி எங்களைப் பார்த்திருப்பாள்?’ –  இனித் தம்மால் தம் ஆசை மகளுடன்  எப்போதும் போன்ற இயல்புடன் இருக்க இயலும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

அந்த டிக்கெட் ஒட்டுப்பகுதிகளைத் தாம் எடுத்து வந்திருக்க வேண்டியதில்லை என்று சில கணங்கள் கழித்து அவருக்குத் தோன்றியது.  கூடத்துப் பக்கம் எட்டிப் பார்த்தார்.  ரதிகா முதுகு காட்டியபடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.   தனலட்சுமி தென்படவில்லை. அவர் அந்தக் கிழிசல்களை நீவிச் சரிசெய்து, அவை முதலில் இருந்த இடத்தில் மறுபடியும் போட்டுவிட்டுத் திரும்பினார். ‘என்னை அவள் கண்டுபிடித்துவிட்டதை நான் தெரிந்துகொண்டு விட்டேன் என்பது அவளுக்குத் தெரிய வேண்டியதில்லை.  அவளே ஒரு நாள் கேட்பாள்.  அப்படிக் கேட்கும் போது சொல்லிக் கொள்ளலாம். அது வரையில், அவளுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியாது!’ என்று அவர் தமக்குள் சொல்லிக்கொண்டார்.

ராதிகா எதற்கோ இரைந்து சிரித்தது அவர் செவிகளில் விழுந்தது. அவள் தன் பேச்சை நிறுத்திவிட்டுக் கைப்பையை ஒழித்து முடிக்கும் வரை கூடத்துப் பக்கம் தலைகாட்டக் கூடாது என்று எண்ணியவராய் அவர் தமது அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டார்.

“அப்ப, நாளைக்குக் காலேஜ்ல பாக்கலாம்டி!” என்னும் முத்தாய்ப்புடன் அவள் தன் கைப்பைக்குத் திரும்பியது அவருக்குத் தெரிந்தது.

திரும்பி வந்த ராதிகா அந்த டிக்கெட் ஒட்டுப் பகுதிகளை எடுத்துப் பத்திரப்படுத்தினாள்.
தொடரும்

jothigirija@live.com

.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது